Monday, May 31, 2021

யாரோ ஒருவன்? 34


ன்றிரவுச் சாப்பாட்டின் போது தீபக் தன் காலை அனுபவத்தைத் தாயிடம் விவரித்துக் கொண்டிருந்தான். ரஞ்சனி அவனுக்குத் தாய் மட்டும் அல்ல. சிறந்த தோழியும் கூட. அவன் சொல்லும் எல்லாவற்றையும் அவள் மிகுந்த சுவாரசியத்துடன் கவனமாகக் கேட்பாள். சில நேரங்களில் தோழியாய்ப் புரிந்து கொண்டு உற்சாகப்படுத்துவாள். சில நேரங்களில் தாயாய் கண்டிப்பாள். அவள் ஆதரித்தாலும், கண்டித்தாலும் அவனால் அவளிடம் எதையும் சொல்லாமல் இருக்க முடிந்ததில்லை

சரத்திற்கு அனைத்தையும் விரிவாகக் கேட்கும் பொறுமை கிடையாது. சில விஷயங்கள் அவனுக்குச் சுவாரசியமாக இருக்கும். அவற்றை அவன் ஆர்வத்துடன் கேட்பான். சில விஷயங்கள் அவனுக்குப் போரடித்து விடும். அவற்றில் அவன் கவனம் தங்காது. அதைத் தந்தையின் முகபாவத்திலேயே தீபக் கண்டுபிடித்து விடுவான். அதனால் அது போன்ற விஷயங்களை சரத்திடம் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுவான்.

சரத்துக்கு இன்றைய விஷயம் சுவாரசியமானதாகவே தோன்றியது. பக்கத்து வீட்டுக்கு ஒரு மர்ம மனிதன் குடிவந்திருப்பது பற்றி ஏற்கெனவே கல்யாண் அவனிடம் சொல்லி இருந்ததால் அந்த மர்ம மனிதனைப் பற்றிக் கூடுதலாய்த் தகவல் தெரிந்து கொள்ள சரத் ஆர்வமாக இருந்தான்.

தீபக் சொல்லிக் கொண்டிருந்தான். “... அந்த நாகராஜ் கண்ணுல படலையே என்ன பண்ணறதுன்னு நான் யோசிச்சுகிட்டே காக் எடுத்து நிமிர்ந்தப்ப கதவு திறக்கிற சத்தம் கேட்டுச்சு. திரும்பிப் பார்த்தால் அவரே நிற்கிறார். சிரிப்பே இல்லாத முகம். ஆழமான பார்வை..... ஆனால் ரொம்ப காலம் தெரிஞ்ச ஒருத்தர் மாதிரி அவரைப் பார்த்தவுடனே ஏனோ தோணுச்சு. அவரோட அசிஸ்டெண்ட் சுதர்ஷன் என்னைப் பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற பையனாய் அறிமுகப்படுத்தினார். விளையாடறப்ப காக் இங்கே விழுந்திடுச்சு. அதை எடுக்க வந்திருக்கான்னு சொன்னார். நான் கிடைச்ச சந்தர்ப்பத்தை நழுவ விடலை. போய் என்னை அறிமுகப்படுத்திகிட்டேன்....”

சரத்தும் ரஞ்சனியும் மிகவும் ஆர்வமாக அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  தீபக் அந்தக் காட்சியையே அவர்கள் முன்னால் கொண்டு வந்திருந்தான். அவன் அவனுக்கும் நாகராஜுக்கும் இடையே நடந்த சம்பாஷணையைச் சொன்னான். பின் அது தடைப்பட்டதையும் சொன்னான். “தர்ஷினியைக் காண்பிச்சு அவர் என்னை அனுப்பிச்சுட்டார். இல்லாட்டி நான் கண்டிப்பாய் அவர் வீட்டுக்குள்ளே போக முடிஞ்சிருக்கலாம்…”

ரஞ்சனி சொன்னாள். “அப்படியெல்லாம் போகறது ஆபத்துடா. நீ பார்த்த பாம்பு எல்லாம் பல்லு பிடுங்கினது. அந்த வீட்டுல விஷப்பாம்பு ஏதாவது இருந்து அது உன்னைக் கடிச்சு வெச்சுட்டா என்னடா செய்யறது. டிவியிலயும், யூட்யூப்லயும் பார்க்கறதோட நிறுத்திக்கோ. அந்த மாதிரி மர்மமாய் இருக்கிற இடத்துக்கெல்லாம் போகாதே…”

