Monday, November 9, 2020

யாரோ ஒருவன்? 5


லமேலு சமையலறையிலிருந்து வந்து சொன்னாள். “எனக்கென்னவோ அந்தப் பையன் பாம்பு கிட்ட பேசின மாதிரி தான் தோணுது. அவன் பேசின பிறகு தான் பாம்பு சடார்னு தலையை இறக்கிகுச்சு

பரந்தாமன் நண்பரிடம் பாதி நகைச்சுவையாகவும், பாதி நிஜ சந்தேகத்துடனும்  கேட்டார். “பாம்புக்கு மனுஷன் பேசறது புரிய வாய்ப்பிருக்கா?”

அலமேலு கணவரை முறைத்து விட்டு நாதமுனியைப் பார்த்தாள். நாதமுனி அவர்களிருவரையும் பார்த்துப் புன்னகைத்தாலும் அந்தக் கேள்வியை விளையாட்டுக் கேள்வியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு ஆராய்ச்சிக் கருத்தரங்கில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்வது போல ஒரு நிமிடம் யோசித்து விட்டுக் கவனமாகச் சொன்னார். “பாம்பை நம்ம முன்னோர்கள் பூஜை செஞ்சாங்க. பல அபூர்வசக்திகளையும், சாபங்களையும் அது மனுஷங்களுக்குத் தர முடிஞ்சதாய் பார்த்தாங்க. வணங்கற அளவுக்கு மனுஷன் அதை உயரத்துல வெச்சிருந்தான்னு சொன்னா அவன் பேசறது அதுக்குப் புரியாதா என்ன? ஆனா இப்போதைய கேள்வி அந்தப் பாம்புக்கும் அந்த நாகராஜுக்கும் இடையே இருக்கிற தொடர்பு என்னங்கறது தான். அவன் வளர்த்தின பாம்பாகவோ, வணங்கற பாம்பாகவோ இருந்திருந்தா நீங்க நினைக்கிற மாதிரி அவன் அதுகிட்டயே பேசியிருக்கலாம். அப்படிங்கற பட்சத்துல அவனே அதை பின்சீட்ல வெச்சிக் கொண்டுவந்திருக்கலாம். அப்படி இல்லை அவனுக்குத் தெரியாமயே பாம்பு பின்னாடி இருந்திருந்துச்சுன்னு சொன்னா பாம்புக்கடில ஒருத்தன் செத்துட்டான்னு லோக்கல் டிவில செய்தி வரும்...”

அந்தச் சாவுச் செய்தி வர வேண்டாமென்று நினைத்தபடியே அலமேலு சமையலறைக்குப் போனாள். அந்தப் பையனுக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்து ஆட்கள் பாதிக்கப்படுவார்கள். அன்பின் இழப்புகள் சரிக்கட்ட முடிந்த இழப்புகள் அல்ல...

பரந்தாமன் சொன்னார். “எதுக்கும் மாதவனோட நண்பர்கள் சரத், கல்யாண், ரஞ்சனி மூனுல ஒருத்தர்கிட்ட கேட்டுப்பார்த்தா உண்மை விளங்கும்...”

நாதமுனி சொன்னார். “அவங்க யாரும் உள்ளூர்ல இல்லையே. கோயமுத்தூர்ல அல்லவா இருக்காங்க. அதுலயும் அந்த கல்யாண் கிட்ட எல்லாம் யாரும் பழைய பழக்கத்துல போய் பேசவே முடியாதாம். அவன்  இப்ப பல கோடிகளுக்கு அதிபதின்னு கேள்விப்பட்டேன் ஓய். உம்ம ஆபிஸ்ல ஹெட்க்ளார்க்கா இருந்தாரே அழகேசன், அவர் இங்கே அவன் வீட்டுக்குப் பக்கத்துல தான் இருந்தார். இங்கே அவன் வாடகை வீட்டுல இருக்கறப்பசார் சார்னுஅவர் கிட்ட மரியாதை கொடுத்துப் பழகின பயல். ரெண்டு வருஷத்துக்கு முன்னால் அவர் அவனைக் கோயமுத்தூர்ல பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன்னாடி பாத்திருக்கார். தெரிஞ்ச பையனாச்சேன்னுசவுக்கியமாப்பான்னு கேட்டுட்டே கை குடுக்கப் போயிருக்கார். அவன் முகத்தை வெடுக்குன்னு திருப்பிகிட்டு கார் ஏறிப் போயிட்டானாம்.  விசாரிச்சா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸே அவனோடது தானாம். அழகேசன் நொந்து போயிட்டார். ஒரு கல்யாணத்துல எனக்குப் பேசக் கிடைச்சவர்சொத்து சேர்ந்தா மனுசன் இப்படியா மாறுவான்னு சொல்லி வருத்தப்பட்டார்...”

