வாஷிங்டன் செல்ல ஏற்பாடு செய்து தருவதாக சாலமன் சொன்ன பிறகு
திருப்தி அடைந்த விஸ்வம் “இந்த உதவி வீண் போகாது” என்று சாலமனிடம்
உறுதியளித்தான். இனி அவசியமான போது நேரடியாகப் பேச வாங் வேயிடமிருந்து
ரகசிய அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான். சாலமனுக்கு
மட்டுமே தந்திருந்த அலைபேசி எண்ணை வாங் வே அவனுக்கும் தந்தார். ஆனால் வாங்
வே அவனைத் தொடர்பு கொள்ள அவனுடைய அலைபேசி எண்ணைக் கேட்ட போது அவனிடம் அலைபேசி எதுவும்
இல்லை என்று விஸ்வம் சொல்லி விட்டான். அது வாங் வேக்கு
ஏமாற்றமாக இருந்தது.
அவனிடம் இல்லா விட்டாலும் அவன் கூட்டாளியிடமாவது
கண்டிப்பாக அலைபேசி இல்லாமல் போகாது என்று வாங் வே நினைத்தார். ஆனால் அவன்
கூட்டாளி ஒருவன் இருப்பதாகவே விஸ்வம் காட்டிக் கொள்ளவில்லை. சர்ச்சில்
அந்தக் கூட்டாளி தென்படவும் இல்லை.
“நான் அவசரமாக
உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் என்ன செய்வது?” என்று வாங்
வே கேட்டார்.
விஸ்வம் சொன்னான். “எனக்கு
நீங்களாக ஒரு அலைபேசி ஏற்பாடு செய்து தந்தால் அதற்கு உதவியாக இருக்கும்”
சாலமனுக்கு அந்த வேலையும் வந்து சேர்ந்தது.
விஸ்வம் வாங் வேயிடம் சொன்னான். “ஒருவேளை
தலைவர் ஒரு விபத்தில் இறந்து விட்டால் தலைவர் பதவிக்குப் போட்டி வரும். அந்தச்
சமயத்தில் எனக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாக நீங்களும் போட்டியில் நின்றால் என்ன என்று
உங்களுக்கு தோன்றி விடாதே?”
வாங் வே அவன் கேள்வியில் அதிர்ந்து
போனார். பின் மெல்ல சுதாரித்துக் கொண்டு சொன்னார். “கண்டிப்பாக
நீங்கள் என்னை நம்பலாம். சாதாரணமாக ஒரு போட்டி வருமானால் நானும் நிற்கவே முயற்சிப்பேன்
என்பதே உண்மை. ஆனால் உங்களால் தான் போட்டிக்கான சூழலே வருகிறது என்றால்
நான் அதில் காண விரும்பும் பலன் நீங்கள் எனக்கு வாக்களித்திருக்கும் உங்களுக்கு அடுத்த
இடமாகவே இருக்கும். தலைவர் பதவிக்கு உங்களையே நான் ஆதரிப்பேன். என்னை நீங்கள்
பரிபூரணமாக நம்பலாம்.”
விஸ்வம் அவர் கவனமாகச் சொன்ன பதிலை
ரசித்தான். தலைவரை அவன் தீர்த்துக் கட்டி அந்தப் பதவிக்குத் தேர்தல்
வந்தால் அவன் தலைவராக அவர் உதவுவார். அவர் உபதலைவராக
அவன் உதவ வேண்டும். அப்படியில்லாமல் இயல்பாகவே ஒரு போட்டி வருமானால் அவரும் போட்டியிடத்
தயங்க மாட்டார், அவர் எடுத்த
நிலைப்பாடு நியாயமாகத் தான் தெரிந்தது. இந்த ஒப்பந்தம்
சரியாகத் தான் அவனுக்குத் தோன்றியது. சிறு புன்னகை அவன்
உதடுகளில் வந்து போனது. அதோடு அவர்கள்
பேச்சை முடித்துக் கொண்டார்கள்.
சாலமன் கிளம்புவதற்கு முன் சொன்னார்.