பாம்பு கிட்ட பயம் தேவையில்லைம்மா. அதெல்லாம் அனாவசியமாய் யாரையும் கடிக்காது.  மனுஷன் மாதிரியெல்லாம் தேவையில்லாமல் யாரையும் உபத்திரவம் பண்ணாது….. நான் உன் கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன். அந்த நாகராஜ் பார்க்கறதே பாம்பு பார்க்கிற பார்வை மாதிரி தான் எனக்கு தெரிஞ்சுது. அந்த ஆள் கிட்ட ஏதோ சக்தி இருக்குங்கறது மட்டும் நிச்சயம் அம்மா. என் மனசுல இருக்கறத அவர் படிக்கிற மாதிரி இருந்துச்சு. எனக்கு அவரை ஏனோ பிடிச்சுப் போச்சு. அவருக்கும் என்னைப் பிடிச்ச மாதிரி தான் இருந்துச்சு. என்னைப் பார்த்து புன்னகைச்சார். அந்த ஆள் அடிக்கடி புன்னகைக்கிற ரகமாய் தெரியலை….”

ஆனால் ரஞ்சனிக்கு அந்தப் பாம்பு மனிதன் ஏனோ பயத்தை ஏற்படுத்தினான். அந்த வீட்டில் நிஜமாகவே பாம்பு இருக்கிறதா இல்லை அவனே பாம்பு மாதிரி சீறுகிறானா என்று தெரியவில்லை. இது போன்ற அசாதாரணமான மனிதர்கள் ஆபத்தையும் ஏற்படுத்த வல்லவர்கள்அவள் மகனை எச்சரிக்க எண்ணி வாயைத் திறந்தாள். தீபக் அவசர அவசரமாய் இடது கையால் தாய் வாயை மூடினான்.  “என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியும். பயப்படாதே. நான் எச்சரிக்கையாய் இருப்பேன்…” என்று புன்னகையுடன் சொன்னான்.

பல சமயங்களில் அவள் எதையும் அவனிடம் வாய்விட்டுச் சொல்ல வேண்டியதே இல்லை. சொல்லாமலே அவன் கண்டுபிடித்து விடுவான்…. திடீரென்று ரஞ்சனி வேறு ஒரு உலகத்திற்கோ, வேறொரு காலத்திற்கோ போனது போல் இருந்தது. அதிலிருந்து மீண்டு அவள் வந்த போது அவள் முகத்தில் இனம் புரியாத சோகம் படர்ந்தது.

தாய் முகத்தில் தெரிந்த சோகம் தீபக்கை என்னவோ செய்தது. “என்னம்மா?” என்று கேட்டான்.

அவள் பலவந்தமாய் சோகத்தைப் புன்னகையால் மூடினாள். “ஒன்னுமில்லைடா.”

தன்லால் வீட்டின் முன் இரவு ஒன்பது மணிக்கு ஒரு கார் வந்து நின்றது. சத்தம் கேட்டு மதன்லால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். உள்ளூர் கவுன்சிலர். மதன்லால் வெளியே வந்தான். “என்ன விஷயம்?”

கவுன்சிலர் தாழ்ந்த குரலில் சொன்னான். “தலைவர் உங்க கிட்ட பேசணும்னார்

மதன்லால் அவனை உள்ளே அழைத்து வரவேற்பறையில் உட்கார வைத்தான். அவன் அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி விட்டுஹலோ ஐயா... மதன்லால்ஜி பேசறார்என்று சொல்லி அலைபேசியை மதன்லாலிடம் தந்தான்.

மதன்லால் அந்த அலைபேசியை வாங்கிக் கொண்டு தனதறைக்குப் போய்க் கொண்டே பேசினான். “ஹலோ

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “என்ன விஷயம்?”

மதன்லால் தனதறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு நரேந்திரன் வந்து விசாரித்ததை விரிவாகத் தெரிவித்தான். அவனிடம் மட்டுமல்லாமல் மணாலியில் க்யான் சந்திடமும் சென்று நரேந்திரன் விசாரித்திருப்பதையும் சொன்னான். ”.... ஐயா அந்த ஆள் பேச்சு வாக்குல சஞ்சய் காணாமல் போனதாய் வேற சொன்னான். உண்மையா ஐயா?”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “ஆமாம். காசுக்காக யாராவது கடத்தியிருந்தா கூப்பிட்டு பேரமாவது பேசியிருப்பான். அதுவும் இல்லை. எங்களுக்கு நரேந்திரன் மேல தான் சந்தேகம் இருக்கு. ஆனா உறுதியாய் சொல்ல முடியலை. அவனை நம்ம ஆளுங்க பின் தொடர்ந்துட்டு தான் இருக்காங்க. ஆனால் அவன் ஆளுகளும் இப்போ என் வீட்டுக்கு வெளியே இருந்து உளவு பார்க்கிறார்கள்னு தெரியுது. போன்கால்களையும் ஒட்டுக் கேட்க வாய்ப்பிருக்குன்னும் புரியுது. அதனால நமக்குப் பிரச்சனை  ஏற்படுத்தற மாதிரியான போன்கால் எதையும் நான் பேசறதேயில்லை...”

