Thursday, September 24, 2020

இல்லுமினாட்டி 68


விஸ்வத்தின் கூட்டாளி பற்றிப் புதிய தகவல் ஏதாவது கண்டுபிடித்திருக்கிறாயா என்று எர்னெஸ்டோ கேட்டதற்கு இம்மானுவல் நேரடியாகப் பதில் எதையும் சொல்லாமல் அவன் கொண்டு வந்திருந்த அந்த ரகசிய ஃபைலை அவரிடம் நீட்டினான். அவருக்கு அத்தனையும் படித்துப் புரிந்து கொள்ள நேரமும் இருக்கவில்லை, ஆர்வமும் இருக்கவில்லை. அவன் விஸ்வேஸ்வரய்யாவிடம் சில தகவல்களைக் கேட்டுச் சொல்லும்படி அவரிடம் சொல்லியிருந்ததற்குக் கூட அவர் விஸ்வேஸ்வரய்யாவிடம் பேசி அவர் கண்டுபிடிக்கும் கருத்துக்களை இம்மானுவலுக்கே அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார்.

அதனால் அதைப் படிக்காமல் நீயே சொல் என்று அவர் வாய் விட்டுச் சொல்வதற்கு முன் அவன் விவரமாக ஃபைலைத் திறந்து அந்தப் பக்கங்களில் அவன் அடிக்கோடிட்ட இடங்களை மட்டும் படிக்கும்படி சொல்லி முதல் பக்கத்தைப் பிரித்து அவரிடம் அந்த இடத்தில் விரலையும் வைத்துக் காட்டினான். எர்னெஸ்டோவால் புன்னகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புன்னகைத்தபடியே அந்தப் பக்கத்திலிருந்து அவன் கோடிட்ட இடங்களை மட்டும் படிக்க ஆரம்பித்தார். சுமார் முக்கால் மணி நேரம் படித்து விட்டுத் திகைப்புடன் அவனை அவர் பார்த்தார். விஸ்வத்தின் கூட்டாளி மனிதன் அல்ல என்ற அவன் கருத்தை ஆமோதிக்கிறாற் போல நிறைய தகவல்களைச் சேகரித்திருந்த இம்மானுவல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.  

எர்னெஸ்டோ சொன்னார். “ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் ஆரம்பத்தில் இல்லுமினாட்டிக்கு அழிவு வரும் என்பதை நம்பவில்லை. காரணம் நாம் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறோம். நமக்கும் மீறி எதுவும் நடக்க முடியும் என்று நம்ப எனக்குக் கஷ்டமாய் இருந்தது. இப்போது பிரச்னைகளும் சரி, வரும் ஆள்களும் சரி எந்தெந்த மாதிரி இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆரகிள் சொன்னதன் அர்த்தம் விளங்க ஆரம்பிக்கிறது. எதுவும் நம் சக்தியாலோ, அதிகாரத்தாலோ சரி செய்ய முடிந்ததாக இல்லை. அதனால் தான் சிக்கலை உணர்கிறோம். விஸ்வமே பெருங்குழப்பத்தைத் தருகிறான் என்றால் இந்த மனிதனல்லாத கூட்டாளி இன்னும் அவனைக் காட்டிலும் பத்து மடங்கு குழப்பம் தருபவனாக இருக்கிறான்…. எனக்கு ஒரு சந்தேகம். விஸ்வம் இன்னேரம் அந்தக் கூட்டாளி பற்றித் தெளிவாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பானா? அந்தக் கூட்டாளி தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பானா?”

தெரியவில்லை...”

எனக்கு விஸ்வத்தின் சக்திகளே சரியாகப் பிடிபடவில்லை. அதோடு இந்தக் கூட்டாளி சக்திகளும் சேர்ந்து குழப்புகின்றன.

இம்மானுவல் சொன்னான். “நான் ஜான் ஸ்மித்திடம் ஒரு நாள் முழுவதும் பேசி விஸ்வத்தின் சக்திகள் பற்றி விவாதித்திருக்கிறேன். அந்தச் சக்திகளின் பயன்பாடு பழைய உடலில் இருந்ததற்கும், டேனியல் உடலில் வந்த பின் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும், அவன் தன் சக்திகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறான், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை எல்லாம் அவருடன் பேசித் தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன்....”

எர்னெஸ்டோ நிமிர்ந்து உட்கார்ந்தார். “அப்படியானால் ஃபைல் எதையும் நீட்டாமல் எனக்குப் புரிகிற மாதிரி நீயே சொல் பார்ப்போம்

