“ஆனால்...” என்று நிறுத்திய ஜிப்ஸியை விஸ்வம் கேள்விக்குறியுடன் பார்த்தான்.
ஜிப்ஸி சொன்னான். “தலைவரின் மரணம் இயற்கை மரணமாய் இருக்க வேண்டும். அது கொலையாக இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் வந்தால் கூட கொலைகாரனாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் ஆளைக் கொல்லாமல் வேறு எதையும் யோசிக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆட்களில் யாருக்காவது அந்தக் கொலையில் பங்கு இருக்கக்கூடும் என்ற சிறிய சந்தேகம் வந்தால் கூட அவன் அந்தப் போட்டியில் ஜெயிக்கும் வாய்ப்பே இருக்காது....”
“தலைவரின் மரணம் இயற்கை மரணமாக இருந்து விட்டால் பிரச்னை இல்லை அல்லவா?” விஸ்வம் நிதானமாகக் கேட்டான்.
ஜிப்ஸி தயக்கத்துடன் சொன்னான். “இயற்கை மரணம் என்று அவர்கள் நம்பினால் பிரச்னையே இல்லை. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இயற்கை மரணத்தைக்கூட நீ செய்த கொலையாக இருக்கலாம்
என்று அவர்கள் நினைக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது”
விஸ்வம் புரிகிறது என்று தலையசைத்து விட்டு மெல்லச் சொன்னான். ”ஒரு விதத்தில் அவர்கள் தலைவரின் பாதுகாப்புக்கு ‘அமானுஷ்யனை’ வரவழைப்பது கூட நல்லதுக்குத் தான். அவர்கள் நம்பும் அமானுஷ்யன் தலைவருடன் இருக்கையில் நான் எப்படி அவரைக் கொல்ல முடியும்?”
ஆனால் அவன் சொன்ன விதத்தில் ’நான் அந்த ஆளைக் கொல்ல நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்? நான் கொன்றேன் என்று யார் நிரூபிக்க முடியும் என்று பார்க்கிறேன்’ என்ற தொனி தொனித்ததை ஜிப்ஸி கவனித்தான். விஸ்வம் தன் பழைய தீவிரத்திற்கும், திட்டமிடலுக்கும் திரும்பிவிட்டதாகவே தோன்றியது.
விஸ்வம் கேட்டான். “ஒருவேளை தலைவர் பதவிக்குப் போட்டி வந்தால், நீங்கள் அன்று செல்வாக்கான ஆட்கள் என்று மூன்று பேரைச் சொன்னீர்களே
அவர்களில்
இப்போதைக்கு இவர் போட்டியிட்டால் ஜெயிப்பது நிச்சயம் என்று சொல்கிற நிலைமையில் யாராவது இருக்கிறார்களா?”
ஜிப்ஸி சொன்னான். “இல்லை”
விஸ்வம் ஓரளவு திருப்தி அடைந்தான். க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் திரும்பி வருவதற்குள் அவன் சாதிக்க வேண்டியது
நிறைய இருக்கிறது. காலம்
அதிகம் அவன் கையில் இல்லை என்று விஸ்வத்துக்குத் தோன்றியது. அவன் விரைந்து இயங்க வேண்டும்.….
விஸ்வம் ஜிப்ஸியிடம் சொன்னான். “நான் இல்லுமினாட்டி தலைவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் நண்பா. விஸ்வம் என்கிற உறுப்பினர் சாகவில்லை. மறுபிறவி எடுத்துச் சாதித்திருக்கிறேன். தகுந்த சமயத்தில் திரும்பி வருவேன் என்று தெரிவிக்க வேண்டும். நாம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்காத இடத்தில் இருக்கும்
ஒரு தபால் பெட்டியில் அந்தக் கடிதத்தை நீ போட வேண்டும்”
அந்தக் கடிதம் இரண்டு நாள் கழித்து எர்னெஸ்டோவுக்குப் போய் சேர்ந்தது. எர்னெஸ்டோவின் உதவியாளன் மிகக் குறைவான மதிப்பு தருவது தபாலில் வரும் கடிதங்களைத் தான். அழைப்பிதழ்களும், வாழ்த்துக்களும் தான் அதிகம் தபாலில் வருகின்றன என்பது தான் அவனுடைய அலட்சியத்துக்கு முக்கியக் காரணம். உலகெங்கும் இருந்து வரும் தபால்களில் அவசியமானதும், முக்கியமானதும் ஒன்றிரண்டு மட்டும் சில நாட்களில் இருக்கும். சில நாட்களில் அப்படி ஒன்றிரண்டும் கூட இருக்காது.
