Thursday, June 3, 2021

இல்லுமினாட்டி 105

  

சாலமன் மறுநாள் அந்த சர்ச்சுக்கு வரும் போதும் மிகுந்த படபடப்புடன் தான் வந்தார். முதல் நாளே எதுவும் ஆபத்து நேரவில்லை என்பதால் மறுநாள் பயப்பட வேண்டியதில்லை என்று அறிவு சொன்னாலும் விஸ்வமும் அவனுடைய ரகசியக் கூட்டாளியும் சாலமனையும் நிறையவே பயமுறுத்தினார்கள். எந்த அனுமானத்திற்கும் சரியாகச் சிக்காதவர்களைப் பார்த்துப் பயப்படாமல் இருப்பதல்லவா முட்டாள்தனம்?

சர்ச்சை நோக்கி நடந்து வருகையில் நேற்று போல எதுவும் பிரச்னைகள் இல்லை. அவர் கடிதம் வைத்த ஜன்னலில் அதே போல இன்னொரு காகிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. காற்றில் பறந்து விடாதபடி ஒரு சிறிய கல்லும் மேலே வைக்கப்பட்டிருந்தது. அமைதியாக எடுத்துக் கொண்டு திரும்பும் போது அவரையே யாரோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு அவருக்கு இருந்தது. ஆனால் அவர் திரும்பிப் பார்க்கவில்லை.

அவர் காரில் ஏறக் கதவைத் திறந்த போது அவர்களுடைய உளவுத்துறை ஆட்கள் இரண்டு பேர் ஒரு பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்தார்கள். சாலமனின் இதயத்துடிப்பு சில வினாடிகள் நின்று பின் வேகமாகத் தொடர்ந்தது. அவர்களை இயல்பாகச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. சாலமன் அவர்களைப் பார்த்துக் கையசைத்தார்.

இருவரும் பைக்கை  நிறுத்தி அவருக்கு சல்யூட் அடித்தார்கள்.

சாலமன் கேட்டார். “நீங்கள் என்ன இந்தப் பக்கம்?”

தலைவர் பார்த்த இடங்களையே இன்னொரு முறை நன்றாகச் சோதித்துப் பார்த்து விட்டு ரிப்போர்ட் அனுப்பச் சொல்லி இருக்கிறார். அந்த லிஸ்டில் இந்த சர்ச்சும் இருக்கிறது. போன தடவை நம் ஆட்கள் வேறிரண்டு பேர் இதைப் பார்த்து விட்டுப் போயிருக்கிறார்கள். இரண்டாம் முறை சோதனைக்கு எங்களுக்குக் கிடைத்த இடங்களில் இதுவும் ஒன்று. நீங்கள் சார்?”

சாலமன் சமாளித்துக் கொண்டு புன்னகையோடு சொன்னார். “விஸ்வத்தைக் கண்டுபிடிக்க நானாகச் சில இடங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து வருகிறேன். அப்படி வந்தது தான் இங்கே. இங்கு முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். இந்த இடத்தில் விஸ்வம் இல்லை...”

அவர்கள் இருவரும் நாம் என்ன செய்வது என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் சென்று மறுபரிசோதனை செய்வதை சாலமன் விரும்பவில்லை. மறுபரிசோதனை எப்போதுமே மிகவும் தீவிரமானதாக இருக்கும். இந்த இரண்டு பேரும் திறமையானவர்கள்.... சாலமன் சொன்னார். “நீங்கள் பரிசோதனை செய்து விட்டதாகக் குறித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நானும் இப்போது தான் பார்த்து விட்டு வருகிறேன்...”

உபதலைவரே சொன்னதற்குப் பிறகு பார்க்க ஒன்றும் இல்லை என்று முடிவு செய்தவர்கள் கையிலிருந்த தாள்களில் பார்த்தாகி விட்டது என்று குறித்துக் கொள்ள சாலமன் அவர்களிடம் கையசைத்து விட்டுக் காரில் ஏறிக் கிளம்பினார். அவர்களும் கிளம்பிப் போனார்கள்.

