அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்காத அந்த மகாத்மா நியூயார்க் வங்கிக்கு நேரில் வந்து எப்படி பெரிய தொகையான ஆயிரம் டாலர்களை கர்னல் ஓல்காட்டின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்க முடியும் என்ற கேள்விக்கு கர்னல் ஓல்காட் விடை காணத் துடித்தார். அவர் ஆச்சரியத்துடன் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் அந்த அதிசய நிகழ்வைச் சொன்ன போது அம்மையார் அவரைப் போல் ஆச்சரியமடையவில்லை. அம்மையார் சொன்னார். “அந்தப் பணம் நமக்குத் தான் பெரியதே தவிர மகாத்மாக்களுக்குப் பெரிதல்ல. அவர்கள் ஏராளமான செல்வத்தையும், புதையல்களையும் கட்டிக் காத்து வருகிறார்கள். அதிலிருந்து அவர்கள் பொது நன்மைக்காகத் தயக்கம் இல்லாமல் செலவு செய்வார்கள்”
மகாத்மாக்களில் எல்லோருமே உயிருடன் இருப்பவர்கள் அல்ல என்பதையும், சிலர் அவ்வப்போது உருவம் தரித்து வந்தாலும் வேறு உலகில் இருப்பவர்கள் என்பதையும் முன்பே கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மூலம் அறிந்திருந்தார். ஆனால் இப்படி ஏராளமான செல்வமும், புதையல்களும் கூட அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற தகவல் அவருக்குப் பிரமிப்பாகவும், புதியதாகவும் இருந்தது.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவருக்கு மேலும் விளக்கிச் சொன்னார். “செல்வத்தைச் சூழ்ந்தும் அதன் கர்மா இருக்கிறது. நல்ல கர்மாக்களால் ஈட்டப்பட்ட செல்வத்தை மட்டுமே நன்மையான செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். அந்த வகைச் செல்வங்களை மகாத்மாக்கள் தங்களிடம் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அந்தச் செல்வத்தைத் தங்களுடைய தனிப்பட்ட செலவினங்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதில்லை. உலக நன்மைக்கு பயன்படக்கூடிய விஷயங்களுக்கு மட்டும் அந்தச் செல்வத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதே போல சில செல்வங்கள் பலரை வருத்தியும், ஏமாற்றியும், நியாயமற்ற முறைகளில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடும். அந்தச் செல்வத்தை அதன் தீய கர்மா சூழ்ந்திருப்பதால் அந்தச் செல்வத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு மனம் வராது. சொல்லப்போனால் அந்தக் கர்மா அவர்களை நன்மைக்குச் செலவு செய்ய அனுமதிக்காது”.
ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் இந்த விளக்கம் வெறும் தத்துவ விளக்கம் அல்ல என்பதை செல்வத்தின் செயல்பாடுகளை உற்றுக் கவனிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். சிலர் தங்கள் வாழ்நாளில் செலவு செய்ய முடியாத அளவு செல்வத்தைச் சேர்த்திருப்பார்கள். அவர்களுடைய தலைமுறைகளுக்கும் தேவையான அளவு செல்வத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால் அந்தச் செல்வத்தில் ஒரு சதவீதம் கூட தர்மத்திற்குப் பயன்படுத்த அவர்களால் முடியாது. என்ன கொண்டு போகப்போகிறோம் என்று அவர்கள் வேதாந்தம் பேசக் கூடும். ஆனால் நற்காரியங்களுக்குச் செலவு செய்யும் சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அதைச் செய்யாமல் நழுவி விடுவார்கள். அதன் காரணம் அந்தச் செல்வத்தைச் சூழ்ந்திருக்கும் கர்மாவின் சேர்க்கையாகவே இருக்கும்.