வேண்டா வெறுப்பாகத் தபால்களைப் பிரித்துப் பார்த்தே வந்தவனுக்கு சாதாரணத் தபாலில் தபால்தலை ஒட்டி வந்த உள்ளூர் கடிதம் முக்கியமானது போல் ஆரம்பத்தில் தோன்றவில்லை. அனுப்பியது யார் என்று பார்த்தான். விஸ்வம், உறுப்பினர், ஜெர்மனி என்று அனுப்புனர் விலாசத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.
விஸ்வம் பெயரைப் பார்த்த அவன் திகைத்தான். அடுத்த நிமிடம் அவன் அந்தக் கடிதத்தோடு எர்னெஸ்டோ அறையில் இருந்தான்.
எர்னெஸ்டோ அவன் பரபரப்புடன் நீட்டிய கடிதத்தை வாங்கிப் பார்த்தார். அனுப்புனர் விஸ்வம் என்று இருந்தது தான் அவனுடைய பரபரப்பிற்குக் காரணம் என்பது புரிந்து கொண்டு மெல்லப் புன்னகைத்தார். “இந்த விஸ்வம் எத்தனை பேரைக் கதிகலங்க வைக்கிறான்!...”
எர்னெஸ்டோ அவனை அனுப்பி விட்டுத் தபாலைப் பிரித்தார். விஸ்வம் அனுப்பிய கடிதம் உள்ளேயும் டைப் செய்யப்பட்டிருந்து கடைசியில் விஸ்வம்
கையொப்பம் மட்டும் போட்டிருந்தான்.
“மதிப்பிற்குரிய இல்லுமினாட்டி தலைவருக்கு விஸ்வத்தின் வணக்கங்கள்!
இத்தனை வருட காலத்தில் இறந்தவர்கள் கடிதம் எழுதி நீங்கள் படிக்கும் சந்தர்ப்பம் தங்களுக்குக் கிடைத்திருக்காது. அப்படி ஒரு கடிதம் வந்திருந்தால் யாரோ தமாஷ் செய்கிறார்கள் என்றே தங்களுக்குத் தோன்றியிருக்கும். அதற்கு முதல் விதிவிலக்கை உங்கள் மேலான இயக்கத்தின் விசுவாசமான உறுப்பினராக உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
நான் கற்ற ஒவ்வொரு வித்தைக்கும் என் வாழ்நாட்களை விலையாகக் கொடுத்திருக்கிறேன். அவை கடைசி வரை எனக்கு உதவியிருக்கின்றன. மரணம் வரை மட்டுமல்ல மரணத்தைத் தாண்டியும் எனக்கு உதவியிருக்கின்றன. தங்கள் கூட்டத்தில் நான் எப்படி உயிர் இழந்தேன் என்பது தெளிவில்லை. சில சதிகாரர்களின் சதிச்செயலாக இருக்கலாம். செய்தது யார், எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் க்ரிஷ் பேசிக் கொண்டிருக்கையில் உயிரிழக்க ஆரம்பித்ததை மெல்ல உணர ஆரம்பித்தேன். நான் கற்ற கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை நினைவுக்கு வந்தது. உங்கள் உறுப்பினரான நான் அதற்கு முழு மனதுடன் முயற்சி செய்தேன். அதே நேரத்தில் இறந்து கொண்டிருந்த ஒரு போதை மனிதனின் உடலில் என்னால் புக முடிந்தது. என் சக்திகளுக்கு மகுடம் சூட்டியது போல் உங்கள் உறுப்பினரான நான் உணர்ந்தேன். இந்தப் பெருமையும் எனக்கல்ல, இல்லுமினாட்டிக்கு என்ற எண்ணமே இப்போதும் என் மனதில் மேலோங்குகிறது. உடல் மாறினாலும் மனம், அறிவு, ஆவி, மாறவில்லை என்பதால் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களைத் தெரிவித்து ஆள் மட்டும் பழையவன் தான் என்று தெரிவிக்கும் பொறுப்பை இந்தக் கடிதம் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன்.