அவர்கள் போன பின் கூட அவர் மனம் நிம்மதியாக இல்லை. அவர்கள் பார்வையில் இந்த இடத்தில் தென்பட்டதை அவர் விரும்பவில்லை. அவர்கள் இம்மானுவலுக்குப் பேசக் கிடைத்து, இந்த விஷயத்தை அவனிடம் சொல்லும் வாய்ப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவு தான். அவர்களாக இம்மானுவலிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துத் தொடர்பு கொண்டால் ஒழிய அவர்களுக்கு இம்மானுவல் பேசக்கிடைக்க மாட்டான்.  இப்போதைய நிலைமையில் இம்மானுவல் பேச அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் விஸ்வத்தைக் கண்டுபிடித்து விட்டோம் என்று செய்தியோடு போனால் மட்டும் அது சாத்தியம்.

ஆனாலும் அந்த ஒரு சதவீதத்திற்கும் குறைவான  வாய்ப்பே சாலமனைப் பயமுறுத்தியது. ஒரு பேச்சு வாக்கில் இந்த சந்திப்பை இவர்கள் உளவுத்துறை நண்பர்களிடமே சாதாரணமாகச் சொல்லலாம். அவர்களில் யாராவது அப்படியே பேச்சுவாக்கில் அவனிடம் சொன்னால் கூட இம்மானுவல் யோசிக்க ஆரம்பித்து விடுவான்.... அது ஆபத்து.....  மனதில் ஒரு நெருடல் தொடர அவர் வேகமாகச் செல்ல ஆரம்பித்தார். வாங் வே விஸ்வத்தின் கடிதத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்...



சிந்துவும் அவள் புதிய குடும்பமும் மும்பையிலிருந்து மறுநாளே டெல்லிக்குக் கிளம்பி விட்டார்கள். பலரும் பார்க்க, ஒரே அறை ஓங்கி அறைந்துபொறுக்கி ராஸ்கல்என்று கத்தி தன் ஆத்திரம் அனைத்தையும் தீர்த்துக் கொண்ட மிருதுளா அதற்கு மேல் அந்த ஆளை நினைத்துத் தன் மனதை அசுத்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.  அவள் அறைந்த காரணமும், அந்தத் திட்டுக்கு அர்த்தமும் அவர் ஒருவருக்கு மட்டுமே உண்மையாகப் புரியும் என்பதும், மற்றவர்கள் வேறு வேறு கற்பனைகள் செய்து கொள்வார்கள் என்பதும், இரண்டாவது மனைவி, மகள் உட்பட யாருக்கும் உண்மையைச் சொன்னால் அது அவர்களது கற்பனைகளை விடக் கேவலமாக இருக்கும் என்பதால் எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அவர் தவிப்பார் என்பதும் அவளுக்குத் திருப்தி தருவதாக இருந்தது

சிந்துவும் கூட அதோடு அந்தப் பழைய கணக்கை முடித்துக் கொள்ள விரும்பினாள். அவர் சம்பந்தப்பட்ட அந்தக் கணக்கை அப்படி முடித்துக் கொண்டாலும் மற்ற கணக்குகளையும் அப்படி முடித்துக் கொள்ள முடியாதது தான் அவளுக்கு வருத்தமாக இருந்தது. விஸ்வம் இன்னும் அவளை அழைக்கவில்லை. வழக்கமாக அவனாக மானசீகமாக அவளை அறிய முற்படும் போது ஏற்படும் உணர்வும் பின் வரவில்லை. ஆனால் எந்த நேரமும் வரலாம்...

உதய் மட்டும் தினமும் காலை அரை மணி நேரம், இரவு அரை மணி நேரம் அவளுக்குப் போன் செய்து பேசினான். வழக்கம் போல் காதல் வார்த்தைகளாகப் பேசினான். அது முன்பு சலித்தது போல் இப்போது அவளுக்குச் சலிக்கவில்லை. அதைக் கொஞ்சம் அவள் விரும்பவும் செய்தாள். அவனுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அலைபேசியில் பார்த்து அதில் அவனை ரசிக்கவும் செய்தாள்.  முந்தைய அருவறுப்பு இப்போது இல்லை. அம்மாவோடு காதலைச் சேர்த்து வைத்து வெறுத்த அவளுக்கு அம்மா மீது இருந்த வெறுப்பு விலகியதோடு காதலும் இனிக்க ஆரம்பித்தது. ஆனால் இந்த எண்ணத்தை வளர்த்தக்கூடாது என்று எண்ணிக் கொண்டாள். அவள் மனதை ஆக்கிரமித்தால் விஸ்வம் இதையும் சேர்ந்து உணர்ந்து கொள்வான். பின் என்ன செய்வான் என்பது நிச்சயமில்லை.

