தில்லர்கான் சிவாஜியின் படை வருவதற்காகக் காத்து சலித்தான்.
பொறுமையிழந்து இவன் கிளம்பி வரட்டும் என்பதற்காகவே சிவாஜி ஆமை வேகத்தில் வருகிறானோ
என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அந்த நேரமாகப் பார்த்து அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த
ஒற்றன் வந்தான்.
தில்லர்கான்
பரபரப்புடன் கேட்டான். “என்ன செய்தி ஒற்றனே?”
“சிவாஜியின்
படை வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டிருக்கிறது படைத்தலைவரே”
தில்லர்கான்
திகைப்புடன் பார்த்தான். “என்ன சொல்கிறாய் ஒற்றனே?
”ஆம்
தலைவரே! திடீரென்று சிவாஜி மனதை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது”
தில்லர்கானுக்குத்
தலை சுற்றுவது போல் இருந்தது. மனதை மாற்றிக் கொண்டானா, இல்லை திட்டமே அது தானா? யோசிக்க
யோசிக்க இதில் பெரிய சூழ்ச்சி இருப்பது போலத் தெரிந்தது. உடனே தில்லர்கான் வேகமாகப்
படையை சாலேர் கோட்டைக்குத் திருப்பிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.
பகதூர்கானிடம் ஒற்றன் வந்து சொன்னான். ”தலைவரே. ப்ரதாப்ராவ்
குசாரின் படையும், மோரோபந்த் படையும் சேர்ந்து ஆக்ரோஷமாய் நம் படையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.
தலைவர் இக்லஸ்கான் திறமையாகத் தான் போராடுகிறார் என்றாலும் தாக்குப் பிடிக்க அவரால்
முடியவில்லை. அங்கு மராட்டியர்கள் கை தான் ஓங்கிக் கொண்டிருக்கிறது….”
பகதூர்கானுக்கு
இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. “மோரோபந்த் படை அந்த இடத்திற்கு நெருங்குவதற்குள்
நம் படை ப்ரதாப்ராவ் குசார் படையை வென்றிருக்க வேண்டுமே. என்ன ஆயிற்று?”
ஒற்றன்
நடந்ததைச் சொன்னான். பகதூர்கான் திகைத்தான். ’இப்போது தில்லர்கான் இங்கே இருந்திருந்தால்
அவனைப் படையோடு உதவிக்கு அனுப்பி இருக்கலாம். இக்லஸ்கானுக்கு உதவியாக இருந்திருக்கும்.
நாமே போகலாம் என்றால் சாலேர் கோட்டை முற்றுகையை ரத்து செய்து விட்டுத்தான் போக வேண்டியிருக்கும்….
என்ன செய்வது என்று பகதூர்கான் யோசித்தான்.
நேரம்
சென்றது. பகதூர்கான் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவனுடைய வீரன் ஒருவன் பரபரப்புடன்
ஓடி வந்தான். “படைத்தலைவரே நமது வழக்கமான சுற்றுப் பார்வையின் போது சாலேர் கோட்டையின்
பின் புறத்தில் ஓரிடத்தில் உணவுப் பொருட்கள் சிந்தியிருப்பதைப் பார்த்தோம்….”
பகதூர்கான்
வேகமாக அந்த இடம் நோக்கி விரைந்தான். அங்கு சிந்தி இருந்த உணவுப் பொருட்களைப் பார்த்தவுடன்
அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பது மெள்ள விளங்கியது. மேலே ஏற்றப்பட்டிருந்த உணவு
மூட்டைகளில் ஏதோ ஒன்று முடிச்சவிழ்ந்திருக்க வேண்டும். நேற்றிரவு இது நடந்திருக்க வேண்டும்.
பகதூர்கான் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஒருங்கே உணர்ந்தான். உணவுப் பொருட்கள் கோட்டைக்குள்
போய் விட்ட பின் இங்கு இருந்து என்ன பயன்? தன்னிறைவு பெற்ற கோட்டை பல மாதங்கள் சிரமமில்லாமல்
தாக்குப் பிடிக்குமே!
மனத்தாங்கலோடு
பகதூர்கான் அண்ணாந்து கோட்டையைப் பார்த்து விட்டு யோசனையோடு தன் முகாம் நோக்கி நடக்க
ஆரம்பித்தான்.
சிறிது
நேரத்தில் ஒரு ஒற்றன் வந்து சொன்னான். “படைத்தலவர் தில்லர்கான் படையுடன் திரும்பி வந்து
கொண்டிருக்கிறார் தலைவரே….”
பகதூர்கான்
பரபரப்புடன் கேட்டான். “சிவாஜி என்ன ஆனான்?”