இந்தியாவில் மும்பையிலிருந்து வடக்கு நோக்கிப் பயணித்த அனுபவங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ‘இந்துஸ்தானின் குகைகளும், காடுகளும்” என்ற தலைப்பில் ரஷிய மொழியில் எழுதியுள்ளார். அந்தப் பயணத்தின் போது அவருடன் கர்னல் ஓல்காட்டும் இருந்திருக்கிறார். பயணத்தைத் துவங்குகையில் அவர்கள் இருவரிடமும் அதிகமாய் பணம் இல்லை என்றாலும் வாகனச் செலவுக்கும், உணவுக்கும் தேவையான பணம் அவர்களிடம் ஏதாவது ஒரு வழியில் இருந்து கொண்டே இருந்தது என்பதை கர்னல் ஓல்காட் கவனித்து வந்தார்.
பின் அவர்கள் இருவரும் ஆன்மிக, சமூக சேவைகளைத் தொடர்ந்த காலங்களிலும் அவர்களுடைய பணப்பெட்டியில் பணம் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யும் அளவு என்றுமே இருந்ததில்லை என்று சொல்கிறார். சில நேரங்களில் பணம் குறைந்து கொண்டே வந்து கிட்டத்தட்டக் காலி ஆகி விடும் நிலைமை வருவதையும் அவர் கண்டுள்ளார். ஆனால் மிக முக்கியமான அவசியச் செலவுகள் வரும் போது அவர்கள் பணப்பெட்டி தானாக நிரம்பி விடுவதும் ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது என்று கர்னல் ஓல்காட் கூறுகிறார். அந்த வகையில் அற்புதம் நடக்க அவர்கள் பின்பற்றும் மகாத்மாக்கள் தான் காரணமாக இருக்கக்கூடும் என்பது அவருடைய யூகமாக இருந்தது.
அது குறித்து அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் பேசிக் கொண்டிருந்த போது, நடக்கும் நிகழ்வுகளில் அவரளவுக்கு அம்மையாருக்கு ஆச்சரியமோ, குழப்பமோ இருக்கவில்லை. எது எப்போது தேவை, எவ்வளவு அவசியம் என்று தீர்மானிக்கும் சக்தி தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளை அனுசரித்து இருப்பதில்லை என்பதை விளக்க அவர் சில வருடங்களுக்கு முன்பு தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை கர்னல் ஓல்காட்டிடம் தெரிவித்தார்.
அது
1873 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு. அப்போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பாரீசில் இருந்தார். அவருக்கு அப்போது கடுமையான பணச்சிக்கல் இருந்தது. எப்படிச் சமாளிப்பது என்று அறியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்த போது ஒரு மகாத்மா அவரிடம் வந்து 23000 ஃப்ராங்குகள் (பிரான்சின் பணம்) தந்து அதைப் பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார். அம்மையார் அப்படியே அதைச் செலவு செய்யாமல் வைத்திருந்தார். ஒருநாள் உடனடியாகப் பணத்தை எடுத்துக் கொண்டு நியூயார்க்கிற்கு விமானம் மூலம் போய்ச் சேரும்படி மகாத்மாவின் உத்தரவு வந்தது. அப்படியுயே அம்மையார் சென்றார். அங்கு சென்று சேர்ந்தவுடன் அங்குள்ள பெரிய நகரம் ஒன்றுக்குப் போகும்படி அடுத்த கட்டளை வந்தது. அம்மையார் அப்படியே அங்கு சென்றும் சேர்ந்தார். பின் ஒரு டாக்ஸி பிடித்து உடனே ஒரு குறிப்பிட்ட விலாசத்திற்குச் சென்று அங்கு ஒருவரிடம் அந்தப் பணத்தைத் தந்து விட்டு வர அம்மையார் பணிக்கப்பட்டார். பணம் யாரால் தரப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் அந்த மகாத்மா சொல்லி இருந்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கே பணத்தேவை இருக்கையில் தன்னிடமே அடுத்தவருக்குக் கொண்டு போய்க் கொடுக்க இந்தப் பணத்தை இந்த மகாத்மா தருகிறாரே என்று மனம் நொந்தாலும் சொன்னபடியே அந்த விலாசத்துக்குச் சென்றார்.
