க்ரிஷ் ம்யூனிக் போன நாள் இரவில் உதய் சிந்துவுக்குப் போன்
செய்து தம்பி எல்லோரையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னதைச் சொன்னான்.
“...நீயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சிந்து. அந்த எதிரி மிகவும் ஆபத்தானவன்...”
சிந்து ஒன்றும்
சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டாள். அண்ணனிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்ன க்ரிஷ்,
ஆபத்து அவள் மூலமாகத் தான் அவர்களுக்கு வரும் என்பதை இன்னும் சொல்லாமல் விட்டிருக்கிறான்...
இதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அவன் அண்ணன் மனம் புண்படுவதை அவன் விரும்பவில்லை.
ஆனால் அவன் திரும்பி வருவதற்குள் அவள் சென்னை சென்றால் அதை அவனுக்குத் தெரியப்படுத்த
எதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போயிருப்பான். அப்போது அவன் என்ன செய்வான் என்று அவளுக்குத்
தெரியவில்லை.
விஸ்வம் இரண்டு
நாள் முன்பு போன் செய்து பேசியதிலிருந்து அவள் மனப் போராட்டத்திலேயே இருக்கிறாள். ”நீ தயாராக
இரு. ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நீ என்ன செய்ய வேண்டுமென்பதை
நான் உனக்குத் தெரிவிக்கிறேன்...” என்று சொல்லியிருக்கிறான். ஒவ்வொரு நாளும் முடிய முடிய
மனம் திக் திக்கென்றது. அவன் போன் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவளால் தீர்மானிக்க
முடியவில்லை.
“ஏய் என்ன தூங்கி
விட்டாயா? சத்தமேயில்லை...” என்று உதய் கேட்ட பிறகு சிந்து மெல்லச் சொன்னாள். “நான்
இப்போதைக்கு வெளியாள் தானே? எனக்கென்ன ஆபத்து வரப் போகிறது?”
“ஹரிணி கூட இப்போதைக்கு
வெளியாள் தான். ஆனால் அன்றைக்கு அவளைக் கடத்திக் கொண்டு போய் விட்டான். நல்ல வேளையாக
அவள் இருக்குமிடத்தை செந்தில்நாதன் கண்டுபிடித்தார். இல்லா விட்டால் என்ன ஆயிருக்கும்
என்பதை என்னால் இன்னும் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதனால் நீ அலட்சியமாய்
இருந்து விடாதே. உனக்கு ஏதாவது ஆனால் என்னால் தாங்க முடியாது”
பழைய சிந்துவாக
இருந்திருந்தால் இதற்கெல்லாம் அசைந்து கொடுத்திருக்க மாட்டாள். மரத்துப் போயிருந்த
இதயம் இப்போது கனிந்து வருவதால் அந்த வார்த்தைகள் என்னவோ செய்தன. இவனை இனியும் அவள்
எப்படி ஏமாற்ற முடியும்?
க்ரிஷ் ம்யூனிக் விமானநிலையத்தில் இறங்கும் போது தான் அவனை
யாரோ ஊடுருவிப் பார்ப்பது போல் உணர்ந்தான். அவனுக்குள் யாரோ புகுந்து பார்க்கிறார்கள்.
அவனுடைய எண்ணங்கள், திறமைகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் அவசரமாய் யாரோ பார்வையிடுவது
போல் அவனுக்குத் தோன்றியது. எதிரில் தெரியும் ஏராளமான மனிதர்களில் யார் பார்வையிடுகிறார்கள்
என்று அவனால் கணிக்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்து இது போன்ற வேலையில்
மிகவும் தேர்ச்சி பெற்றவன் விஸ்வம் தான். ஆனால் அவன் க்ரிஷ் மனதை ஊடுருவ முடியாதபடி
வேற்றுக்கிரகவாசி நண்பன் ஒரு பாதுகாப்பு ப்ரோகிராம் போட்டு விட்டுப் போயிருக்கிறான்.