ஒற்றன்
சொன்னான். “சிவாஜி போருக்கு வரவில்லை தலைவரே. வெறும் 2000 குதிரைவீரர்கள் படையை மட்டும்
அவர் முன்னால் அனுப்பினார். அதை நம் தலைவர் தில்லர்கான் வென்று விட்டார். சிவாஜியும்
வருவார் என்று நம் தலைவர் காத்திருந்தார். ஆனால் முன்னேறி வராமல் சிவாஜி திரும்பிப்
போய் விட்டார்….”
பகதூர்கான்
திகைப்பின் உச்சத்துக்கே போனான். சற்று நேரத்தில் அடுத்த ஒற்றன் அவனிடம் வந்து சொன்னான்.
“நம் படை மராட்டியப் படையுடன் போரிட்டதில் தோல்வியடைந்து விட்டது தலைவரே. நம் படையினர்
ஏராளமானோர் வீரமரணம் அடைந்து விட்டார்கள். மீதமுள்ளோரில் தலைவர் இக்லஸ்கான் உட்பட பலரும்
படுகாயமடைந்து விட்டதால் கடைசியில் நம் படை சரணடைந்து விட்டது”
பகதூர்கான்
அதிர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டான். என்ன நடந்திருக்கிறது என்று புரிய அவனுக்குச்
சிறிதுநேரம் தேவைப்பட்டது. அவனுடைய அருமையான திட்டத்திற்கு எதிராக சிவாஜி எளிமையாகவே
தந்திரத்துடன் செயல்பட்ட விதம் அவனைப் பிரமிக்க வைத்தது. தில்லர்கானை சாலேர் கோட்டையிலிருந்து
கிளப்பி தன்னைப் போரில் சந்திக்க வரவைத்த விதத்தில் சிவாஜி அனாயாசமாக இரண்டு பெரிய
காரியங்களைச் சாதித்திருக்கிறான். ஒன்று, ரகசியமாக உணவுப் பொருட்களை சாலேர் கோட்டையில்
ஏற்றி விட்டது. இன்னொன்று தில்லர் கானின் படை இக்லஸ்கான் படையின் உதவிக்குப் போக விடாமல்
தடுத்தது. அதே போல் ப்ரதாப்ராவ் குசாரைத் தாமதப்படுத்தி மோரோபந்த் படை வரும் வரை காக்க
வைத்துப் பின் போரிட வைத்ததும் அருமையான யுக்தி. மொத்தத்தில் பகதூர்கானின் மும்முனைத்
திட்டமும் வீணாகிப் போனது….
முகலாயர்களுக்கு எதிரான தக்காண வெற்றிகளில் தலையாய வெற்றியாய்
சிவாஜிக்கு அமைந்த இந்த வெற்றிக்கதை ஔரங்கசீப்பின் காதுகளை எட்டியது. கணக்குப் போடுவதில்
வல்லவனான ஔரங்கசீப் இந்தக் கணக்கில் கிடைத்த விடையைப் பார்த்து நொந்து போனான். பகதூர்கான்,
தில்லர்கான், இக்லஸ்கான் என்ற மூன்று மிகப்பெரிய படைத்தலைவர்கள் மிக வலிமையான முகலாயப்படையுடன்
போய் சிவாஜியிடம் கேவலமாய் தோற்றிருக்கிறார்கள். இழந்தது 125 யானைகள், 700 ஒட்டகங்கள்,
6000 குதிரைகள், பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள்,
எல்லாவற்றிற்கும் மேலாக முகலாயர்களின் மானம்…..
ஒற்றர் தலைவன் அடுத்துச் சொன்ன தகவல்கள் வெந்த புண்ணில் வேலைப்
பாய்ச்சுவதாக இருந்தன. “….இக்லஸ்கானுக்கும், வேறு படைத்தலைவர்களுக்கும் முதலுதவி செய்து
அவர்களை சிவாஜி அனுப்பி விட்டான் சக்கரவர்த்தி. நம் மற்ற வீரர்களுக்கும் சிகிச்சைகள்
பாரபட்சம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. குணமானவர்களைச் செல்லவும் அனுமதித்திருக்கிறான்.
அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறான். போரில் வெற்றியைத் தேடித்தந்த சிவாஜியின்
வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்து கௌரவித்தும் இருப்பதைக் கண்கூடாகப் பார்த்த
நம் வீரர்கள் பலர் சிவாஜி தங்களுக்குக் காட்டிய இந்தப் பெருந்தன்மையையும், தன் வீரர்களுக்கு
சிவாஜி காட்டிய தாராளத்தையும் மெச்சி அவன் படையிலேயே சேர்ந்து விட்டிருக்கிறார்கள்
சக்கரவர்த்தி…..”
ஔரங்கசீப் முணுமுணுத்தான். “தந்திரக்காரன்…. தந்திரக்காரன்….”
