Thursday, May 6, 2021

இல்லுமினாட்டி 101




மிருதுளா அழுது ஓய்ந்த பின் காரைக் கிளப்பினாள். போகும் போது மகளிடம் கேட்டாள். ”சரி பழைய கதையை விடு. காலம் கழிஞ்சாவது நாம சந்திச்சுகிட்டோம். உண்மையைத் தெரிஞ்சுகிட்டோம். அது போதும். நீ இப்போ எங்கே இருக்கே? என்ன பண்ணறே?..”

சிந்து ஏற்கெனவே உடைந்து போயிருக்கும் தாயிடம் தன்னுடைய நெருக்கடியான நிலைமையைச் சொல்லப் போகவில்லை. சென்னையில் பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்ப்பதாய்ச் சொன்னாள்.

மிருதுளா கேட்டாள். “சிந்து இப்ப நம்ம வீட்டுக்கே போயிடலாமா?”

சிந்துவுக்கு திடீர் என்று அந்த வீட்டை அவள் வீடாக நினைக்க முடியவில்லை. “இப்போ வேண்டாம்மா. நான் நாளைக்குக் காலைல வர்றேன்... என்னைப் பத்தி உங்க பையன் கிட்ட சொல்லியிருக்கீங்களா?” என்று கேட்டாள்.

மிருதுளா வருத்தத்துடன் சொன்னாள். “சொல்லலை. அவன் எப்பவுமே அவனுக்கு ஒரு அக்காவோ தங்கையோ இருந்தால் நல்லாயிருந்திருக்கும்னு சொல்லிகிட்டே இருப்பான்நீ இருப்பதை 
சொல்லியிருந்தால் சத்தியமாவது மண்ணாங்கட்டியாவதுன்னு சொல்லி அவன் உன்னைத் தேடிக் கிளம்பியிருப்பான். அதனால சொல்லலை..”

அவன் பேரென்னம்மா? என்ன பண்றான்?”

நவீன். பி.காம் கடைசி வருஷம் படிக்கிறான்

சிந்து மெல்லக் கேட்டாள். “உன் கணவர் ஒன்னும் சொல்ல மாட்டாராம்மா?”

அவர் உன்னை அன்னைக்கே மகளாய் ஏத்துக்கத் தயாராய் இருந்தவர் சிந்து. தங்கமான மனுஷன். அவரைக் கல்யாணம் பண்ணிகிட்ட நாள்ல இருந்து நான் எப்பவாவது வருத்தமாய் இருந்திருக்கேன்னு சொன்னால் அது உன் நினைவு வந்து மனசு ஏங்கறப்ப தான். வேறெந்த விதத்திலும் வருத்தப்பட ஒரு காரணம் கூட அவர் எனக்குத் தரலை...”

அம்மா அவ்வப்போது அவளை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்த போது சிந்துவின் மனம் மென்மையாகியது. இவளைப் போய் நாம் தினமும் சபித்துக் கொண்டிருந்தோமே என்னும் குற்றவுணர்ச்சி அவளுக்குள் எழுந்து தங்கியது...

ஓட்டலில் அவளை இறக்கி விட்ட போது நாளைக்காலை வந்து கூட்டிக் கொண்டு போவதாய்ச் சொல்லி விட்டு மிருதுளா போனாள். சிந்துவுக்கு மனம் மிக லேசாக இருந்தது. மனதில் வருடக்கணக்கில் சுமந்த பாரம் விலகி விட்டிருந்ததால் ஓட்டல் அறைக்கு வந்து படுத்தவள் அன்று என்றுமில்லாத ஆழ்ந்த உறக்கம் உறங்கினாள்.

காலை அழைப்பு மணி அடித்த போது தான் சிந்து எழுந்தாள். கடிகாரம் பார்த்தாள். காலை ஏழு மணி தான் ஆகியிருந்தது. கதவைத் திறந்த போது மிருதுளா, ரகு, நவீன் மூன்று பேரும் நின்றிருந்தார்கள்.

