Monday, December 28, 2020

யாரோ ஒருவன்? 12

ஞ்சய் ஷர்மாவுக்கு நடப்பதெல்லாம் கனவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உண்மையில் இப்படியெல்லாம் நடக்க வழியே இல்லை. யாராவது இரும்புச் சங்கிலியால் இப்படி எல்லாம் ஒருவனைக் கட்டி வைப்பார்களா? சிறைகளில் கூட இப்படிக் கட்டி வைப்பதில்லையே. ஆனால் இரும்புச் சங்கிலியும் நிஜம், அவனும் நிஜம், அந்தத் தடியனும் நிஜம், கனவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைப்பது தான் கற்பனை என்று சிறிது நேரத்திலேயே உறுதியாகி விட்டது. தப்பிக்க வேண்டுமென்றால் எங்கிருக்கிறோம் என்பதை அவன் கண்டுபிடித்தாக வேண்டும்.

சஞ்சய் ஜன்னல் வழியே மெல்ல எட்டிப் பார்த்தான். ஒரு வராந்தா தெரிந்தது. வராந்தா அகலம் ஐந்தாறு அடிகள் தான் இருக்கும். அதைத் தாண்டி சுவர் தெரிந்தது. வராந்தாவின் தரையும் பழைய சிமெண்ட் தரையாகத் தான் இருந்தது. சில இடங்களில் அதுவும் பெயர்ந்து சிறிய குழிகள் விழுந்திருந்தன. ஜன்னல் வழியாக அந்தத் தரை மற்றும் சுவரைத் தவிர வேறு எதையும் அவனால் பார்க்க முடியவில்லை.   நகரின் ஒதுக்குப்புறமாகவே அந்த இடம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அது டெல்லி தானா, இல்லை வேறெதாவது நகரமா என்பது தெரியவில்லை. வாகனங்கள் போய் வரும் சத்தம் தூரத்தில் தான் கேட்டது தெருவிலிருந்து நிறையவே உள்ளே தள்ளி தான் இந்தச் சிறை இருக்கிறது. பாத்ரூம் போய் வருமளவு இரும்புச் சங்கிலியை தடியன் தளர்த்தியிருந்ததால்  நாலாபக்கச் சுவர்களிலும் அவன் காது வைத்து கேட்டு பக்கத்து அறைகள் ஏதாவது இருக்கின்றனவா, அங்கிருந்து ஏதாவது சத்தங்கள் வருகின்றனவா என்று கவனித்தான். பக்கத்தில் அறைகள் இருக்கலாம். ஆனால் அங்கிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. தடியன் கூட எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை.

சஞ்சய் “சார்” என்று அழைத்துப் பார்த்தான். தடியன் வரவில்லை. சற்று குரலை உயர்த்தியும் அழைத்தான். கத்தியும் பார்த்தான். அவன் குரலே லேசாக எதிரொலித்ததேயொழிய தடியனைக் காணோம். இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து அறைந்தாவது போயிருப்பான். பசி வயிற்றைக் கிள்ளியது. தண்ணீர் குடித்தான்.

இரவு வரை காலம் ஆமை வேகத்தில் தான் நகர்ந்தது. தடியனின் காலடியோசை இரவு எட்டு மணிக்குத் தான் கேட்டது. ஒரு தட்டில் ஒரு சப்பாத்தியும் அதற்குச் சரியான அளவில் ஏதோ சப்ஜியும் இருந்தன. இரண்டுமே ஆறியிருந்தன. இரண்டுமே மதியம் தயாரித்ததாய் தான் இருக்க வேண்டும்.

சஞ்சய் கோபத்தோடு தடியனைக் கேட்டான். “இதை மனுசன் சாப்பிடுவானா?”

தடியன் அலட்சியமாய்ச் சொன்னான். “நீ சாப்டலாம்...”

சஞ்சய் அவனை முறைத்தான்.

தடியன் சொன்னான். “வேண்டாம்னா சொல்லிடு. எடுத்துட்டுப் போயிடறேன்.”

அவன் சொன்னது மட்டுமல்ல அதை எடுத்துக் கொண்டு போகவும் தயாராகவே இருந்தான். இரக்கமேயில்லாத தடியன். சஞ்சயின் கை தானாக அந்தத் தட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டது.