இம்மானுவல் புன்னகைத்து விட்டுச் சொன்னான். ”இதை நான் புரிந்து கொண்டபடி சொல்கிறேன். இந்த அபூர்வ சக்திகளை அவன் கற்றுக் கொண்டு அதில் அவன் ஆளுமை அடைந்தபின் அவை ஆழ்மனதிலும் அவன் மூளையின் பகுதிகளிலும் ப்ரோகிராம்களாக மாறித் தங்கி விடும். அவன் எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவன் பயன்படுத்துதற்கு நரம்பு மண்டலத்தின் சக்தி தேவைப்படுகின்றது. அந்த நரம்பு மண்டலச் சக்தியைக் குவித்தே அவன் அந்த அபூர்வ சக்திகளைப் பிரயோகப்படுத்த முடியும். இது எந்த உடலில் இருந்தாலும் ஒரே விதி தான். விஸ்வத்தின் பழைய உடலில் அவனுடைய உயர்வான பழக்க வழக்கங்களால் அவன் நரம்பு மண்டல சக்தி 100 சதவீதம் இருந்தது. அப்போதும் அவன் அபூர்வ சக்திகளைப் பிரயோகப்படுத்திய பின் அவன் நரம்பு மண்டலச் சக்தி குறையும். அவை குறைவது பிரயோகப்படுத்தும் அபூர்வ சக்திகளுக்குத் தேவையான அளவு இருக்கும். சில அபூர்வ சக்திகள் குறைந்த அளவு நரம்பு மண்டலச் சக்தியைத் தான் எடுத்துக் கொள்ளும். சில அபூர்வ சக்திகள் நிறைய நரம்பு மண்டலச் சக்தியை எடுத்துக் கொள்ளும். அப்படிக் குறையும் நரம்பு மண்டலச் சக்தியை விஸ்வம் பழையபடி பயிற்சிகள் செய்து நிறைவாக அவ்வப்போது வைத்துக் கொள்வான். அது விஸ்வத்தின் பழைய உடலில் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டிருந்தது.”

இப்போது கற்ற அபூர்வ சக்திகளை விஸ்வம் பழைய உடம்பில் இருந்து புதிய உடம்பின் மூளையில் ப்ரோகிராம்களாக டவுன்லோடு செய்து ஏற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் அபூர்வசக்தி ப்ரோகிராம்களை டவுன்லோடு செய்த மாதிரி நரம்பு மண்டல சக்தியை யாரும் டவுன்லோடு செய்து கொள்ள முடியாது. அது ஒவ்வொரு உடலோடு இணைக்கப்பட்டிருக்கும் விஷயம். இப்போது விஸ்வம் சந்திக்கும் பிரச்சினை அந்த நரம்பு மண்டல சக்தி தான். போதையில் உடம்பு மிக மோசமாக இழப்பது நரம்பு மண்டல சக்தியைத் தான். அந்த மாதிரி பலவீனமான உடம்பில் வந்து சேர்ந்திருக்கும் விஸ்வம் அந்த நரம்பு மண்டல சக்தியை அதிகரிக்கும் பயிற்சியில் முழுமூச்சோடு இறங்கியிருக்கிறான். அவனைத் தவிர வேறு யாராக இருந்தாலும் அந்த வேலையை அந்த உடம்பில் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. போதை உடம்பு கண்டிப்பாக அந்த முயற்சிகளை, கட்டுப்பாட்டை எல்லாம் விரும்பாது. சீரழிந்து போயிருக்கும் அந்த உடல் எல்லா முயற்சிகளையும் வெறுத்துத் தகராறு செய்யும். உடம்பு வலிக்கும். என்னென்னவோ வழியில் எல்லா உறுப்புகளும் தகராறு செய்யும். மறுபடி போதையையே எதிர்பார்க்கும். விரும்பும். ஆனால் மன உறுதிக்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர் போன விஸ்வம் அதை எல்லாம் எதிர்த்துப் போராடி அந்த நரம்பு மண்டல சக்தியை இப்போது வளர்த்துக் கொண்டிருப்பான். மற்றவர்களாக இருந்தால் கண்டிப்பாக உடம்பு தாக்குப்பிடிக்க மருந்துகள் சாப்பிட்டுத் தான் தாக்குப்பிடித்திருக்க முடியும். அதனால் நாங்கள் அது போன்ற மருந்துகளை வாங்கும் ஆட்கள் பற்றிய விவரங்கள் தரும்படி கூட எல்லா மருந்துக் கடைகளுக்கும் தெரிவித்திருந்தோம். ஆனால் விஸ்வம் அந்த மருந்துகளை எல்லாம் வாங்கவில்லை...”

இப்போது விஸ்வம் எந்த தன் அபூர்வ சக்தியைப் பயன்படுத்தினாலும் அதில் நரம்பு மண்டல சக்தியை அதற்குத் தகுந்தாற்போல் இழக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே மிக பலவீனமாக இருந்து அவன் சிறிது சிறிதாக சேமித்து வளர்த்துக் கொண்டு வரும் நரம்பு மண்டல சக்தியை, அனாவசியமாக எந்த அபூர்வ சக்தியைப் பிரயோகித்தும் அவன் குறைத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. ஜான் ஸ்மித் அவன் ஓரளவு நன்றாக நரம்பு மண்டல சக்தியை வளர்த்துக் கொண்டு விட குறைந்த பட்சம் ஆறுமாதங்களாவது தேவைப்படும் என்கிறார். அது வரை அவன் நரம்பு மண்டல சக்தியை விரயம் ஆக்காமல் கவனமாகச் சேமித்து வருவான் என்று எதிர்பார்க்கிறார். அது வரை அதிமுக்கியம் என்று அவன் நினைத்தால் ஒழிய அவன்  முன்பு போல் நினைத்தவுடன் எந்த அபூர்வ சக்தியையும் அனாவசியமாக உடனே உபயோகிக்க மாட்டான்...”