நவீன் தான் உற்சாகமாக முதலில் பேசினான். “ஹாய் அக்கா. நான் தான் உன் ஒரே தம்பி நவீன்என்று சொல்லி கைகுலுக்கினான்.  ரகுவும், மிருதுளாவும் பெருமிதத்தோடு அவர்கள் இருவரையும் பார்த்ததைக் கவனித்த போது சிந்துவுக்கு உதயின் குடும்பம் நினைவில் வந்து போனது. ரகு ஒரு பாசமுள்ள தந்தையாக அவளை அணைத்துக் கொண்டு சொன்னார். “நீ வந்தது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு சிந்து...”

நவீன் அவளுடைய பொருள்களையெல்லாம் சூட்கேஸில் போட ஆரம்பித்தபடியே சொன்னான். “கிளம்பு வீட்ல போய் பெட் காஃபி குடிச்சுக்கலாம்...”

எந்த அன்பும் பாசமும் அவள் ஒரு காலத்தில் ஏங்கிக் கிடைக்கவில்லையோ அது இனி தங்கு தடையில்லாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவள் மனதில் துளிர் விட்டது. சிந்து தாயைப் பார்த்தாள். தாயின் கண்களில் தெரிந்த ஈரம் அவள் கண்களையும் ஈரமாக்கியது.



விஸ்வம் ஜிப்ஸி சொன்னதை கண்களை மூடிக் கொண்டு கூர்ந்து கேட்டான். “வாங் வே இப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த ஒரு தலைவர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு சிறிய பதவியில் இருந்து சக்தி வாய்ந்த தலைவராக வளர்ந்தது இல்லுமினாட்டியின் உறுப்பினராக அவர் மாறிய பின் தான். இப்போது சீனாவின் அதிகார மையத்தில் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் மகா புத்திசாலி. கடும் உழைப்பாளி.  தன் புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும் அவர் கட்சியில் மூன்றாமிடம் வரை வந்திருக்கிறார். இல்லுமினாட்டியில் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். படிப்படியாக தாய்நாட்டிலும் இல்லுமினாட்டியிலும் முன்னேறியிருக்கும் அவருக்கு இரண்டிலும் அதற்கு மேலான முன்னேற்றம் நீண்ட காலமாக ஏற்படவில்லை. அதில் அவருக்கு ஏகப்பட்ட வருத்தம்…”

வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் அவருடைய ஒரே லட்சியம் இல்லுமினாட்டியின் தலைவராவது தான். எர்னெஸ்டோ ராஜினாமா செய்யப் போவதாக சில காலம் முன்னால் அறிவித்த போது அவர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் நீ இல்லுமினாட்டியில் நுழைந்து விட்டாய். தலைமைப் பதவிக்குப் போட்டி வந்தால் நீ வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிந்து அவர் மனம் நொந்திருந்தார். ஆனாலும் மோதிப்பார்ப்பது என்று தயாராக இருந்தார். அந்தச் சமயத்தில் அவருடைய முதல் எதிரி நீயாக தான் இருந்தாய். ஆனால் போட்டி நடப்பதற்கு முன் க்ரிஷ் வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டான்.”

நீ இறந்த போது சந்தோஷப்பட்ட ஆட்களில் அவரும் ஒருவர்.  போட்டியிலிருந்து வலிமையான எதிரி ஒழிந்தான் என்று நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால் சந்தோஷம் நீடிக்கவில்லை. காரணம் நீ இன்னொரு உடலில் புகுந்து விட்டாய். எர்னெஸ்டோவோ ராஜினாமா செய்வதைத் தள்ளிப் போட்டார். இரண்டுமே அவருக்கு ஏமாற்றம் தந்தன. அதற்குப் பின் நடந்தது எதுவும் கூட அவருக்குத் திருப்தியில்லை.”

நீ உயிர் பிழைத்ததைச் செய்தியாக மட்டுமே எர்னெஸ்டோ. உறுப்பினர்களுக்கு அனுப்பியிருந்தார். கூடுதலாக சில தகவல்களை தலைமைக்குழு உறுப்பினர் ஐந்து பேருக்கு அனுப்பியிருந்தார். அதற்குப் பின் எந்தத் தகவலும் தலைமைக்குழு உறுப்பினர்களுக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. அது எர்னெஸ்டோவின் சர்வாதிகாரத்தைக் காட்டுவதாக எண்ணிக் குமுறினார். நீ அனுப்பிய கடிதமும் கூட எல்லா உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பின் கூடுதல் தகவல்கள் எதுவும் தலைமைக்குழு உறுப்பினர்களுக்குக் கூட இல்லை. இது அவருக்குப் பிடிக்கவில்லை.”