மதன்லால் கேட்டான். “இவனைக் கொஞ்சம் தட்டி வைக்க முடியாதா ஐயா?”

ஆட்சி கையில இருந்தால் தட்டி வைக்கிறது மட்டுமல்லாமல் அடக்கி ஒடுக்கியும் வைக்கலாம். அவனுக்கு பிரதமர் கிட்டயும் நல்ல செல்வாக்கு இருக்குன்னு எனக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அதனால இப்போதைக்கு நாம எதையும் செய்ய முடியாது....”

அந்தத் தகவலால் மதன்லால் கவலை அடைந்தான். “அவன் அந்த வழக்கோட பழைய விசாரணை அதிகாரிகளுக்கு என்னென்னவோ நடக்கிறதுன்னு மறைமுகமா மிரட்டிட்டு வேற போயிருக்கான் ஐயா

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். ”ஜாக்கிரதையாய் இரு. நரேந்திரன் ஆபத்தானவனாயும், நேர் வழியில் தான் போகணும்கிற எண்ணமில்லாதவனாகவும் தெரியறான். அதானல எங்கேயும் தனியாகப் போகாதே....”

மதன்லால்ஏன் ஐயா நாம அஜீம் அகமது கிட்டயே இவனைக் கவனிச்சுக்கச் சொல்லக் கூடாது....?” என்று மெல்லக் கேட்டான்.

அவன் எந்த நாட்டுல இருக்கானோ. அவன் ஆளுகளுக்கே கூட அவன் இருக்கற இடம் தெரியல. இங்கே இருக்கிற அவன் ஆளு காதில் விஷயத்தைப் போட்டு வெச்சிருக்கேன்....பார்ப்போம்...”

அஜீம் அகமது எங்கே இருந்தாலும், அவனைப் பாதிக்கிற எல்லாத் தகவல்களையும் உடனுக்குடன் பெற்று விடுவான், வேகமாக இயங்குவான் என்று மதன்லால் கேள்விப்பட்டிருக்கிறான். ’அவன் இதைப் பாதிக்கிற விஷயமாய் நினைப்பானா இல்லையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!’


(தொடரும்)
என்.கணேசன்  

Saturday, May 29, 2021

Friday, May 28, 2021

முந்தைய சிந்தனைகள் 69

என் நூல்களிலிருந்து சில சிந்தனைத் துளிகள்!.... 













என்.கணேசன்

Thursday, May 27, 2021

இல்லுமினாட்டி 104



விஸ்வத்துக்கு அந்த சர்ச்சின் பாதாள அறையே மிகவும் பிடித்தமான இடமாக இருந்தது. இருட்டாக இருந்தாலும் அங்கேயே அவன் அதிக காலத்தைக் கழித்தான். சில சமயங்களில் தியானத்தில் இருப்பான். சில சமயங்களில் எதிர்காலத்தைத் திட்டமிட்டபடி அமர்ந்திருப்பான். சில சமயங்களில் வேறுபல சிந்தனைகளில் இருப்பான். ஆனால் அவன் அமர்ந்திருப்பது மட்டும் கதேயின் கவிதை எழுதப்பட்டிருக்கும் சுவரைப் பார்த்தபடி தான் இருக்கும். டார்ச் விளக்கு போட்டால் ஒழிய எதுவுமே அங்கே பார்க்க முடியாது என்றாலும் கதேயின் அந்தக் கவிதையின் கடைசி வரிகள் மானசீகமாய் அவன் மனதில் ஒளிரும்.

But heard are the voices - Heard are the Sages,
The Worlds and the Ages; "Choose well; your choice is

"Brief and yet endless; "Here eyes do regard you
"In eternity's stillness; "Here is all fullness,
"Ye have to reward you, "Work, and despair not."

