தில்லர்கானும் பகதூர்கான் சொன்னதைக் கேட்டுத் திகைத்தான். ஒவ்வொரு
துறையிலும் புத்திசாலிகளும், நீண்ட அனுபவமும் உள்ளவர்கள் செய்யக் கூடாத, செய்ய முடியாத
தவறுகள் என்று சில இருக்கின்றன. அவற்றைச் செய்பவன் முட்டாளாகவோ, அத்துறைக்குப் புதியவனாகவோ
தான் இருக்க முடியும் என்று அத்துறையில் இருப்பவர்கள் உறுதியாக நம்புவார்கள். அதனால்
தான் பகதூர்கான் திகைத்தது போலவே தில்லர்கானும் திகைத்தான்.
தில்லர்கான்
சொன்னான். “சிவாஜிக்குப் புத்தி பேதலித்து விட்டது என்று நான் நினைக்கிறேன். அப்படி
இல்லை என்றால் அவன் வருகிறான் என்றவுடனேயே நாம் பயந்து சாலேர் கோட்டையைப் பிடிக்கும்
முயற்சியை விட்டு விட்டுப் போய் விடுவோம் என்று அவன் நினைத்திருக்கலாம். பல நேரங்களில்
அவன் பெயரே பலருக்குக் கிலி கொடுத்திருப்பதாக பீஜாப்பூர் படைத்தலைவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்”
பகதூர்கான்
கர்வத்துடன் சொன்னான். “பீஜாப்பூர் படையின் பேடிகள் அப்படிப் பயப்படலாம். ஆனால் முகலாயப்படைகள்
நம் தலைமையில் இயங்கும் வரை பயம் என்பது என்னவென்றே அறியாதவையாக இருக்கும் என்பதற்கு
நான் உத்தரவாதம் தருகிறேன்….”
தில்லர்கானும்
ஆமென்று தலையசைத்தான். “சிவாஜிக்குப் பாடம் புகட்ட நமக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக
இருக்கட்டும். சரி, இனி நம் திட்டம் என்ன?”
பகதூர்கான்
ஆழ்ந்து ஆலோசித்து விட்டுச் சொன்னான். ”சிவாஜியை நெருங்க விடுவது உசிதமாக எனக்குத்
தோன்றவில்லை. நம் இரு படைகளில் ஒன்றை அவன் வரும் திசை நோக்கியே செலுத்தி அவனைத் தொலைவிலேயே
நிறுத்திப் போரிடுவது நல்லதென்று தோன்றுகிறது. ஒரு படை இங்கு சாலேர் கோட்டையிலேயே முற்றுகையைத்
தளர்த்தாமல் இருக்கட்டும். மோரோபந்த், ப்ரதாப்ராவ் படைகளை இக்லஸ்கான் பார்த்துக் கொள்வான்.
மூன்று இடங்களிலும் மூன்று படைகளும் வென்று காட்டுவோம். சிவாஜியை எதிர்க்க நீங்கள்
போகிறீர்களா, நான் போகட்டுமா?”
தில்லர்கான்
உடனே சொன்னான். “நானே போகிறேன். அவனிடம் தீர்க்க வேண்டிய பழைய கணக்கொன்று எனக்கு இருக்கிறது.
அவன் என்னிடமும், ராஜா ஜெய்சிங்கிடமும் அத்தனை பணிவு காட்டி, நம்ப வைத்து, ஒப்பந்தம்
செய்து கொண்டு தலைநகர் போனான். அங்கு போய் சக்கரவர்த்தியையே அவமானப்படுத்தியதில் என்
மீதும், ராஜா ஜெய்சிங் மீதும் சக்கரவர்த்திக்கு மனவருத்தம் இருக்கிறது. அவனைத் தோற்கடித்து
ஓட வைத்துப் பதிலடி தர நானே செல்கிறேன். நீங்கள் இந்தக் கோட்டையைக் கவனித்துக் கொள்ளுங்கள்”
சிவாஜியிடம் ஒற்றன் விரைந்து வந்து சொன்னான். “தில்லர்கான்
படை உங்களுடன் போரிடக் கிளம்பியிருக்கிறது மன்னா”
சிவாஜி
சொன்னான். “நல்லது.”
சிறிது
நேரத்தில் சிவாஜியின் படையில் 2000 குதிரை வீரர்கள் வேகமாக முன்னால் பறக்க சிவாஜியின்
மீதிப்படை மெல்லப் பின் தங்கியது.
தில்லர்கானின் ஒற்றன் அவனிடம் வந்து சொன்னான். ”தலைவரே. மராட்டியப்படையில்
2000 குதிரை வீரர்கள் மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள். மீதமிருக்கும்
படை மெல்லத்தான் பின்னால் வந்து கொண்டிருக்கிறது”
தில்லர்கான்
கேட்டான். “சிவாஜி முன்னால் வரும் படையில் இருக்கிறானா, பின்னால் இருக்கும் படையில்
இருக்கிறானா?”
