க்ரிஷ் வரவுக்காக எர்னெஸ்டோவும், அக்ஷயும் காத்திருந்தார்கள். விஸ்வத்தின்
கூட்டாளி பற்றி ஒரு முடிவுக்கு வரவும் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கவும் தான்
க்ரிஷை வரவழைப்பதாக எர்னெஸ்டோ அக்ஷயிடம் சொல்லியிருந்தார். அக்ஷய்க்கு
இங்கு வந்த பிறகு தான் க்ரிஷ் முன்பு இந்தியாவில் அவனிடம் சொன்னதில் விட்டுப் போயிருந்த
கூடுதல் தகவல்கள் தெரிய வந்தன. அவனும்
விஸ்வத்தையும் விட மிகவும் ரகசியமாயிருந்த அந்த கூட்டாளி பற்றி அறிந்து கொள்ள ஆவலாய்
இருந்தான்.
இம்மானுவல் ஆரம்பத்தில் சில தகவல்களைச்
சொல்லித் தன் யூகங்களை எர்னெஸ்டோவிடம் பகிர்ந்து கொண்டிருந்தாலும் அதற்குப் பிறகு அவனுக்குத் தெரிய வந்த தகவல்களை அவரிடம் தெரிவித்திருக்கவில்லை. அரைகுறையாய்
பகுதி பகுதியாய் சொல்வதை விட க்ரிஷ் வந்தவுடன் ஒரேயடியாகத் தகவல்களைச் சொல்லி அதுபற்றி
அலசினால் தான் சில முடிவுகளுக்கு வர முடியும் என்று இம்மானுவல் சொல்லி இருந்ததை எர்னெஸ்டோவும்
ஏற்றுக் கொண்டிருந்தார். இல்லுமினாட்டியின் தலைவராக இருந்தாலும் அவரிடம் தேவையில்லாத ‘ஈகோ’ இல்லாதது
பல சமயங்களில் உபகாரமாக இருப்பதை இம்மானுவல் உணர்ந்திருக்கிறான்.
இம்மானுவல் க்ரிஷை அழைத்து வந்தவுடன்
எர்னெஸ்டோ அவனைப் புன்னகையுடன் வரவேற்றார். “க்ரிஷ்
உன் நண்பனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்று நீ சொல்லவேயில்லை. அவனைப்
பற்றி எந்தத் தகவலும் கண்டுபிடித்துச் சொல்லவுமில்லை.. இம்மானுவல்
கவலைப்படுவதைப் பார்த்தால் இப்போது அவன் தான் பெரிய தலைவலி ஆவான் போலத் தெரிகிறது...”
க்ரிஷ் புன்னகைத்தான். இல்லுமினாட்டி கூட்டத்தில் நண்பர் நண்பர் என்றே விஸ்வத்தை
அழைத்து அவன் பேசியதிலிருந்து எர்னெஸ்டோ அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்
என்று எண்ணிக் கொண்டான். உண்மையில் எர்னெஸ்டோ அந்தப் பேச்சை விட அதிகமாக ம்யூனிக்
மின் மயானத்தில் விஸ்வத்துக்காக உண்மையாகவே மனவருத்தப்பட்டு க்ரிஷ் நின்றதைப் பார்த்த
பிறகு தான் அன்பும் கிண்டலுமாகக் கலந்து அப்படிச் சொல்ல ஆரம்பித்திருந்தார். எதிரிக்காகவும்
இரங்கி அவன் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்து க்ரிஷ் நின்ற அந்த சில நிமிட காலம்
அவர் மனதில் ஏனோ பசுமையாகப் பதிந்து விட்டிருந்தது.
