Thursday, December 17, 2020

இல்லுமினாட்டி 81



க்ரிஷ் மூன்று நாட்களாய் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விடுகிறான். மாஸ்டர் அவனுக்குச் சொல்லித் தந்திருந்த தியானப் பயிற்சிகளை விடாமல் சிரத்தையுடன் செய்கிறான். உணர்வுநிலைகளைக் கூர்மைப்படுத்தி வருகிறான். மனம் லேசாகவும், தெளிவாகிக் கொண்டும் வந்தது. சிந்துவைப் பற்றி அவன் மனதில் எழ ஆரம்பித்திருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. நேற்றைய ஒரு பத்திரிக்கையில் உதயும் சிந்துவும் கைகோர்த்தபடி ஒரு பிரபல உணவகத்திலிருந்து வெளியே வரும் புகைப்படம் வெளியாகியிருந்தது. நிருபர் ஒருவர்ஏதாவது விசேஷச் செய்தி இருக்கிறதா?” என்று உள்ளர்த்தத்துடன் கேட்டதற்கு உதய் புன்னகையுடன்விரைவில் தெரிவிக்கிறேன்என்று சொல்லியிருந்ததும் செய்தியாக வெளியாகியிருந்தது. அது அதற்கடுத்த நாள் மற்ற பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. சில தொலைக்காட்சிகளிலும் அந்தச் செய்தி இடம் பிடித்தது.   திருமண ஏற்பாடுகளை இரண்டு மாதம் வீட்டில் தள்ளி வைத்தாலும் ஊடகங்களில் செய்திகள் இடம் பெறுவதைத் தடுக்க முடியவில்லை. சிந்துவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவது உறுதி என்பதால் உதயும் அந்தச் செய்திகளைத் தவிர்க்க முயலவில்லை.

இல்லுமினாட்டி அனுப்பிய தகவல்களை க்ரிஷ் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அதே செய்திகளைத் தமிழக உளவுத் துறையும் சேகரித்து கமலக்கண்ணனிடம் தந்தது. அதில் சிந்துவின் தாயார் பற்றிய தகவல் மட்டும் இருக்கவில்லை. அந்தம்மாள் உயிரோடு இருப்பதையும் டெல்லியில் இருக்கும் இரண்டாவது குடும்பம் பற்றியும் அவர்கள் கண்டுபிடித்திருக்கவில்லை. மற்றபடி சிந்துவின் தந்தை, சித்தி, தங்கை பற்றி எல்லாம் தகவல்கள் சேர்த்திருந்தார்கள். தனக்கு வந்த ரிப்போர்ட்டை இளைய மகனிடம் கமலக்கண்ணன் காட்டினார். அவருக்கு அந்த ரிப்போர்ட்டில் எதுவும் சந்தேகத்திற்கு இடமாக இருப்பது போல் தெரியவில்லை. எதற்கும் க்ரிஷும் ஒரு முறை பார்க்கட்டும் என்று நினைத்துக் காட்டியதை முன்பே அறிந்திருந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் படித்துப் பார்த்த க்ரிஷ் அவரிடம் தன் சந்தேகத்தைக் காட்டிக் கொள்ளவில்லை...

உதய் அவன் அறைக்குள் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. க்ரிஷ் புன்னகையுடன் அண்ணனை வரச்சொன்னான். உதய் உள்ளே நுழைந்த போது தான் அண்ணனிடம் நுட்பமாகத் தெரிந்த சில வித்தியாச அதிர்வலைகளை க்ரிஷ் உணர்ந்தான். உடனே அவற்றை நோக்கி க்ரிஷ் கவனத்தைக் குவித்தான். அந்த அதிர்வலைகள் என்ன என்று ஆராய்ந்தான். அவை வசிய அலைகளாய்த் தெரிந்தன. உடனடியாக க்ரிஷ் சந்தேகப்பட்டது சிந்துவைத் தான். ஆனால் இந்த நுட்பமான வசிய அலைகள் சாதாரண மனிதர்கள் அனுப்ப முடிந்ததல்ல. அனுப்புவதற்கு முன் அந்த மனிதனை மானசீகமாகச் சிறிது நேரமாவது ஆக்கிரமிக்க வேண்டும். பின் அவனில் அந்த வசிய அலைகளைச் செலுத்த வேண்டும். சிந்து அந்த வசிய அலைகளைப் பயன்படுத்தி உதய் மனதில் இடம் பிடித்துப் பின் ஆழமாக வேரூன்றி இருக்கலாம். ஆனால் அவளே அந்த வசிய அலைகளை அனுப்ப முடிந்தவளாக இருக்க வாய்ப்பில்லை. அதற்கு யாரோ உதவியிருக்க வேண்டும்..