ஒற்றன்
சொன்னான். “அவர் பின்னால் இருக்கும் படையுடன் தான் இருக்கிறார்.”
தில்லர்கானுக்கு
இதில் ஏதோ சூழ்ச்சித்திட்டம் இருப்பதாக உள்ளுணர்வு எச்சரித்தது. சிவாஜியின் உத்தேசம்
தான் என்ன?
ராஜ்கட்டிலிருந்து மூன்றாவதாக உணவுப் பொருட்களுடன் கிளம்பிய
மராட்டிய வீரர் குழு இப்போது பஜனை கோஷ்டியாக மாறி இருந்தது. விஷ்ணு, கிருஷ்ணர், ராமர்,
அனுமார் தெய்வங்களின் பெரிய பெரிய படங்கள் உணவுப் பொருள்களை மறைத்திருந்தன. மராட்டிய
வீரர்கள் நெற்றிகளில் நாமங்களும், கைகளில் தாளங்களும் இருந்தன. பஜனைப் பாடல்கள் பாடியபடியே
குறுகிய பாதைகளில் குதிரைகளில் போய்க் கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கும் நாமங்கள்
சாத்தப்பட்டிருந்தன.
அக்காலத்தில்
இது போன்ற பஜனை கோஷ்டிகள் அதிகம். ஏழை பக்தர்கள் நடந்து பஜனை பாடிக் கொண்டு போவார்கள்.
பக்தர்களில் செல்வந்தர்கள் ஆண்கள் மட்டுமே என்றால் குதிரைகள், ஒட்டகங்களில் போவார்கள்.
பெண்கள், முதியவர்கள் கூட இருந்தால் பல்லக்குகளும், ரதங்களும் கூட அத்துடன் சேர்வதுண்டு.
எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு கோயிலோ புனிதத் தலமோ இருப்பதுண்டு என்பதால், இது போன்ற
பஜனை கோஷ்டிகளின் போக்குவரத்து சகஜம் என்பதால், சென்ற குழுவினர் எண்ணிக்கையும் சுமார்
இருபதுக்குள்ளே தான் இருந்தது என்பதால், அவர்கள் கைகளில் ஆயுதங்களும் இல்லை என்பதால்
முகலாய ஒற்றர்கள் உட்பட யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
தில்லர்கான் படை சிவாஜியின் 2000 குதிரை வீரர்கள் நெருங்கியதும்
திறமையாகப் போரிட்டு வென்றது. மராட்டியப்படை பரிதாபமாகத் தோற்றுப் போனது. ஆனால் சிவாஜியின்
பின்தங்கிய படை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம்…. தில்லர்கான் இப்போது சூழ்ச்சியைப்
பரிபூரணமாய் உணர்ந்தான். ’ஒருவேளை நம் படை முன்னேறிப் போகும் என்று எதிர்பார்த்து ஏதோ
ஒரு பெரிய சூழ்ச்சியுடன் தாக்க சிவாஜி அவனுக்குச் சாதகமான இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறானோ?’
தில்லர்கான்
முன்னேறுவதை நிறுத்தினான். சிவாஜியின் படை வரட்டும். நெருங்கி வந்தவுடன் சந்திப்போம்
என்ற முடிவிற்கு வந்தான்.
இக்லஸ்கான் பகதூர்கான் எதிர்பார்த்தபடியே முதலில் ப்ரதாப்ராவ்
குசார் தலைமையில் இருந்த படையைத் தான் முதலில் சந்தித்தான். இக்லஸ்கான் தாக்கிக் கொண்டே
முன்னேற ப்ரதாப்ராவ் குசாரும், அவன் படையினரும் தங்களைத் தற்காத்துக் கொண்டே பின் வாங்க
ஆரம்பித்தார்கள். இக்லஸ்கானுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. தங்கள் படையின் அளவைப்
பார்த்து இவர்களை வெல்ல முடியாது என்று தோன்ற ஆரம்பித்து பின்வாங்குவதே பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்து
விட்டதாகவே நினைத்தான். ஆனால் அரைநாள் அப்படி மெல்லப் பின் வாங்கிக்கொண்டே போன ப்ரதாப்ராவும்,
அவன் வீரர்களும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போன போது ஏற்கெனவே கூடுதல் படை அங்கே
காத்துக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து கொண்ட பின் ப்ரதாப்ராவின் படை இக்லஸ்கான்
படையை அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத விதமாக ஆக்ரோஷமாய் தாக்க ஆரம்பித்தது. ப்ரதாப்ராவ்
குசார் கிட்டத்தட்ட பாதிப்படையை அங்கே விட்டு விட்டு முன்னேறி வந்து தங்களுடன் போர்
புரிந்து பின்வாங்கி மறுபடி அவர்களை இப்படித் தாக்குவான் என்று எதிர்பார்க்காத இக்லஸ்கான்
படை ஓரளவு சுதாரித்துக் கொள்ளும் வரை வேகமாகப்
பின்வாங்க வேண்டி வந்தது. ஆனால் சிறிது நேரத்தில் பின்னால் மோரோபந்தின் படையினரின்
ஆரவாரம் கேட்டது. இக்லஸ்கான் மோரோபந்த் படையினர் இவ்வளவு வேகமாக இந்த இடத்திற்கு வந்து
சேர்வார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களுடைய வழக்கமான வேகப்படி அரை நாள்
தாண்டித்தான் அவர்கள் அங்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் வந்து சேர்வதற்கு வேண்டி
தான் ப்ரதாப்ராவ் குசார் முதலில் காலம் தாழ்த்தி இருக்கிறான் என்பது இக்லஸ்கானுக்கு
மெல்லப் புரிய ஆரம்பித்தது. இப்போது இரண்டு பக்கமும் மராட்டியப்படைகள் கடுமையாகத் தாக்க
ஆரம்பித்ததும் முகலாயப்படை திணற ஆரம்பித்தது.
