வேலாயுதம் அன்றிரவு நள்ளிரவு வரை உறங்காமல் விழித்திருந்து
வழக்கம் போல் பக்கத்து வீட்டைக் கவனித்தார். அன்று பாம்பு
சீறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது
நேரம் உறங்கி மூன்று மணிக்கு எழுந்து அந்த நிசப்த நேரத்தில் ஏதாவது சத்தம் கேட்கிறதா
என்று பார்த்தார். அப்போதும் எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ஒரு நாற்காலியை ஜன்னல் பக்கம் இழுத்துப் போட்டு அதில் ஏறி
நின்று, திறந்திருக்கும் பக்கத்து வீட்டு மேல் ஜன்னல் வழியாக ஏதாவது
தெரிகிறதா என்று பார்த்தார். அந்த ஜன்னல் இருக்கும் அறையின் கதவு சாத்தியிருந்ததால் அங்கே
வெறும் இருட்டே தெரிந்தது. சிறிது நேரம் நின்று சலித்து இறங்கினார். பக்கத்து
வீட்டுக்காரன் உஷாராகி விட்டானா? அவர் யோசித்தபடியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்....
தீபக் நேற்று காலை அவரிடம் நாகராஜ்
பற்றிப் பல கேள்விகள் கேட்டிருந்தான். பாம்பையும், ஜொலித்த
ஒளியையும் பார்த்ததை அவர் சொல்லவில்லை. அதை கல்யாணும் சரத்திடம்
சொல்லி இருக்கவில்லை என்று தெரிவித்திருந்தான். அதனால்
தீபக்கிடமும் அதைச் சொல்ல வேண்டிய நிலைமையை உருவாக்கும் உண்மைகளையும் அவர் சொல்லாமல்
தவிர்த்து மற்றவற்றைச் சொன்னார். அவன் பெரும்பாலான நாட்களில் காலை சுமார் ஐந்து மணிக்கும், மாலை சுமார்
ஐந்து மணிக்கும் ரேஸ்கோர்ஸில் வேகமாக நடைப்பயிற்சி செய்கிறான் என்றும் கூடவே அவன் அசிஸ்டெண்ட்
சுதர்ஷனும் போகிறான் என்றும் அவர் தெரிவித்த போது தீபக் அந்த நடைப்பயிற்சி நேரமே அவனை
அடுத்த முறை சந்திக்கவும், சற்று அதிக நேரம் பேசவும் உகந்த நேரம் என்று சொன்னான். “தாத்தா. அவர் காலையில்
வீட்டை விட்டுக் கிளம்பியவுடன் எனக்குப் போன் செய்றீங்களா? வலது பக்கம்
போகிறாரா, இடது பக்கம் போகிறாரா என்றும் கூடச் சொன்னால் யதார்த்தமாய்
வழியில் கிடைக்கிற மாதிரிப் போய்ப் பேச வசதியாக இருக்கும்.” என்றும்
சொன்னான்.
சாதாரணமாக இது போன்ற வேலையை அவரிடம்
அவன் கொடுத்திருந்தால் அவர் கொந்தளித்துப் போயிருப்பார். “இவனுக்கு
நான் வேலைக்காரனா? இல்லை எனக்கு இதே தான் வேலையா? யார் கிட்ட
பேசறோம்கிற தராதரம் தெரியலையே இவனுக்கு?” என்று வெடித்திருப்பார். ஆனால் இந்த
விஷயத்தில் உற்சாகமாக அவர் ஒப்புக் கொண்டார். அவன் எப்படியாவது
பக்கத்து வீட்டுக்காரனுடன் சிநேகிதம் ஆகி விட்டால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவனோடு
சேர்ந்து அவர்களும் நாகராஜிடம் நெருக்கமாவது சுலபமாக இருக்கும்....