டேய் என்ன ஆச்சு? ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்?” உதய் அவனை உலுக்க க்ரிஷ் அலையுலகில் இருந்து மீண்டான்.  அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. உதயை வேறு யாரோ ஆக்கிரமித்திருக்கிறார்கள், வசிய அலைகளை அவனுக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்ற தகவலே க்ரிஷுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அண்ணனைப் பார்த்து அசட்டுப் புன்னகை பூத்தான். “ஒன்னுமில்லை. உன் கிட்ட ஏதோ வித்தியாசம் தெரிஞ்சுது. அதான் பார்த்தேன்.”

உதய் முகத்தில் சின்னதாய் ஒரு வெட்கம் வந்து போனது. தம்பி அருகில் அமர்ந்தபடி சொன்னான். “காதலிக்க ஆரம்பிச்சாலே கொஞ்சமாவது வித்தியாசம் நமக்குள்ளே தெரிய ஆரம்பிச்சுடும்...”

க்ரிஷ் தன் முந்தைய அதிர்ச்சியை மனதின் ஒரு மூலையில் தள்ளி வைத்து விட்டுக் கிண்டலாகச் சொன்னான். “ஆனால் நீ ஆளே முழுசா மாறின மாதிரி தானே இருக்கு. எப்ப பாரு செல்போன்ல சிந்து கிட்டயே பேசிகிட்டு இருக்கறதா அம்மாவே சொல்றாங்க. பேசிகிட்டிருக்கிறப்ப சாப்பிட ஏதாவது பக்கத்துல வெச்சுட்டு வந்தாலும் நீ அதைக்கூட சாப்பிட மறந்துடறயாம்

உதய் சொன்னான். “கிழவி வாய் சும்மாவே இருக்காது. என்னைப் பத்தி யார் கிட்டயாவது ஏதாவது சொல்லிகிட்டே இருக்கு. அதை விடு. நாளைக்கு சிந்து காலைலயே நம்ம வீட்டுக்கு வர்றா. சாயங்காலம் வரை இருப்பா. சாயங்காலம் நாங்கள் ஒரு சினிமாவுக்குப் போகப் போகிறோம். அதனால ஹரிணியையும் காலைலயே வரச் சொல்

அப்போது தான் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை என்பது க்ரிஷுக்கு நினைவு வந்தது. க்ரிஷ் தலையசைத்தான்.

உதய் தம்பியிடம் சொன்னான். “கிழவி உன்னைப் பத்தியும் என் கிட்ட கவலையாச் சொல்லுச்சு. மூணு மூணரை மணிக்கு எல்லாம் முழிச்சிகிட்டு தியானம் பண்றியாம். உனக்குக் கல்யாணம் சீக்கிரம் செய்யலைன்னா நீ சன்னியாசி ஆகறது உறுதின்னு பயப்படுது.”

க்ரிஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “அப்படியெல்லாம் சன்னியாசி ஆக மாட்டேன். கவலைப்பட வேண்டாம்னு அம்மா கிட்ட சொல்லு.”

உதய் சந்தேகத்துடன் கேட்டான். “நீ இப்ப அந்தப் பழைய பயிற்சி எல்லாம் செய்ய ஆரம்பிக்கக் காரணம் விஸ்வமா?”

க்ரிஷ் சொன்னான். “பாதி அவன். மீதி நான் இப்ப ஒரு ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறேன். அதற்கு தியானம் அவசியம் தேவைப்படுது. உன் கிட்ட கேட்கணும்னு நினைச்சேன். நீ கொஞ்ச நாளுக்கு முன்னாடி, அதாவது சிந்துவையும் சந்திக்கறதுக்கு முன்னாடி, உனக்கு எதாவது அமானுஷ்யமான அனுபவம் ஏதாவது கிடைச்சுதா?”

உதய் சிறிது யோசனை செய்து விட்டுக் கேட்டான். “நீ எந்த மாதிரி அனுபவம் பத்தி கேட்கிறாய்?”

உனக்குள் ஏதோ புகுந்த மாதிரி அல்லது உன்னை ஏதோ ஒரு சக்தி ஆக்கிரமிக்கிற மாதிரி...”