“பாஸ்போர்ட்டுக்கு உங்கள் இப்போதைய ஃபோட்டோ ஒன்று வேண்டும்.”
“உங்களிடம் தான்
என் ஃபோட்டோ இருக்கிறதே. தாடியை மட்டும் சேர்த்து விட்டால் போதுமே”
“எங்களிடம் இருக்கும்
ஃபோட்டோவுக்கும், இப்போதைய உங்கள் தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று
சாலமன் சொன்னார். அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. போதையிலிருந்து மீள ஆரம்பித்திருந்த
உடல் இப்போது ஓரளவு முறுக்கேறி ஆளே வித்தியாசமாக இருப்பது போல் தெரிந்தது.
“அப்படியானால் நீங்கள்
தான் என்னை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்”
சாலமன் யோசித்தார்.
புகைப்படம் எடுக்க வெளிச்சம் வேண்டும். இந்த மெழுகுவர்த்தி ஒளியில் எடுக்க முடியாது.
மின்விளக்குகள் போட்டாலோ தெருவில் போகிறவர்களுக்குத் தெரிந்து விடும் அபாயம் இருக்கிறது.
ஆனாலும் வேறு வழி தெரியவில்லை. அவர் ஆலோசித்தார். மேடையில் உடைந்த யேசி கிறிஸ்து சிலை பக்கம் இருக்கும் விளக்குகளைப் போட்டு புகைப்படம்
எடுத்தால் அந்தப் பகுதி வெளிச்சம் தெரு வரை தெரியாது. அந்த முடிவெடுத்து அவர் அவனிடம்
சொன்னார். அவன் சரியென்றான்.
அப்படி மேடைப்பகுதியில்
இரண்டு விளக்குகளைப் போட்டு சாலமன் விஸ்வத்தை இரண்டு மூன்று புகைப்படம் எடுத்தார்.
அப்போதும் கூட்டாளி அந்த வெளிச்சத்திலாவது எங்காவது ஒரு ஓரத்தில் தெரிகிறானா என்று
சாலமன் பார்த்தார். ஆனால் அவன் தெரியவில்லை.
பிறகு சாலமன் விஸ்வம்
எப்போது வாஷிங்டன் கிளம்ப உத்தேசித்துள்ளான் என்று கேட்டார். ஏனென்றால்
அவன் போகின்ற நாள் நேரம் தெரிந்தால் தான் அதற்கேற்ற ஆட்களை விமானநிலையத்தில் அவர் முன்கூட்டியே
ஏற்பாடு செய்ய முடியும்.
விஸ்வம் கேட்டான். “தலைவர்
வரும் வாரம் எந்த விமானத்தில் போகிறார்?”
சாலமன் இது என்ன கேள்வி என்பது போலப்
பார்த்தார். “அவர் எப்போதுமே தனி விமானத்தில் தான் போவார். வரும் வாரம்
செவ்வாய்க்கிழமை இங்கிருந்து கிளம்புவார்”
நினைத்த நேரத்தில் தனி விமானத்தில்
பறக்கக்கூடிய நிலையில் இருக்கும் எர்னெஸ்டோவை நினைத்துப் பார்க்கையில் விஸ்வத்துக்குப்
பொறாமையாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி கூட நான்கு அல்லது எட்டு வருடங்களில் பதவி
இழந்து சாதாரண மனிதராக வேண்டி வரும். இந்த மனிதர் முடிசூடா
மன்னராக 25 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்து வருகிறார். உலக நாடுகளின்
முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் இவர் பங்கும் இருக்கிறது. இல்லுமினாட்டியின்
தலைமைப்பதவி உண்மையில் உலக ஜனாதிபதி பதவி போன்றது....
’ஒரு நாள் அந்தப் பதவியில் நான் அமர்வேன்’ என்று அவன்
மனதினுள் உறுதியாகச் சொல்லிக் கொண்டான்.
விஸ்வம் சாலமனிடம் சொன்னான். “நான் இரண்டு
நாட்கள் முன்கூட்டியே அங்கே போய் விட நினைக்கிறேன். ஞாயிற்றுக்கிழமையே
போக முடிந்தால் நல்லது....”
