Monday, July 13, 2020

சத்ரபதி 133


ளமளவென்று பல கோட்டைகள் வசமானது மட்டுமல்லாமல் சிவாஜிக்கு இன்னொரு மகனும் பிறந்தான். சொர்யா பாய் பெற்றெடுத்த அந்தக் குழந்தைக்கு ராஜாராம் என்று ஜீஜாபாய் பெயரிட்டாள். கோட்டைகளின் மீட்பும், இரண்டாம் மகனின் பிறப்பும் சிவாஜிக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

சிவாஜியின் அடுத்த இலக்கு ஜஞ்சீரா  கோட்டையாக இருந்தது. கடற்கரை ஓரம் அமைந்த துறைமுகக் கோட்டையான ஜஞ்சீரா பீஜாப்பூரின் ஆதிக்கத்தில் ஃபதேகானின் தலைமையில் இருந்தது. சிவாஜி கப்பற்படையையும் சிறப்பாக வைத்திருந்ததால் நீரிலும் நிலத்திலும் ஃபதேகானுக்கு நெருக்கடி தரத் தீர்மானித்தான். சிவாஜியின் படை ஜஞ்சீராக் கோட்டையை முற்றுகையிட்டது. கடற்பகுதியிலும் ஃபதேகானின் கப்பல்கள் சிவாஜியின் கப்பற்படையால் அடிக்கடி  தாக்கப்பட்டன. ஃபதேகான் வலிமையான படையை வைத்திருந்த போதிலும் அவனுக்கு பீஜாப்பூரில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதால் சிவாஜியின் படைகளை இரு பக்கங்களிலும் சமாளிப்பதில் அவன் பெரும் சிரமத்தை உணர ஆரம்பித்தான். அந்தச் சமயம் பார்த்து சிவாஜி யேசாஜி கங்கை ஃபதேகானிடம் தூதனுப்பினான்.

தூதனாக சிவாஜியின் நண்பனே வந்ததில் ஃபதேகான் ஆச்சரியப்பட்டான். யேசாஜியை வரவேற்று அமர வைத்து உபசரித்த அவன் “தூதர் வந்திருப்பதாகக் காவலன் தெரிவித்த போது தங்களை நான் எதிர்பார்த்து இருக்கவில்லை யேசாஜியாரே! தாங்களே நேரில் வந்தது என்னை மிகவும் பெருமைப்படுத்துகிறது” என்றான்.

”நானும் இங்கே வந்து தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஃபதேகான் அவர்களே. நட்புக்கரம் நீட்டுகையில் நண்பனை அனுப்புவதே நல்லது என்று மன்னர் சிவாஜி முடிவெடுத்ததால் தங்களை வந்து சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது….”

ஃபதேகான் நட்புக்கரம் என்ற சொல்லைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தான். ”கோட்டையின் முன்னால் ஒரு படை நிறுத்தி, கடலில் செல்லும் வழிகளில் ஒரு படையால் வழிமறித்து, நட்புக்கரமும் நீட்டுவதாக நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது யேசாஜியாரே”

யேசாஜி கங்க் சிறிய முறுவல் மட்டும் செய்து விட்டு மிக நெருங்கிய நண்பனிடம் ரகசியம் பேசுவது போல் ஃபதேகானிடம் சொன்னான். “நான் வேடிக்கை பேச வரவில்லை ஃபதேகான் அவர்களே. இந்தக் கோட்டையை நாங்கள் கைப்பற்ற விரும்புவது உண்மை. ஆனால் போரிலேயே அதைப் பெற்றாக வேண்டும் என்று சிவாஜி நினைக்கவில்லை. அதற்கு ஒரு விலை கொடுத்துப் பெறவும் சிவாஜி தயாராக இருக்கிறார்”