இம்மானுவல் தான் கொண்டு வந்திருந்த
ஃபைலை அங்கே மேசை மீது வைத்து விட்டு க்ரிஷிடம் சொல்ல ஆரம்பித்தான். “விஸ்வம்
பற்றி நவீன்சந்திரா ஷா இல்லுமினாட்டியிடம் தெரிவித்ததிலிருந்து அவன் எங்கள் உளவுத்துறையின்
பார்வையில் தான் இருந்து வருகிறான். அவன் கனவு ஒன்றைச்
சொல்லி அவன் தான் இல்லுமினாட்டியைக் காப்பாற்ற வந்தவன் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த
முனைந்ததால் நாங்கள் அவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில்
இருந்து அவனை அப்போதிருந்து கண்காணித்து வருகிறோம். அவன் சில
இடங்களுக்கு ஏன் செல்கிறான், சில காரியங்களை ஏன் செய்கிறான் என்றெல்லாம் எங்களுக்குத்
தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவனைக் கண்காணித்ததில் அவனுக்கு நண்பர்களோ, கூட்டாளிகளோ
இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்திருந்தது. அதே போல
கடைசியாக அவன் இல்லுமினாட்டி கூட்டத்தில் பேச வந்தது வரையில் கூட அவனை யாரும் பின்
தொடர்ந்து வரவில்லை என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை...”
”அவன் இறந்து
போனது அவன் அருகில் இருந்த இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கே கூடத் தெரியாமல் இருந்த
போதும் எங்கேயோ இருந்த ஒருவனுக்குத் தெரிந்து அவன் ஆவியை வரவழைக்கும் இசையை கிடாரில்
வாசித்ததும், விஸ்வம் இறந்து கொண்டிருந்த ஒரு உடலில் புகுந்து கொண்டதும்
எங்களுக்கு உண்மையாகவே அதிர்ச்சி தான். இதில் விஞ்ஞானத்திற்கு
இடமே இல்லை. விஞ்ஞான ரீதியாக விளக்கம் இல்லை. அப்போது
தான் உங்கள் தேசத்தின் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையை நாங்கள் சீரியஸாக எடுத்துக்
கொள்ள வேண்டியிருந்தது. அதற்கேற்ற மாதிரி டேனியலின் மூளைப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண
மாற்றங்களும் இருந்தன. அவனை அங்கிருந்து ஒரு காரில் யாரோ அழைத்துப் போயிருப்பது
தான் கூட்டாளி ஒருவனோ, பலரோ இருப்பதற்கு மேலும் அசைக்க முடியாத ஆதாரமாகப் போய் விட்டது. கடைசியில்
பலர் அல்ல ஒருவன் என்ற அனுமானத்திற்கு வந்தோம்... ஆனால் யாரென்று
கண்டுபிடிக்க வழியில்லை.”
“அந்தக்
கூட்டாளி விஸ்வத்தைப் பின் தொடர்ந்து ம்யூனிக் வரவில்லை. அவன் இல்லுமினாட்டி
கூட்டத்திற்கும் வரவில்லை. ஆனாலும் விஸ்வம் இறக்க ஆரம்பித்த கணம் அந்தக் கூட்டாளிக்குத்
தெரிந்திருக்கிறது, அந்த நேரத்தில் இறந்து கொண்டிருக்கும் இன்னொரு உடல் பற்றித்
தெரிந்திருக்கிறது, அந்த உடல் இருக்கும் இடத்தில் அந்த ஆவி வரவழைக்கும் இசையை
யார் பார்வைக்கும் படாமல் இசைக்க முடிந்திருக்கிறது, அவனை நேரில்
சந்திக்காமல், போனிலோ, நமக்குத் தெரிந்த மற்ற விதங்களிலோ தொடர்பு கொள்ளாமல் அதிகாலை
நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரவழைத்து அழைத்துச் செல்லவும் முடிந்திருக்கிறது
என்பதை எல்லாம் பார்க்கையில் கூட்டாளி ஒரு மனிதனோ, மனித சக்தியோ
அல்ல என்பது நிச்சயமாகத் தெரிந்தது...”
