சிவாஜியுடனான
பேரத்தை ஒரு பெருந்தொகைக்குப் பேசி முடித்த ஃபதேகான் சிவாஜியிடம் பணம் பெற்றுக் கொண்டு
ஜஞ்சீரா கோட்டையை ஒப்படைக்க ஒரு நாளையும் முடிவு செய்தான். இந்த ரகசியக் கைமாற்றம்
நடக்கவிருந்த நாளுக்கு மூன்று நாள் முன்பு சிவாஜிக்கு ஒற்றன் மூலம் அவசரச் செய்தி வந்து
சேர்ந்தது.
“அரசே! ஜஞ்சீரா கோட்டையின் தலைவர் ஃபதேகானை அவருடைய சிதி
தளபதிகள் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள். கோட்டையைக் கைப்பற்றி இருக்கும்
அவர்கள் முகலாயர்கள் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அவர்களுக்கு உதவ
சூரத்தில் இருந்து ஒரு முகலாயப்படை ஜஞ்சீரா கோட்டையை நோக்கிக் கிளம்பியிருக்கிறது….”
சிவாஜி இதை எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தப் பேரத்தை அறிந்து
சிதி சகோதரர்கள் முன்பே உஷாராகி முகலாயர்களைத் தொடர்பு கொண்டிருப்பது இப்போது தான்
அவனுக்குப் புரிந்தது. ஔரங்கசீப் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு விடவில்லை….
சிவாஜி தற்போதைய சூழ்நிலையை வேகமாக யோசித்து விட்டு உடனே ஒரு முடிவுக்கு வந்தான். பின் தன் படையை ஜஞ்சீரா கோட்டையிலிருந்து திரும்பி
வரக் கட்டளையிட்டான். கோட்டைக்குள் இருக்கும் வலிமையான படைக்கும், சூரத்தில் இருந்து
வரும் முகலாயப்படைக்கும் நடுவில் சிக்கி அவன் படை அழிவதைத் தவிர்ப்பதே இப்போதைக்குப்
புத்திசாலித்தனமாக அவனுக்குப் பட்டது.
அவனுடன் அப்போது இருந்த படைத்தலைவன் ப்ரதாப்ராவ் குசாரும்,
மந்திரி மோரோபந்த் பிங்க்ளேயும் இந்தச் செய்தியில் மிகவும் வருத்தப்பட்டார்கள். ப்ரதாப்ராவ்
குசார் வருத்தத்துடன் கேட்டான். “சென்ற காரியம் முடியாமல் இப்படித் திரும்பி வருவது
அவமானம் அல்லவா? அதற்குப் பதிலாக கூடுதல் படையை நாம் அனுப்பி முகலாயர்களையும், சிதிக்களையும்
போர்க்களத்தில் சந்திப்பதல்லவா பெருமை?”
சிவாஜி அமைதியாகச் சொன்னான். “கூடுதல் படை அனுப்பிப் போரிட்டாலும்
அங்கு வெற்றி நிச்சயமல்ல. நம் படையினர் நிறைய பேரை இழந்த பின்னும் ஜஞ்சீரா கோட்டை நம்
வசமாகாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. அப்படியே கோட்டை நம் வசமானாலும் நாம் பெறுவதை
விட இழந்தது நிச்சயம் அதிகமாகவே இருக்கும். அதனால் திரும்பி வருவது தான் இப்போது நமக்குப்
புத்திசாலித்தனமும், லாபமுமாகும்….”
ஆனாலும் ப்ரதாப்ராவ் குசார் முகத்திலிருந்து அதிருப்தி அகலவில்லை.
சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “திரும்பி வருவதால் நாம் சும்மா இருக்கிறோம், தோல்வியை
ஒப்புக் கொள்கிறோம் என்று அர்த்தமில்லை ப்ரதாப்ராவ். என் கணக்கு சரியானால் வேறு லாபகரமான
இடத்தில் தாக்குதல் நடத்துவோம்.”
ப்ரதாப்ராவ் குசாருக்குப் புரியவில்லை.
