Monday, May 24, 2021

யாரோ ஒருவன்? 33


       
தவைத் திறக்கும் சத்தம் கேட்டவுடனே தீபக் ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தான். நாகராஜைப் பார்த்தவுடன் புன்னகைத்துகுட் மார்னிங் அங்கிள்என்று சொல்ல நாகராஜன் சுதர்ஷனைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். சுதர்ஷன் சொன்னான். “பக்கத்து வீட்டிலிருந்து வந்திருக்கான். விளையாடறப்ப காக் இங்கே விழுந்துடுச்சு. அதை எடுக்க வந்திருக்கான்...” 

நாகராஜன் தலையசைத்து விட்டு மறுபடியும் வீட்டுக்குள்ளே போக யத்தனிக்க, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாத தீபக்என் பெயர் தீபக் அங்கிள். நான் டாக்டருக்குப் படிச்சிட்டு இருக்கேன். மூனாவது வருஷம்...” என்று சொன்னபடி முன்னுக்கு வந்து கையை நீட்டினான்.

நாகராஜின் முகத்தில் சிறிய புன்னகை எட்டிப் பார்த்தது. “நாகராஜ்என்று தன் பெயரைச் சொல்லியபடி தீபக் கையைக் குலுக்கினான். அவன் கை இரும்பின் உறுதியோடு இருப்பதை தீபக் உணர்ந்தான்

பக்கத்து வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வேலாயுதம் கல்யாணிடம் சொன்னார். “இவனோட விடாமுயற்சியைப் பாராட்டணும். எப்படியோ போய் கை குடுத்துட்டான் பாரு”. கல்யாண் புன்னகைத்தான்.    

தீபக்கின் உள்ளுணர்வு இந்தக் கைக்குலுக்கல் முடிந்தவுடன் நாகராஜ் மேற்கொண்டு அதிகம் பேசாமல் மறுபடி உள்ளே போய் விடுவான் என்று சொன்னது. அதனால் நாகராஜின் கையை விடுவதற்கு முன்பாகப் பேச்சை வளர்த்த எண்ணிநாகராஜ் எனக்குப் பிடிச்ச பெயர் அங்கிள்என்று சொன்னான்.

இந்த முறை நாகராஜின் புன்னகை விரிந்தது. அவன் சொன்னான். “நாகராஜ் பெயர் சாதாரணமான பெயர் தானே. பிடிப்பதற்கு என்ன இந்தப் பெயரில் விசேஷமாக இருக்கு?”

தீபக் புன்னகையுடன் சொன்னான். “எனக்கு நாகம்னா ரொம்பப் பிடிக்கும் அங்கிள். அதனால் தான் அந்தப் பெயர் பிடிக்கும்னு சொன்னேன்.

அவன் கையிலிருந்து கையை விலக்கிக் கொண்ட நாகராஜ் அவனை உற்றுப் பார்த்தான். அவன் கையைப் போலவே பார்வையிலும் உறுதி இருந்தது. தீபக்கின் உள்மன எண்ணங்களைப் படிக்க முடிந்தது போல் நாகராஜ் பார்த்த மாதிரி தீபக்குக்குத் தோன்றியது. ஆனால் அவன் சொன்னது பொய்யல்ல உண்மையே என்பதால் தீபக் இயல்பாய் இருந்தான்.

நாகராஜ் கேட்டான். “ஏன் நாகங்களைப் பிடிக்கும்?”

தீபக் சொன்னான். “அதைச் சுருக்கமாய்ச் சொல்ல முடியாது அங்கிள். சின்னதில் இருந்தே நாகங்கள் மேல் எனக்கு ஏனோ அதீத ஆர்வம்... நாகங்கள் பத்தி நிறைய படிச்சிருக்கேன். நிறைய கேட்டுருக்கேன். பாம்புப் பண்ணைகளைத் தேடிப் போய் நாள் முழுசும் இருந்து பார்த்திருக்கேன்.... ஆனாலும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுதேயொழிய குறையலை...”

