க்ரிஷ் ஜான் ஸ்மித்துடனும், விஸ்வேஸ்வரய்யாவுடனும்
கலந்தாலோசனை செய்யப் போகிறான் என்றதும் விஸ்வம் ஏளனமாக உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவர்களுடன்
கலந்தாலோசித்து என்ன கண்டுபிடிக்கப் போகிறான், அது எந்த
வகையில் அவனுக்குப் பயன் தரப்போகிறது என்று தெரியவில்லை. ஜீனியஸ்
என்று பலராலும் அழைக்கப்படும் அவன் பல சமயங்களில் அந்தந்த நேரத்திற்கு உதவாத, முக்கியமில்லாத
ஆராய்ச்சி வேலைகளில் முட்டாள்தனமாக ஈடுபடுகிறான் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் உடனேயே
இன்னொரு எண்ணமும் தோன்றியது. சென்ற முறை இல்லுமினாட்டி கூட்டத்திற்கு க்ரிஷ் பேச வந்த
போது முட்டாளாகத் தான் நினைத்தோம். ஆனால் பேசிப் பேசிக்
கடைசியில் கவிழ்த்து விட்டான் என்பதால் இந்தத் தடவை அவனைக்
குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்று விஸ்வம் நினைத்துக்
கொண்டான். எது எப்படி இருந்தாலும் அவன் எர்னெஸ்டோவைக் கொல்லும் சமயத்திலும், இல்லுமினாட்டியைக்
கைப்பற்றும் நேரத்திலும் க்ரிஷ் இங்கிருக்காமல் இந்தியாவில் இருப்பதே நல்லது. அதற்கு
உடனே ஏற்பாடு செய்து விட வேண்டும் என்று விஸ்வம் எண்ணிக் கொண்டான்.
சாலமனிடம் விஸ்வம் சொன்னான். “எனக்கு
வாஷிங்டனில் எர்னெஸ்டோவின் பங்களாவுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சாதாரண ஓட்டலில் அறை
ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும்”
சாலமன் தலையசைத்துச் சொன்னார். “நீங்கள்
கேட்ட விவரங்களுடன் ஓட்டலில்
பதிவு செய்த விவரங்களையும் அனுப்பி வைக்கிறேன்”
நன்றி தெரிவித்த விஸ்வத்திடம் அவர்
விடைபெற்றுக் கொண்டார். அவர் சர்ச் வாசலைத் தாண்டிய கணமே மெழுகுவர்த்தி அணைக்கப்பட்டது. அவர் போனவுடன்
அபிப்பிராயம் கேட்க ஜிப்ஸி அங்கே இருக்கவில்லை. இப்படி
அடிக்கடி எங்கே செல்கிறானோ தெரியவில்லை. அன்று வாஷிங்டன்
போக டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லட்டுமா என்று கேட்ட போதும் அவன் தேவையில்லை, வந்து கொள்கிறேன்
என்று அவன் சொன்னது நினைவு வந்தது. டிக்கெட் செய்யச்
சொன்னால் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் சொல்ல வேண்டி வரும் என்று நினைத்துத் தவிர்த்து
விட்டான் போல் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கையில் அவன் மனிதன் அல்ல என்பது விஸ்வத்துக்கு
மறுபடியும் உறுதி ஆகியது. விஸ்வத்துக்கு அவன் இவ்வளவு ஏன் உதவுகிறான், இனி எவ்வளவு
தூரம் உதவுவான், முடிவில் அவன் பெறப்போகும் இலாபமென்ன என்பது தான் விளங்கவில்லை.
இன்னும் சில நாட்களில் எல்லாம் தெரிந்து
விடும் என்று எண்ணியவனாக விஸ்வம் மனதை ஆக வேண்டிய விஷயங்களுக்குத் திருப்பினான். எர்னெஸ்டோவை
எப்படிக் கொல்லப் போகிறோம் என்பதை அவன் சாலமனிடம் கேட்டிருந்த தகவல்கள் வந்த பிறகு
தான் அதை வைத்துத் தீர்மானிக்கப் போகிறான். அதற்குப்
பின் என்ன செய்ய வேண்டும் என்று இப்போது யோசித்தான். என்ன செய்வதானாலும்
க்ரிஷ் அந்தச் சமயத்தில் இதில் தலையிட விடக்கூடாது. குடும்பத்தில்
ஆபத்து என்றால் ஒழிய அவன் ஒதுங்கியிருக்க மாட்டான், கண்டிப்பாகத் தலையிடுவான்...