நேரடியாகவே வந்து நான் நிலைமையைத் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போதும் உறுதியாக நினைக்கிறேன். ஆனால் புறச் சூழ்நிலைகள் அதற்குச் சாதகமாக இல்லை. என்னைக் கொல்ல இப்போதும் சில முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. அது ஏன்? என் மேல் உள்ள தவறு தான் என்ன? என்ற கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன. ஆனால் பதில் கிடைக்கவில்லை.
இதுவரை யாரும் செய்யாத சாதனையைச் செய்து விட்டுத் திரும்பினாலும் இல்லுமினாட்டி உறுப்பினர் நான் என்ற சாதனையைக் காட்டிலும் அதிகமான ஆனந்தத்தை இந்தச் சாதனை எனக்களித்து விடவில்லை. நான் ஒரு பாதுகாப்பான சூழலை உணர்ந்தவுடன் முடிந்த வரை உடல் சக்திகளிலும் ஓரளவாவது பழைய விஸ்வமாக ஆனவுடன் திரும்பவும் தங்கள் அனுமதி பெற்று மீண்டும் தங்களைச் சந்திக்கிறேன். தாங்கள் அனுமதித்தால் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து க்ரிஷ் பேச்சுக்குப் பதிலளிக்கவும் நான் தயார்.
எது உகந்தது என்று நினைக்கிறீர்களோ அதைத் தாங்கள் முடிவெடுங்கள். மனதளவில் நான் வலிமையாக இருந்த போதிலும் குடியேறியிருப்பது ஒரு போதை மனிதனின் பாழ்பட்ட உடல் என்பதால் உடல் அளவில் பலவீனமாகவே உணர்கிறேன். அதையும் விரைவில் சரிசெய்து கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அப்படிச் சரிசெய்து கொண்ட பின் தங்கள் மேலான உத்தரவு எதுவோ அதை நிறைவேற்ற மீண்டும் தங்களைத் தொடர்பு கொள்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
தங்கள் உண்மையுள்ள
விஸ்வம்
எர்னெஸ்டோ படித்து முடித்த பிறகு ஆலோசனையில் ஆழ்ந்தார். ஜான் ஸ்மித் மூலமாக விஸ்வத்தின் கூடு விட்டு கூடு பாய்ந்த சாதனையைப் பற்றி அறிந்து கொண்ட பின் இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு பெயர் எதுவும் குறிப்பிடாமல் என்ன நடந்திருக்கிறது என்ற தகவல்களை அனுப்பி வைத்திருந்தார். செயற்குழு உறுப்பினர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப்பின் இல்லுமினாட்டி உளவுத் துறையின் கண்டுபிடிப்புகளையும், அனுமானங்களையும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அது அவசியம் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது விஸ்வம் ஒரு உறுப்பினராக நேரடியாக ஒரு கடிதம் அவருக்கு அனுப்பி விட்டதை தலைவர் என்ற நிலையில் மற்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
அதன் நகலை எல்லா உறுப்பினர்களுக்கும் அனுப்ப உத்தரவிட்டு விட்டு அவர் உளவுத்துறை தலைவன் இம்மானுவலுக்குப் போன் செய்து வரச் சொன்னார்.
(தொடரும்)
என்.கணேசன்
You have narrated Illuminati organization's complexities very well. I felt as if it is insider's information.
ReplyDeleteInteresting.
ReplyDeleteரொம்பவே துணிச்சல் தான் இந்த விஸ்வத்துக்கு.
விஸ்வம் எதற்காக இந்த மாதிரி திட்டம் தீட்டுகிறான்? என்று புரியவில்லையே....
ReplyDeleteதலைவருக்கு இயற்கை மரணம் நிகழ வைக்க தீட்டும் திட்டத்தில் இது முதல் படியா??
தலைவர் இயற்கையாக இறந்தால் சாதாரண அங்கத்தினரும் தலைமை பதவிக்கு போட்டியிடலாம் என்னும் ஷரத்தை கண்டுகொண்டு, அங்கத்தினராகிய தான் வேறு உடலில் உயிரோடு இருப்பதாக இந்த கடிதத்தில் தெரிவித்துக்கொள்கிறான்.. கூடவே இல்லுமினாட்டியின் மேல் பெருமதிப்பு இருப்பதாக காட்டிக்கொள்வதால் அங்கத்தினரை தேர்தலில் வசப்படுத்தலாம்.. பலே கேடிப்பயல் தான் விஸ்வம்..
ReplyDelete