Friday, March 19, 2021

சத்தியமும் சக்திகளும்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்24

 

ந்திய வேதாந்த, தத்துவ ஞானத்தால் வெகுவாகக் கவரப்பட்டு அது குறித்து நிறைய எழுதியும், பேசியும் வந்த கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அதையும் தாண்டிய மேலான மதிப்பீடுகளில் தான் இந்தியாவின் உண்மையான பெருமை பளிச்சிடுவதாக இங்கு தங்கி வாழ்ந்த காலங்களில் உணர்ந்தார்கள். இந்திய பாமர மக்களிடம் அந்த மதிப்பீடுகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் உபதேசங்களை விட அதிகமாக நாடகங்களும், கூத்துகளுமே அதிகம் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டு வியந்தார்கள். உபதேசங்களில் இருக்கும் மிகப்பெரிய குறை அதைப் பின்பற்றுவதில் இருக்கும் சிக்கல்களை அதிகம் பெருட்படுத்துவதில்லை என்பது தான். மேலும் அறிவுக்கு, எட்டுவது நடைமுறை வாழ்க்கையிலும் பின்பற்றவும் உதவும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் இந்தியாவில் உபதேசங்களை கதைகள். நாடகங்கள், கூத்துக்கள் ஆகியவற்றின் மூலமே பாமர மக்களின் சிந்தனைகளில் வலிமையாக ஏற்றப்பட்டன. கதாபாத்திரங்களின் வழியாகப் பெற்ற பேருண்மைகள் உணர்வுபூர்வமாக மக்கள் மனதில் புகுத்தப்பட்டன. அதை கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் ஒரு கல்லூரியில் கண்ட அரிச்சந்திராநாடகத்தில் பரிபூரணமாக உணர்ந்தார்கள்.

 

மார்க்கண்டேய புராணத்தில்அரிச்சந்திரோப்பாக்கியானாஎன்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கதையின்படி ஒரு முறை வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் ஆகிய முனிவர்கள் இருவரும் சத்திய வழியில் வாழ்க்கையை நடத்துவதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது வசிஷ்டர் அரசனாக இருந்த அரிச்சந்திரனைப் பற்றிக் குறிப்பிட்டு ஒரு சிறு குறையும் காணாத வகையில் சத்திய வாழ்க்கை வாழும் அவனைப் போல் பரிபூரண சத்தியசீலன் வேறு யாரும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். அதற்கு விசுவாமித்திர முனிவர் கஷ்டங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் போது எப்படிப்பட்ட மனிதனும் மாறி விடுகிறான் என்றும் அதற்கு அரிச்சந்திரன் விதிவிலக்கல்ல என்றும் வாதிட்டார். வசிஷ்ட முனிவரோ பொதுவான மனிதர்கள் அப்படி இருக்கலாம், ஆனால் அரிச்சந்திரனைப் போன்ற அப்பழுக்கற்ற உயர்மனிதர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் உயர்நிலையை இழப்பதில்லை என்று வாதிட்டார். பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எதையும் தீர்மானிப்பது சரியல்ல என்று சொன்ன விசுவாமித்திர முனிவர் அரிச்சந்திரனை மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டார். அந்தச் சவாலுக்கு வசிஷ்டரும் ஒத்துக் கொண்டார்.  

 

விசுவாமித்திர முனிவர் அரசன் அரிச்சந்திரனின் அவைக்குச் சென்று தானமாக ராஜ்ஜியத்தையே கேட்க அரிச்சந்திரன் மறுக்காமல் ராஜ்ஜியத்தையே அவரிடம் தந்து விட்டு மனைவி மகனுடன் காசிக்குச் சென்றான்.. பின் விசுவாமித்திரரின் சோதனைகள் தொடர்ந்தன. அதன் முடிவில் அரிச்சந்திரன் அடிமையாக விற்கப்பட்டான். அவன் மனைவி, மகனும் அப்படியே அடிமைகளாக விற்கப்பட்டார்கள். அரிச்சந்திரன் சுடுகாட்டில் பணியாளனாக அமர்த்தப்பட்டான். அரிச்சந்திரன் மனைவியும், மகனும் இன்னொருவரிடம் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். கடுமையான கஷ்டங்கள் அவர்களுக்குத் தொடர்ந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் அவன் கொடுத்த வாக்கை மீறுவதாக இருந்தால் அவனுடைய ராஜ்ஜியம் உட்பட அனைத்தையும் திரும்பித் தருவதாக விசுவாமித்திர முனிவர் அவனுக்கு ஆசை காட்டுகிறார். ஆனால் அதற்கு அரிச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. முடிவில் அரிச்சந்திரனின் மகன் பாம்பு கடித்து மரணமடைந்தான். அவன் சடலத்தை எடுத்துக் கொண்டு அரிச்சந்திரனின் மனைவி சுடுகாட்டிற்கு வர அரிச்சந்திரன் பெருந்துக்கத்தில் ஆழ்கிறான். அவனும் அவன் மனைவியும் கண்ணீர்க் கடலில் மூழ்கினார்கள். இனியும் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்ற விரக்தியில் அவர்கள் இருவரும் மகனுடைய சிதையிலேயே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்த அந்த வேளையில் தேவலோகத்தில் இருந்து இந்திரனும், எமனும் வருகிறார்கள். அரிச்சந்திரனுடைய மகன் உயிரைத் திருப்பித் தருகிறார்கள். விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு ராஜியத்தைத் திருப்பித் தருகிறார். எக்காலத்திலும் தன் சத்தியத்தைத் தவற விடாத அரிச்சந்திரன் கதை ஆண்டாண்டு காலமாக நாடகங்களிலும், தெருக்கூத்துகளிலும், சொல்லப்பட்டு வருவதை கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கண்டார்கள். அந்தக் கதை அவர்களை மிகவும் உருக்கி விட்டது. பைபிளில் வரும்ஜாப்என்பவனின் கதைக்கு இணையான ஒரு கதையாக அவர்கள் அதைக் கண்டார்கள். இது போன்ற கதைகள் மனிதர்களின் இதயத்தோடு பேசவல்லது, அவர்களை மாற்ற வல்லது என்பதால் இந்தியாவின் ஆன்மிக ஞானத்திற்கு இது போன்ற கதைகளின் பங்கு மகத்தானது என்று நினைத்தார்கள்.