நாகராஜ் சொன்னான். “ஆச்சரியமாய் இருக்கு. பாம்புன்னா படையும் நடுங்கும்னு தான் சொல்வாங்க. பாம்பைப் பிடிக்கும்னு சொல்ற ஒரே ஆள் நீங்க தான் தம்பி...”

தீபக் சொன்னான். “நீங்கன்னு மரியாதை எல்லாம் எதுக்கு அங்கிள். ஒருமையிலேயே என்னைக் கூப்பிடலாம்... நீங்க பிசினஸ் எதாவது செய்யறீங்களா அங்கிள்?”

நாகராஜ் சிறு புன்னகையுடன் சொன்னான். “இல்லை... உன் ஃப்ரண்ட் உனக்காகக் காத்துகிட்டிருக்கா. விளையாட்டைப் பாதியிலேயே விட்டுட்டு கதை பேசிட்டு நிற்கிற உன்னைத் திட்டப் போறா

தீபக் காம்பவுண்ட் சுவர் அருகே நின்ற தர்ஷினியைக் கோபத்துடன் பார்த்தான். அவன் வாயைத் திறப்பதற்குள் நாகராஜ் தலையை அசைத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டான். இனி அங்கே இருக்க வழியில்லை. தீபக் சுதர்ஷனிடம் தலையசைத்து விட்டு வெளியே வந்தான். அவன் கேட்டைச் சாத்தும் போது சுதர்ஷனும் உள்ளே போய் விட்டான்.

லூசு... லூசு...” என்று திட்டிக் கொண்டே உள்ளே வந்த தீபக்கிடம் தர்ஷினி கேட்டாள். “யாரைடா சொல்றே?”

உன்னைத் தான்டி. நானே சரியா பேச்சை டெவலப் பண்ணிகிட்டே போய்ட்டு இருந்தேன். அந்த ஆள் உன்னைக் காரணம் காட்டி பேச்சை நிறுத்திட்டு உள்ளே போயிட்டார். நீ ஏன் இந்த காம்பவுண்டை ஒட்டி நின்னுகிட்டு என்னையே பார்த்துட்டு இருந்தாய்?”
அவளுக்கும் கோபம் வந்தது. “நீ ரொம்ப அழகுன்னு உன்னையே பார்த்துட்டு இருந்தேன். மூஞ்சைப் பாரு.” என்று சொல்லி அவன் தலையில் ஷட்டிலில் ஒரு தட்டு தட்டினாள்.

ஏன் இந்த மூஞ்சுக்கு என்ன?” என்று அவன் கேட்க அவள் பதில் எதுவும் சொல்வதற்கு முன் வேலாயுதமும், கல்யாணும் அவர்களை நெருங்க இருவரும் இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டார்கள்.

வேலாயுதம் கேட்டான். “என்ன சொல்றான் நாகராஜ்?”

ஒன்னும் சொல்லலை. உங்க பேத்தி காம்பவுண்ட் கிட்டயே நிக்கறத பார்த்து விளையாட அவ காத்திருக்கான்னு சொல்லி அனுப்பிச்சுட்டார்.”

அவளுக்கு விவரம் போதாதுஎன்றார் வேலாயுதம்.

அவ மேல தப்பில்லை. அவ யதார்த்தமாய் தான் நின்னா...” என்று அவளுக்காகப் பரிந்து தீபக் சொன்னதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே அவனையும் தாத்தாவையும் சேர்ந்து முறைத்து விட்டு அவள் வீட்டுக்குள் போய் விட்டாள்.

பரவாயில்லை. உன்னைப் பார்த்து சிரிக்கவாவது செய்தான். என்னைப் பார்த்து அதுவுமில்லை. என்ன பேசினாய்?” வேலாயுதம் கேட்டார்.

