க்ரிஷ் சிறிது யோசனைக்குப் பின் சொன்னான். “அந்த அலைவரிசைகளை வைத்து, இருக்கும்
இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று அந்த ஏலியன்
செய்திருக்கிற ஏதாவது உபாயமாக இருக்கலாம்... என் வேற்றுக்கிரகவாசி
நண்பன் கண்களுக்குத் தெரியா விட்டாலும் அவன் வந்த விதம் தெரிந்து கொண்டு தானிருந்தது. அவன் வந்த
வாகனம் ஒரு பெரிய கருப்புப் பறவை போல இருந்தது. அதிவேகமாக
அது பறந்தது. அது போல் ஏதாவது
விஸ்வத்துக்கு உதவும் சக்தியின் போக்குவரத்து வாகனமாவது தென்பட்டிருக்கிறதா?”
இம்மானுவல் சொன்னான். “முதல் தடவையாக
அந்த அலைவரிசைகள் தெரிய ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு வட்ட வடிவமான தட்டு மிதந்து வருவது
போன்ற ஒரு காட்சியை தென்னிந்தியப் பகுதியில் பார்த்திருக்கிறார்கள். ஒருவர்
அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்...”
இம்மானுவல் தன் லாப்டாப்பில் அந்த வீடியோவைக்
காண்பித்தான். ஒரு புள்ளியாக ஆரம்பித்து பெரிதாகிக் கொண்டே தெரிய வந்த அந்தப்
பறக்கும் தட்டை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். பெரிதாகத்
தெரிந்த போது கூடவே அதனுள்ளிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் ஒளி தெரிந்தது. பின் புகை
மண்டலம் தோன்றி பறக்கும் தட்டு முழுமையாய் மறைந்து போனது. மறைவதற்கு
முன்னால் ஒரு வினாடி ஒரு நட்சத்திரம் போல் புகைமண்டலத்திற்கு நடுவே ஏதோ மின்னியது. அதன் பிறகு
அது சுத்தமாய் மறைந்து போனது. எல்லாமே
இருபது வினாடிகளுக்குள் முடிந்து விட்டது...
இம்மானுவல் லாப்டாப்பைத் தள்ளி வைத்து
விட்டுச் சொன்னான். “இந்த வீடியோவை எடுத்தது இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில்
ஒருவர். இரண்டாவதாக அந்த அலைவரிசைகள் தெரிய ஆரம்பிப்பதற்கு முன் இதே
பறக்கும் தட்டு இஸ்ரோவின் ஒரு புகைப்படத்தில் சிக்கியிருக்கிறது..”
அவன் கொண்டு வந்திருந்த ஃபைலில் அந்தப்
புகைப்படத்தைக் காட்டினான். அதே பறக்கும் தட்டு தான். விளக்குகள்
எதுவும் இல்லை. மங்கலாகத் தெரிந்தது. “இதைத் தோராயமாக
மைசூர் பகுதியில் எடுக்கப்பட்ட படமாக இஸ்ரோ சொல்கிறது. இந்த இரண்டு
நிகழ்வுகளுக்கும், க்ரிஷின் ஏலியன் நண்பன் வரவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எல்லாமே
அமாவாசை தினம் தான் நடந்திருக்கிறது... மூன்றாவதாக அந்த
அலைவரிசைகள் பூமியில் தெரிய ஆரம்பித்தது இந்த ம்யூனிக் பகுதியில். இந்த முறை
எந்த வீடியோவும், படமும் நமக்கு அகப்படவில்லை. மாறாக ம்யூனிக்கில்
இருந்து நூறு கிலோ மீட்டர் தள்ளி உள்ள கிராமத்தில் ஒரு விவசாயி இந்தப் பறக்கும் தட்டை
இரண்டே வினாடிகள் பார்த்திருக்கிறான். அதை ஜெர்மனி வானிலை
மையத்துக்குத் தெரிவித்திருக்கிறான். ஆனால் அவன் சொன்னதுடன்
சேர்ந்து படமோ, வீடியோவோ அனுப்பாததால் அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம்
தரவில்லை. இது போல் அடிக்கடி யாராவது ஒருவர் ”நான் அங்கே
பார்த்தேன்”, “இங்கே பார்த்தேன்” என்று போன்
செய்து சொல்கிறார்கள், ஆனால் அதற்கான ஆதாரங்கள் அனுப்புவதில்லை என்பதால் இதைப் பெரிதாக
அந்த வானிலை மையம் எடுத்துக் கொள்வதில்லை. இது சமீபத்திய
நிகழ்வானதால் அவர்கள் அந்த விவசாயியின் போன் நம்பரை மட்டும் குறித்து
வைத்திருந்தார்கள். நான் போய்
அந்த ஆளிடம் பேசிக் கடைசியில் இந்தப்
புகைப்படத்தைக் காட்டினேன். அவன் பார்த்ததும் இதையே தான் என்று சொன்னான்...”