ஜிப்ஸியின் குரல் கேட்டது. “சொன்ன வேலைகளை
எல்லாம் சாலமன் செய்து கொடுத்து விட்டாரா?”
விஸ்வம் சொன்னான். “செய்து
விட்டார். நண்பா எனக்கு ஒரு எண்ணுக்குப் போன் செய்து பேச வேண்டும்...”
ஒன்றுமே சொல்லாமல் ஜிப்ஸி ஒரு அலைபேசியை
நீட்டினான். விஸ்வம் வாங்கி நினைவில் இருந்த ஒரு இந்திய அலைபேசி எண்ணை
அழுத்தினான். மறுபக்கத்தில் ஹலோ என்றவுடனேயே விஸ்வம் தன் கட்டளைகளைப் பிறப்பித்தான். “ஓ.கே பாஸ்” என்று மறுமுனை
சொன்னதும் இணைப்பைத் துண்டித்து விட்டு அவன் பேசிய நபரின் அக்கவுண்டுக்கு இருபது லட்சம்
அனுப்பி வைத்தான்.
பின் சிந்துவுக்கு விஸ்வம் போன் செய்தான்.
சிந்து தன் அலைபேசியில் வெளிநாட்டு அழைப்பு வந்தவுடனேயே அதிர்ந்து
இதயத் துடிப்புகள் இடியாக இடிக்க ஆரம்பிக்க எடுத்துப் பேசினாள். “ஹலோ”
விஸ்வம் சொன்னான். “சிந்து
நாளை உன் வீட்டுக்கு ஒருவன் ஒரு சிறிய பாட்டில் கொண்டு வந்து தருவான். அதில் விட்டமின்
வி இருக்கிறது...”
சிந்து அதிர்ச்சியில் இருந்ததால் அவள்
மூளை வேகமாக வேலை செய்யவில்லை. “விட்டமின் வியா?” என்று குழப்பத்துடன்
கேட்டாள்.
விஸ்வம் சொன்னான். “விஷம்,,,
அதை நீ செவ்வாய்க்கிழமை உதய் சாப்பிடுவதில் கலந்து விட வேண்டும். அதற்குச்
சரியாகச் சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் பத்மாவதி சாப்பிடுவதிலும் கூட நீ கலந்து விடலாம். அவர்களுக்குச்
சந்தேகம் வராமல் யார் சாப்பிடுவதில் அல்லது குடிப்பதில் கலக்க முடியுமோ கலந்து விட
வேண்டும். இது செவ்வாய்க்கிழமை இரவுக்குள் நீ செய்து முடிக்க வேண்டும்....”
சிந்து இதயத்தை ஏதோ ஒரு பெரிய சுமை
அழுத்த ஆரம்பித்தது. கஷ்டப்பட்டுத் தான் அவளால் பேச முடிந்தது. “சரி” என்றாள்.
விஸ்வம் சொன்னான். “நான் என்
ஆட்களை நிச்சயமான ஆபத்துகளில் எப்போதுமே ஈடுபடுத்த மாட்டேன். அதனால்
நீ பயப்பட வேண்டியதில்லை. உன் மேல் எந்தச் சந்தேகமும் யாருக்கும் வராது. அந்த விஷம் உடனடியாகக் கொன்று விடாது. சில மணி
நேரம் கழித்து மயக்கம் வரும். டாக்டர்கள் பரிசோதனை
செய்தால் காரணம் விஷமாகத் தெரியாது. அவர்கள் எல்லா ஸ்கேன்களும் செய்தால் முதலில் கல்லீரல் கடுமையாகப்
பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சரி செய்ய முடியாத நிலைமையில் இருப்பதாகவும் சொல்வார்கள். பிறகு சிறுநீரகம்
பாதிக்கப்படும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மற்ற எல்லா முக்கிய உறுப்புகளும்
செயல் இழக்க ஆரம்பிக்கும். என்ன மருந்து கொடுத்தாலும் ஏழு நாட்கள் கழித்து மரணம் நிச்சயம்...