(ஆனால் குரல்கள் கேட்கப்படுகின்றன
கேட்டது முனிவர்களும், உலகங்களும், யுகங்களும் தான்.
"நன்றாகத் தேர்ந்தெடு; ன் தேர்வு
"சுருக்கமானது என்றாலும் முடிவில்லாதது;
"இங்கே கண்கள் உன்னைக் கணக்கிடுவது
"நித்தியத்தின் பேரமைதியில்:  இங்கேயே முழுமை,
"நீ உனக்கே வெகுமதி அளிக்க வேண்டும்,
"வேலை செய், விரக்தியடையாதே.")

சுமார் இருநூறு வருடங்களுக்கும் முன் எழுதப்பட்ட கவிதையாக ஏனோ அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்காகவே அந்தக் கவிஞன் எழுதிய கவிதை வரிகளாகவே விஸ்வத்துக்குத் தோன்றியது. மேற்போக்காகப் பார்க்கையில் எளிமையாகத் தோன்றினாலும் அவன் மனம் சோர்வு அடைந்த போதெல்லாம் அந்த வரிகளே அவனுக்கு உற்சாகமூட்டின.

அக்கவிதை அவன் விதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறது. முடிவெடுப்பது சுருக்க காலமானாலும் விளைவுகளோ நித்தியமானது. அதனாலேயே நித்தியத்தின் கண்கள் அவன் என்ன முடிவெடுக்கின்றான் என்று கவனித்துக் கொண்டிருக்கின்றன. அவன் அவனையே கௌரவித்துக் கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டுமோ அதைத் தவறாமல் செய்ய வேண்டும். தடைகள் வரலாம், விளைவுகள் புலப்படக் கால தாமதமாகலாம். அவன் விரக்தியடையக் கூடாது என்று அவனுக்கு அறிவுரை சொல்வதாகவே அந்தக் கவிதையைக் கண்டான்.

அவனுக்குத் தோன்றியது தவறல்ல என்பதை இல்லுமினாட்டியின் ஆரகிளும் சொல்லியிருப்பதாக ஜிப்ஸியும் சொல்கிறான், எல்லாம் முடிவெடுக்கப்படும் இடம் இது தானாம். அது தெரிந்து தான் ஜிப்ஸி இங்கே அழைத்து வந்திருக்கிறானா, இல்லை ரகசியமாய் ஒளிந்து கொள்ளும் வசதி இங்கே இருக்கிறது என்ற காரணம் மட்டும் தானா என்று விஸ்வத்துக்குத் தெரியவில்லை.  ஜிப்ஸியை அவன் கேட்கவில்லை....

ஜிப்ஸியை நினைக்கையில் அவன் பல விதங்களில் புதிராகவே இருப்பது போல் விஸ்வத்துக்குத் தோன்றியது. அவன் பல சமயங்களில் எங்கே போகிறான், எப்படிப் போகிறான் என்பதும் விஸ்வத்துக்கு மர்மமாகவே இருந்தது. ஆனாலும் விஸ்வம் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படவில்லை. ஒன்றை மட்டும் விஸ்வம் உறுதியாக நம்பினான். அவன் நண்பன் தான். எதிரியல்ல....

எதிரி என்ற வார்த்தையோடு அவன் மனதில் க்ரிஷ் நினைவுக்கு வந்தான். க்ரிஷும் ஜெர்மனிக்கு வரப் போகிறான் என்றும் அவனும் அவர்களுடன் சேர்ந்து ஏதோ தீர்மானிக்கப் போகிறான் என்றும் வாங் வே கடிதம் எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது. விஸ்வம் முடிவெடுக்கும் போதெல்லாம் க்ரிஷும் எங்கிருந்தாவது வந்து சேர்ந்து விடுகிறான். விதி இருவரையும் எப்படியோ பிணைத்து வைத்திருப்பதாய்த் தோன்றியது. ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் குறுக்கிடாமல் இருக்க முடிவதில்லை.

எல்லாமே ஒரு தீர்க்கமான முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாய் விஸ்வத்துக்குத் தோன்றியது. வாங் வேயின் கடிதம் அதற்கு ஒரு அறிகுறி.  இல்லுமினாட்டியின் தலைமைக்குழு உறுப்பினரான வாங் வே எந்த அளவுக்கு அவனுக்கு உதவுவார், உதவ முடியும் என்று தெரியவில்லை என்றாலும் அவர் மூலமாக இல்லுமினாட்டியில் கண்டிப்பாக கால் பதிக்கலாம் என்றும், அப்படிக் கால் பதிக்க முடிந்தால் தலைமைப்பதவியையே பிடித்து விடலாம் என்றும் அவனுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.