தலையசைத்த சாலமன் “சனிக்கிழமை
உங்களுக்கு பாஸ்போர்ட், விசா, டிக்கெட் மூன்றும் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்....
அதோடு உங்களுக்கு ஒரு அலைபேசியும் கொண்டு வருகிறேன்...” என்று சொல்லிக்
கிளம்பினார். கிளம்புவதற்கு முன்பு அவருடைய அனுபவம் வாய்ந்த கண்கள் சர்ச்சை
மறுபடி ஒருமுறை ஊடுருவிப் பார்த்தன. கூட்டாளி அப்போதும்
எங்கேயும் தென்படவில்லை. அவர் வெளியே கால் வைத்தவுடன் சர்ச்சில் எரிந்து கொண்டிருந்த
ஒரே மெழுகுவர்த்தியும் அணைக்கப்பட்டு சர்ச் காரிருளில் மூழ்கியதைக் கவனித்தார்.
அவர் காரில் போய்க் கொண்டிருக்கையில்
வாங் வேயின் அழைப்பு அவருடைய அலைபேசிக்கு வந்தது. “உங்கள்
கண்ணுக்கு அந்தக் கூட்டாளி அகப்பட்டானா?”
“இல்லை. ஒருவேளை
அவன் கீழ்தளத்தில் மறைவாக இருந்திருக்கலாம்....”
“இந்தப்
பேச்சுவார்த்தை போன விதம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” வாங் வே
சாலமனைக் கேட்டார்.
“நீங்கள் சரியாகத்
தான் பேசினீர்கள். அவனும் தவறாகப் பேசினான் என்று சொல்லிவிட முடியாது... “
வாங் வே சொன்னார்.
“ஆபத்தானாலும் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வது?.... நீங்கள்
நாளையே வாஷிங்டன் போக வேண்டும் என்று சொன்னீர்களே. அப்படியானால் பாஸ்போர்ட் விசா எப்படி
ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?”
“ஏதாவது காரணம்
சொல்லி இரண்டு நாள் இங்கேயே இருக்க முடிவு செய்திருக்கிறேன். நீங்களும் சொன்னதால் தான்
இந்த ஆபத்தை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் சார்”
“நன்றி சாலமன்.
இதற்காக நீங்கள் கண்டிப்பாக பின்னால் வருத்தப்பட மாட்டீர்கள். இப்போதும் நாம் பாதுகாப்பையே பார்த்து ஒதுங்கி இருந்தோமானால்
மாற்றத்தைப் பார்க்க முடியாது. அதனால் தான் நான் புதியவன் என்றும் பார்க்காமல் விஸ்வத்தைக்
கூடத் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று இறங்கி வந்திருக்கிறேன்.”
“புரிகிறது சார்”
என்றார் சாலமன்.
வாங் வேயிடம் பேசி
முடித்த பிறகு கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் 11.10. அவசரமாக அலைபேசியில் ஒருவனை அழைத்தார்.
ஐந்தாறு முறை அடித்த பின் தான் அவன் உறக்கக் கலக்கத்தோடு பேசினான். “ஹலோ”
“ஒரு வேலை இருக்கிறது.
அரை மணி நேரத்தில் வந்து விடுவேன். காத்திரு” என்று சொல்லிப் பதிலுக்குக் காத்திராமல்
இணைப்பைத் துண்டித்தார். அந்த ஆளிடம் தான் போலி பாஸ்போர்ட் விசா வேலையைத் தரப் போகிறார்.
அவன் பழைய குற்றவாளி. இந்த விஷயத்தில் அவன்
கில்லாடி. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி
கச்சிதமாக அவன் செய்து தருவான்....
(தொடரும்)
என்.கணேசன்
Thrilling event is awaiting us in Washington I believe. Mainly waiting for Amanushyan and Viswam's possible meeting.
ReplyDeleteவிஸ்வம் ஆட்டத்திற்கு தயாராகி விட்டான்.....
ReplyDeleteஅரசன் அன்றே கொல்வான், ஆனால் தெய்வம் நின்று கொல்லும்.... .
ReplyDeleteஉண்மைக்கும்,நன்மைக்கும் சக்தி அதிகம். ...