நீ அதுவரை அவர்களுடன் அழுது கொண்டு அங்கேயே இரு. ஆள் இறந்தவுடன்
சோகத்தோடு நீ ஊரை விட்டுக் கிளம்பி விடு....”
சிந்து சகல பலத்தையும் திரட்டிக் குரலில்
நிம்மதி காட்டிச் சொன்னாள். “சந்தேகம் என் மேல் வராவிட்டால் போதும். செய்து
விடுகிறேன். செவ்வாய் இரவு சாப்பாட்டில் கலந்தால் போதுமல்லவா?”
அவன் “போதும். ஆனால் அதில்
எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது. செவ்வாய்
இரவுக்குள் கண்டிப்பாய் செய்யப்பட்டுவிட வேண்டும். ஆள் இறந்த
செய்தி அறிவிக்கப்பட்டவுடன் உன் அக்கவுண்டில் மீதி பணம் வந்து சேரும்.” என்று சொல்லி
முடித்துக் கொண்டான்.
சிந்து கண்களை மூடிக்
கொண்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். சில நாட்களின் சந்தோஷம் முடிவுக்கு வந்து
விட்டது....
க்ரிஷ் சொல்லியிருந்தது
நினைவுக்கு வந்தது. அவன் அவளையும் காப்பாற்றித் தன் குடும்பத்து ஆட்களையும் காப்பாற்றிக்
கொள்வதாகச் சொல்லி இருந்தான். சொன்னபடி செய்ய
அவனால் எந்த அளவு முடியும் என்று அவளுக்குத் தெரியவில்லை.... ஆனால் கடைசி நம்பிக்கையாய்
இருப்பது அவன் மட்டுமே. அதனால் அவள் அவனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.
க்ரிஷ் அவளிடம்
விஸ்வம் அழைத்துச் சொன்னதைக் கேட்டுக் கொண்டு பின் தன்னை அழைக்கச் சொல்லியிருந்தானேயொழிய
அவள் அழைப்பாள் என்ற முழு நம்பிக்கை அவனுக்கு வந்திருக்கவில்லை. மாற ஆரம்பித்திருப்பவளின்
மாற்றம் எந்த அளவில் இருக்கிறது, விஸ்வம் அழைத்தால் க்ரிஷை நம்பிச் சொல்வாளா என்றெல்லாம்
அவனுக்கு உறுதியாகச் சொல்ல முடிந்திருக்கவில்லை. அதனால் அவள் அழைத்துச் சொன்னதற்கு
அவளுக்கு மனதார நன்றி தெரிவித்து விட்டுச் சொன்னான். “நல்லது சிந்து. என் மேல் நம்பிக்கை
வைத்துச் சொன்னதற்கு நன்றி. நீ சென்னை போய்
விடு. நாளைக்கு அவன் ஆள் வந்து அதைத் தரும் போது நீ இருக்க வேண்டும். இது சம்பந்தமாய்
உதயிடம் கூட எதுவும் சொல்லாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்”
”விஸ்வம்...?”
“அவனைப் பொருத்த
வரை அவன் சொன்னதை நீ செய்து விட்ட தகவல் போய்ச் சேரும். அதனால் கவலை தேவையில்லை. எந்தக்
காரணத்தைக் கொண்டும் என் வீட்டில் யாருக்கும் நீ எதையும் தெரிவிக்க வேண்டாம். விஸ்வம்
தந்தனுப்பிய விஷத்தை உடனடியாகக் கொட்டி விடு. அது உன்னிடம் இருக்க வேண்டாம்....”
(தொடரும்)
என்.கணேசன்
Tension is building. How Krish is going to handle this deadly situation? Viswam's timing is brilliant. Super villain.
ReplyDeleteஆனால் பேசிப் பேசிக் கடைசியில் கவிழ்த்து விட்டான்...... //உண்மைதான்..சிந்துவையும் பேசியே கவிழத்த தன் பக்கம் வைத்துக் கொண்டான்..
ReplyDelete