சஞ்சய் ஷர்மாவுக்கு நினைவு திரும்பிய போது அவனுடைய கைகளும், கால்களும்
இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. அவனுக்கு
முதலில் இது ஏதோ ஒரு கொடுங்கனவு என்றே தோன்றியது. ஆனால் கைகால்களை
அசைக்க முயன்றும் முடியாமல் சங்கிலி இறுக்கி வலித்த போது அது கனவு அல்ல என்று புரிந்தது. ஜனார்தன்
த்ரிவேதியின் மருமகனிடம் இப்படி நடந்து கொள்ளும் தைரியம் யாருக்கு வந்தது என்று கோபப்பட்டவன் அந்த இடம் என்ன என்று கூர்ந்து பார்த்தான். ஜீரோ வாட்ஸ்
பல்பு வெளிச்சத்தில் அது பாழடைந்த இடமாகத் தெரிந்தது. சிமெண்ட்
தரையில் அங்கங்கே குழிகள் இருந்தன. அறையின் ஓரத்தில்
தட்டுமுட்டுச் சாமான்கள் சில இருந்தன. அது தாண்டி ஒரு
பாத்ரூம் தெரிந்தது. அதன் தகரக்கதவின் கீழ்ப்பகுதி துருப்பிடித்திருந்தது அவன் எழுந்து உட்கார முயன்றதில் இரும்புச் சங்கிலி
அசைந்த சத்தம் கேட்டு அறை ஜன்னல் வழியே ஒருவன் எட்டிப் பார்த்தான். “ஹலோ....
என்னை ஏன்டா இங்கே கொண்டாந்து வெச்சிருக்கீங்க? நான் யார்
தெரியுமாடா?” என்று சஞ்சய் ஷர்மா கத்தினான்.
அறைக்கதவைத் திறந்து வேகமாக வந்த ஒரு
தடியன் ஓங்கி அவனை ஒரு அறை அறைந்தான். சஞ்சய் ஷர்மாவுக்கு கன்னத்திலும் தாடையிலும் உயிர் போகிற
மாதிரியான வலி ஏற்பட்டது. அண்ட சராசரங்களே சுற்றுவது போல் இருந்தது. அந்தத்
தடியன் சொன்னான். “சத்தம் போடக்கூடாது”.
சஞ்சய் ஷர்மா சமநிலைக்குத் திரும்பிய
போது அடக்கத்தைப் பழகி இருந்தான். பலவீனமான குரலில் கேட்டான். “என்னை ஏன்
பிடிச்சிட்டு வந்திருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்”
“காலைல பத்து
மணிக்கு சார் வருவாரு. வந்து சொல்வாரு” என்றான்
அந்தத் தடியன்.
”இப்போது
மணி என்ன?” என்று சஞ்சய் ஷர்மா பரிதாபமாகக் கேட்டான்
“மணி இரண்டரை” என்று சொன்ன
தடியன் போய் விட்டான். இன்னும் ஏழரை மணி நேரம் இந்த டெல்லி குளிரில் வெறும் தரையில்
படுத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே சஞ்சயைத் திகிலூட்டியது. ஆனால் பொறுத்திருப்பதைத்
தவிர வேறு வழியில்லை. வெளியே விட்ட பின் கொண்டு வந்தவனையும், சற்று முன்
அறைந்தவனையும் கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்க வேண்டும்..... அது வரை
அடக்கி வாசிக்க வேண்டியது தான். இடது கன்னத்தைத் தடவிப் பார்த்தான். அது நன்றாக
வீங்கி இருந்தது. ஒவ்வொரு
வினாடியும் அநியாயமாய் ஆமை வேகத்தில் நகர்ந்தது.
பத்து மணிக்கு நரேந்திரன் வந்தான். அவனைப்
பார்த்ததும் சஞ்சய் ஷர்மா ஆத்திரத்தின் உச்சத்துக்குப் போனான். “ஓ நீதானா அது? நீயெல்லாம் ஒரு
ஐபிஎஸ் ஆபிசரா? வெட்கமாயில்லை. ஒரு பழைய ரா ஆபிசரை
நடத்தும் விதமா இது? இதற்கு
உனக்கு அனுமதி கொடுத்தது யார்?” என்று கத்தினான்.
நரேந்திரன் அமைதியாகச் சொன்னான். “நீ தான். எப்போது
நீ கேவலமாக நடந்து கொண்டாயோ அப்போதே உன்னைக் கேவலமாக நடத்தவும் அனுமதி கொடுத்து விட்டாய்”
“நான் எப்போது
கேவலமாய் நடந்து கொண்டேன்?”