தில்லர்கான் சிவாஜியின் படை நெருங்கக் காத்திருந்தான். ஆனால்
மிகக்குறைந்த வேகத்திலேயே சிவாஜியின் படை வருவதாகத் தகவல் கிடைத்தது. எதற்காகவோ சிவாஜி
காலந்தாழ்த்துகிறான். எதோ சதித்திட்டம் தீட்டி சிக்க வைக்கப் பார்க்கிறான் என்று அவனுக்குத்
தோன்ற ஆரம்பித்தது. அவன் பொறுமையாகக் காத்திருந்தான். “சிவாஜி உன் சூழ்ச்சி எதுவானாலும்
உன் வலையில் நான் விழ மாட்டேன். நீ வா. வரும் வரைக் காத்திருக்கிறேன். என்னைத் தாண்டித்
தானே நீ சாலேர் கோட்டைக்குச் செல்ல வேண்டும். எப்படிப் போகிறாய் என்று நான் பார்க்கிறேன்’
என்று மனதில் சொல்லிக் கொண்ட அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு போயிருந்த மராட்டிய வீரர்
குழு குறுக்குப் பாதைகளில் பயணித்து சாலேர் கோட்டையின் பின்புறம் தொலைவில் தெரிய ஆரம்பித்தவுடன்
மரங்கள் அடர்ந்த பகுதியில் குதிரைகளை நிறுத்தி இரவு நெருங்கும் வரை இளைப்பாறினார்கள்.
பகதூர்கானின்
படையினர் சாலேர் கோட்டையின் முன்புறம் தான் இருந்தார்கள். கோட்டைக்கதவுகளையே கூர்ந்து
பார்த்துக் கொண்டு ஒரு குழு கண்காணிக்க மீதிப்படை உறங்க ஆரம்பித்திருந்தது. கோட்டைக்கு
இருப்பது ஒரே ஒரு கதவு என்பதால் பின்பக்கத்தில் அவர்களுக்கு வேலை இல்லை….
நள்ளிரவு
நெருங்க ஆரம்பித்தவுடன் உணவுப்பொருட்களைச் சுமந்து கொண்டு மராட்டிய வீரர்கள் சத்தமில்லாமல்
சேலார் கோட்டைக்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்து சேர்ந்தார்கள். கோட்டையின் பின்புறக்
காவலில் இருந்த வீரர்கள் தங்கள் ஆட்கள் உணவுப்பொருட்களுடன் பதுங்கி வருவதைப் பார்த்தவுடன்
உற்சாகமானார்கள். சத்தமில்லாமல் கயிறு ஒன்று பின்புறமாக இறக்கப்பட்டது. கீழே அந்தக்
கயிறு வந்தவுடன் சில உணவுப் பொருள் மூட்டைகளைக் கட்டினார்கள். கயிறு மேலே இழுத்துக்
கொள்ளப்பட்டு மூட்டைகளை இறக்கி விட்டு மறுபடி கீழே வீசப்பட்டது. இப்படியே அவர்கள் கொண்டு
வந்திருந்த அத்தனை மூட்டைகளையும் மேலே ஏற்றி விட்டு வந்தவழியே சத்தமில்லாமல் மராட்டிய
வீரர்கள் திரும்பிப் போனார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
Can we get this novel in Amazon kindle?
ReplyDeleteNo. It is not available in Amazon Kindle. Only printed book is available.
DeleteTactics of Sivaji is very interesting.
ReplyDeleteஅசத்தலான திட்டம் ... வீரர்கள் அதை செயல்படுத்திய விதமும் அருமை.... இப்படிப்பட்ட சூழலிலும் இப்படி செயல்பட சிவாஜியால் மட்டுமே முடியும்...
ReplyDelete