Friday, January 22, 2021

அற்புத சக்திகள் ஆத்மஞானத்திற்கு உதவுமா?

 


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்22 

 

ந்தியா வந்த பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் நிறைய துறவிகளையும், சாதுக்களையும் சந்தித்தார்கள். ஆன்மிக ஞானத்திலும், அற்புத சக்திகளிலும் பேரார்வம் கொண்ட அவர்களுக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் சிந்திப்பதற்கும், வியப்பதற்கும் நிறைய விஷயங்கள் கிடைத்தன. அப்படி அவர்கள் சந்தித்த துறவிகளில் மிக முக்கியமானவர் பாபு சுர்தாஸ் என்ற துறவி. அவர் குருநானக்கின் கொள்கைகளில் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் யமுனை நதிக்கரையில் தலைக்கு மேல் கூரையில்லாத ஒரு சிறு மேட்டுப் பகுதியில் ஐம்பத்தியிரண்டு ஆண்டுகளாக வசித்து வருவதாகக். கேள்விப்பட்டதும் இருவருக்கும் வியப்பு மேலிட்டது. கடுங்குளிர், பெருமழை, கடும் வெயில் போன்ற இயற்கையின் அதீதங்களைப் பொருட்படுத்தாமல், வேறு இடங்களுக்குச் சென்று ஒதுங்காமல் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன் அருகில் கலவரம் நடந்து கொண்டிருந்த போது கூட இடம் மாறிச் செல்லவில்லை என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். வயோதிகத்தினால் அவர் கண் பார்வையையும் இழந்திருந்தார் என்றாலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதது போலவே அவர் தன் உடல் இழப்புகளாலும் பாதிக்கப்படாமல் வாழ்ந்தார். அங்கிருந்த பலரும் அவர் மெய்ஞானத்தால் முக்காலத்தையும் அறிய வல்லவராக இருந்தாலும் தன் சக்திகளை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொன்னார்கள்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் துறவி பாபு சுர்தாஸைச் சந்தித்த போது கடும் வெயில் வாட்டிய சமயம். அங்கு சென்று நிற்கவே அவர்கள் சற்று சிரமப்பட்டார்கள் என்றாலும் எந்தவொரு பாதிப்புமில்லாமல் வெறும் தரையில் வெயிலில் அவர் அமர்ந்திருந்தார். அவரை வணங்கி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அவரிடம் பேச்சுக் கொடுத்தார்கள். உள்ளூர் மொழி அறியாததால் மொழி பெயர்க்க பணியாளன் மூல்ஜீயை அழைத்துச் சென்றிருந்தார்கள்.

 

அந்தத் துறவி தனக்கு நூறு வயதானதாகச் சொன்னார். ஞான மார்க்கம் பற்றி அவரிடம் பேசிய போது சிப்பி மழை நீரைப் பத்திரமாகச் சேமித்து அதை முத்தாக்கிக் கொள்வது போல ஞானிகள் தங்கள் அனுபவங்களால் உணர்ந்த உண்மைகளை ஞானமாக்கி சேமித்து வைத்துக் கொள்கிறார்கள் என்றார். கர்னல் ஓல்காட்டுக்கு அந்த உவமை பிடித்திருந்தாலும் முத்து உருவாவது அப்படியல்ல என்றும், அது உருவாகும் அறிவியலையும் அவருக்கு விளக்கத் தோன்றியது. அவர் விளக்கத்தை அந்தத் துறவி ஏற்றுக் கொள்ளவில்லை. அது கர்னல் ஓல்காட்டுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் மற்றபடி அந்தத் துறவி மெய்ஞானி என்பது அவர் உபதேசித்த உண்மைகளில் தெரிந்தது.

 

அந்தத் துறவி சொன்னார். “மனதை ஒருவன் மிகவும் அமைதியாகவும்,  உலக விஷயங்களால் பாதிக்கப்படாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். அலைபாயாத நீர்நிலையில் மட்டுமே சூரியனின் பிம்பத்தைத் தெளிவாகக் காண முடிவது போல மனம் அமைதியாக இருக்கும் போது மட்டுமே ஞானத்தின் உண்மையை ஒருவன் உணர முடியும். கஷ்ட நஷ்டங்களால் மனிதன் மனமுடைந்து விடத் தேவையில்லை. அவற்றிலிருந்தும் அவன் எத்தனையோ படிப்பினைகளையும், ஞானத்தையும் பெற்று அவற்றை நன்மையாக்கிக் கொள்ள முடியும்

 

அவரிடம் அற்புத சக்திகள் எதையாவது வெளிப்படுத்த கர்னல் ஓல்காட் கோரிக்கை விடுத்த போது அற்புதசக்திகளை வெளிப்படுத்துவது முட்டாள்களின் விளையாட்டு போன்றது என்றும் மெய்ஞானத்திற்கு அது எந்தச் சிறுபலனையும் சேர்த்து விடப் போவதில்லை என்றும் சொல்லி மறுத்து விட்டார்.   