ஆனாலும் மனதின் ஆழத்தில் சிவாஜியின் போற்ற வேண்டிய உயர்குணங்களை ஔரங்கசீப்பால் மறுக்க
முடியவில்லை. இது வரை சிவாஜி போரின் முடிவிலும் சரி, மற்ற சமயங்களிலும் சரி, பெண்களை
மரியாதைக்குறைவாகக் கூட நடத்தியதில்லை. எந்த மத வழிபாட்டுத்தலங்களையும் தாக்கியதில்லை,
எந்த மதப் புனித நூலையும் அவமதித்ததில்லை. இதை எத்தனையோ பேர் ஔரங்கசீப்பிடம் வியப்புடன்
சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதிரியின் நற்குணங்களை
வெளிப்படையாகப் பாராட்டவோ, ஒத்துக் கொள்ளவோ அவனால் முடிந்ததில்லை.
இப்போது சிவாஜி தக்காணத்தில் பீஜாப்பூர் கோல்கொண்டா சுல்தான்களை
விட ஒரு படி மேலான சக்தியாக உருவெடுத்திருக்கிறான என்ற நிலையும் ஔரங்கசீப்புக்கு ஜீரணிக்க
முடியாததாகவே இருந்தது. சாலேர் கோட்டையை விட்டுப் பகதூர்கான் ஔரங்காபாத் போய் விட்டான்.
இக்ல்ஸ்கான் சிகிச்சை பெற்று வருகிறான். தில்லர்கானும் ஒதுங்கி நிற்கிறான். யாருக்கும்
இப்போது சிவாஜியின் மீது தைரியமாகத் தனியாகப் போர்த்தொடுக்கும் மனநிலை இல்லை.
ஔரங்கசீப் மனத்தாங்கலுடன் சொன்னான். “இந்த அரியணையோடு கட்டிப்
போடப்படாமல் இருந்திருந்தால் நானே தக்காணம் சென்றிருப்பேன். சிவாஜிக்குத் தக்க பாடம்
கற்பித்திருப்பேன். சிவாஜியின் அதிர்ஷ்டம் நான் தக்காணத்தில் இருக்கும் போது அவன் என்னுடன்
மோதாததும், இப்போது எனக்கு அங்கே போக முடியாததும்…! அடுத்ததாக என்ன செய்தி?”
ஒற்றர் தலைவன் சொன்னான். “தலைவர் இக்லஸ்கானைத் தோற்கடித்த
மோரோபந்த் கொங்கண் பகுதியின் ஜவ்ஹர் மற்றும் ராம்நகர் பகுதிகளையும், அந்தக் கோட்டைகளையும்
பிடித்து விட்டார். இரண்டு அரசர்களும் தப்பி ஓடி விட்டார்கள்….”
இந்தச் சிறிய அரசர்கள் சில நேரங்களில் சிவாஜியின் பக்கம்
இருப்பார்கள். சில சமயங்களில் முகலாயர் பக்கம் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் முகலாய
எல்லைகளில் இருப்பது சில விதங்களில் அனுகூலமாகவே முகலாயர்களுக்கு இருந்து வந்தது. ஆனால்
இடையில் இருந்த சிற்றரசர்கள் ஓட்டப்பட்டு அந்தப் பகுதிகள் சிவாஜியினுடையதாகவே இப்போது
ஆகி விட்டதால் அவனே அந்த எல்லைப்பகுதியில் எப்போதும் இருக்கும் அபாயம் உருவாகி விட்டது.
ராம் நகர் பகுதியில் இருந்து சூரத் சிறிது தொலைவு தான். சிவாஜியின் படை வேகமாக வந்தால்
ஒரு மணி நேரத்திற்குள் சூரத்தை எட்டி விடலாம். சூரத் முகலாயர்களின் செல்வம் மிக்க பகுதி.
எத்தனை எடுத்தாலும் திரும்பவும் செல்வத்தால் நிறையும் நகரம்….
ஔரங்கசீப்புக்கு அங்குள்ள நிலைமை நினைக்கவே கசந்தது. நீண்டதொரு
பெருமூச்சு விட்டவனாய் ஒற்றர் தலைவனுக்குச் சைகையிலேயே விடை கொடுத்தனுப்பி விட்டு சூரத்தைப்
பலமாகப் பாதுகாக்கும்படி பகதூர்கானுக்குக் கட்டளை அனுப்பி வைத்தான்.
அன்றிரவும் ஔரங்கசீப்பால் உறங்க முடியவில்லை. தலைநகர் வந்து
அவன் பிடியில் சிக்கிய சிவாஜியைக் கொல்லாமல் தப்பவிட்டதற்கு எந்தெந்த விதமான விளைவுகளை
அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்று அவன் உள்மனம் புலம்பிக் கொண்டே இருந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Sivaji tackled the great problems in very simple manner. A great genius.
ReplyDeleteமுகலாயர்களின் அற்புதமான திட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவாஜி போட்டிருந்த திட்டம் அற்புதம் 👌👌👌...
ReplyDeleteவீரர்கள் அதை செயல்படுத்திய விதமும் அருமை 👌👌👌....