Monday, February 15, 2021

யாரோ ஒருவன்? 19

ல்யாண் இரவு வீட்டுக்கு வந்தவுடன் வேலாயுதம் அன்று நாகராஜிடமும், மில் அதிபரின் கணக்குப் பிள்ளையிடமும் பேசியதை விவரமாகச் சொன்னார். நாகராஜ் ஒரு முறை சந்திக்க ஐந்து லட்சம் ரூபாய் வாங்குவதாகச் சொன்னது கல்யாணையும் திகைக்க வைத்தது. இது நாட்டில் எந்தச் சாமியாரும் வாங்காத அதிகத் தொகையாய்த் தெரிகிறதே என்று அவன் எண்ணினான். இத்தனைக்கும் பார்க்க அவன் சாமியார் போலக்கூடத் தெரிவதில்லை. கல்யாணுக்குத் தெரிந்த பல சாமியார்கள் தங்களைத் தெய்வீகத் தூதர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். அதற்கு அந்தச் சாமியார்களின் சிஷ்யர்கள் கச்சிதமாக உதவுவார்கள். தானே வீட்டு வாசலையும் கூட்டுவதில் சங்கடப்படாமல், அதே நேரத்தில் ஒரு சந்திப்புக்கு ஐந்து லட்சம் வாங்குவதிலும் தயக்கமில்லாமல் இருக்கும் நாகராஜ் நிறையவே வித்தியாசமாகத் தெரிகிறான்.

கல்யாண் யோசனையோடு கேட்டான். “அவனோட ஆசிரமத்தோட விலாசம், போன் நம்பர் எதையாவது வாங்கினீங்களா? அதிருந்தால் அவனைப் பத்தின முழு விவரங்களைச் சேகரிச்சிடலாமே

வேலாயுதம் சொன்னார். “இல்லையே.... எனக்கு அந்த ஆள் ஒரு அப்பாயின்மெண்டுக்கு அஞ்சு லட்சம்னு சொன்னவுடனேயே வேற எதையும் கேட்கணும்னு தோணலை. திகைச்சுப் போயிட்டேன். அதுல ஒரு நாளுக்கு ஒரு ஆளுக்கு மேல பார்க்க மாட்டானாம். கலிகாலம் எந்த நிலைமைக்குப் போயிடுச்சு பாத்தியா? ஒரு தொழில் செய்ய நாம எத்தனை போராடிச் சம்பாதிக்க வேண்டியிருக்கு. இவனுக்குத் தொழிலாளர் பிரச்சன இருக்கா, வியாபாரப் பிரச்சன இருக்கா, பணவசூல் பிரச்சன இருக்கா?”

கல்யாண் அவர் சொல்வதில் உள்ள உண்மையை நினைத்துப் பெருமூச்சு விட்டான். பணத்தின் மீது அவனுக்கு இருந்த ஈர்ப்பு எல்லையில்லாதது. எங்கே அது நிறைந்திருந்தாலும் அவன் கவனம் தானாக அதன் பக்கம் போய் விடும். பணத்தை ஆராதிப்பவன் அவன். அந்த ஆராதனையும், பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காத மனோநிலையும் தான் அவனை ஏழ்மையில் இருந்து இன்றைய செல்வச் செழிப்புக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இப்போதும் அவனுக்கு அவனை விடப் பெரிய பணக்காரர்களை எல்லாம் பார்க்கும் போதுநாம் எப்போது அவர்கள் மாதிரி ஆவோம்என்ற ஏக்கம் எழ ஆரம்பித்து விடும். இப்படி ஒரு நாளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நாகராஜின் சொத்து மதிப்பு என்ன இருக்கக்கூடும் என்று கல்யாண் யோசிக்க ஆரம்பித்தான்

பணத்தின் மீது இருக்கும் இந்தக் கூடுதல் ஈர்ப்பு தந்தையிடம் இருந்து தான் தனக்கு வந்திருக்க வேண்டும் என்று கல்யாண் நினைத்துக் கொள்வான். அவருக்கும் அப்படித் தான். பணத்தைப் பற்றியோ பணக்காரர்களைப் பற்றியோ பேசும் போது அவர் குரல் கூட மாறிவிடும். குரலில் ஒரு புதிய சுருதி, லயம் எல்லாம் சேர்ந்து விடும். அவரை அறியாமல் கண்கள் விரியும். ஒருவிதப் பரவசம் கூடி விடும்….

ன்றும் தந்தையும் மகனும் இரவில் அவர் அறை ஜன்னல் வழியே பக்கத்து வீட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள். பதினோரு மணிக்கு மேல் அவர்கள் இருவருக்கும் எதிர்பார்ப்பு கூட ஆரம்பித்தது. ஆனால் ஏனோ அன்றிரவு பாம்பின் சீறல் கேட்கவில்லை. இனி கேட்காதோ என்று இருவரும் யோசிக்கையில் பாம்பின் சீறலுக்குப் பதிலாகத் திடீரென்று 11.26க்கு அந்தக் குறிப்பிட்ட அறை ஜன்னல் வழியாக நீலமும் பச்சையுமாய் கலந்து பளீரென்று அதிக வெளிச்சத்தில் ஒளிச்சிதறல்கள் தெரிந்து மறைந்தன. சுமார் பத்து வினாடிகள் தான் அவை தெரிந்திருக்கும். அந்த ஒளிச்சிதறல்கள் மறைந்த பின் நாகராஜ் மெலிதான குரலில் ஏதோ சொல்வது கேட்டது. என்ன சொன்னான் என்பதில் தெளிவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து மெலிதாக ஒரு பாம்பின் சீறல் கேட்டது. அதன் பின் அங்கு பரிபூரண அமைதி நிலவ ஆரம்பித்தது....

மேலும் ஒரு மணி நேரம் தந்தையும் மகனும் காத்திருந்து பார்த்தார்கள்.  எந்தச் சத்தமும் வெளிச்சமும் அங்கிருந்து வரவில்லை.

வேலாயுதம் சொன்னார். “இன்னைக்கு அவ்வளவு தான் போல இருக்கு

கல்யாண் யோசனை செய்தபடியே உறங்கக் கிளம்பினான். வேலாயுதம் மகனிடம் நினைவுபடுத்தினார். “நேத்து தெரிஞ்ச வெளிச்சத்துக்கும், இன்னைக்குத் தெரியற வெளிச்சத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு பாத்தியா. நேத்து ஒளிச்சிதறல் இல்லை. இன்னிக்கு ஒளிச்சிதறல் இருக்கு. இன்னைக்குத் தெரியறது அந்தக் கல் வெளிச்சம் தான். நீ என்ன சொல்றே?”

அதையே தான் அவனும் நினைத்தான். எதற்கும் ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று அவன் நினைத்தபடி அவரைப் பார்த்தான். அவன் சொல்லாமலேயே அவன் நினைப்பைப் புரிந்து கொண்டு அவர் தலையசைத்தார். அவன் தனதறைக்குச் செல்ல, அவரும் பின் தொடர்ந்தார்.

கல்யாணின் மனைவியும் மகளும் வெளியூர் சென்றிருந்தார்கள் என்பதால் தந்தையையும் மகனையும் தவிர அங்கே யாருமில்லை என்றாலும் அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கல்யாண் அறைக் கதவை முதலில் தாளிட்டான். பின் தன் பீரோவைத் திறந்தான். பீரோவுக்குள் பணம் வைத்திருக்கும் லாக்கர் ஒன்று பிரத்தியேகமாய் பொருத்தப்பட்டிருந்தது. அதைத் திறந்தான். உள்ளே பணம் கட்டுக் கட்டாய் இருந்தது. நகைகளும் நிறைய இருந்தன.  அதற்குள் ஒரு மூலையில் சிவப்புப் பட்டுத்துணியில் கட்டி வைத்திருந்த ஒரு மிகச்சிறிய ரத்தினக்கல்லைக் கையில் எடுத்தான்.  அதை உள்ளங்கையில் வைத்து விளக்கொளியில் பார்த்த போது ஒளிச்சிதறல் அறைமுழுவதும் மின்னியது. பக்கத்து வீட்டில் மின்னியதும் இதே போன்ற ஒளிச்சிதறல் தான். ஆனால் பக்கத்து வீட்டில் ஒளிர்ந்தது இதை விடப் பலமடங்காக இருந்தது என்பது தான் விசேஷம்...