நாலரை மணி வரை படுக்கையில் புரண்டு
கொண்டிருந்து விட்டுப் பின் வீட்டுக்கு முன் உள்ள புல்வெளியில் நடப்பதும் உட்கார்வதுமாக
இருந்தார். சரியாக 5.10க்கு நாகராஜும், சுதர்ஷனும்
நடைப்பயிற்சிக்குக் கிளம்பினார்கள். வலது பக்கமாக அவர்கள்
போக ஆரம்பித்ததைப் பார்த்து விட்டு அவர் உடனடியாக தீபக்குக்குப் போன் செய்தார். “தீபக். ரெண்டு
பேரும் கிளம்பிட்டாங்கடா. வலது பக்கம் போறாங்க”
தீபக்கும் அதிகாலையே எழுந்திருந்து
அவருடைய போன்காலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவர் போன்
செய்து சொன்னவுடனேயே அவன் கிளம்பி விட்டான். நான்கே
நிமிடங்களில் அந்த சுற்றுப்பாதையில் வந்து கொண்டிருந்த அவர்களுக்கு எதிர்ப்பட்ட அவன் “ஹாய் அங்கிள்” என்று ஆச்சரியப்
புன்னகையை உதிர்த்து விட்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டான். “தினம் இந்த
நேரத்தில் தான் வாக்கிங் போவீங்களா அங்கிள்” என்று கேட்டபடியே
அவர்களுடன் சேர்ந்து சரிசமமான வேகத்தில் நடக்க ஆரம்பித்தான்.
ஆமென்ற நாகராஜ் “நீ?” என்று கேட்டான்.
“எப்பவுமே
காலைல லேட்டா தான் எழுந்திருப்பேன். அம்மா என்னைக் கூப்பிட்டே
சலிப்பாங்க. இன்னையிலிருந்து தான் ஆரம்பிச்சிருக்கேன்...”
என்று தீபக் சொன்னான்.
“ஏன் திடீர்னு
இன்னையிலிருந்து?”
உண்மையான காரணத்தைச் சொல்ல முடியாத
தீபக் “ஏனோ இந்த சோம்பேறித்தனம் நல்லதல்ல மாத்திக்கணும்னு தோணுச்சு
அதான்” என்றான்.
நாகராஜ் அவன் சொன்னதை எந்த அளவு நம்பினான்
என்று தெரியவில்லை. அவன் திடீரென்று கேட்டான். “உன் பிறந்த
தேதி என்ன?”
ஏன் கேட்கிறான் என்று யோசித்தபடியே
தன் பிறந்த தேதியை தீபக் சொன்னான். அதைக் கேட்டு விட்டு
நாகராஜ் எதோ கணக்கு போட்டது போலத் தோன்றியது. அதனால் தீபக் உடனடியாக அவன் கணக்கில் குறுக்கிடாமல் அவன்
கணக்கு போட்டு தெளிவடைந்தது போலத் தோன்றியவுடனே கேட்டான். “ஏன் அங்கிள்
கேட்டீங்க?” என்றான்.
நாகராஜ் சொன்னான். “சும்மா
தான்?”
“சும்மான்னு
சொன்னது சும்மா தானே? எதோ கணக்குப் போட்டுப் பார்த்த மாதிரி இருந்துச்சே அங்கிள்” என்று தீபக்
சொன்னவுடன் நாகராஜ் தன்னையும் மீறிப் புன்னகைத்தான். தீபக் வேறொரு
மனிதனை அவனுக்கு நினைவுபடுத்தினான். ஒரு கணம் அந்தப்
புன்னகையும் உறைந்தது.
அவன் எதாவது பதில் சொல்வான் என்று எதிர்பார்த்த
தீபக் அவன் ஒன்றும் சொல்லாமலிருக்கவே ”சொல்லுங்க அங்கிள்” என்று வற்புறுத்தினான்.
நாகராஜ் என்ன சொல்வது என்று யோசித்து
விட்டு “நியுமராலஜி” என்றான்.
“நியூமராலஜி
என்னைப் பத்தி என்ன சொல்லுது?”
”வெறும்
நியூமராலஜி அதிகம் சொல்றதில்லை. அது கூட வேற சிலதையும் சேர்த்தால் எதாவது சொல்லலாம். சரி ஒன்பதுக்குள்
ஒரு நம்பர் சொல் தீபக்”
“ஏழு”
“ஒரு பூ
பெயரைச் சொல்”
“நாகலிங்கப்
பூ”
நாகராஜ் கண்களை மூடிக் கொண்டே சில அடிகள்
நடந்து பின் கண் திறந்து கேட்டான். “உனக்கு ரெண்டு நாளாய்
தொடர்ந்து ஒரே கனவு வருதா?”