அவன் சொல்லி முடித்தவுடன் நீண்டதொரு
மௌனம் அங்கே நிலவியது. ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைகளில் இருந்தார்கள்.
க்ரிஷ் தான் முதலில் மௌனத்தைக் கலைத்தான். “என் மாஸ்டரின்
ரகசிய ஆன்மீக இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பே இந்தக் காலக்கட்டத்தைக் குறிப்பிட்டு
ஒரு தீயசக்தி இந்த உலகத்திற்குப் படையெடுத்து வரப்போகிறது என்ற எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை வைத்து
மாஸ்டர் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் தான் அந்தத் தீயசக்தி என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டிருந்தார். பிறகு தான்
அவனல்ல அது என்று தெரிந்தது. ஆனால் இப்போது பார்த்தால் விஸ்வத்தின் கூட்டாளியாக இருக்கும்
இந்த சக்தி தான் தீயசக்தி என்று தோன்றுகிறது....”
இம்மானுவல் தன் மிகப்பெரிய சந்தேகத்தைக்
கேட்டான். “அந்தக் கூட்டாளியின் உண்மையான உத்தேசம் என்னவாக இருக்கும்?”
அதற்குப் பதில் அவர்கள் யாருக்குமே
தெரிந்திருக்கவில்லை.
சாலமன் சரியாக இரவு மணி 8.55 க்கு சர்ச்சைத்
தாண்டி ஒரு பெரிய மரத்தின் பின் ஓரமாகக் காரை நிறுத்தி விட்டு இறங்கினார். இன்று அவர்
ஓட்டி வந்திருந்த கார் வாடகைக்கு எடுத்த கார். அதிலிருந்து
இறங்கும் போது அவர் மனம் படபடத்துக் கொண்டிருந்தது. அமைதியாக
இருக்க முயற்சி செய்தும் அப்படி இருக்க முடியவில்லை. இன்று காலை
இம்மானுவல் ம்யூனிக்
வந்து விட்டான். க்ரிஷும் வந்து சேர்ந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. எர்னெஸ்டோவின்
வீட்டில் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அங்கே அவர்கள்
என்ன பேசுகிறார்கள், என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இங்கே வாங்
வேயும், விஸ்வமும் பேசப்போகிறார்கள். இங்கும்
எந்த அளவு இவர்கள் பேச்சில் உடன்பாடு ஏற்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த
இரண்டு பக்கங்களிலும் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் இல்லுமினாட்டியின் விதி மட்டுமல்ல, அவருடைய
விதியும் நிர்ணயிக்கப்படும் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.
அவர் நாளையே வாஷிங்டன் போக வேண்டியிருக்கிறது. அதை அவர்
வாங் வேயிடமும் தெரிவித்திருக்கிறார். “என்ன பேசுவதானாலும்
இன்றே பேசி முடித்து விடுங்கள். ஏனென்றால் நான் நாளை இங்கேயிருக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார். அவர் போய்
விட்டால் வேறு யாரையும் நம்பி இந்த வேலையை அவர்கள் ஒப்படைக்க முடியாது....
லாப்டாப்பை எடுத்துக் கொண்டு அவர் மெல்ல
சர்ச்சை நோக்கி நடந்தார். டார்ச் விளக்கை அவர் பயன்படுத்தவில்லை. இரண்டு முறை வந்து போயிருந்ததால் அந்த இருட்டிலும் உத்தேசமாக
நடக்க அவர் சிரமப்படவில்லை. விஸ்வத்தைச் சந்திக்கப் போவதில் தான் அவர் படபடப்பு அதிகமாக
ஆரம்பித்தது.