உண்மையில் அந்த விலாசத்தில் இருந்த நபர் மிக நல்ல நேர்மையான மனிதர். அவர் ஒரு வழிப்பறியில் சிறிது காலம் முன்பு தான் சரியாக 23000 ஃப்ராங்குகள் பணத்தை இழந்திருந்தார். அந்தப் பணத்தை ஈடுகட்டப் பல வகைகளில் போராடி முடியாமல் தோற்றுக் கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துத் தன் குடும்பத்திற்கு இறுதியாக ஒரு கடிதம் எழுதி முடித்த போது தான் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அங்கே சென்றிருக்கிறார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது அந்த நபரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்த நபர் திகைத்து நிற்கையிலேயே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கே பணத்தேவை இருக்கையில் அவரை அந்தப் பணத்தில் ஒரு ஃபிராங் கூடச் செலவு செய்வதை அந்த மகாத்மா அனுமதிக்கவில்லை. தனிமனிதத் தேவை அங்கே அங்கீகரிக்கப்படவில்லை. பணத்தை இழந்த மனிதன் சாகாமல் வாழ வேண்டி இருப்பதற்கான காரணங்களும், அதனால் ஆக வேண்டியிருக்கும் செயல்களும் தான் அந்த மகாத்மாவின் செய்கைக்குக் காரணமாயிருந்திருக்கும் என்று அம்மையார் சொன்னார். மகாத்மாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர மற்ற யாரையும் நேரில் சென்று சந்திப்பதில்லை என்பது அந்த மகாத்மாவே அங்கு சென்று அந்த ஆளிடம் பணம் தராததற்குக் காரணமாய் இருக்கலாம்.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆளிற்குப் பணம் தந்து விட்டுத் திரும்பவும் வந்த பிறகு அந்த ஆளின் பெயர், விலாசம் எல்லாம் அவருக்கு மறந்து போய் விட்டதாகவும், எத்தனை நினைவுபடுத்திக் கொள்ள முயன்றும் அது நினைவுக்கு வரவில்லை என்றும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறினார். மகாத்மாக்களின் வேலை முடிந்த பிறகு அது குறித்த தனிப்பட்ட விவரங்கள் வேலை செய்தவர்களின் நினைவில் இருப்பது அவசியமில்லை என்று கூட அவர்கள் நினைத்திருக்கலாம் என்று கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.
தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் அந்த மனிதரிடம் அந்தப் பணம் சென்று சேர்ந்தது அந்த மனிதரின் நல்ல கர்மா வரவழைத்ததாக இருக்கலாம் அல்லது அம்மையார் சொன்னது போல இனி நிகழப் போகும் பல நல்ல கர்மாக்களுக்கு அந்த மனிதர் உயிரோடிருப்பது அவசியம் என்று அந்த மகாத்மா முடிவெடுத்திருக்கலாம். ஆழமாக யோசித்தால், செல்வம் நன்மையாகவோ, தீமையாகவோ அவரவர் கர்மாவின் படியே சென்று ஒருவரைக் காக்கவோ அழிக்கவோ செய்கிறது என்று தோன்றுகிறதல்லவா?
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 6.8.2019
செல்வத்தை கர்மா சூழ்ந்துள்ளதையும்... அந்த கர்மாவுக்கு ஏற்றபடி தான் அந்த செல்வத்தின் பயன்பாடும் இருக்கும் என்று அம்மையார் சொன்னது முற்றிலும் உண்மை...
ReplyDeleteவணக்கம் சார் மிக்க நன்றி அருமையான பதிவு இன்று தனிமனித பண தேவைகள் அதிகமாக இருக்கிறது நீங்கள் குறிப்பிட்டது போல மகாத்மாக்கள் நல்ல மனிதர்களின் பணத்தை வைக்கலை பூர்த்தி செய்வது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது மற்றும் இந்த மகாத்மாக்கள் தேர்ந்தெடுக்க பட்டவர்களின் கண்களில் மட்டும் தென்படுவது மிகவும் அதிசயமாக தோன்றுகிறது இந்த மகாத்மா சிலை கண்டறிவது எப்படி அவர்களும் அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது இது தெரிந்தால் நன்றாக இருக்கும் எப்படியும் அவர்கள் தனிமனித ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய போவதில்லை ஆனால் இந்த வாழ்க்கையும் வாழ்க்கையின் நோக்கத்தை நாம் அறிந்து கொள்ள முடியும் எது எப்படியோ இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDelete