Monday, July 19, 2021

யாரோ ஒருவன்? 41


தீபக் தர்ஷினியுடன் பேசிக் கொண்டே பக்கத்து வீட்டையும் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டது. “டேய் உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு? என் தாத்தா, எங்கப்பா, இப்ப நீன்னு எல்லாரும் அந்த வீட்டையே பார்த்துகிட்டு இருக்கீங்க. இத்தனைக்கும் அந்த வீட்டாளுக யாரும் வெளியவும் காணோம். எப்ப வருவான்னு அங்கே பார்த்துகிட்டு இருக்கறப்ப பேச நானா உனக்கு கிடைச்சேன். எந்திருச்சு போயிருவேன் பாத்துக்கோ

தீபக் சொன்னான். “உன் தாத்தாக்கு செய்ய வேலை ஒன்னும் இல்லை. அதனால பக்கத்து வீட்டுக்காரனைப் பார்க்கிறார். நிறைய வேலை இருக்கற உங்கப்பா எதுக்கு பார்க்கிறார்னு எனக்குத் தெரியல. எதாவது காரணம் இருக்கும். நான் என் கனவுல வந்து கதறுகிற ஆத்மா யாருன்னு தெரிஞ்சுக்க அந்த ஆள் கிட்ட உதவி கிடைக்குமான்னு பார்க்கறேன். அதுக்கு ஏன்டி நீ கோவிச்சுக்கறே.”

அந்த ஆள் வெளிய வர்றதே அதிகபட்சமாய் காலைல வாக்கிங் போறப்ப மட்டும் தான். சில சமயம் சாயங்காலமும் வெளிய வர்றார். மத்த சமயங்கள்ல அந்த அசிஸ்டெண்ட் தான் வெளிய வருவார். அதனால நீ பார்த்துட்டே இருக்கறது வீண் தான்

இப்போதைக்கு அந்த அசிஸ்டெண்ட் வந்தாலும் போதும். அந்த ஆள் கிட்டயும் எனக்குப் பேச வேண்டி இருக்குஎன்று தீபக் சொன்னவுடன் அவள் கோபமாக எழுந்து உள்ளே போய் விட்டாள்.

அந்த நேரத்தில் சுதர்ஷன் பக்கத்து வீட்டின் கதவு திறந்து வெளியே வந்து முன்னால் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்ற ஆரம்பிப்பது தெரியவே தீபக் தர்ஷினியைச் சமாதானப்படுத்தப் போகவில்லை. அவள் கோபம் வழக்கமானது தான். தானாய் வந்து, திட்டித் திருப்தியடைந்து, தானாய் போகும். அதனால் தீபக் பாதிக்கப்படாமல் எழுந்து வேகமாகப் பக்கத்து வீட்டுக்குப் போனான்.

ஹாய் அங்கிள். உங்களுக்குப் புதுச்செடி எதாவது வேணுமா?”

சுதர்ஷன் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான். ”நீ இன்னும் வீட்டுக்குப் போகலையா?”

வாக்கிங் முடிஞ்சு வந்து இத்தனை நேரம் தர்ஷினி கிட்ட பேசிகிட்டிருந்தேன். கிளம்பறப்ப உங்களைப் பார்த்ததால வந்தேன். உங்களுக்குச் செடிகள் எதாவது வேணும்னா சொல்லுங்க. நாளைக்கு வர்றப்ப கொண்டு வர்றேன். எங்க வீட்ல நிறைய பூச்செடிகள் இருக்கு. அம்மாவுக்குச் பூச்செடிகள்னா உயிர்.”

என்னெல்லாம் இருக்கு?”

ரோஸே பத்து ரகம் இருக்கு. மல்லிகை இருக்கு. பாரிஜாதம் இருக்கு. செம்பருத்தி மூனு ரகம் இருக்கு. அப்புறம் அரளி இருக்கு....”

எனக்குத் தண்ணீர் ஊத்தறதைத் தவிர வேற பராமரிப்பு வேலையெல்லாம் தெரியாது. அதனால அந்த மாதிரி பராமரிப்பு தேவைப்படாத பூச்செடி ஏதாவது இருந்துச்சுன்னா கொண்டு வா தீபக்

கண்டிப்பா... அங்கிள் அப்பறம் நாகராஜ் அங்கிள் அந்த ஆத்மா பத்தித் தெரிஞ்சுக்கிற வழி பத்தி உங்க கிட்ட கேட்கச் சொன்னாரே. அது எந்த வழி அங்கிள்...”