க்ரிஷ் திகைப்புடன்
இம்மானுவலைப் பார்த்தான். ஆனால் இந்த அனுமானம் வரை ஏற்கெனவே அறிந்திருந்ததால் எர்னெஸ்டோவும்,
அக்ஷயும் அமைதியாக அடுத்தது என்ன என்று இம்மானுவலை ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இம்மானுவல் தொடர்ந்தான். ”இன்னொன்றும்
நிச்சயமாகத் தெரிந்தது. அந்தக் கூட்டாளி ஏற்கெனவே விஸ்வத்துக்குப் பரிச்சயமானதாக
இருக்க வேண்டும். இல்லா விட்டால் ஆஸ்பத்திரியிலிருந்து விஸ்வம் நம்பி, கூடப் போயிருக்க
வழியில்லை. அப்படியானால் எங்கள் கண்காணிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால்
ஒருசில முறையாவது ஏதாவது வகையில் இருவரும் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று புரிந்தது.”
“க்ரிஷ்
பற்றி நாங்கள் முன்பே அறிந்திருந்ததும், க்ரிஷ் வெளிப்படையாகவே
ஏலியன் ஒன்றின் தொடர்பு பற்றிச் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வர நான் அந்த வகைத் தொடர்பே
ஏன் விஸ்வத்துக்கும் ஏற்பட்டிருக்கக்கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தேன். க்ரிஷை
ஏலியன் சந்தித்தது முதல் க்ரிஷிடமிருந்து ஏலியன் விடைபெற்றது வரை க்ரிஷ் சொன்ன நேர
காலத்தில் எல்லாம் இந்தப் பூமியில் க்ரிஷ் சொன்ன பகுதிகளில் விசேஷ சக்தி அலைவரிசைகளை
இஸ்ரோவும், நாசாவும் பதிவு செய்திருந்தன. அப்படியானால்
அதே அலைவரிசைகள் பிறகு எங்கேயாவது பதிவு ஆகியிருக்கிறதா என்று இஸ்ரோ, நாசா இரண்டையும்
விசாரித்தேன்... இல்லை என்றார்கள். அது ஏமாற்றமாக
இருந்தது.”
“பின் இஸ்ரோவில்
விஞ்ஞானியாக இருக்கும் நம் உறுப்பினர் விஸ்வேஸ்வரய்யாவிடம் இது பற்றிப் பேசினேன். அவர்
சொன்னார். “க்ரிஷின் ஏலியன் நண்பன் வெளிப்படுத்திய அலைவரிசைகளையே விஸ்வத்தின் ஏலியன்
நண்பனும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லையே. இது வேறு கிரகத்திலிருந்து வந்திருக்கலாம்.
வேறு விதமான அலைவரிசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். அதனால் அப்படி ஏதாவது அடையாளப்படுத்த
முடியாத புதிய வேறு அலைவரிசைகள் ஏதாவது பூமியில் தென்பட்டிருக்கிறதா என்று பார்ப்பது
தான் சரி என்றார். உடனே அந்த வகையிலும் பார்த்துச் சொல்ல நான் நாசா, இஸ்ரோ இரண்டையும்
கேட்டுக் கொண்டேன். அப்படி இருப்பதாகத் தெரிந்ததும் உடனே அந்த அலைவரிசைகளை
ஆராய்ந்து சொல்லச் சொன்னேன்....”
மூவருமே பரபரப்புடன்
அதை அறிய ஆவலானார்கள். இம்மானுவல் தொடர்ந்தான். “அந்த விசேஷ அலைவரிசைகள்
பூமியில் தெரிய ஆரம்பித்தது பல வருடங்களுக்கு முன்பிருந்தே என்பது தான் ஆச்சரியம். அந்த சமயத்தில்
விஸ்வமும் சாதாரணமான ஆளாக இருந்திருக்கிறான். அந்தக்
காலக் கட்டத்தில் சில நாட்கள் மட்டும் அந்த அலைவரிசைகள் தென்பட்டிருக்கின்றன. பிறகு சில
காலம் அந்தச் சுவடே இல்லை. மறுபடியும் சில வருடங்கள் கழித்துச் சில நாட்கள் தெரிந்து
மறுபடியும் மறைந்து போயிருக்கின்றன. அத்தனையும் தென்னிந்தியாவில்
தான் தென்பட்டிருக்கின்றன. மூன்றாவது
முறை அந்த அலைவரிசைகள் தென்பட்டது தென்னிந்தியாவில் இல்லை, ஜெர்மனியில்
குறிப்பாக ம்யூனிக்கில். சரியாகச் சொன்னால் விஸ்வம் இறந்து போன அன்று தான். நேரமும்
மதியம் கழிந்து நாலரை மணி. இல்லுமினாட்டிக் கூட்டம் ஆரம்பித்த நேரம் அது. விஸ்வம்
இறப்பான் என்று முன்கூட்டியே அறிந்து அந்த சக்தி வந்திருந்ததா, என்ன வேண்டுமானாலும்
நடக்கலாம் என்று சந்தேகத்தில் வந்து, விஸ்வத்துக்கு ஏதாவது
ஆபத்து நேர்ந்தால் காப்பாற்றலாம் என்று வந்திருந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் வந்திருக்கிறது. இன்று வரை
அந்த அலைவரிசை ம்யூனிக் பகுதியில் தொடர்ந்து வருகிறது.”
க்ரிஷ் கேட்டான். “அந்த அலைவரிசையை
வைத்துக் குறிப்பாக இந்த இடம் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?”
இம்மானுவல் சொன்னான். “இல்லை. அது தான்
நமக்குப் பிரச்னையாக இருக்கிறது. உன் ஏலியன் நண்பன் சென்ற இடங்கள் எல்லாம் மிகத் தெளிவாக இருந்தன. விஸ்வத்தின்
இந்த நட்பு சக்தி தன் சக்தி அலைவரிசைகளைக் கலைத்தும் விடுகிறது போலிருக்கிறது. இதன் அலைவரிசைகள்
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களில் படர்ந்து
மங்கலாகத் தெரிவதாகச் சொல்கிறார்கள்...”
மூவரும் இது என்ன
வினோதம் என்று திகைத்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
Super. So Gypsy is also an alien. Both sides have alien. Tough fight in that aspect also. Very interesting.
ReplyDeleteAwesome
ReplyDeleteWow! What a thriller!
ReplyDeleteInteresting twist on the friend. I did not guess as alien!
ReplyDeleteGypsy um alien ah?
ReplyDeleteSemmmmmmmaaaa thrill..., and my beatsss raisinggggg....
இம்மானுவல் செம்ம👌👏👌... கலக்கிட்டார்.... அவர் யோசிச்ச விதமும், அதை அவர் கண்டு பிடித்த விதமும் அபாரம்.... இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுத்தால், விஸ்வத்தையும் அவன் நண்பனை கையும் களவுமாக பிடித்து விடுவார் போலிருக்கிறதே...!
ReplyDeleteவிஸ்த்தின் நண்பன் கிரிஷ் மனதை படிக்கும் போதே எலியனாக இருக்குமோ.. என்ற சந்தேகம் எழுந்தது.... இப்போது தெளிவடைந்து விட்டது....
அப்போ ஏலியன், விஸ்வத்த தான் select பண்ணி இருக்கோ? Because starting ல விஸ்வம் ரொம்ப நல்லவன் ஆ தானே இருந்தான்...
ReplyDeleteSo master and Krish இரண்டு பேருமே இல்ல போல, பூமி அழிய gypsy ஏலியன் தான் விஸ்வம் மூலமா செயல்படுதோ?
இதெல்லாம் விஸ்வத்துக்கு தெரியும் போது, எப்படி இருக்கும்னு இருக்கு...
super...
ReplyDelete