அது விஸ்வம் இன்னொரு உடலுக்குப் போன பிறகு வேலை செய்யவில்லையா? இல்லை இது வேறு யாராவதா?
அவன் கூட்டாளியாக இருக்குமோ?... அந்த எண்ணத்தைக் கூட ‘அந்த யாரோ’ அறிந்து கொண்டது போலிருந்தது.
அந்த யாரோவைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து அப்படியே க்ரிஷ் நின்று கொண்டு கூட்டத்தினரைப்
பார்வையால் அலசினான்.
அவனை
வரவேற்க வந்திருந்த இம்மானுவல் முன்னால் வந்து கேட்டான். “ஏன் அப்படியே நின்று விட்டாய்
க்ரிஷ்? யாரைத் தேடுகிறாய்?”
க்ரிஷ்
தன் உணர்வை அவனிடம் சொன்னான். சொல்லச் சொல்ல அவனை ஊடுருவும் சக்தி விலகிக் கொண்டது.
இனித் தெரிந்து கொள்ள வேறெதுவும் இல்லை என்று விலகிக் கொண்டது போல் க்ரிஷுக்குத் தோன்றியது.
அதையும் க்ரிஷ் இம்மானுவலிடம் சொன்னான்.
இந்த
முறை இம்மானுவல் அந்த ஆட்கூட்டத்தில் யாரையும் தேடப் போகவில்லை. “அது வேறு யாருமில்லை.
விஸ்வத்தின் கூட்டாளி தான். ஆள் அகப்பட மாட்டான். வா போகலாம்…” என்று சொல்லி அவன் அமைதியாக
நடக்க ஆரம்பித்தான். க்ரிஷ் திகைப்புடன் அவனைப் பின் தொடர்ந்தான்.
சாலமன் பெரும் சங்கடத்துடன் அந்த சர்ச்சை நோக்கிக் காரில் போய்க்
கொண்டிருந்தார். ஒரு
முறை அவருடைய ஆட்களின் பார்வையில் அகப்பட்ட பிறகு மறுபடியும் அகப்பட அவர் விரும்பவில்லை.
அகப்பட்டால் கண்டிப்பாகக் கேள்விகள் எழும். ஒரு முறை சொன்ன காரணத்தை யதார்த்தமாக எடுத்துக்
கொள்வார்கள். இரண்டாவது முறையைச் சந்தேகிக்காதவன் உளவுத்துறைக்கே லாயக்கில்லாதவன் தான்
என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மட்டுமல்ல இன்னும் சில முறை போய் வர வேண்டி
இருக்கும் போல இருக்கிறது. அது இன்னும் ஆபத்து. அந்தப் பகுதி போலீஸ் அல்லது வேறு யாரோ
ஒருவர் அவரைக் கவனித்து நினைவு வைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதுவும் நல்லதல்ல.
யாராவது ஒரு பொதுநல விரும்பி “ஆளே இல்லாத அந்த சர்ச்சுக்கு யாரோ ஒருவர் காரில் அடிக்கடி
வந்து போகிறார்” என்று அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தால் போதும் அதுவும்
தலைவலி தான். அவருக்கு மட்டுமல்ல. உள்ளே ஒளிந்திருக்கும் விஸ்வத்துக்கும் தான்.
நல்ல
வேளை இது ஜெர்மனி. மக்கள் தொகை சில நாடுகள் போல் அதிகமாய் இல்லை. இந்தப் பகுதியிலும்
அதிக வீடுகள், ஆட்கள் இல்லாமலிருப்பது நல்லதாய்ப் போயிற்று. ஆனாலும் அவர் எச்சரிக்கையாக
இருக்க விரும்பினார்.