நரேந்திரன் அலைபேசியை எடுத்து அழுத்தினான். அதில் பதிவு
செய்திருந்த சஞ்சய் ஷர்மாவின் குரல் தெளிவாக ஒலித்தது. “அஜீம் அகமது வழக்கை மறுபடி
ரா எடுத்திருக்கு. செத்துப் போன மகேந்திரன் மகன் நரேந்திரன் தான்
விசாரிக்க ஆரம்பிச்சிருக்கான்.”
நரேந்திரன் கேட்டான்.
“என்ன இது?”
திகைத்தாலும் சமாளித்துக் கொண்டு சஞ்சய் ஷர்மா கோபமாகக் கேட்டான். “உனக்கு என் போனை ஒட்டுக்கேட்கும்
அதிகாரத்தை யார் தந்தார்கள்?”
நரேந்திரன் அமைதியாகக் கேட்டான். “யாரிடம் இதைச் சொன்னாய்?”
சஞ்சய் ஷர்மா அலட்சியமாய்ச் சொன்னான். “இதை நான் சொல்லவில்லை.
யாரோ என் குரலில் மிமிக்ரி செய்து பேசியிருக்கிறார்கள்.”
நரேந்திரன் சொன்னான்.
“சரி நாளைக்கு நான் சாயங்காலம் நான்கு மணிக்கு வருகிறேன். சொல்ல முடிந்தால் சொல்”
சொல்லி விட்டு நரேந்திரன் வேகமாகக் கிளம்பினான். சஞ்சய் ஷர்மா திகைத்தான்.
நாடு எங்கே போகிறது? எங்கே சட்டம் ஒழுங்கு எல்லாம்
இருக்கிறது? இதை எல்லாம் கேட்பாரே இல்லையா? என்றெல்லாம் எண்ணியவனாக ”நரேந்திரன். என் மாமா உன்னை சும்மா விட மாட்டார். பார்லிமெண்டில்
இதைப் பேசுவார். உனக்கு சஸ்பென்ஷன் உறுதி…” என்று கத்தினான்.
நரேந்திரன் அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுப் போய் விட்டான். அவன் போன பிறகு அந்தத் தடியன்
வந்து மறுபடி சஞ்சயை ஓங்கி அறைந்தான். ”சத்தம் போடக்கூடாது என்று
ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்” என்று சொன்னது எங்கேயோ தூரத்தில்
பேசுவது போல் கேட்டது. இந்தத் தடவை வலது கன்னத்தோடு காதும் சேர்ந்து
அடிபட்டதன் விளைவு அது.
உயிர் போகிற வலி கன்னத்திலும், காதிலும்.
சஞ்சய் மெல்லத் தடவிக் கொண்டான். வலது கன்னமும்
வீங்கி விட்டிருந்தது. ஏதோ ஈரமாய் இருந்தது. இரத்தம்!
மாமனுக்கு நரேந்திரன் தான் இப்படிக் கடத்தி வைத்திருக்கிறான்
என்று தெரிய வருமா என்று சஞ்சய் யோசித்தான்.
அவனுடைய விசிட்டிங் கார்டை அவன் ஆபிஸ் மேசை மேல் தான் வைத்திருக்கிறான்.
கண்டிப்பாக ப்யூன் அவன் வந்து போனதைச் சொல்வான். அவர் அனுமானிப்பார். ஆனால் இந்த இடத்தை அவரால் கண்டுபிடிக்க
முடியுமா? சட்டப்படி பிடித்து வைத்திருந்தால் அவர் வக்கீல்களோடு
வந்து அவனை மீட்டிருப்பார். பாவி படித்தவன் போல் இல்லாமல் காட்டான்
போலப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல் சத்தம்
போட்டால் அறையவென்று வேறொரு காட்டானையும் காவலுக்கு வைத்திருக்கிறான். இந்தக்
காட்டானின் கை இரும்பாய் இருக்கிறது. எல்லாக் கணக்கையும்
வெளியே போன பிறகு கண்டிப்பாக இந்த சஞ்சய் ஷர்மா திரும்பத் தருவான். அதுவரை
பொறுமை காப்பது மிக அவசியம்…
காலையிலிருந்து எதுவும் சாப்பிடத் தரவில்லை. பசி வயிற்றைக்
கிள்ளியது. கைகால்கள் அசைக்க முடியாமல் இரும்புச் சங்கிலி இருக்கமாகக்
கட்டப்பட்டு இருந்தது. யானையைக் கட்டிப் போடும் சங்கிலியால் அவனைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு
கேவலமாக அவனை இது வரை யாரும் நடத்தியதில்லை.