உதய் ஒரு கணம் திகைப்புடன் அவனைப் பார்த்து விட்டுச் சொன்னான். “அடப்பாவி நீ தானா அது? ஏண்டா இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்றப்ப முன்கூட்டியே சொல்ல மாட்டாயா? ஒரு நாள் அதிகாலைல ஏதோ ஒன்னு எனக்குள்ள புகுந்துட்ட மாதிரி தோணுச்சு. என்னால அசைய முடியலை. உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகுது. அது என்னன்னும் சொல்ல முடியலை. நான் பயந்தே போயிட்டேன். எல்லாம் கால் மணி நேரம் தான். அதற்கப்புறம் சரியாயிடுச்சு. பழையபடி நார்மலாயிட்டேன்...  சில பேர்அமுக்கான்னு சொல்வாங்க தெரியுமா. அசைய முடியாமல் ஏதோ ஒரு சக்தி கட்டிப் போட்ட மாதிரி உணர்வோமே. நான் அதுன்னு நினைச்சுகிட்டேன்

க்ரிஷ் ஒன்றும் சொல்லவில்லை. அவன் தான் அப்படிச் செய்தான் என்று உதய் நினைத்ததை அவன் மாற்ற விரும்பவில்லை. என்ன நடந்திருக்கிறது என்று அவனே சரியாக அறியும் முன் உதயைப் பயமுறுத்த விரும்பாமல் வெறும் புன்னகை மட்டும் பூத்தான்

உதய் சிறிது நேரம் சிந்து புராணம் பாடி விட்டுப் போனான். அவன் போகும் வரை அமைதியாக இருந்த க்ரிஷ் அவன் போன பிறகு தீவிரமாக என்ன நடந்திருக்கும் என்று ஆலோசித்தான். இது போன்ற நேரத்தில் மாஸ்டர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று மறுபடியும் அவனுக்குத் தோன்றியது.

திடீரென்று மாஸ்டர் முன்பொரு முறை அவருக்கும், அவருடைய குருவுக்கும் இடையே மானசீகத் தொடர்பு இருந்தது என்றும் எத்தனை தொலைவில் இருந்தாலும் இருவரும் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.      

மாஸ்டர் இமயமலைக் குகையில் இப்போதும் தவம் செய்து கொண்டு இருக்கிறார். தவத்தின் போது உணர்வுகள் உச்சத்தில் இருக்கும். ஏன் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக்கூடாது?

இந்த எண்ணம் தோன்றியவுடன் க்ரிஷ் தன் மனக்கண்ணில் மாஸ்டரைக் கொண்டு வந்தான். மானசீகமாக அவரை வணங்கி அவரையே நேரில் பார்ப்பது போல் பாவித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவன் எண்ணமெல்லாம் அவர் நிறைந்தார். அருகேயே அவர் இருப்பது போல அவன் உணர்ந்தது நிஜம் போலவே தோன்றியது. அவருடைய அன்பான பார்வையில் அவன் திளைத்தான். அதுவும் நிஜம் போலவே தோன்றியது. சிறிது நேரத்தில் சுற்றுச் சூழலை மறந்து மனம் மிக லேசாகியது. மாஸ்டர் அவனைப் பார்த்துப் புன்னகைப்பதாய் உணர்ந்தான். கண்கள் நிறைய க்ரிஷ் அங்கேயே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். மாஸ்டரின் விரல்கள் அவன் தலை மேல் படுவது போல் ஒரு உணர்வு. எழுந்து நின்ற போது அவர் பார்வை என்ன என்று கேட்டதாய் அவனுக்குத் தோன்றியது.

அவன் உதயிடம் உணர்ந்த வசிய அலைகளை நினைவுபடுத்திக் கொண்டே அவரைப் பார்த்தான். அந்த வசிய அலைகளின் மூலம் எங்கே என்று அவரிடம் மானசீகமாகக் கேட்டான்.

அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வசிய அலைகளைப் பற்றித் தெரிவிப்பதில் அவனுடைய திறமை போதவில்லையோ என்று எண்ணிய க்ரிஷ் மறுபடி அந்த வசிய அலைகளைத் தீவிரமாக நினைவுகூர்ந்தான். திடீரென்று அந்த வசிய அலைகள் மறைந்து விஸ்வம் தெரிந்து பின் அவனும் மறைந்தான். முன்பே சந்தேகம் இருந்தாலும் மாஸ்டரும் விஸ்வத்தையே அடையாளம் காட்டியது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Is this novel available on kindle ?

    ReplyDelete
  2. Guru's relationship with disciple is always intimate inspite of distance. Guru showed Viswam. Now what krish is going to do with sindhu?

    ReplyDelete
  3. இந்த எபிசோட் ரொம்ப சூப்பர்.... கிரிஷ் தன் சக்திகளை பயன்படுத்தி அலைகளை உணர்ந்த விதம் மற்றும் மாஸ்டருடன் தொடர்பு கொண்டது...இரண்டுமே அற்புதம்....

    சிந்து அடுத்த நாள் வரும்போது கிரிஷ்க்கு கூடுதலாக தகவல்கள் கிடைக்கும்....

    ReplyDelete