அவர்
வாங் வே அனுப்பிய கடிதத்துடன் சேர்ந்து வைக்க இன்னொரு கடிதம் எழுதினார். “திரும்பத்
திரும்ப நானே இங்கே வருவதால் அடையாளம் காணப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒரு சிறிய
வேண்டுகோள். அவருடன் ஸ்கைப்பில் பேச உங்களுக்கு உகந்த நாள், நேரம் எதுவென்று ஒரு மணி
நேரத்திற்குள் எழுதித் தெரிவித்தால் மிகுந்த உபகாரமாய் இருக்கும். நான் அதுவரை அருகில்
உள்ள பூங்காவில் ஒரு மணி நேரம் இளைப்பாறி விட்டுத் திரும்பவும் வருகிறேன். அடுத்த முறை
வரும் போது நம் அனைவரின் பாதுகாப்பையும் முன்னிட்டு நான் வேறு வேடத்தில் வருகிறேன்.
நண்பன் என்ற அட்டையைச் சுமந்து வருவதை வைத்து நான் என்று அறிக. நன்றி”
சர்ச்
சென்றதும் அந்த கண்ணாடி உடைந்த ஜன்னலில் இரண்டு காகிதங்களையும் வைத்து அவற்றின் மேல்
கல் ஒன்றையும் வைத்து விட்டு அருகில் இருந்த பூங்காவுக்குப் போய்ப் சாலமன் உட்கார்ந்து
கொண்டார். ஒருவேளை திரும்பவும் அவர்கள் ஆட்கள் கண்ணில் பட்டாலும் இந்தப் பூங்காவின்
அமைதி எனக்கு ஏனோ மிகவும் பிடித்து விட்டது. அதனால் தான் மறுபடி வந்திருக்கிறேன் என்று
கூடச் சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டார்.
ஒரு
மணி நேரம் என்பது ஒவ்வொரு வினாடியும் மிக மெல்ல ஊர்ந்து செல்வதாய் இருந்தது.
விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான். “வாங் வேயிடம்
எப்போது பேசலாம்?”
“நாளையே
பேசுவது நல்லது. உன் எதிரியும் இன்றைக்கு இங்கு வந்து சேர்ந்து விட்டான். அதனால் இனி
எதற்கும் காலதாமதம் செய்வது வீண்”
“அப்படியானால்
இரவு நேரத்தையே தேர்ந்தெடுப்பது நல்லது. சாலமன் எழுதி இருப்பது போல் அடிக்கடி இங்கே
தென்படுவது அந்த ஆளுக்கு மட்டுமல்ல நமக்கும் தேவையில்லாத ஆபத்து தான். இரவில் அந்த
ஆள் ரகசியமாய் வருவது நல்லது. பகலில் வேண்டாம்”
ஜிப்ஸி
தலையசைத்தான்.
ஜெர்மனி
நேரப்படி மறுநாள் இரவு ஒன்பது மணிக்குப் பேசலாம் என்று முடிவெடுத்து விஸ்வம் வாங் வேக்குக்
கடிதம் எழுதி வைத்தான்.
சாலமன்
பூங்காவிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து வந்து அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போனார்.
எதாவது ஆளோ வாகனமோ பார்வைக்குத் தெரிகிறதா என்று இருபக்கமும் பார்த்தார். நல்ல வேளையாகத்
தெருவே வெறிச்சோடிப் போயிருந்தது. அவர் நிம்மதியுடன்
காரில் பறந்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
Krish மனதில் இருப்பதை ஜிப்சி மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்? அப்போ அவன் மனிதனே இல்லையா? மனிதனில்லாதவனுக்கு விஸ்வம் மீது அப்பா என்ன அக்கறை.?
ReplyDeleteI can't to wait more suspense.,
But semmmmmaaa thrill, ovvoru weekum, Thursday kaaga evloo thavam ah irukken...
Sema thrill. As Ssss said can't wait for the next.
ReplyDeleteகிரிஷ் மனதை படிக்க முடிகிறதென்றால்.... ஜிப்ஸியும் வேற்று கிரக வாசியா??
ReplyDelete