 

இந்தச் சமயத்தில் ஒரு கணவன் மனைவி இருவரும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். மிக மிக அனுசரணையாக அவர்கள் நடந்து கொண்ட போதிலும் அவர்கள் நேர்மையானவர்கள் அல்ல என்பதை கர்னல் ஓல்காட் உணர்ந்தார். அதை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் அவர் சொல்லவும் செய்தார்.  ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. எத்தனையோ சக்திகள் பெற்றிருந்த அம்மையாருக்குத் தனிப்பட்ட முறையில் நேர்மைக்குறைவுகளை அடையாளம் காண முடியாமல் போனது கர்னல் ஓல்காட்டுக்கு வியப்பாக இருந்தது.

 

சிலநாட்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் பயணம் சென்றார்கள். அப்போது கப்பலில் பணி புரிந்த எலியட் என்ற பொறியாளர் அவர்களுடன் மிக நெருக்கமானார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பற்றி முன்பே நிறைய கேள்விப்பட்டிருந்த அவர் தன் பெயரிட்ட ஒரு கைக்குட்டையைத் தனக்குப் பரிசளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் பெயரிட்ட கைக்குட்டையை வரவழைத்துக் கொடுத்தார். திகைப்புடன் பெற்றுக் கொண்டு அந்தக் கைக்குட்டையைப் பரிசோதித்த எலியட் தன்னுடைய பெயரில் ஆங்கில எழுத்துஇரண்டு இருப்பதாகவும், அந்தக் கைக்குட்டையில் ஒருதான் இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.  அதனாலென்ன சரிசெய்து விடுவோம் என்று சொல்லி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் இரண்டுஇருக்கும்படி பெயரிட்ட கைக்குட்டையையும் உடனே வரவழைத்துக் கொடுத்தபோது எலியட் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை..

 

அந்தக் கப்பலின் கேப்டன் இது போன்ற சக்திகளில் பெரும் நம்பிக்கையோ, ஆர்வமோ இல்லாதவர். அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதிக நேரம் சீட்டாட்டத்தில் இருப்பதைக் கவனித்து அம்மையார் இந்தச் சீட்டுக்கள் மூலமாகத் தான் சக்திகளை அறிகிறார் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். ஒரு நாள் அவர் திடீரென்று வந்துஎன் எதிர்காலம் பற்றி இந்தச் சீட்டுக்கள் என்ன சொல்கின்றன என்று சொல்லுங்கள் பார்ப்போம்

 

கர்னல் ஓல்காட்டுக்கு இது வேடிக்கையாக இருந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் புன்னகைத்தபடி அந்தச் சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு விட்டுப் பார்த்து விட்டுஆச்சரியமாக இருக்கிறதேஎன்றார். கேப்டன் திகைப்புடன் கேட்டார். “என்ன ஆச்சரியத்தைக் காண்கீறீர்கள்?” என்று கேட்டார்.

 

நீங்கள் தொடர்ந்து கடலில் பணி புரிய மாட்டீர்கள் என்றும் கரையில் தான் உங்கள் எதிர்காலம் நிரந்தரமாக இருக்கும் என்றும் சீட்டுகள் சொல்கின்றனஎன்றார். அந்தக் கேப்டன்எனக்கும் அது தான் ஆசை. ஆனால் நீங்கள் சொன்னபடி நடக்க வழி எதுவும் தெரியவில்லைஎன்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால் நடக்கவே வழியில்லாத அந்த ஆருடத்தைப் பற்றி அனைவரிடம் அவர் சொல்லிச் சிரித்ததைக் கர்னல் ஓல்காட் கவனித்தார். சீட்டுக்கட்டில் இது வரை எந்தச் சக்தியையும் வெளிப்படுத்தி இருக்காத இந்த அம்மையார் ஏன் தேவையில்லாமல் எதையோ சொல்லி ஏளனத்திற்கு ஆளாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

 

ஆனால் அவர்கள் இலங்கை சென்று இரு மாதங்கள் அங்கு தங்கி மும்பை திரும்பிய பிறகு அம்மையாருக்கு அந்தக் கேப்டனிடமிருந்து கடிதம் வந்தது. அம்மையார் சொன்னபடியே தனக்கு நிரந்தரமாக துறைமுகத்தின் பொறுப்பாளர் பணி ஒன்று எதிர்பார்க்காமல் கிடைத்திருப்பதைத் தெரிவித்த அவர் கப்பலில் கேலி செய்ததைத் தயவுசெய்து மன்னித்து விடும்படி பணிவாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி   

2 comments:

  1. I was waiting for this post... Nice interpretation... Thank you.

    ReplyDelete
  2. அம்மையாரின் அனைத்து அற்புதங்களும் அருமை...

    ReplyDelete