ஜஞ்சீரா
கோட்டையில் சிதி சகோதரர்கள் வெற்றிக் களிப்பில் இருந்தார்கள். அந்த மூவரில் ஒருவன்
ஜஞ்சீரா கோட்டையின் தலைவனாக ஔரங்கசீப்பால் அங்கீகரிக்கப்பட்டிருந்தான். முகலாயப்படை
சூரத்திலிருந்து வருவது தெரிந்து சிவாஜியின் படை திரும்பிச் சென்றது அவர்களுக்குப்
பெரிய வெற்றியாகத் தெரிந்தது. ஆனால் சிவாஜியின் படை எப்போது வேண்டுமானாலும் திரும்ப
வந்து தாக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கும் முகலாயர்களுக்கும் இருந்ததால் சூரத்திலிருந்து
வந்த படையின் பெரும்பகுதி ஜஞ்சீரா கோட்டையிலேயே தங்கியது. சிவாஜியின் படை எப்போது திரும்பி
வந்தாலும் கடுமையாகத் தாக்க அவர்கள் தயாரக இருந்தார்கள்.
சிவாஜி இதைத்தான் எதிர்பார்த்தான். சூரத்திலிருந்து கிளம்பிய
முகலாயர் படையில் சிறுபடை மட்டுமே சூரத் திரும்பியதை அறிந்த அவன் 15000 வீரர்களுடன்
சூரத் மீது படையெடுத்தான். முகலாயர்களுக்குப் பாடம் புகட்டியது போலவும் ஆகும், பெருமளவு
செல்வத்தைக் கைப்பற்றியது போலவும் ஆகும் என்று அவன் கணக்குப் போட்டான். அவர்கள் சூரத்தைக்
கொள்ளையடித்து ஆறு வருடங்கள் கழிந்து விட்டன. அந்த நகரின் செல்வம் மறுபடி பெருகி இருக்கிறது.
சிவாஜியின் செலவுகளும் அதிகரித்து இருக்கின்றன….
அவனுக்கு இன்னொரு இலாபகரமான தகவலும் ஒற்றர்கள் மூலம் வந்து
சேர்ந்தது. “சூரத்தில் கஷ்கார் பகுதியின் முன்னாள் அரசன் அப்துல்லாகானும் வந்து சேர்ந்திருக்கிறான்
அரசே. அவன் மகன் அரியணையைப் பறித்துக் கொண்டு அப்துல்லாகானை அங்கிருந்து விரட்டியடித்திருக்கிறான்.
அப்துல்லா கான் பெரும் செல்வத்துடன் தப்பி வந்திருக்கிறான். அவன் இப்போது தான் மெக்கா
சென்று திரும்பி இருக்கிறான். முகலாயச் சக்கரவர்த்தியின் விருந்தினனாகத் தங்கி இருக்கும்
அவனிடம் தங்கம், வெள்ளி, வைரம், விலைமதிக்க முடியாத பல பொக்கிஷங்கள் எல்லாம் உள்ளன.
எங்கு செல்வதானாலும் அவன் அவற்றை எடுத்துக் கொண்டு தான் போகிறான்…”
சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “உயிருக்குப் பயந்து ஓடும்
போது ஒருவனுக்குச் செல்வமும் ஒரு பாரமே. அந்தப் பாரத்தை இறக்கி வைத்து முகலாயச் சக்கரவர்த்தியின்
நண்பருக்கு உதவுவோம்…”
சிவாஜியின் பெரும்படை சூரத்தின் எல்லைக்கு வந்தவுடனேயே அதை
எதிர்க்க வழியில்லாமல் சென்ற முறை போல் இந்த முறையும் கோட்டைக்குள் சென்று அந்தத் தலைவன்
தன்னைக் காத்துக் கொண்டான். அதே போல் ஓடித் தப்பித்தது ஒரு வணிகர் கூட்டம். மீதியுள்ளவர்களில்
ஆங்கிலேயர்கள் ஓரளவு எதிர்த்தார்கள். பின் அவர்களும் சிவாஜிக்கு ஒரு தொகை தந்து மீதியைக்
காப்பாற்றிக் கொண்டார்கள். பிரெஞ்சுக்காரர்களும் கப்பம் கட்டித் தப்பித்தார்கள். டச்சுக்காரர்களும்,
போர்ச்சிகீசியர்களும் அப்படியே செய்தார்கள்.
ஒரு சிறுபடையை வைத்திருந்த அப்துல்லாகான் சிவாஜியின் படையை
எதிர்க்க முயன்று தோற்றுப் போய் அனைத்துச் செல்வத்தையும் அப்படியே விட்டு விட்டு அவனும்
கோட்டைக்குள் ஓடிப்புகுந்து உயிரைக் காத்துக் கொண்டான். சிவாஜியின் படை நிதானமாக மூன்று
நாட்கள் அங்கு தங்கிக் கொள்ளை அடித்தது.
சிவாஜி
சூரத்தில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தகவல் தக்காணத்தின் கவர்னர் முவாசிம் செவிகளை எட்டியது.
எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமல் கோட்டைக்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொண்ட
தலைவன் மீது முவாசிம்முக்கு அருவருப்பும், கோபமும் வந்தது.
“சென்ற முறையும் அந்த ஆள் இதைத்தானே செய்தான்?” என்று அவன்
அருகில் இருந்தவர்களைக் கேட்டான்.
“ஆம் இளவரசே. சிவாஜி வெளியேறிய பிறகு தான் வெளியே வந்து நிலைமையைப்
பார்வையிட்டான். மக்கள் சாணியைக் கரைத்து அவன் மீது வீசியதில் அவனுக்கு வருத்தமும்
ஏற்பட்டது”
முவாசிம் சொன்னான். “இந்த முறை கொதிக்கும் எண்ணெயை யாராவது
அவன் மீது கொட்டினாலும் தவறு சொல்ல மாட்டேன். எப்படிப்பட்ட தலைவன் இவன்”
முவாசிம் படைத்தலைவர்களைக் கலந்தாலோசித்தான். இந்த முறை ஆட்கள்,
படைகள் போதவில்லை என்று சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத நிலைமையில் அவன் இருந்தான்.
தந்தையின் அறிவுரை இப்போதும் அவன் கட்டிலின் அருகே இருக்கிறது. “மகனே. வெற்றியாளர்கள்
சாதனைகளைத் தேடுகிறார்கள். தோல்வியாளர்கள் காரணங்களைத் தேடுகிறார்கள். தேடுவதை இருவருமே
தங்கள் வாழ்க்கையில் காண்கிறார்கள் என்பதே இனிப்பும் கசப்புமான உண்மை….”
இந்த முறையும் காரணங்களை அனுப்பினால் சக்கரவர்த்தியின் கோபம்
தன்னை தண்டனைக்குள்ளாக்கும் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவனுக்கு சிவாஜி
இப்போது பெரிய தலைவலியாகத் தெரிந்தான். சிவாஜியை ஒரு இடத்தில் சமாளித்தால் இன்னொரு
இடத்தில் பிரச்சினை செய்கிறான். இரண்டு நாட்களுக்கு முன் தான் ஜஞ்சீரா கோட்டைக்குப்
படைகளை அனுப்பி சிவாஜியின் படையை விரட்டியதைச் சக்கரவர்த்திக்கு முவாசிம் பெருமையாக
எழுதியிருந்தான். இப்போது இதை எப்படித் தெரிவிப்பது என்ற திகைப்பு அவனுக்குள் பெரிதாக
எழுந்தது. இருக்கின்ற பிரச்சினைகள் போதாதென்று கஷ்கார் பகுதியின் முன்னாள் அரசனும்,
ஔரங்கசீப்பின் பாதுகாப்பு பெற்றவனுமான அப்துல்லா கான் வேறு சிவாஜியிடம் தொலைப்பதற்கென்றே
பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்து தங்கியிருக்கிறான். அப்படி அவன் அங்கு தொலைப்பதையும்
ஔரங்கசீப் தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றே நினைப்பான். இதையெல்லாம் யோசித்து மனம் நொந்த
முவாசிம் உடனே சூரத்திற்கு பெரும்படை ஒன்றை அனுப்பத் தீர்மானித்தான்.
இருக்கின்ற படைத்தலைவர்களில் வீரமும் திறமையும் மிக்க தௌத்கானை
அந்தப் படைக்குத் தலைமை தாங்கிச் செல்லக் கட்டளை இட்டான். “சிவாஜி சென்ற முறையும் நம்
படை வருவதைக் கேள்விப்பட்டவுடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். இந்த முறையும்
அவன் அதைத் தான் செய்வான் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவனைத் தப்ப விடாதீர்கள்.
அவனை வழிமறியுங்கள். அவனைத் தப்ப விட்டாலும் அவன் கொள்ளை அடித்த செல்வத்தை அவன் கொண்டு
செல்ல அனுமதிக்காதீர்கள். அதற்கான திட்டத்தோடு விரைந்து செல்லுங்கள்”
(தொடரும்)
என்.கணேசன்
அட அருமை.... ஒரு பக்கம் பலம் அதிகம் என பின் வாங்கினாலும்... மற்றொரு பலவீனமான பக்கத்தை... சிவாஜி பயன்படுத்திக் கொண்ட விதம் அற்புதம்....
ReplyDeleteHow fast Sivaji is changing his strategy and wins! Really he is great strategist.
ReplyDelete