Wednesday, August 19, 2020

சுதர்மமும் பிரம்மநிலையும்



லகப் புனித நூல்களுக்கிடையே பகவத்கீதையின் மிக அழுத்தமான தனித்தன்மை என்று யாரேனும் கேட்டால் அதற்குப் பதிலாக சுதர்மத்தை வலியுறுத்துவதையே சொல்ல வேண்டும். இந்தக் கடைசி அத்தியாயத்தில் மீண்டும் ஒரு முறை பகவான் கூறுகிறார்:

அயலாருக்காக விதிக்கப்பட்ட கடமையை, தான் மேற்கொண்டு, அதைக் குறைவறச் செய்வதைக் காட்டிலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமையை அரைகுறையாய் செய்தாலும் அது நல்லதே. இயற்கையாய் தனக்கு அமைந்த கர்மத்தைச் செய்பவன் பாவத்தையடைய மாட்டான்.
       
குந்திமகனே! தனக்கு இயற்கையாய் ஏற்பட்ட கர்மமானது தோஷத்துடன் கூடியதாயினும், அதைச் செய்யாமல் விடக்கூடாது. எல்லாக் கர்மங்களும் நெருப்பைப் புகை சூழ்ந்திருப்பது போல் தோஷத்தால் சூழப்பட்டே இருக்குமன்றோ!

சுதர்மத்தைப் பற்றி விளக்குகையில் வினோபா சொல்கிறார். “உன்னிடத்தில் உனக்கே உரிய ஏதோ ஒரு அம்சமிருப்பதாலேயே நீ நீயாக இருக்கிறாய். ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கே உரிய விசேஷ அம்சமிருக்கும். ஆடு ஆடாயிருந்து வருவதன் மூலமாகத் தான் வளரமுடியும்; ஆடாயிருந்து கொண்டே தான் அது தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆடு பசுவாக விரும்புதல் நடக்கக்கூடியதல்ல. அது தனக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆட்டுத்தன்மையைத் துறக்க முடியாது. அப்படித் துறக்க வேண்டுமானால் முதலில் தன் உடலையே அது துறக்க வேண்டியிருக்கும். புதியதொரு பிறவியை எடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பிறவியில் அது ஆடாய் இருப்பதே அதற்கு நல்லது. ‘எருதும் பெண் தவளையும்’ என்ற கதையைக் கேட்டிருக்கிறோமல்லவா? தவளை பருப்பதற்கும் ஓர் அளவுண்டு. அது எருதைப் போல் பருக்க முயன்றால் இறந்துதான் போகும். பிறருடைய உருவத்தைப் பார்த்து நடிப்பது சரியல்ல. இதனாலேயே பரதர்மம் பயங்கரமானது, கொடிது என்று கூறப்பட்டிருக்கிறது”.

மனிதன் தன் இயல்பிற்கு எதிரான எதிலும் எத்தனை முயன்றாலும் அதில் கண்டிப்பாக சோபிக்க முடியாது. ஆப்பிள் மரம் சாத்துக்குடியை உருவாக்கித் தர ஆசைப்படுவது வியர்த்தமே. ரோஜா மலர் மல்லிகை மணம் வீச ஆசைப்படுவது தன் மணத்தையும், மதிப்பையும் இழக்கும் முயற்சியாகவே இருக்கும். மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளவும், மெருகேற்றிக் கொள்ளவும் ஆசைப்படுவது சுதர்மத்தைப் பேணும் விதம் எனலாம். ஆனால் இன்னொருவனாக ஆசைப்படுவதும், அதற்கு முயல்வதும் தற்கொலைக்குச் சமமானது என்றே சொல்ல வேண்டும்.

தான் செய்ய வேண்டிய கர்மத்தில் குறையிருந்தாலும் அது கேவலமல்ல. பகவான் கூறுவது போல நெருப்போடு புகையும் சேர்ந்திருப்பது இயல்பே. அதற்காக நெருப்பு பனிக்கட்டியாக ஆசைப்படலாமா? அது போல ஒவ்வொரு கர்மத்திலும் குறை உண்டு. அதற்கென அதைத் தவிர்ப்பதும் இன்னொருவர் கர்மத்தை மேற்கொள்வதும் தவறாகவே இருக்கும். சுதர்மத்தை அரைகுறையாய் செய்தாலும் கூட அது பரதர்மத்தை மேற்கொள்வதை விட மேலென்று கூறுகிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார்:

எதிலும் பற்று கொள்ளாமலும், மனத்தை வென்றும் ஆசையற்றுமிருப்பவன் சன்னியாசத்தால் கர்மம் நீங்கிய உயர்ந்த நிலையை அடைகிறான்.

சித்தியை அடைந்தவன் பிரம்மத்தை எவ்வாறு சேர்கிறான்? ஞானத்தினுடைய உயர்ந்த நிலை எத்தகையது என்பவைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேள்.