சிந்து தினமும், காலையிலும் இரவிலும் யாருடனோ நீண்ட நேரம் பேசுவதில் மிருதுளா சந்தேகம் வந்து தனியாக இருக்கையில் மகளிடம் விசாரித்தாள். சிந்து மெல்ல உதய் தன்னைக் காதலிப்பதைச் சொன்னாள். உதய் ஒரு எம்.பி என்பதும், முதலமைச்சரின் மகன் என்பதும் கேள்விப்பட்ட மிருதுளா ஆச்சரியப்பட்டாலும் அதற்குப் பெரிய முக்கியத்துவம் தராமல் அவன் ஆள் எப்படி, குடும்பம் எப்படி என்று விசாரித்தாள். இரண்டிலுமே சிந்துவுக்குக் குறை சொல்ல ஒன்றுமிருக்கவில்லை.

“நீயும் அவனைக் காதலிக்கறியா சிந்து?” மிருதுளா கேட்டாள்.

“எனக்கு ஆரம்பத்துல அவர் கிட்ட பெரிய ஈர்ப்பு இருக்கலை”

“இப்போ?”

“எனக்குச் சொல்லத் தெரியலைம்மா”   

ஆனால் மிருதுளாவுக்கு அந்தப் பதிலைப் படிக்கத் தெரிந்தது. “அப்படின்னா நாங்க வந்து அவங்க கிட்ட பேசட்டுமா சிந்து” என்று அவள் ஆர்வத்துடன் கேட்டாள்.

சிந்து தயக்கத்துடன் சொன்னாள். “நான் சின்ன வயசாயிருக்கறப்பவே நீ இறந்துட்டாய்னு அவங்க கிட்ட சொல்லியிருக்கேன்மா...”

மிருதுளா முகம் வாடினாலும் அவளுக்கு மகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. சிந்து சொன்னாள். “நான் திரும்பிப் போனதுக்கப்பறம் அவங்க கிட்ட நேரில் எல்லா உண்மையையும் சொல்றேம்மா. அப்பறம் மற்றதை யோசிக்கலாம்...” ஆனால் மனதில் மட்டும் சிந்து ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொண்டாள். ’நான் உயிரோடு இருந்தால்...’

மகள் மனதிற்குள் சொன்ன வார்த்தைகளை அறியாத மிருதுளா நிம்மதி அடைந்தாள்.  

அன்று நள்ளிரவில் வெளிநாட்டு அழைப்பு ஒன்று சிந்துவின் அலைபேசிக்கு வந்தது. சிந்து கைநடுங்க அலைபேசியை எடுத்துப் பேசினாள். “ஹலோ”

விஸ்வத்தின் புதிய குரல் கேட்டது. “எல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது சிந்து?”

அவன் அவள் மனதை ஆக்கிரமிக்காமல் போன் செய்தது அவளுக்கு தற்காலிக நிம்மதியைத் தந்தது. “திட்டமிட்டபடியே போய்க் கொண்டிருக்கிறது. உதயும் அவன் அம்மாவும் என் மேல் உயிராய் இருக்கிறார்கள்....”

“க்ரிஷ்?”

“அவன் மட்டும் என்னைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கிற மாதிரி தோன்றுகிறது. ஆனால் அவன் எனக்கு எதிராக வீட்டாரிடம் எதுவும் சொல்லவில்லை”

“நல்லது. அவனைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. அவன் வெளிநாட்டுக்குப் போய்விடுவான். நீ தயாராக இரு. ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நீ என்ன செய்ய வேண்டுமென்பதை நான் உனக்குத் தெரிவிக்கிறேன்...”

சிந்து அன்று உறக்கத்தைத் தொலைத்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்   



2 comments:

  1. Viswam is becoming active. Dhik Dhik moments start.

    ReplyDelete
  2. சாலமன்க்கு பிரச்சனை துளிர்க்க ஆரம்பிச்சிடுச்சு....
    விஸ்வத்தின் திட்டம் தான் என்ன? சிந்து அதற்கு என்ன செய்யப் போகிறாள்...?

    ReplyDelete