பரந்தாமனும் கல்யாணின் புகைப்படத்தை தொழிலதிபராகப் பல பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறார். பணம் வருகையில் மனிதர்கள் மாறுவது இயற்கை. மாறாமலிருந்தால் தான் ஆச்சரியம்... ஆனால் ஒன்று அவர் மகன் இன்று இருந்து பணக்காரனாகியிருந்தால் கண்டிப்பாய் மாறியிருக்க மாட்டான். அவன் மிக நல்லவன் ....

நாதமுனி கிளம்பினார். “ஏதாவது புது தகவல் கிடைச்சால் போன் பண்ணிச்  சொல்லும் ஓய்

நாதமுனி போன பிறகு பரந்தாமன் மனைவியிடம் சொன்னார். “வந்தவன் மாதவனோட நண்பனே அல்லன்னு நாதமுனி சந்தேகப்படறார். அவர் சந்தேகப் படற மாதிரி அந்த ஆல்பத்துல ஒரு ஃபோட்டோல கூட நாகராஜ் ஜாடைல யாருமில்லை

அலமேலு சொன்னாள். “எனக்கும் அவனைப் பார்த்திருக்கிற மாதிரி ஞாபகம் இல்லை. ஆனா நம்ம பிள்ளையே அனுப்பி வெச்சு இந்த நாளாப் பார்த்து அவன் வந்த மாதிரி இருக்கு. அதுவும் அவன் சாப்பிட்ட விதமும், சூப்பரா இருக்குன்னு சொன்ன விதமும் மாதவன் மாதிரியே இருந்துச்சு கவனிச்சீங்களா...”

பரந்தாமன் அதைக் கவனித்திருந்தார். ஆனால் நாதமுனி அவன் மாதவனின் நண்பனாக இருக்க வழியில்லை என்று சொன்னது அவருக்கு மனதில் நெருடலாகவே இருந்தது. அதைத் தெரிவித்த பிறகும் அலமேலு அவரளவு அதைப் பெரிதுபடுத்தாததையும் அவர் கவனித்தார். எல்லா சூழ்நிலைகளிலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ளும் ஒரு நல்ல பழக்கம் அவளிடமிருந்தது.

அவருக்குத் தெரிந்து அவளால் நல்ல விதத்தில் எடுத்துக் கொள்ள முடியாதது மகனின் மரணம் மட்டுமாகவே இருந்தது. அதுவும் ஒரு மாதம் தான். ஒரு மாதம் நடைப்பிணமாகவே வாழ்ந்த அவள் பிறகு சொல்ல ஆரம்பித்தாள். “விபத்துல கைகால் போயோ, தலையில அடிபட்டு மூளைல பிரச்சனை வந்தோ, கோமால விழுந்தோ அவன் கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்தானே. இப்பக் கஷ்டம் நமக்குத் தான்னாலும் நம்ம குழந்தை நம்ம கண்ணு முன்னாடி கஷ்டப்படலையே...”

அந்தக் கலை பரந்தாமனுக்கு வந்ததேயில்லை. அவள் அப்படிச் சொன்ன போது கூட அவருக்குத் துக்கம் தான் தொண்டையை அடைத்தது. இப்போதும் அவள் வாரம் ஒரு தடவையாவது அந்த நான்கு ஆல்பங்களையும் ஒரு முறை பார்த்து விடுவாள். பார்க்கும் போது கண்கலங்குவாள். ஆனாலும் ஆல்பத்தில் உள்ள புகைப்படங்களில் மகனைப் பார்த்து அவனை நேரடியாகப் பார்ப்பது போலவே பாவித்து பழைய நினைவுகளில் கண்ணீரோடு தங்கி ஆறுதல் அடையும் வழக்கம் அவளிடம் இருக்கிறது.

பரந்தாமனும் அலமேலுவும் உள்ளூர் செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். யாரும் பாம்பு கடித்து விபத்துக்குள்ளானதாகச் செய்தி இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து பரந்தாமனின் அலைபேசிக்கு வங்கியிலிருந்து ஏதோ குறுந்தகவல் வந்து சேர்ந்தது. என்ன என்று பார்த்தவர் திகைப்பின் உச்சத்துக்கே போனார். அவர் வங்கிக் கணக்கில் 13,45,690 ரூபாய் வரவாகி இருந்தது. சொன்னபடியே பணம் அனுப்பி இருக்கிறான் என்பதிலிருந்து ஆபத்தில்லாமல் போய்ச் சேர்ந்திருக்கிறான் என்று தெரிந்து சற்று நிம்மதியடைந்தார். ஆனால் அவன் அனுப்பியிருக்கிற தொகை அவருக்குத் திகைப்பாய் இருந்தது. 13,456-90க்குப் பதிலாய் தவறுதலாக நாகராஜ் இந்தத் தொகையை அனுப்பி விட்டிருப்பானோ?

தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலையிலிருந்து அவர் ஓய்வு பெற்ற போது கூட பிராவிடண்ட் ஃபண்ட், க்ராட்யூட்டி எல்லாம் சேர்ந்து வந்த பணத்தில் கடன்கள் எல்லாம் போக மிஞ்சியது நாலரை லட்சம் மட்டுமே. அதை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்திருந்தார். மிகவும் சிக்கனமாய் செலவு செய்தும் பென்ஷன் பணம் போதாமல் ஃபிக்சட் டெபாசிட்டிருந்தும் அவ்வப்போது எடுத்து செலவு செய்தது போக இப்போது இரண்டு லட்சம் தான் மீதியிருக்கிறது.  கையிருப்பு அத்தனை குறைவாக இருந்த போதும் இத்தனை பெரிய தொகை அவர் சிறிதும் எதிர்பாராத விதமாக அவர் கணக்கில் வந்திருப்பது அவருக்குப் படபடப்பை ஏற்படுத்தியது.

பணம் வந்தத் தகவலை அவர் அலமேலுவிடம் சொன்னார். அலமேலுவையும் அந்தப் பெரிய தொகை சந்தேகப்பட வைத்தது. “தவறுதலாய் தான் அனுப்பியிருக்கணும் பாவம். நல்ல பையன்.... அந்தப் பணத்தைச் செலவு செய்யாம அப்படியே வெச்சிருப்போம். அவன் வந்து கேட்டால் குடுத்துடுவோம். நல்ல வேளையா பாம்பு அவனை எதுவும் செஞ்சிடலஒருவேளை அவன் பேசின மாதிரித் தோணினது பாம்புகிட்டயே தானோன்னு சொன்னேன் பார்த்தீங்களா? அது சரின்னு தானே இப்ப நினைக்கத் தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?”
                           
பரந்தாமனுக்கு இப்போதும் அந்த யோசனையே அபத்தமாகத் தெரிந்தது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி இருக்கையில் பூனை, நாய் போல பாம்பையும் யாராவது வளர்த்துவார்களா என்ன அவன் சொன்னபடி அது கேட்பதற்கு? நாகராஜ் என்ற பெயரில் வந்து போனவன் பலத்த சந்தேகத்தைக் கிளப்பினான். அவர்கள் இருவராலும் அடையாளம் காண முடியாத அவன் வந்து சொன்ன கதை, பாபா விக்கிரகத்தைத் தேடிப் பார்ப்பதாகச் சொல்லி எதையோ தேடியது, போகும் போது பாம்போடு பேசியது, போனபின் இத்தனை பெரிய தொகையை அனுப்பியது எதுவுமே இயல்பாய் இல்லை. இத்தனைக்கும் பின்னால் அவன் தெரிவிக்காத வேறு எதாவது காரணமும், நோக்கமும் இருக்குமோ?


(தொடரும்)
என்.கணேசன்  

6 comments:

  1. அலமேலு அம்மாள் பரந்தாமன் தம்பதியரின் புத்திரசோகம் மனம் கலங்க வைக்கிறது. வந்தவன் நல்லவனாகவும் தெரிகிறான். ஆனால் எதையோ தேடி வந்தவனாகவும் தெரிகிறான். சிலர் நாகராஜ் மாதவனாகவும் இருக்கலாம் என்று போன வாரம் கமெண்ட் பண்ணியிருந்தார்கள். ஆனால் பெற்றவர்களுக்கு மகனை அடையாளம் தெரியாமல் போகுமா? அடுத்த திங்கள்கிழமைக்கு அல்லது புத்தக ரிலிஸுக்கு வெய்ட்டிங்

    ReplyDelete
    Replies
    1. yeah im accepting with your opinion. but enaku oru doubt, vanthavan ean kannadiya kaladdela. may be mathavan plastic surgery seithirunthalum kan kaaddik kodukkum endathaalaya?

      atha yosikka than may be vanthavan mathavano endu thoonuthu

      Delete
  2. Nagaraj has not come for Baba idol. That is sure. Then why has he come? What did he search in the suitcase. Why?

    ReplyDelete
  3. ஒருவேளை அவுங்க மகன் மாறு வேடத்தில் வந்திருக்கிறானா?
    இல்லை மகன் சொல்லி நாகராஜ் வந்திருக்கிறானா?

    ReplyDelete
  4. புத்தகம் எப்போது வெளியாகும் ஐயா?

    ReplyDelete