முன்பு வந்த இரு முறையும் சர்ச்சின்
பக்கவாட்டில் இருந்த உடைந்த கண்ணாடி ஜன்னல் பகுதிக்குத் தான் சாலமன் சென்றிருக்கிறார். இப்போது
சர்ச்சின் வாசல் முன் போய் நின்றார். கதவு திறந்து தான்
இருந்தது. உள்ளே ஒரே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது அந்தப்
பெரிய சர்ச்சின் முழு விஸ்தீரணத்திற்கும் போதுமானதாக இல்லை...
ஒரு சிறு பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் எல்லாம் இருளே சூழ்ந்திருந்தது.
உள்ளே நுழைவதா, அல்லது
அனுமதிக்குக் காத்திருப்பதா என்று சாலமன் யோசித்த போது குரல் கேட்டது. ”உள்ளே வரலாம்”
விஸ்வத்தின் குரலை சாலமன் முன்பே கேட்டிருக்கிறார். அது கம்பீரமான
குரல். இந்தக் குரலில் அந்தக் கம்பீரம் இல்லை. ஆனால் அந்த
உறுதி மட்டும் இப்போதைய குரலிலும் தெரிந்தது. சாலமன்
மெல்ல உள்ளே நுழைந்தார்.
கண்களைச் சற்றுச் சுருக்கிப் பார்த்த
போது தான் விஸ்வம் ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஆறடி உயரம், ஒடிசலான
உடல்வாகு இரண்டும் அவர் டேனியலின் புகைப்படத்தில் முன்பே பார்த்திருந்தது. கூடுதலாக
குறுந்தாடி வளர்ந்திருந்தது. அது முகவாய்க்கட்டையில் இருந்த ஆழமான கீறலை மறைப்பதற்காக
இருக்கலாம் என்று சாலமன் நினைத்துக் கொண்டார். அவர் சர்ச்சுக்குள்
பார்வையைச் சுற்ற விட்டு விஸ்வத்தின் கூட்டாளியைத் தேடினார். காணவில்லை. ஒருவேளை
இந்த இருட்டுக்குள் எங்காவது மறைந்து நின்றிருக்கலாம்...
“வாருங்கள். உட்காருங்கள்” என்று விஸ்வம்
தன் எதிரே மர பெஞ்சில் காலியாக இருந்த இடத்தைக் காட்டினான்.
சாலமன் அவன் காட்டிய இடத்தில் அவன்
எதிரே உட்கார்ந்தார். மிக அருகில் விஸ்வத்தை அவர் பார்த்த போது அவன் கண்கள் மெழுகுவர்த்தி
ஒளியில் ஜொலித்தன. முக்கியமாக அந்தக் கண்களில் தெரிந்த தீட்சண்யம் அவரை ஊடுருவிப்
பார்த்தது.
டேனியலின் கண்கள் சாதாரணக் கண்கள். அவற்றில்
இந்த தீட்சண்யம் இருக்கவில்லை. விஸ்வத்தின் சக்திகளால் அந்தக் கண்கள் அந்த ஊடுருவும் தீட்சண்யத்தைப்
பெற்றிருக்க வேண்டும். இல்லுமினாட்டியையே கலக்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதனை வியப்புடன்
சாலமன் பார்த்தார்.
அதைச் சட்டை செய்யாத விஸ்வம் சாலமனிடம்
சொன்னான். “இந்தப் பேச்சு ரெகார்ட் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. என்ன பேசினோம்
என்பது எனக்கும் அவருக்கும் நினைவில் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.”
சாலமன் சொன்னார். “இரண்டு
பக்கத்துக்குமே அது ஆபத்து என்பதால் அவரும் அதையே தான் சொன்னார்...”
அந்தப் பேச்சைப் பதிவு செய்வது உண்மையில்
விஸ்வத்தை விட வாங் வேக்குத் தான் அதிக ஆபத்து என்று அறிந்திருந்த விஸ்வம் அதைச் சுட்டிக்
காட்ட முயற்சிக்காமல் தலையை மட்டும் அசைத்தான்.
சாலமன் லாப்டாப்பைத் திறந்து வாங் வேயை
ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
Both sides are intelligently moving. "Next what?" is the word your friends always end up asking.
ReplyDeleteவிஸ்வம் ஏற்கனவே பயங்கரமானவன்...அவன் நண்பன் வேற வேற்று கிரகவாசி.... இது சாலமனுக்கு தெரிந்தால் இருதய அடைப்பே வந்திடும்...
ReplyDelete