இப்போதைக்கு க்ரிஷை விடத் தொந்தரவான எதிரி அவனுக்கு எர்னெஸ்டோ தான். இந்த உடலில் சேர்ந்து கொண்ட போது அவன் நோக்கம் அவரைக் கொல்வதாக இருக்கவில்லை. ஆனால் இல்லுமினாட்டியின் உளவுத்துறை அனுமானித்தது போல அவனுக்கு இப்போது அவரைக் கொல்வது மிக முக்கியமானதாகி விட்டது. அவர் தலைமைப்பதவியில் உட்கார்ந்து கொண்டு பெரிய தடையாக இருக்கிறார். அவரை அங்கிருந்து நீக்கினால் ஒழிய அவனுடைய மற்ற திட்டங்கள் எதையும் அவனால் நிறைவேற்ற முடியாது.

பழைய விஸ்வமாக இருந்திருந்தால் அவனுக்கு அவர் கதையை முடிப்பது பெரிய விஷயமல்ல. எப்படிப்பட்ட பாதுகாப்பில் இருந்தாலும் அவனால் அவரைக் கொன்று விட முடியும். இப்போது இந்தப் பாழாய்ப் போன போதை உடம்பில் தேவையான அளவு சக்திகளைச் சேமிக்க ஆரம்பித்திருந்தாலும் அவரைக் கொல்வது சற்று சிரமம் தான். போதாததற்கு எல்லாரும் அமானுஷ்யன் என்று அடைமொழியில் அழைக்கப்படும் அக்‌ஷயும் அவரைப் பாதுகாக்க வந்து சேர்ந்திருக்கிறான்.  

எர்னெஸ்டோவை நெருங்குவதென்றால் அக்‌ஷய் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவனுடைய புகைப்படங்கள் விஸ்வத்திடம் இருக்கின்றன. ம்யூனிக் விமான நிலையத்தில் ஜிப்ஸி எடுத்த அந்தப் புகைப்படங்களில் நேராக அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். பயமில்லாத கூர்மையான தெளிந்த பார்வை ஆள் சாதாரணமானவனல்ல என்று காட்டுகின்றது. முழுவதுமாகத் தெரிந்து கொள்ள விஸ்வம் தன் சக்திகளைப் பயன்படுத்தினால் போதும். ஆனால் இவனைப் போன்ற கூடுதல் சக்தி படைத்தவர்களை அறிந்து கொள்ள விஸ்வம் அதிக சக்தி பிரயோகிக்க வேண்டி வரும். அக்‌ஷயை அறிய சக்திகளைச் செலவு செய்து விட்டால் எர்னெஸ்டோவைக் கொல்லவும், மற்ற வேலைகளுக்கும் சக்திகள் போதாது என்பதால் விஸ்வம் அதைத் தவிர்த்தான். ஜிப்ஸி அக்‌ஷயின் திறமைகளைப் பற்றிச் சொல்லியிருந்தான். அதனால் அதே போதும்....

க்ரிஷைப் பற்றி விஸ்வம் பெரிதாகக் கவலைப்படவில்லை.  அவனை எப்போது வேண்டுமானாலும் இந்தியா அனுப்பி விடலாம். இன்னேரம் சிந்து அவனுடைய வீட்டில் ஒரு ஆளாகக் கண்டிப்பாக மாறியிருப்பாள். உதயிடம் அவன் பிரயோகித்த சக்தியும், சிந்து உபயோகித்த யுக்தியும் சேர்ந்து அவள் மேல் உதய் காதல் வசப்பட்டிருப்பான். அதனால் சிந்துவிடம் எப்போது வேண்டுமானாலும் ஆக வேண்டிய சில வேலைகளைச் செய்யச் சொல்லலாம். குடும்பத்தினருக்கு ஆபத்து என்றால் க்ரிஷ் இங்கே இருக்க மாட்டான். போய் விடுவான். அதனால் அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை... .

விஸ்வத்தின் மனம் மெல்லத் தெளிவடைய ஆரம்பித்தது. அமைதியாக மேலே வந்தான்.  ஜிப்ஸி சர்ச்சின் ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தான். அவனிடம் விஸ்வம் சொன்னான். “நண்பா. எனக்கு எழுத ஒரு காகிதமும், பேனாவும் வேண்டும்..”