“சாப்ட்டுட்டு தட்டைக் கழுவி வை. அப்புறமா வர்றேன்.” என்று சொல்லிவிட்டுத் தடியன் போய் விட்டான்.

சஞ்சய்க்கு அந்தச் சப்பாத்தியைச் சாப்பிடுகையில் தன் மேலேயே பச்சாதாபம் பெரிதாக எழுந்தது. அவன் வீட்டு வேலைக்காரி கூட இந்த ஆறிய சப்பாத்தி சப்ஜியைச் சாப்பிட மாட்டாள். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. அவன் தாய் நன்றாய் சமைப்பாள். உணவு சரியில்லை என்றால் தட்டை அவன் தூக்கி எறிவான். அவன் மனைவிக்கும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதால் அவளும் நன்றாகவே சமைப்பாள். வித விதமாய் சாப்பிட்டு ருசி பார்த்த நாக்கு இந்த ஆறிய சப்பாத்தியை ரசிக்க மறுத்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அவன் சாப்பிட்டான். நிலவரம் புரியாமல் அந்த ஒரு சப்பாத்தி போதவில்லை என்று வயிறு அறிவித்தது.  

கழுவி வைத்திருந்த தட்டை எடுத்துப் போக வந்த தடியனிடம் சஞ்சய் சொன்னான். “படுக்க படுக்கை கொண்டு வா. ராத்திரி குளிர்ல தரையில படுக்க முடியாது.”

தடியன் அலட்சியமாய்ச் சொன்னான். “சரி படுக்காதே...” சொல்லிவிட்டு அவன் தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டான். சஞ்சய் திகைப்பில் வாயடைத்துப் போய் நின்றான். அவன் திகைப்பிலிருந்து மீண்ட பிறகு இரண்டு மூன்று தடவை அந்தத் தடியனை அழைத்துப் பார்த்தான். தடியன் இருக்கிற இடம் தெரியவில்லை.

இரவில் குளிர் கடுமையாக இருந்தது. தரையே ஐஸ்கட்டி போல் குளிர்ந்தது. வீட்டில் இந்த குளிர்காலத்தில் ஹீட்டர் இல்லாமல் அவன் உறங்கியதே இல்லை. ஆனால் வேறு வழியில்லாமல் இரவு இரண்டு மணிக்கு மேல் அந்தக் குளிரிலும் அவனுக்கு உறக்கம் வந்தது.  அடிக்கடி இடையிடையே குளிர் தாங்காமல் விழிப்பும் வந்தது.  விடிந்து வெயில் வந்த பின் தான் சரியான உறக்கமே வந்தது. விழிப்பு வந்த பிறகு நேரம் தெரியாமல் அவன் தவித்தான். மறுபடி காலம் மெல்ல நகர ஆரம்பித்தது.

தடியன் மதியம் ஒரு சப்பாத்தி சப்ஜியுடன் வந்தான். சஞ்சய் கோபத்தில் கேட்டான். “மனுசங்களா நீங்க?”

“உன்னையே கேட்டுக்க வேண்டிய கேள்வியை நீ ஏன் அடுத்தவனைக் கேட்கிறே”

சஞ்சய் சொன்னான். “ஒரு கடிகாரமாவது இங்கே மாட்டு. நேரம் என்னன்னே தெரிய மாட்டேங்குது”

“உனக்கு தான் நேரம் சரியில்லையே. அதை பாத்து என்ன பண்ணப் போறே?”

தடியன் போய் விட்டான். நரேந்திரன் வந்தால் அரையும் குறையுமாய் உண்மையைச் சொல்லி இங்கே இருந்து போய் விட வேண்டும். இனியும் இங்கே அவனால் தாங்க முடியாது... சஞ்சய் நரேந்திரன் வந்தால் என்னவெல்லாம் சொல்ல வேண்டும், எப்படி நம்பும்படியாகச் சொல்ல வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.     