மெய்ஞானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து மற்ற எல்லாவற்றையும் மறுத்து வாழ்ந்த அந்த ஞானியிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு இருவரும் திரும்பினார்கள். பின் சில வருடங்கள் கழித்து அந்தத் துறவி இறக்கும் வரை கர்னல் ஓல்காட் அலகாபாத் போகும் போதெல்லாம் சென்று அவரைச் சந்தித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

அவரைப் போலவே  இன்னொரு சன்னியாசி கான்பூர் அருகே கங்கைக் கரையில் வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்டு அவரையும் இருவரும் சென்று பார்த்தனர். அந்தத் துறவி மெலிந்து வயிறு ஒடுங்கிப் போனவராய் இருந்தார். ஆனால் அவர் முகத்தில் ஞானஒளி வீசியது. அவரும் அற்புதங்கள் எதுவும் செய்து காட்ட முகச்சுளிப்புடன் மறுத்து விட்டார். ஆனால் அவர் சுர்தாஸைப் போல அற்புதங்கள் செய்து காட்டுவதை முட்டாள்தனமான விளையாட்டு என்பது போலப் பேசவில்லை. மாறாக அவர் அறிந்த ஜங்க்ளீ ஷா என்ற துறவி ஒருவருடைய உணவை நூறு பேருடைய உணவாகப் பெருக்கிக் காட்டுகிற சக்தி படைத்தவராக இருந்ததைச் சொன்னார். இப்படி உணவைப் பலமடங்காகப் பெருக்கிக் காட்டும் சக்தி அக்காலத்தில் பல துறவிகளிடம் இருந்ததாக கர்னல் ஓல்காட் கேள்விப்பட்டிருந்தார்.

 

இன்னொரு சன்னியாசி சற்று தொலைவில் உள்ள லுகி பாவா என்ற சாது தண்ணீரை நெய்யாக மாற்றும் சக்தி படைத்தவர் என்று தெரிவிக்க கர்னல் ஓல்காட் லுகி பாவாவின் ஆசிரமத்திற்கும் சென்று பார்த்தார். லுகி பாவா தத்துவஞான சிந்தனைகளில் மேம்பட்டவராக இருந்தார். அவரும் அற்புதங்கள் செய்து காட்ட மறுத்தார். எல்லா அற்புதங்களையும் உள்ளே தேடச் சொன்னார். இவ்வாறாக கர்னல் ஓல்காட் உண்மையான துறவிகள் மெய்ஞானத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை மற்ற சக்திகளுக்குத் தருவதில்லை என்பதை தன் அனுபவத்திலேயே கண்டு கொண்டார்.

 

 

கர்னல் ஓல்காட்டும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் ஆரிய சமாஜ் அமைப்பில் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள். காரணம் தியோசபிகல் சொசைட்டியைப் போலவே சமூகப் பொதுநலனும், ஆன்மிகமும் ஆரிய சமாஜ் அமைப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அதனால் அவர்கள் ஆரிய சமாஜ் தலைமையகம் சென்று அங்குள்ள சுவாமிகளைச் சந்தித்துப் பேசினார்கள். தியோசபிகல் சொசைட்டியின் சில அம்சங்கள் பற்றிப் பேசினார்கள். பின் அதன் தலைமை சுவாமிகள் ஆற்றிய பிரசங்கத்தில் கலந்து கொண்டார்கள்.

 

தன் பேச்சில் ஆரிய சமாஜ் சுவாமிகள் பிரார்த்தனை பற்றி வித்தியாசமாகப் பேசினார். “பலர் பிரார்த்தனை என்றால் கடவுளின் பெயரைப் பல முறை சொல்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பலமுறை கடவுள் பெயரைச் சொல்லி விட்டு கடவுள் ஒரு சேவகன் போல அவர்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது அபத்தமானது. உண்மையான பிரார்த்தனை கடவுளை உணர்ந்த தியானமும், உழைப்பும் தான்…”

 

கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்தார்கள். அங்கு தங்கியிருந்த நாட்களில் அந்த சுவாமிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தன் இளமைக்காலத்தில் ஏழு ஆண்டுகள் அடர்ந்த காடுகளில் தவத்தில் கழித்ததைச் சொன்னார். பிரார்த்தனை பற்றி வித்தியாசமான கருத்து தெரிவித்தது போலவே அவர் அபூர்வசக்திகள் குறித்தும் தேவைப்படும் நேரத்தில் அந்தத் தேவைக்காக மட்டுமே சக்திகளை வெளிப்படுத்துவது சரியானது என்று தெரிவித்தார். அவர் காடுகளில் வசித்த காலத்தில் கடும் விஷங்கொண்ட பாம்புகளும், கொடிய விலங்குகளும் கூட சுற்றிலும் இருந்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சேர்ந்து வாழ முடிந்ததைப் பற்றிச் சொன்னார். ஒரு முறை அவர் காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்த போது பசியோடு எதிரே வந்த ஒரு கரடி அவர் மீது பாய முற்பட்டதையும், ஒரு கையசைப்பில் அது நின்று பின் விலகிப் போனதையும் சொன்னார். மௌண்ட் அபுவில் பவானி கிரி என்ற துறவி ஒரு பாட்டில் விஷம் முழுவதும் குடித்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க முடிந்ததைப் பார்த்திருப்பதாகவும், அதில் ஒரு துளி ஒரு மனிதனைக் கொன்று விடப் போதுமானது என்றும் சொன்னார். அது போல அந்தத் துறவி நாற்பது நாட்களுக்கும் மேல் உணவின்றி எந்த அசௌகரியமும் உணராமல் இயல்பாக வாழ முடிந்ததையும் பார்த்திருப்பதாகச் சொன்னார். மொத்தத்தில் ஞான மார்க்கத்தில் மேலே உயர்ந்தவர்களுக்கு அந்தச் சக்திகள் இயல்பாக வரும், அதைத் தேவையான இடத்தில் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது முறையான செயல் என்ற வகையில் அவர் பேச்சிருந்தது,

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி தினத்தந்தி 28.08.2019

 

 

1 comment:

  1. அற்புத சக்திகளை விட ஆத்ம ஞானமே சிறந்தது...

    இந்த தொடரில் இந்த பகுதி மிகவும் அற்புதமாக உள்ளது...

    ReplyDelete