அவன் கேட்பான் என்று முன்கூட்டியே எதிர்பார்த்துத் தயாராக இரண்டையும் ஜிப்ஸி வைத்திருந்தான், இரண்டையும் விஸ்வத்திடம் நீட்டினான். விஸ்வம் அங்கிருந்த மரநாற்காலியில் காகிதத்தை வைத்து கீழே அமர்ந்து வாங் வேக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தான்.

“அன்பு நண்பரே!

தலைமை ஏற்க எனக்கு அழைப்பு விடுத்துத் தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதற்கு உங்களால் ஆன உதவிகளையும் செய்வதாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

தலைமை நாற்காலி தற்போது காலியாக இல்லை என்பது தாங்கள் அறிந்தது தான். நாற்காலி காலியானால் ஒழிய அதில் அமர வழியில்லை. எனவே அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டியிருக்கிறது. அதே போல், அப்படிக் காலி செய்து நாற்காலியில் அமரும் போது இயக்கத்தில் ஏற்படும் சலசலப்புகளைச் சமாளிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு பணிகளுக்கும் உங்களிடம் எதிர்பார்க்கும் உதவிகளை நீங்கள் செய்ய முடிந்தால் மட்டுமே உங்கள் கடிதத்திற்கும், அழைப்பிற்கும் ஒரு பொருள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டுகிறேன். அப்படி இல்லாமல் மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு கடைசியில் வெல்லும் பக்கம் சாய்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தங்கள் மனதில் இருக்குமானால் இந்த உதவி சமாச்சாரத்தைத் தாங்கள் தாராளமாக மறந்து விடலாம். நானும் தங்கள் கடிதத்தை மறந்து விடுகிறேன். தாங்கள் சிந்தித்து உறுதியாக உதவ முன்வருவதானால் நாம் மேற்கொண்டு ஆக வேண்டியதை நேரில் சந்தித்தே பேச வேண்டியிருக்கிறது.  

பதிலைத் தாங்களும் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தங்கள்
நண்பன்"

(தொடரும்)
என்.கணேசன் 

Monday, May 24, 2021

யாரோ ஒருவன்? 33


       
தவைத் திறக்கும் சத்தம் கேட்டவுடனே தீபக் ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தான். நாகராஜைப் பார்த்தவுடன் புன்னகைத்துகுட் மார்னிங் அங்கிள்என்று சொல்ல நாகராஜன் சுதர்ஷனைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். சுதர்ஷன் சொன்னான். “பக்கத்து வீட்டிலிருந்து வந்திருக்கான். விளையாடறப்ப காக் இங்கே விழுந்துடுச்சு. அதை எடுக்க வந்திருக்கான்...” 

நாகராஜன் தலையசைத்து விட்டு மறுபடியும் வீட்டுக்குள்ளே போக யத்தனிக்க, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாத தீபக்என் பெயர் தீபக் அங்கிள். நான் டாக்டருக்குப் படிச்சிட்டு இருக்கேன். மூனாவது வருஷம்...” என்று சொன்னபடி முன்னுக்கு வந்து கையை நீட்டினான்.

நாகராஜின் முகத்தில் சிறிய புன்னகை எட்டிப் பார்த்தது. “நாகராஜ்என்று தன் பெயரைச் சொல்லியபடி தீபக் கையைக் குலுக்கினான். அவன் கை இரும்பின் உறுதியோடு இருப்பதை தீபக் உணர்ந்தான்

பக்கத்து வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வேலாயுதம் கல்யாணிடம் சொன்னார். “இவனோட விடாமுயற்சியைப் பாராட்டணும். எப்படியோ போய் கை குடுத்துட்டான் பாரு”. கல்யாண் புன்னகைத்தான்.    

தீபக்கின் உள்ளுணர்வு இந்தக் கைக்குலுக்கல் முடிந்தவுடன் நாகராஜ் மேற்கொண்டு அதிகம் பேசாமல் மறுபடி உள்ளே போய் விடுவான் என்று சொன்னது. அதனால் நாகராஜின் கையை விடுவதற்கு முன்பாகப் பேச்சை வளர்த்த எண்ணிநாகராஜ் எனக்குப் பிடிச்ச பெயர் அங்கிள்என்று சொன்னான்.

இந்த முறை நாகராஜின் புன்னகை விரிந்தது. அவன் சொன்னான். “நாகராஜ் பெயர் சாதாரணமான பெயர் தானே. பிடிப்பதற்கு என்ன இந்தப் பெயரில் விசேஷமாக இருக்கு?”

தீபக் புன்னகையுடன் சொன்னான். “எனக்கு நாகம்னா ரொம்பப் பிடிக்கும் அங்கிள். அதனால் தான் அந்தப் பெயர் பிடிக்கும்னு சொன்னேன்.