சுத்தமான புத்தியுடன் கூடி, மன உறுதியால் தன்னை அடக்கி, சப்தம் முதலான புலன் விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை விட்டு, தனிமையில் இருந்து, சிறிதளவே புசித்து, மனதையும் வாக்கையும் அடக்கி, எப்போதும் தியான யோகத்தில் ஈடுபட்டு, வைராக்கியத்தை மேற்கொண்டு, அகங்காரம், வலிமை, கர்வம், காமம், கோபம், சொத்து சேர்த்தல் ஆகியவற்றை விட்டொழித்து, மமகாரமற்று, சாந்த நிலையைப் பெற்றவன் பிரம்மமாவதற்குத் தகுதியைப் பெறுகிறான்.

பிரம்மமாகவே ஆனவன், உள்ளம் தெளிந்தவனாகி விடுகிறான்; அவன் வருத்தமடைவதில்லை; ஆசைப்படுவதுமில்லை; எல்லா உயிர்களிடமும் சமநோக்கு கொண்டிருப்பான்; அவன் என்னிடம் அதிகமான பக்தியையும் பெறுகிறான்.

அந்த அதிகபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும் எத்தன்மையானவன் என்றும், உண்மையில் உள்ளது உள்ளபடியே அறிகிறான். அப்படி அறிந்தவன் அக்கணமே என்னிடம் ஐக்கியமடைகிறான்.

என்னையே சரணடைந்த அவன் எப்போதும் எல்லாக் கர்மங்களையும் செய்து கொண்டிருந்தாலும் என்னுடைய அருளால் சாசுவதமானதும், அழியாததுமான நிலையை அடைகிறான்.

ஆசையைத் துறப்பதும், மனதை வெல்வதுமே உண்மையான துறவு. அதுவே கர்மம் நீங்கிய மிக உயர்ந்த நிலை. அந்த உயர்ந்த நிலையில் புத்தி தெளிவாக இருக்கிறது; மன உறுதியால் தன் மனதை வென்ற நிலை இருக்கிறது; தனிமையில் தியானத்தில் ஈடுபட முடிகிறது; பேச்சு குறைகிறது; உட்கொள்ளும் உணவின் அளவும் குறைகிறது; புலன்கள் வழிப் போகாத தன்மை இருக்கிறது; வைராக்கியத்தால் எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கையில் தான் சித்தி கிடைக்கிறது. மனிதன் அந்த நிலையிலேயே பிரம்மத்தை அடைகிறான். அந்த நிலையிலேயே பிரம்மமாகிறான்.  

ஆத்ம போதத்தில் ஆதிசங்கரர் கூறுவார்: “எல்லாக் காலங்களிலும் எல்லாப் பொருட்களிலும் ஆன்மா இருந்தாலும் எல்லாப் பொருட்களிலும் அது ஒளிவீசுவதில்லை. ஆனால் பளபளப்பான தரையில் பிரதிபிம்பம் பிரகாசிப்பது போல, தெளிந்த ஞானம் உள்ளவர்களிடம் மாத்திரம் அது ஒளிவீசுகின்றது”

அந்தத் தெளிந்த நிலையில் நான் என்ற எண்ணம் ஒழிகிறது. மனம் நிரந்தர அமைதியில் லயிக்கிறது. எல்லா உயிர்களிடமும் சமநோக்கு இயல்பாகவே அமைகிறது. பரம்பொருளிடம் தானாக பக்தி கூடுகிறது. அந்தப் பக்தியினாலேயே அந்தப் பகவானிடம் சரணாகதி அடைந்து பகவானுடன்  ஐக்கியமாகவும் முடிகிறது.  அதன்பின் அவன் என்ன கர்மங்கள் செய்து கொண்டிருந்தாலும் அதன் பலன்களால் அவன் பந்தப்படுவதில்லை. பரிபூரண சுதந்திரனாகவே இருக்கும் பேரானந்த நிலை சாத்தியமாகிறது.

பிரெஞ்சுப் பாதிரியாரும், இலக்கிய மேதையுமான பெனலன் கூறியிருக்கும் வார்த்தைகள் நூறுசதம் உண்மையானவை. “இறைவனிடம் நம்மை அர்ப்பணித்து விடுகையில் நம் உள்ளம் எவ்வளவு தூரம் விரிவடைகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அது முடிவது அனுபவத்தினாலேயே. எல்லாவற்றையும் கடவுள் கையில் ஒப்படைத்த பின் நம் நிலை விவரிக்க முடியாத அமைதியிலேயே லயிக்கின்றது”

ஒவ்வொரு ஆன்மீகவாதியும் அடைய விரும்பும் உச்சம் அதுவே அல்லவா? அதை மிஞ்சிய பேரானந்த அனுபவம் என்னவாக இருக்க முடியும்?

பாதை நீளும்...
என்.கணேசன்

1 comment:

  1. கண்டிப்பாக இதைவிட பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்?

    ReplyDelete