தங்களுக்குள் நடந்த சிறிய சம்பாஷணையை தீபக் சொன்னான். கல்யாண் அவன் சொன்னதைக் கேட்டு விட்டு யோசனையுடன் சொன்னான். “உன் முயற்சியும் பாதியிலயே நின்னுடுச்சே. நான் நீ எப்படியாவது அவன் வீட்டுக்குள் நுழைஞ்சுடுவேன்னு எதிர்பார்த்தேன்...”

அறிமுகம் ஆயிடுச்சுல்லியா. இனி தொடர்வது சுலபம் அங்கிள். ரெண்டே நாள்ல அந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சிடறேன் பாருங்க.” என்று நம்பிக்கையுடன் சொன்னான் தீபக்.

தன்லாலால் நரேந்திரன் போன பிறகு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவன் அந்த ரா அதிகாரி மறுபடி அந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்க வந்ததற்குக் கவலைப்படவில்லை. ஆனால் சஞ்சய் ஷர்மா காணாமல் போனது அவன் மனதை அரித்தது. சஞ்சய் ஷர்மா தானாகப் போனானா, இல்லை யாராவது அவனைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்களாஜனார்தன் த்ரிவேதியின் மருமகனைக் கடத்திக் கொண்டு போகிறவன் சாதாரணமான ஆளாய் இருக்க முடியாதே,... ‘பழைய விசாரணை அதிகாரிகளுக்கு என்னென்னவோ நடக்கிறது…. ஒன்றும் புரியமாட்டேன்கிறது….’ என்று நரேந்திரன் பூடகமாகச் சொன்னது வேறு மதன்லாலை அலைக்கழித்தது. அடுத்தது நீயாகவும் இருக்கலாம் என்று அந்தச் சனியன் பயமுறுத்துகிறானா?... எதற்கும் ஜனார்தன் த்ரிவேதியிடம் பேசி நிலவரத்தைத் தெரிந்து கொள்வது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

தோன்றியவுடன் அவன் நேரடியாக ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்து பேசுவதைத் தவிர்த்தான். க்யான் சந்த் செய்த தவறை அவன் செய்ய விரும்பவில்லை. நரேந்திரன் போன்ற ரா அதிகாரி போன் உரையாடல்களைப் பதிவு செய்ய முடிந்த நிலையில் இருப்பவன் என்பதால் அதைக் கண்டிப்பாகச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். க்யான் சந்த் அவனிடம் பேசியதையே கூட நரேந்திரன் ஒட்டுக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அவனுடன் பேசிய போது பிரச்சினைக்குரிய எதையும் பேசியிருக்கவில்லை என்பதால் கவலையில்லை. ஆனால் ஜனார்தன் த்ரிவேதியிடம் பேசுவது அந்த வகையில் இருக்காது. அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

அவன் தன் எண்ணங்களிலிருந்து மீண்ட போது அவனையே பார்த்தபடி அந்தப் போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். மதன்லால் அவர்களை முறைத்தான். “என் முகத்தில் என்ன சினிமாவா ஓடுகிறது? போய் வேலையைப் பாருங்கள்.... ராஸ்கல்ஸ்

அவர்கள் வேகமாக நகர மதன்லால் எழுந்து வீட்டுக்குச் சென்றான். வீட்டில் மனைவியின் அலைபேசியை வாங்கி ஜனார்தன் த்ரிவேதியின் உதவியாளனிடம் பேசினான். “ஹலோ நான் சிம்லாவிலிருந்து மதன்லால் பேசறேன்...”

ஜனார்தன் த்ரிவேதியின் உதவியாளன்ராங் நம்பர்என்று சொல்லி உடனே இணைப்பைத் துண்டித்தான். பிரச்சினை பெரிய அளவில் தான் இருக்கிறது என்பதை மதன்லால் உணர்ந்தான்.

  

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Very interesting. You are maintaining suspense very well.

    ReplyDelete
  2. Waiting to see how you are going to connect Coimbatore and Delhi/Kashmir.

    ReplyDelete
  3. தீபக் உள்ளே நுழைய முடியாதது ஏமாற்றமாக உள்ளது...

    ReplyDelete