சுதர்ஷன் ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னான். “அதெல்லாம் இப்போதைக்கு முடியற விஷயம் அல்ல தீபக்.... மகராஜுக்கு அபூர்வ சக்திகள் நிறைய இருக்கு. ஆனால் அதை முறைப்படி ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் உபயோகப்படுத்துவார். அதுக்கு அஞ்சு லட்சம் வாங்கறோம். அதை ஆசிரம தர்மகாரியங்களுக்குச் செலவு செய்யறோம். அதுக்கே கிட்டத்தட்ட அஞ்சு மாசத்துக்கும் மேல புக் ஆயிருக்கு. ஆறாவது மாசத்துல வேணும்னா எதாவது நாள் இருக்கலாம்...”

தீபக் ஏமாற்றத்துடன் சுதர்ஷனைப் பார்த்து மெல்லக் கேட்டான். “ஏன் அங்கிள், என்னை மாதிரி படிச்சுட்டிருக்கிற மாணவர்களுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம்னு ஏதாவது சலுகைக் கட்டணம் கிடையாதா?”

சுதர்ஷன் அவன் சொன்ன தொகையைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தான். “அது வேணும்னா மகராஜ் கிட்ட சொல்லிப் பார்க்கறேன். ஆனா அதுவே அஞ்சு மாசத்துக்கு மேல தான் நடக்கும்....”

தீபக் முக வாட்டத்துடன் நின்றது சுதர்ஷனை நெகிழ்த்தியது போலத் தெரிந்தது. “அந்தக் கனவு தான் இனி வராதுன்னு அவர் சொல்லிட்டாரே. அவர் சொன்னா சொன்னபடி தான் நடக்கும். நீ தைரியமாய் போகலாம்...” என்று அவன் கனிவாகச் சொன்னான்.

ஆனாலும் அதைப் பத்தித் தெரிஞ்சுக்காட்டி என் மண்டை வெடிச்சுடும் போல இருக்கு அங்கிள் அதான் கேட்டேன்.... அந்த முறைப்படி இல்லாமல் பொதுவாய் அவரால சொல்ல முடியாதா அங்கிள்?”  தீபக் கெஞ்சல் தொனியில் கேட்டான்.

சுதர்ஷன் அவனை யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னான். “அவரால முடியாததுன்னு ஒன்னுமே இல்லை. அவருக்குத் தெரியாததும் எதுவுமில்லை. ஆனால் எதையுமே மனசிருந்தால் தான் சொல்வார். இப்ப சில நாட்களாய் அவர் முக்கியமான விரதத்துல இருக்கார். அப்பப்ப தியானம், பூஜைன்னு அதிலேயே மூழ்கிடுவார். அதனால கொஞ்ச நாள் போனவுடன சமயம் பார்த்துக் கேட்டுப் பார். அவருக்கு உன்னை எதனாலயோ ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால கண்டிப்பா உதவி செய்வார்.....”
 

தன்லாலை இப்போதும் ரா ஆட்கள் இரவு வரை வேவு பார்த்தார்கள். என்றாலும் அந்தக் கடிதம் கிடைத்த பிறகு முன்பு போல் அவனுக்குக் கோபம் வருவதில்லை. இந்த ஆட்டம் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கிறேன் என்ற சவால் உணர்வே அவனிடம் மேலோங்கியது. எப்போது புதன் இரவு ஒரு மணியாகும் என்று அவன் காத்திருக்க ஆரம்பித்தான்.