எர்னெஸ்டோவுக்கு இப்போது தான் விஸ்வத்திடம் இருக்கும் அபூர்வ சக்திகள், அதைப் பிரயோகிப்பதில் இருக்கும் நரம்பு மண்டல சக்தியின் பங்கு புரிந்ததுஇந்த நேரத்தில் அமானுஷ்யன் நினைவுக்கு வர அவர் கேட்டார். “அந்த அமானுஷ்யனின் நரம்பு மண்டல சக்தி எல்லாம் எந்த அளவில் இருக்கும்.”

இம்மானுவல் சொன்னான். “அவன் அவசரப்பட்டோ, பதட்டப்பட்டோ, பலவீனமாகியோ யாரும் பார்த்ததேயில்லை என்று சொல்கிறார்கள். எந்தச் சமயத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் அவன் அமைதியுடன் தயார்நிலையில் தான் இருப்பானாம்...”

எர்னெஸ்டோ பெருமூச்சு விட்டார். “என்ன மனிதர்களிவர்கள்?”


று நாள் மாலை கமலக்கண்ணன் வீட்டுக்கு வந்தவுடன் பத்மாவதியை அழைத்துச் சொன்னார். “நான் நாமக்கல்லில் இருக்கிற ஜோதிடர் நாராயணசாமி கிட்ட போன் பண்ணிப் பேசினேன். நம்ம பசங்க கல்யாணத்துக்கு சீக்கிரம் ரெண்டு முகூர்த்தம் அல்லது ஒரே முகூர்த்தமானாலும் பரவாயில்லை, பார்த்துச் சொல்லுங்கள்னேன்...”

மழை தான் வரும். மனுஷர் முதல் தடவையா சொன்னவுடனே போய் ஜோசியர் கிட்ட பேசியிருக்கார்என்று பத்மாவதி நினைத்துக் கொண்டாள். அந்த ஜோதிடரைப் பற்றிப் பல முறை கமலக்கண்ணன் சொல்லிக் கேட்டிருக்கிறாள். சமீப காலங்களில் அவர் எதையும் அந்த ஜோதிடரைக் கேட்டு தான் செய்கிறார்...

பத்மாவதி ஆவலுடன் கேட்டாள். “என்ன சொன்னார்?”

பெரியவன் ஜாதகத்தில் எதோ தோஷம் இருக்காம். ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் செய்தால் அவனுக்கோ அல்லது அந்தப் பொண்ணுக்கோ ஏதாவது கண்டம் வர வாய்ப்பு இருக்காம். அதனால் ரெண்டு மாசம் வரைக்கும் அது சம்பந்தமான பேச்சு வார்த்தை கூட வேண்டாம் என்கிறார்

பத்மாவதி அதிர்ந்து போனாள். கண்களை மூடிக் கடவுளை வணங்கி இரண்டு கன்னங்களிலும் தட்டிக் கொண்டாள். “ஐயோ. அப்படின்னா இந்த விஷப்பரிட்சை வேண்டாம். இத்தனை காலம் காத்தாச்சு. ரெண்டு மாசம் காக்கிறது பெரிய விஷயமா? என்ன சொல்றீங்க?”

கமலக்கண்ணன் தலையசைத்தார். பத்மாவதி உடனே போய் இரண்டு மகன்களிடமும் தகவலைச் சொன்னாள். பின் உதயிடம் சொன்னாள். “இனி இந்த விஷயத்தை எல்லாம் அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிகிட்டு இருக்காதே. ஆரம்பத்துலயே என்ன அபசகுனமா இந்த மாதிரி வார்த்தை எல்லாம் கேட்கிறோமேன்னு அவளுக்குத் தோணும். நாமளே அவசரமில்லாமல் இருக்கிற மாதிரி இருந்துக்குவோம்.”

உதய் தலையசைத்தான். பத்மாவதி கேட்டாள். “ராத்திரி சாப்பாட்டுக்கு அந்தப் பொண்ணு எத்தனை மணிக்கு வர்றா?”

ஏழு மணிக்கு வர்றதா சொல்லியிருக்கா

சிந்துவின் வரவுக்காக அவர்கள் எல்லோருமே வேறு வேறு மனநிலையில் காத்திருந்தார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்


4 comments:

  1. Very interesting and thrilling. Waiting for next Thursday.

    ReplyDelete
  2. Detailed information about Nerves system roles in Human body.

    ReplyDelete
  3. Super epi Sir. Pls include a like button.

    ReplyDelete
  4. அபூர்வ சக்திகளின் பிரயோகத்தில் நரம்பு மண்டலத்தின் பங்கு இவ்வளவு இருக்கா?

    சிந்துவின் வரவுக்காக காத்திருக்கிறோம்...

    ReplyDelete