தீபக் திகைத்தான். நாகராஜ்
சொன்னது உண்மை தான். நேற்றிரவும் கூட அந்தக் கனவு வந்தது. “நான் இயற்கையாய்
சாகலை. என்னைக் கொன்னுட்டாங்க” என்று யாரோ
கிணற்றுக்குள்ளிருந்து சொல்வது போல் கேட்டது. ஆளைப் பார்க்க
முடியவில்லை. குரல் மட்டும் பலவீனமாய் அதள பாதாளத்திலிருந்து கேட்பது போல்
இருந்தது. இவருக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டபடி ”ஆமா அங்கிள்” என்றான்.
சில வினாடிகள் மவுனமாக இருந்து விட்டு
நாகராஜ் சொன்னான். “உன்னை ஏதோ ஒரு ஆத்மா தொடர்பு கொள்ளப் பார்க்கிறது தீபக்”
திடுக்கிட்ட தீபக் நடப்பதை நிறுத்தி
மூன்று வினாடிகள் நின்று விட்டு ஓடிப் போய் மறுபடி அவர்களுடன் சேர்ந்து கொண்டான். ”யாரோட ஆத்மா
அங்கிள்”
“உனக்கு
ரொம்ப நெருங்கின ஆள் யாரோடதோ ஆத்மாவாய் இருக்கும்னு தோணுது...
அந்த ஆளோட மரணம் இயற்கையாய் இல்லாமலிருந்திருக்கலாம்....”
நாகராஜைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து
கொண்டு விட வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்த தீபக் இந்தத் தகவலால் திடுக்கிட்டு அந்த
எண்ணத்தை ஒதுக்கி வைத்தான். அவன் தன் நெருங்கிய உறவினர்களின் மரணத்தை எல்லாம் யோசித்துப்
பார்த்தான். தாய்வழித்
தாத்தா பாட்டியும், தந்தைவழித் தாத்தா பாட்டியும் இப்போது உயிரோடு இல்லை. அவர்கள் வயதாகியும், நோய்வாய்ப்பட்டும் தான் இறந்தவர்கள்.
யாருடைய மரணமும் இயற்கை அல்ல
என்று சந்தேகப்படும்படி இருக்கவில்லை. ரஞ்சனியும், சரத்தும் தங்கள் பெற்றோருக்கு ஒரே குழந்தைகள் தான். அதனால்
அவர்களின் உடன்பிறப்புகள் யாராவது அப்படி இறந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளவும்
வழியில்லை…
மேலும் ஏதோ கேட்க தீபக் வாயைத் திறந்த போது சுதர்ஷன் அவன் கையைப்
பிடித்து ’எதுவும்
இனி பேசாதே’ என்று சைகை செய்தான். தீபக்
திகைப்பு மேலும் கூடியது. அவன் நாகராஜைப் பார்த்தான்.
நாகராஜ் முகம் இறுகி இருந்தது. பார்வை தொலைதூரத்தில்
நிலைத்திருந்தது. தூரத்தில் ஒரு புள்ளியைப் பார்த்துக் கொண்டே
அதை நோக்கிப் போகிறவன் போல அவன் நடந்து கொண்டிருந்தான். அவனுடன்
சுதர்ஷனும், தீபக்கும் வருவது அவனுடைய பிரக்ஞையில் இருக்கிறதா
என்பதும் தெரியவில்லை.
தீபக் ஒரு அமானுஷ்யச் சூழலை ஏனோ உணர்ந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
We also feel tension. Very involved in the scene till the word thodarum. Waiting for next Monday.
ReplyDeleteதீபக் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள போனால்...இதுல இப்படி ஒரு திருப்பம்... ஒருவேலை நாகராஜ் திட்டப்படி தான் இது நடக்கிறதோ????
ReplyDelete