நரேந்திரன் மாலை நான்கு மணிக்குத் தான் வந்தான். சஞ்சய் அவனைப் பார்த்தவுடன் சொன்னான். “உங்கப்பா எத்தனையோ நல்ல மனுஷன். அந்த மாதிரி ஒருத்தருக்கு உன்னை மாதிரி ஒருத்தன் பிள்ளையான்னு ஆச்சரியமாய் இருக்கு”

நல்ல மனிதர்கள் மனசாட்சியும் இரக்கமும் உள்ளவர்கள். அதை வைத்துத் தான் அவர்களுக்கு மனசாட்சி உறுத்தலை உண்டாக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த சஞ்சய் ஒரு படுக்கையோ, போர்வையோ இல்லாமல் வெறும் தரையில் இரும்புச் சங்கிலியோடு கட்டப்பட்டிருக்கும் தன் நிலைமையை கையை அசைத்துக் காட்டினான்.

நரேந்திரன் கேட்டான். “அந்த நல்ல மனுஷனை நீ எப்படி நடத்தினே? நல்லவங்களை தான் வாழ விட மாட்டேங்கறீங்களேடா?”

சஞ்சய் இவனிடம் அந்த மனசாட்சி வழி எடுபடாதென்பதைப் புரிந்து கொண்டான். சொல்லவிருக்கும் அரைகுறை உண்மையையும் கடைசியில் தான் இவனிடம் சொல்ல வேண்டும். அப்போது தான் இவன் நம்புவான்.... சஞ்சய் வெகுளியைப் போல் சொன்னான். “பாரு. நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் அந்த ஃபைல்ல எழுதியிருக்கேன். வேற எதுவும் தெரியாது. எங்கம்மா மேல சத்தியமா சொல்றேன்....”


நரேந்திரன் அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுப் பின் தடியனைப் பார்த்தான். தடியன் போய் ஒரு பக்கெட் நிறைய ஐஸ்கட்டிகள் மிதக்கும் தண்ணீரைக் கொண்டு வந்தான். தண்ணீரிலிருந்து வந்து குளிர் காற்று அந்த நேரத்திலும் சஞ்சய்க்குக் கொடுமையாக இருந்தது.

நரேந்திரன் சொன்னான். “உன் கிட்ட விளையாட எனக்கு நேரமில்லை. நீ என்ன நடந்ததுன்னு சொல்றியா. இல்லை. இந்த ஐஸ்கட்டித் தண்ணியை உன் மேல ஊத்தவா?”

சஞ்சய் திகைப்புடன் நரேந்திரனைப் பார்த்தான். மனிதனா இவன்?

நரேந்திரன் எழுந்தான். அந்தத் தடியனிடம் சொன்னான். ”இப்ப ஆரம்பிச்சு நாளைக்கு காலைல வரைக்கும் மணிக்கொரு தடவை இவன் மேல ஐஸ்கட்டித் தண்ணிய ஊத்து. அதிகபட்சமாய் ரெண்டு நாளைக்கு மேல தாங்க மாட்டான். ஜன்னி காய்ச்சல் வந்து செத்துடுவான். பிறகு நான் ஏற்கெனவே சொன்னபடி பிணத்தை அப்புறப்படுத்திடு. ஒன்னுமே தெரியாதவனை இங்கே வெச்சுகிட்டு நாம சும்மா பேசிகிட்டிருக்கிறதுல அர்த்தமேயில்லை. என்ன சொல்றே?


தடியன் தலையாட்டினான். சஞ்சய் திகிலுடன் அலறினான். “வேண்டாம். நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்”
                                     

(தொடரும்)
என்.கணேசன்  



4 comments:

  1. நான் நாவலை வாங்கி இரண்டே நாட்களில் விடாமல் படித்து முடித்து விட்டேன். அருமையான நாவல் கணேசன். போகப் போக கதையோடு எங்களைக் கட்டிப்போட்டு விட்டீர்கள். சஸ்பென்ஸ் உருக்கம் த்ரில்லிங் அம்சங்களோடு நகைச்சுவையும் இடையிடையே சூப்பராக இருந்தது.

    ReplyDelete
  2. Narendran seems to be a go-to-hell type of hero. He knows how to get things done. Super.

    ReplyDelete
  3. நரேந்திரனிடம்... சஞ்சயின் எவ்வித தந்திர வேலையும் எடுபடவில்லை., இறுதியில் முழு உண்மையும் சொல்லிதான் ஆக வேண்டும்....

    சஞ்சயின் "மனாசாட்சி வழி" தோற்ற விதம் அருமை...

    ReplyDelete
  4. துப்பாக்கி படத்தில் வரும் டார்ச்சர் சீன் மாதிரி இருக்கு சார்....

    ReplyDelete