நிதானமாகத் தான் புதன் கிழமை விடிந்தது. நிதானமாகத் தான் இரவு வரை காலம் நகர்ந்தது. இருட்ட ஆரம்பித்ததுமே அவன் பரபரப்படைய ஆரம்பித்தான். ஆனால் அவன் பரபரப்பை லட்சியம் செய்யாமல் காலம் இரவு ஏழு மணிக்கு மேல் ஒவ்வொரு வினாடியாக ஆமை வேகத்தில் நகர்ந்தது. அடிக்கடி கடிகாரம் பார்த்தான். ஆனாலும் அந்த கடிகார முள்கள் வேகமாக முன்னேறவில்லை. கடிகாரம் பார்த்தே சலித்துப் போய் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எட்டு மணிக்கு அவன் வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டில் சாப்பிடும் போது வேலை விஷயமாய் நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு வெளியே போக வேண்டியிருக்கும் என்று அவன் சொன்ன போது வாட்சப் தகவல்களை மேய்ந்து கொண்டே அவன் மனைவி தலையசைத்தாள். அவனுக்கு அந்த அலைபேசியை வாங்கி உடைக்கத் தோன்றியது. வழக்கம் போல செயல்படுத்த முடியாத ஆசையாக அது தங்கியது. எரிச்சலோடு அறைக்குப் போனவன் ஜன்னல் வழியாக ரகசியமாய் வெளியே பார்த்தான். இரண்டு பேர் வழக்கம் போல் இருந்தார்கள். கடிகாரத்தைப் பார்த்தான். இரவு ஒன்பதரை. ஆமை வேகத்தில் நகர்ந்த கடிகாரம் மெல்ல பன்னிரண்டைத் தாண்டிய போது அவன் வெளியே நோட்டமிட்டான். ஆட்கள் போயிருந்தார்கள்.

மதன்லால் மறுபடி ஒரு முறை 12.40க்குப் பார்த்து விட்டு மெல்ல வெளியே வந்தான். கடுங்குளிர்க் காற்று அவன் முகத்தைச் சில்லிட வைத்தது. வீட்டின் உள்ளே ஹீட்டர் இருந்ததால் குளிர்  அவ்வளவாகத் தெரியவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டு அவன் கிளம்பினான். கிளம்பியவன் நேரடியாக ஓட்டல் கங்கோத்ரிக்குச் செல்லவில்லை.  சுற்றி வளைத்துப் போய்ச் சடாரென்று திரும்பி வந்த வழியே மறுபடியும் வந்தான். பின் தொடர்பவர்கள் யாராவது இருந்திருந்தால் கண்டிப்பாக அவன் பார்வையில் பட்டிருப்பார்கள்.  உண்மையிலேயே யாரும் பின் தொடரவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அவன் ஓட்டல் கங்கோத்ரியை அடைந்தான். அங்கேயும் ஒரு முறை தெருவின் கடைக்கோடி வரை போய்த் திரும்பி வந்தான். யாரும் கண்காணிக்கவில்லை. திருப்தியடைந்தவனாக ஓட்டலுக்குள் நுழைந்தான்.

ரிசப்ஷனில் பையன் ஒருவன் மேஜையில் தலை வைத்து நன்றாக உறங்கி இருந்தான். அதுவும் ஒருவிதத்தில் நல்லதாகவே அவனுக்குப் பட்டது. சத்தமில்லாமல் படிகள் ஏறியவன் முதல் மாடியில் முதல் அறையான 101ன் கதவை மெல்லத் தட்டினான்.



(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Who was in the lodge room. Ajeem Ahmed or his people or Narendran? In very interesting place you have put the word 'thodarum'.

    ReplyDelete
  2. மதன்லால் வசமாக சிக்கி கொண்டார் ....

    ReplyDelete
  3. I guess Narendran going to kidnap Madanlal too.. Thrilling

    ReplyDelete
  4. தீபக் கனவு ரகசியம் வெளி வர தாமதம் ஆகும் போல....
    மதன்லால் நன்றாக சிக்கிக் கொண்டான்...

    ReplyDelete
  5. பரபரப்பான தருணங்களில் தொடரும் போட்டு வாசகர்களின் இதயத்துடிப்பை எகிறச்செய்வதில் மிகவும் கைதேர்ந்தவராகிவிட்டீர்கள். அதுவும் இப்பவெல்லாம் கதைஓட்டத்தில் ஒரு இடத்தில் நடக்கும் சம்பவங்களை கூறி வந்த நீங்கள் அதை இரண்டு இடங்களில் நடைபெறும் சம்பவங்களாக ஆக்கி விட்டீர்கள். இதில் மட்டும் அல்லாமல் இல்லூமினாட்டி தொடரிலும் இதேபோல் எழுதி வருகிறீர்கள். அருமை.

    ReplyDelete