ஃபதேகான் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகபாவனையிலேயே தெரிந்தது. அவன் எதுவும் சொல்வதற்கு முன் யேசாஜி கங்க் மென்மையான குரலில் சொன்னான். “ஃபதேகான் அவர்களே! சிவாஜியின் ஆதிக்கம் பீஜாப்பூர் சுல்தானையும், முகலாயர்களையும் மீறி விரிவாகிக் கொண்டு வருவதைத் தாங்கள் அறிவீர்கள். உங்கள் கோட்டை பீஜாப்பூர் சுல்தானுக்குச் சொந்தமாக இருந்த போதும் அதைக் காக்க உங்களுக்கு ஒரு கூடுதல் படை அனுப்பவோ, வேறு விதங்களில் உதவவோ கூட பீஜாப்பூர் சுல்தான் தயாராக இல்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் காத்து வரும் கோட்டை உங்கள் பொறுப்பிலேயே கடைசி வரை  விடப்படும் என்ற உத்தரவாதமாவது இருக்கிறதா? இல்லையே! உங்கள் சுல்தானுக்குப் பெரிய அக்கறை இல்லாத ஒரு கோட்டையை, கடைசி வரை உங்கள் தலைமையிலேயே இருக்கும் என்ற உத்தரவாதமும் இல்லாத ஒரு கோட்டையை இத்தனை சிரமங்கள் பட்டுப் பாதுகாத்து கடைசியில் என்ன பலன் காணப் போகிறீர்கள். இந்தக் கோட்டையின் தலைமையைத் தந்து விட வேண்டும் என்று தங்கள் சிதி தளபதிகள் சுல்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. கோட்டையை நீங்கள் எங்களுடனான போரில் இழக்கா விட்டாலும் சுல்தானின் ஆணை மூலம் சிதி சகோதரர்களிடம் இழக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எப்படியும் உங்கள் கைவிட்டு நழுவ உள்ள கோட்டையை எங்களிடமிருந்து நல்லதொரு தொகை பெற்று லாபமடைந்து, கொடுத்துச் செல்வது நல்லதல்லவா? யோசித்துப் பாருங்கள்”

ஃபதேகான் யோசித்தான். அவனுடைய தளபதிகளான சிதி சகோதரர்கள் மூவரும் கோட்டைத் தலைமையை விரும்புகிறார்கள் என்ற சந்தேகம் அவனுக்குச் சில நாட்களாக இருந்து வருகிறது. அது சரியே என்பது யேசாஜி சொல்வது மூலமாக ஊர்ஜிதமாகிறது. எப்படியும் கோட்டை கைவிட்டுப் போகும் என்றால் வெறுங்கையுடன் விடுவதை விட பணம் பெற்று விடுவது புத்திசாலித்தனம் அல்லவா? இந்தக் கோட்டை, இதைக் காப்பதில் உள்ள தலைவலிகள் , சிரமங்கள் எல்லாவற்றையும் விட்டுத் தொலைத்து நிம்மதியாக இருக்கலாமே!...

ஃபதேகான் மெல்லக் கேட்டான். “என்ன தொகை தருவீர்கள் யேசாஜியாரே?”

யேசாஜி திருப்பிக் கேட்டான். “என்ன விலை எதிர்பார்க்கிறீர்கள் ஃபதேகான் அவர்களே?”

ஃபதேகான் அவசரப்பட்டுக் குறைந்த விலை கேட்டுவிட விரும்பவில்லை. “நான் யோசித்து விரைவில் சொல்லி அனுப்புகிறேன் யேசாஜியாரே” என்று சொன்னான்.

யேசாஜி கங்கை சிவாஜி அனுப்பிய போது இத்தனை சீக்கிரம் ஃபதேகான் மசிவான் என்று யேசாஜி எதிர்பார்க்கவில்லை. ஆனால் மனிதர்களை எடை போடுவதில் வல்லவனான சிவாஜி அதை எதிர்பார்த்திருந்தான். ”எதையும் எப்படிப் புரிய வைக்கிறோம் என்பதைப் பொருத்தே அதன் விளைவுகள் இருக்கின்றன யேசாஜி. அத்துடன் கேட்பவனுடைய மனநிலையும் சேர்ந்தே அது தீர்மானமாகிறது. ஃபதேகான் திருப்திகரமான மனநிலையில் இல்லை. அவனுக்கு ஒரு லாபகரமான வழியைக் காண்பித்தால் அவன் கண்டிப்பாக ஒத்துக் கொள்வான்” என்று சிவாஜி சொல்லியுமிருந்தான்.

நண்பனின் கணிப்பு சரியானதை எண்ணி வியந்தவனாக யேசாஜி கங்க் விடைபெற்றுக் கொண்டான்.


யேசாஜி கங்க் சிவாஜியைச் சந்தித்து ஃபதேகான் மசிந்ததைச் சொன்னான்.