அதுமட்டுமல்ல. எர்னெஸ்டோ க்ரிஷ் வந்த பிறகு சிறிது மாற ஆரம்பித்திருக்கிறார். அவர் பழைய பாணியில் போகாமல் கொஞ்சம் மென்மையாகவும், பொதுமக்களுக்குப் பெரியதாய் கெடுதல் ஆவதைத் தவிர்க்கும்படியாகவும் உலக விவகாரங்களில் சமீப காலத்தில் சில முடிவுகள் எடுத்திருந்தார்.  இப்படி மென்மைக்கு மாறுவதும், தன்னிச்சையாக அவர் முடிவுகளை எடுப்பதும் வாங் வேக்கு உடன்பாடில்லை. உண்மையில் இல்லுமினாட்டிக்கு அழிவு வருவது இந்த மென்மையான போக்கே என்று உறுதியாக நம்பும் வாங் வே எர்னெஸ்டோவை விட நீ தேவலை என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார். வாங் வே இப்போது இல்லுமினாட்டிக்கு முதல் எதிரி எர்னெஸ்டோ என்றும் அவரை அப்புறப்படுத்துவது உன் ஒருவனால் தான் முடியும் என்றும் நம்புகிறார். ஒரு வேளை நீ இல்லுமினாட்டியின் தலைவரானால் அவருக்கு உபதலைவர் பதவி கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால் தான் உனக்கு இந்தக் கடிதம்...”

எல்லாம் கேட்டுக் கொண்ட விஸ்வம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் தான் ஜிப்ஸியிடம் கேட்டான். “வாங் வேயை எந்த அளவு நம்பலாம்? அந்த ஆளின் துணிச்சலும், தைரியமும் எந்த அளவில் இருக்கும்?”

ஜிப்ஸி சொன்னான். “தைரியமும் துணிச்சலும் தேவைப்படும் போது நூறு சதவீதம் வெளிப்படுத்த முடிந்த ஆள் அவர். வெல்வது உறுதி என்ற நம்பிக்கை மட்டும் வந்து விட்டால் அவர் எதையும் தயங்காமல் செய்வார். ஆனால் ஒரு வேளை நீயும் எர்னெஸ்டோவும் மோதிக் கொண்டால் அவர் முதல் ஆசை நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அழித்து மடிந்தால் நல்லது என்பதாகத் தான் இருக்கும். அப்படியானால் அவர் தலைவராகப் பார்ப்பார்...”

விஸ்வம் அதில் தவறு காணவில்லை. அவருடைய இடத்தில் அவன் இருந்தாலும் அப்படித்தான் நினைப்பான். அப்படி ஆகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவனுடைய சாமர்த்தியமாகத் தான் இருக்க வேண்டும். இது போன்ற போட்டி மிகுந்த இடங்களில் அடுத்தவன் நியாயமானவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்...

விஸ்வம் கேட்டான். “ஒருவேளை எர்னெஸ்டோவா நானா என்ற நிலைமை இருந்தால் வாங் வே என்ன செய்வார்?”

அப்படி ஒரு நிலைமையில் உன்னைத் தான் வாங் வே ஆதரிப்பார். ஏன் என்றால் நீ தலைவனானால் அவர் உபதலைவராக ஆகலாம். ஆனால் எர்னெஸ்டோ வென்றால் அவருக்கு எந்த லாபமும் இல்லை

விஸ்வத்துக்கு அது போதும் என்று தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. I believe Sindhu will change. But Viswam and Wang Way seem to join hands and will tough fight to Krish, Akshay and illuminati. Very interesting.

    ReplyDelete
  2. How many episodes still have in illuminati?

    ReplyDelete
  3. Who is this Gypsy.. Who knows everything?

    ReplyDelete
  4. Yes, please post this novel weekly twice sir., I cant to wait the suspense...

    ReplyDelete
  5. சிந்து தன் அம்மாவின் வீட்டில் சேருவதைக் காண ஆவலாக உள்ளது....

    ReplyDelete