சஞ்சய் மெல்ல அழைத்தான். “சார்” இந்தத்
தடியனை எல்லாம் சார் என்று கூப்பிடுவது காலத்தின் கட்டாயம் அல்லாமல் வேறில்லை.
தடியன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். “என்ன?”
“பசிக்குது” என்றான்
சஞ்சய்.
“நீ அவர்
கேட்கிறதுக்கெல்லாம் ஒளிக்காமல் பதில் சொல்ற வரைக்கும் உசுரு போகாம இருக்கறதுக்கு தண்ணியும், ஒரு நாளைக்கு
ரெண்டே ரெண்டு சப்பாத்தியும் தான் தரச் சொல்லியிருக்காரு. நாளைக்குச்
சாயங்காலம் நாலு மணி வரைக்கும் நீ தாக்குப் பிடிக்கணும். அப்ப பேச
உனக்கு சக்தி வேணும். அதனால இன்னிக்கு ராத்திரி ஒரு சப்பாத்தியும், நாளைக்கு
மதியம் ஒரு சப்பாத்தியும் தர்றேன். அது வரைக்கும் தண்ணி
குடுச்சுக்கோ”
சொல்லி விட்டுத் தடியன் ஒரு பெரிய பாத்திரத்தில்
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதில் ஒரு பிளாஸ்டிக் தம்ளரும் இருந்தது. தண்ணீர்
எடுத்துக் குடிக்கவும். பாத்ரூம் போய் வரவும் வசதியாக கை கால்களில் இருக்கும் சங்கிலிகளைச்
சிறிது தளர்த்தி விட்டான்.
பாத்ரூம் சுத்தமாக இருக்கவில்லை. சஞ்சய்
அதைச் சொன்னான். அதற்கு அந்தத் தடியன் சொன்னான். “நீ சுத்தம்
பண்ணிக்கோ” கொடுமை! சொந்த வீட்டில் கூட அவன் இதுவரை இந்த வேலைக்கெல்லாம் போகவில்லை...
கன்னம், காது வலித்தது. வயிறு பசித்தது. நரேந்திரனுக்கு
வேண்டியது ஒரு பதில். உண்மையும் பொய்யுமாய் கலந்து அதைச் சொல்லி ஒரேயடியாக இந்த
நரகத்திலிருந்து தப்பித்து விட வேண்டியது தான் என்று எண்ணிய சஞ்சய் அந்தத் தடியனிடம்
சொன்னான். “நரேந்திரனைக் கூப்பிடு. அவன் கேட்கிறதுக்கு
நான் பதில் சொல்றேன்னு சொல்”
“அப்படியெல்லாம்
நீ கூப்பிடற நேரத்துக்கு அவர் வர மாட்டார். நாளைக்கு
சாயங்காலம் நாலு மணிக்கு அவர் டாண்னு இங்கே இருப்பார்”
சஞ்சய் திகைத்தான். நாளை சாயங்காலம்
நான்கு மணி வரை எத்தனை வினாடிகள் இருக்கின்றன. இப்படியும்
ஒரு நிலைமை தனக்கு வரும் என்று கனவிலும் அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இங்கிருந்து
தப்பிக்க முடியுமா என்று அவன் யோசித்தான். அபூர்வமாய்
ஒன்றிரண்டு வாகனங்கள் போகும் சத்தம் மட்டும் கேட்பதைப் பார்த்தால் நகரத்திலிருந்து
தொலைதூரத்தில் இந்த இடம் இருப்பது போல் தோன்றுகிறது... எப்படியாவது
இங்கிருந்து தப்பி விட வேண்டும்...
(தொடரும்)
என்.கணேசன்
சார் புக்கை ஆர்டர் பண்ணச் சொல்லியாச்சு. வர ரெண்டு நாளாவது ஆகுமேன்னு இங்கே படிக்க வந்தால் விறுவிறுப்பு ஏறிகிட்டே போகுது. நரேந்திரன் செம துணிச்சலான ஆசாமியாய் இருப்பான் போல இருக்கே. அசத்தலான ஹீரோ.
ReplyDeleteநரேந்திரன் சஞ்சய் சர்மாவை கையாளும் விதம் பயங்கரமாக உள்ளது... அடுத்த நாள் என்ன பண்ணுவானோ...
ReplyDeleteBook friend kaila vangider anupuvarnu partha avar padicbudu naliku courier Lauren soliter sir eppda kaiku book varumnu waiting sir
ReplyDeleteViru viru suru suru....narendran konjam different hero.
ReplyDelete