சிவாஜி அதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. அவன் யேசாஜியிடம் சொன்னான். “இதுவே கோட்டையின் தலைமையில் சிதி சகோதரர்கள் இருந்திருந்தால் நாம் அவர்களை ஒத்துக் கொள்ள வைக்க முடியாது. மராட்டியர்கள் என்றாலே அவர்கள் வெறுப்புடன் இருப்பவர்கள். எத்தனை பிரச்சினைகள், சிரமங்கள் வந்தாலும், அவர்களுக்கு என்ன விலை தர நாம் தயாராக இருந்தாலும், நமக்குக் கோட்டையைத் தர அவர்கள் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்….

அடுத்ததாக ஃபதேகான் என்ன தொகை கேட்கக்கூடும் என்று சிவாஜியும் யேசாஜியும் தங்கள் அனுமானங்களைச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் ஜஞ்சீரா கோட்டையில் ஒரு வீரன் யேசாஜி கங்குக்கும், ஃபதேகானுக்கும் இடையே நடந்த பேச்சுக்களை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே சிதி சகோதரர்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சிதி சகோதரர்கள் அந்த வீரனுக்குத் தங்கக்காசுகள் தந்தனுப்பினார்கள். “நல்லது வீரனே. இனி நடக்கும் பேச்சு வார்த்தைகளையும் இப்படியே எங்களிடம் வந்து தெரிவிப்பாயாக”

அவன் சென்ற பிறகு சிதி சகோதரர்கள் மனக்கொதிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “சிவாஜியிடம் ஃபதேகான் இப்படி விலை போவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை இவர்களுக்குள் பேரம் முடிந்தால் நம் நிலைமை என்ன?” மூத்த சிதி சகோதரன் கேட்டான்.

கடைசி சிதி சகோதரன் சொன்னான். “ஃபதேகான் பணத்துடன் வெளியேறுவான். நாம் வெறுங்கையுடன் வெளியேறுவோம். அது தான் நடக்கும் வேறென்ன?”

இரண்டாவது சிதி சகோதரன் சொன்னான். “இதை நாம் அனுமதிக்கக் கூடாது. எதையாவது செய்து இதைத் தடுக்க வேண்டும். என்ன செய்யலாம்?”

மூவரும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கடைசியில் மூத்த சிதி சகோதரன் சொன்னான். “இப்போது இதிலிருந்து நம்மையும் இந்தக் கோட்டையையும் காக்கக் கூடியவர்கள் இருவர் மட்டுமே. ஒன்று பீஜாப்பூர் சுல்தான். இன்னொன்று முகலாயச் சக்கரவர்த்தி. இருவருக்கும் இந்தப் பேரச் செய்தியைத் தெரிவித்து உதவி கேட்போம். யார் நமக்கு உதவி அனுப்புகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு கோட்டையை நாம் தக்க வைத்துக் கொள்வோம்.”

சிறிது நேரத்தில் இரண்டு வீரர்கள் ரகசியமாக அங்கிருந்து கிளம்பினார்கள். பீஜாப்பூர் சுல்தானுக்கு வெறும் தகவலும் உதவியும் கேட்டு மட்டும் அனுப்பிய அவர்கள் முகலாயச் சக்கரவர்த்திக்கு அதோடு, உதவி கிடைத்தால் முகலாயர்களுடன் தங்களையும், கோட்டையையும் இணைத்துக் கொண்டு விடச் சம்மதிப்பதாக உத்தரவாதமும் சேர்ந்து அனுப்பினார்கள்.

சிதி சகோதரர்கள் தங்களுக்குச் சாதகமாகக் கண்டிப்பாக இயங்க மாட்டார்கள் என்று அனுமானித்திருந்த சிவாஜி அவர்கள் இந்தப் பேரத்தை அறிந்து ஃபதேகானுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்றோ, முகலாயர்களிடம் உதவி கேட்கும் தூரத்துக்குச் செல்வார்கள் என்றோ எதிர்பார்த்திருக்கவில்லை. அது அவனுக்கு எதிராக மாறியது.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Every plan will not succeed. But how Sivaji is dealing that, I eagerly want to know.

    ReplyDelete
  2. சிவாஜி இதிலும் வெற்றி பெறுவான் என்று நினைத்திருந்தேன்.... இதில் இப்படி ஒரு சிக்கலா??

    ReplyDelete