னார்தன் த்ரிவேதியைச் சந்திக்க நிறைய ஆட்கள் காத்திருந்தார்கள். பலரும் கட்சிக்காரர்கள். ஒருசில மற்றவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களில் குடியானவனைப் போல் தோற்றமளித்த ஒருவன் கையில் ஒரு மனுவுடன் காத்திருந்தான்.  ஜனார்தன் த்ரிவேதியின் உதவியாளனுக்கு  அந்த ஆள் அவர்கள் புதிதாய் வேலையைத் தந்திருந்த டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆள் என்பது சிறிது நேரம் கழித்துத் தான் கூர்ந்து பார்த்த போது தெரிந்தது. தெரிந்தவுடன் அவரைச் சந்திக்க சீக்கிரமாய் உள்ளே அனுப்பி வைத்தான்.

ஜனார்தன் த்ரிவேதி உள்ளே நுழைந்த ஆளிடம் சிரித்தபடி கேட்டார். “இங்கே வர எதற்கிந்த வேஷம்?”

அந்த ஆள் அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடிச் சொன்னான். “உங்கள் வீடு, ஆபிஸ் எல்லாவற்றையும் ரகசியப் போலீஸ் கண்காணிக்கிறது

ஜனார்தன் த்ரிவேதி அதிர்ச்சியடைந்தார். அந்த ஆள் தொடர்ந்து சொன்னான். “என் யூகம் சரியாக இருந்தால் உங்கள் தொலைபேசி கூட ஒட்டுக் கேட்கப்படும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எங்கே போனாலும், உங்களை யார் சந்தித்தாலும் கண்காணிக்கிறார்கள்….”

சஞ்சய் ஷர்மா எதையும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் உறுதியாக நம்பினாலும் கூட இந்தத் தகவலால் அவர் நிறையவே பாதிக்கப் பட்டார். அவர்கள் அவரை எதற்குக் கண்காணிக்க வேண்டும்?

அவன் தொடர்ந்து சொன்னான். “அதனால் போனில் பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசுங்கள். பிரச்னைக்குரிய ஆள்கள் யாரையும் சந்திப்பதைத் தவிருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்

அவர் நரேந்திரனைப் பின் தொடர ஆட்களை ஏற்பாடு செய்தால் ரா அவரைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறது…. மெல்ல எழ ஆரம்பித்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டே கேட்டார். “நரேந்திரன் எங்கெங்கே போகிறான் என்பதைக் கண்காணித்தீர்களா? அவன் போகிற எதாவது ஒரு இடத்தில் அவன் யாரையாவது அடைத்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

அவன் அந்த மனு போன்ற காகிதத்தை அவரிடம் நீட்டினான். அந்தக் காகிதத்தில் இரண்டு நாட்களாக நரேந்திரன் எங்கெல்லாம் போயிருக்கிறான் என்ற விவரங்கள் கடிகார நேரத்தோடு தரப்பட்டிருந்தன. எங்கே எத்தனை நேரம் இருந்தான் என்பது கூட அதில் இருந்தது. அந்த ஆள் சொன்னான். “இந்த இரண்டு நாட்களாக அவன் போயிருக்கும் இடம் எதிலும் யாரையும் அடைத்து வைத்திருக்கச் சாத்தியமில்லை. அப்படி அவன் எங்கேயாவது அடைத்து வைத்திருந்தாலும்  இந்த இரண்டு நாட்களில் அங்கே போவதைத் தவிர்த்து இருக்கலாம். இன்றைக்குக் காலை மணாலிக்கு விமானத்தில் போயிருக்கிறான். அங்கும் எங்கேயெல்லாம் போகிறான் என்பதைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்…”

மணாலிக்கு நரேந்திரன் போகும் காரணத்தை ஜனார்தன் த்ரிவேதியால் யூகிக்க முடிந்தது. போய் புதிதாக அவன் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது என்றாலும் கூட அந்தப் பழைய வழக்கை அவன் இப்படி தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருப்பது அவர் மனதில் நெருடலாக இருந்தது. அவர்களைக் காட்டிக் கொடுக்கும்படியாக ஏதாவது அங்கு இருக்கக்கூடுமோ?



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. What will Narendran find out in Manila? Eager to know. Will Janardhan Trivedi allow Narendran to know the secret? Too much suspense.

    ReplyDelete
  2. தொடர் விறுவிறுப்பாக போகிறது... மணாலியில் என்ன திருப்பங்கள் நிகழப் போகிறதோ... தெரியவில்லை....

    ReplyDelete