அவன் கையிலிருந்து கையை விலக்கிக் கொண்ட நாகராஜ் அவனை உற்றுப் பார்த்தான். அவன் கையைப் போலவே பார்வையிலும் உறுதி இருந்தது. தீபக்கின் உள்மன எண்ணங்களைப் படிக்க முடிந்தது போல் நாகராஜ் பார்த்த மாதிரி தீபக்குக்குத் தோன்றியது. ஆனால் அவன் சொன்னது பொய்யல்ல உண்மையே என்பதால் தீபக் இயல்பாய் இருந்தான்.

நாகராஜ் கேட்டான். “ஏன் நாகங்களைப் பிடிக்கும்?”

தீபக் சொன்னான். “அதைச் சுருக்கமாய்ச் சொல்ல முடியாது அங்கிள். சின்னதில் இருந்தே நாகங்கள் மேல் எனக்கு ஏனோ அதீத ஆர்வம்... நாகங்கள் பத்தி நிறைய படிச்சிருக்கேன். நிறைய கேட்டுருக்கேன். பாம்புப் பண்ணைகளைத் தேடிப் போய் நாள் முழுசும் இருந்து பார்த்திருக்கேன்.... ஆனாலும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுதேயொழிய குறையலை...”

நாகராஜ் சொன்னான். “ஆச்சரியமாய் இருக்கு. பாம்புன்னா படையும் நடுங்கும்னு தான் சொல்வாங்க. பாம்பைப் பிடிக்கும்னு சொல்ற ஒரே ஆள் நீங்க தான் தம்பி...”

தீபக் சொன்னான். “நீங்கன்னு மரியாதை எல்லாம் எதுக்கு அங்கிள். ஒருமையிலேயே என்னைக் கூப்பிடலாம்... நீங்க பிசினஸ் எதாவது செய்யறீங்களா அங்கிள்?”

நாகராஜ் சிறு புன்னகையுடன் சொன்னான். “இல்லை... உன் ஃப்ரண்ட் உனக்காகக் காத்துகிட்டிருக்கா. விளையாட்டைப் பாதியிலேயே விட்டுட்டு கதை பேசிட்டு நிற்கிற உன்னைத் திட்டப் போறா

தீபக் காம்பவுண்ட் சுவர் அருகே நின்ற தர்ஷினியைக் கோபத்துடன் பார்த்தான். அவன் வாயைத் திறப்பதற்குள் நாகராஜ் தலையை அசைத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டான். இனி அங்கே இருக்க வழியில்லை. தீபக் சுதர்ஷனிடம் தலையசைத்து விட்டு வெளியே வந்தான். அவன் கேட்டைச் சாத்தும் போது சுதர்ஷனும் உள்ளே போய் விட்டான்.

லூசு... லூசு...” என்று திட்டிக் கொண்டே உள்ளே வந்த தீபக்கிடம் தர்ஷினி கேட்டாள். “யாரைடா சொல்றே?”

உன்னைத் தான்டி. நானே சரியா பேச்சை டெவலப் பண்ணிகிட்டே போய்ட்டு இருந்தேன். அந்த ஆள் உன்னைக் காரணம் காட்டி பேச்சை நிறுத்திட்டு உள்ளே போயிட்டார். நீ ஏன் இந்த காம்பவுண்டை ஒட்டி நின்னுகிட்டு என்னையே பார்த்துட்டு இருந்தாய்?”
அவளுக்கும் கோபம் வந்தது. “நீ ரொம்ப அழகுன்னு உன்னையே பார்த்துட்டு இருந்தேன். மூஞ்சைப் பாரு.” என்று சொல்லி அவன் தலையில் ஷட்டிலில் ஒரு தட்டு தட்டினாள்.

ஏன் இந்த மூஞ்சுக்கு என்ன?” என்று அவன் கேட்க அவள் பதில் எதுவும் சொல்வதற்கு முன் வேலாயுதமும், கல்யாணும் அவர்களை நெருங்க இருவரும் இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டார்கள்.

வேலாயுதம் கேட்டான். “என்ன சொல்றான் நாகராஜ்?”

ஒன்னும் சொல்லலை. உங்க பேத்தி காம்பவுண்ட் கிட்டயே நிக்கறத பார்த்து விளையாட அவ காத்திருக்கான்னு சொல்லி அனுப்பிச்சுட்டார்.”

அவளுக்கு விவரம் போதாதுஎன்றார் வேலாயுதம்.

அவ மேல தப்பில்லை. அவ யதார்த்தமாய் தான் நின்னா...” என்று அவளுக்காகப் பரிந்து தீபக் சொன்னதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே அவனையும் தாத்தாவையும் சேர்ந்து முறைத்து விட்டு அவள் வீட்டுக்குள் போய் விட்டாள்.

பரவாயில்லை. உன்னைப் பார்த்து சிரிக்கவாவது செய்தான். என்னைப் பார்த்து அதுவுமில்லை. என்ன பேசினாய்?” வேலாயுதம் கேட்டார்.

தங்களுக்குள் நடந்த சிறிய சம்பாஷணையை தீபக் சொன்னான். கல்யாண் அவன் சொன்னதைக் கேட்டு விட்டு யோசனையுடன் சொன்னான். “உன் முயற்சியும் பாதியிலயே நின்னுடுச்சே. நான் நீ எப்படியாவது அவன் வீட்டுக்குள் நுழைஞ்சுடுவேன்னு எதிர்பார்த்தேன்...”

அறிமுகம் ஆயிடுச்சுல்லியா. இனி தொடர்வது சுலபம் அங்கிள். ரெண்டே நாள்ல அந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சிடறேன் பாருங்க.” என்று நம்பிக்கையுடன் சொன்னான் தீபக்.

தன்லாலால் நரேந்திரன் போன பிறகு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவன் அந்த ரா அதிகாரி மறுபடி அந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்க வந்ததற்குக் கவலைப்படவில்லை. ஆனால் சஞ்சய் ஷர்மா காணாமல் போனது அவன் மனதை அரித்தது. சஞ்சய் ஷர்மா தானாகப் போனானா, இல்லை யாராவது அவனைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்களாஜனார்தன் த்ரிவேதியின் மருமகனைக் கடத்திக் கொண்டு போகிறவன் சாதாரணமான ஆளாய் இருக்க முடியாதே,... ‘பழைய விசாரணை அதிகாரிகளுக்கு என்னென்னவோ நடக்கிறது…. ஒன்றும் புரியமாட்டேன்கிறது….’ என்று நரேந்திரன் பூடகமாகச் சொன்னது வேறு மதன்லாலை அலைக்கழித்தது. அடுத்தது நீயாகவும் இருக்கலாம் என்று அந்தச் சனியன் பயமுறுத்துகிறானா?... எதற்கும் ஜனார்தன் த்ரிவேதியிடம் பேசி நிலவரத்தைத் தெரிந்து கொள்வது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

தோன்றியவுடன் அவன் நேரடியாக ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்து பேசுவதைத் தவிர்த்தான். க்யான் சந்த் செய்த தவறை அவன் செய்ய விரும்பவில்லை. நரேந்திரன் போன்ற ரா அதிகாரி போன் உரையாடல்களைப் பதிவு செய்ய முடிந்த நிலையில் இருப்பவன் என்பதால் அதைக் கண்டிப்பாகச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். க்யான் சந்த் அவனிடம் பேசியதையே கூட நரேந்திரன் ஒட்டுக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அவனுடன் பேசிய போது பிரச்சினைக்குரிய எதையும் பேசியிருக்கவில்லை என்பதால் கவலையில்லை. ஆனால் ஜனார்தன் த்ரிவேதியிடம் பேசுவது அந்த வகையில் இருக்காது. அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

அவன் தன் எண்ணங்களிலிருந்து மீண்ட போது அவனையே பார்த்தபடி அந்தப் போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். மதன்லால் அவர்களை முறைத்தான். “என் முகத்தில் என்ன சினிமாவா ஓடுகிறது? போய் வேலையைப் பாருங்கள்.... ராஸ்கல்ஸ்

அவர்கள் வேகமாக நகர மதன்லால் எழுந்து வீட்டுக்குச் சென்றான். வீட்டில் மனைவியின் அலைபேசியை வாங்கி ஜனார்தன் த்ரிவேதியின் உதவியாளனிடம் பேசினான். “ஹலோ நான் சிம்லாவிலிருந்து மதன்லால் பேசறேன்...”

ஜனார்தன் த்ரிவேதியின் உதவியாளன்ராங் நம்பர்என்று சொல்லி உடனே இணைப்பைத் துண்டித்தான். பிரச்சினை பெரிய அளவில் தான் இருக்கிறது என்பதை மதன்லால் உணர்ந்தான்.

  

(தொடரும்)
என்.கணேசன்