Thursday, June 25, 2020

இல்லுமினாட்டி 55


றுநாள் காலை உணவு வேளையிலேயே ராஜேஷ் போய்ப் பேசி விட்டு வந்தான். மனோகரிடம் அவர்கள் திட்டத்தைச் சொன்னான்.

இரவில் ஒரு காவலாளியைக் கத்தியால் குத்தி விட்டு நம் இருவரையும் தப்பித்துப் போகச் சொல்கிறார்கள். அவன் கையில் கத்தியால் குத்த வேண்டுமாம். அது அவர்களும் இதில் கூட்டு சேரவில்லை என்று காட்டவாம். எந்த நேரம் எப்படி, எப்படித் தப்பிப்பது என்று பக்காவான திட்டம் சொல்லி இருக்கிறார்கள்...” என்று ஆரம்பித்து அந்தத் திட்டத்தை ராஜேஷ் விளக்க ஆரம்பித்தான். அந்தத் திட்டத்தில் மனோகர் மனம் ஒட்டவில்லை. கத்தியால் குத்தியவர்கள் தப்பிக்க அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்ற திட்டத்தில் குறையிருக்கவில்லை. எங்கே எத்தனை பேர் இருப்பார்கள். எங்கே எப்படிப் பதுங்க வேண்டும். எப்போது அவர்கள் வேண்டுமென்றே கவனக்குறைவாக இருப்பார்கள், அப்போது எப்படி அங்கிருந்து போக வேண்டும், எந்த இடத்தில் கூடுதல் கவனம் தேவை, அங்கிருந்து தப்பித்துச் செல்வதெப்படி என்று படிப்படியாகச் சொன்னாலும் மனோகர் அந்தத் திட்டத்தில் அபாயத்தை உணர்ந்தான். கடத்தல் குற்றத்தில் சிக்கியவன் மேல் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற  குற்றத்தையும் சேர்க்க செந்தில்நாதன் போட்டுக் கொடுத்த திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வந்தது

சாதாரணமாகத் தப்பிக்க முயன்று மாட்டினால் கூடப் பரவாயில்லை. கொலை செய்ய முயன்ற குற்றமும் சேர்ந்து மாட்டினால் அது நிச்சயமான ஆபத்து...அதை மனோகர் ராஜேஷிடம் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டி விட்டுச் சொன்னான். ”நான் கொடுத்த பத்து லட்சத்துக்கு இதை விட நல்லத் திட்டத்தை எதிர்பார்த்தேன்...”

ராஜேஷ் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “நீ சொல்வதும் சரி தான். அவர்கள் கண்டிப்பாக நம்மை மாட்டி விட நினைக்க மாட்டார்கள். அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் மேல் தப்பில்லை, அவர்களையும் மீறி நடந்த வேலை என்று காண்பிக்க தான் அதிகமாய் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கும் படுகிறது. நமக்குத் திருப்தி இல்லாத திட்டத்திற்கு நாம் ஒத்துக் கொள்ள வேண்டாம்...”

மனோகர் சந்தேகத்துடன் கேட்டான். “ஒரு வேளை அந்தத் திட்டம் மட்டும் தான் எங்களால் முடியும் என்று அவர்கள் சொன்னால்....?”

ராஜேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “பணத்தைத் திருப்பித் தர சொல்லி விட வேண்டியது தான்....”

மனோகர் ஆச்சரியத்துடன் கேட்டான். “அதற்கு ஒத்துக் கொள்வார்களா?”

ராஜேஷ் ரகசியமாய்ச் சொன்னான். “நான் ஒரு பெரிய கூட்டத்தில் முக்கியமான ஆள். எங்கள் ஆட்கள் அடிக்கடி எதிலாவது மாட்டி இங்கே வந்து போவார்கள். சிறிது காலச் சிறைவாசம் என்றால் முடித்து விட்டுப் போவோம். அதிகமான காலம் என்றால் கப்பம் கட்டி விட்டு இடையில் சிறிது காலம் வெளியே போய் போவதும் உண்டு. அவசியமான சமயத்தில் தப்பித்துப் போவதும் உண்டு. அதில் பேரம் பேசி வேண்டியதை சாதித்துக் கொள்வது அடிக்கடி நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான். அதனால் இது உண்மையில் ஒரு வியாபாரம் தான். இங்கே பேச்சு வார்த்தையில் இரண்டு தரப்பும் சுத்தமாக இருப்போம். ஒருவன் ஏமாற்றினால் மறுபேச்சு கிடையாது. தீர்த்துக் கட்டவும் எங்களிடம் ஆள் இருக்கிறது. அதே மாதிரி நாங்களும் ஏமாற்ற மாட்டோம். அதனால் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு திட்டம் ஒன்று சொல்லி நமக்கு அதிருப்தி இருந்தால் தாராளமாக மாற்றி யோசிக்கச் சொல்லி நாம் கேட்கலாம். பணம் வாங்கிய அவர்கள் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். இது எங்களுக்கிடையே இருக்கும் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். அதனால் அதற்கு நீ கவலைப்பட வேண்டாம். இன்றைக்கு மதியமே போய்ப் பேசி விட்டு வருகிறேன்...”

மதியம் ராஜேஷ் வேறொரு திட்டத்துடன் வரும் வரை மனோகருக்கு இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் வேறு திட்டம் தருவார்களா? தந்தால் அந்தத் திட்டம் என்னவாக இருக்கும், அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கும், மாட்டிக் கொள்ளும்படியான அம்சங்கள் எதாவது இருக்குமா, மாட்ட வைத்து விடுவார்களா என்று பல விதமான எண்ணங்கள் வர ஆரம்பித்தன. நேரம் போகப் போக வர ஆரம்பித்த எண்ணங்கள் அவனுக்கே பயங்கரமாக இருந்தன. தன்னையே திட்டிக் கொண்டான். ’யாருடைய ஆள் நீ? விஸ்வத்தின் ஆள் இப்படிப் பயப்படலாமாஉன்னைப் பார்த்து இந்தத் தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சரும் அவர் குடும்பமுமே பயப்பட்டிருக்கிறதே, அப்படிப்பட்ட நீ இப்போது பயந்து நடுங்கலாமா? சிறைத்தண்டனை ஒரு ஆளை இப்படியெல்லாமா கோழையாக்கி விடும்?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டு பலவந்தமாகத் தைரியம் வரவழைத்துக் கொண்டான். ஆனால் ஓரிரு நிமிடங்கள் கழித்து மனம் மறுபடி கவலைப்பட ஆரம்பித்தது.

வழக்கமான நேரம் முடிந்தும் ராஜேஷ் வரவில்லை. நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்தது…. ராஜேஷ் மிகவும் தாமதமாகத் தான் வந்தான். அவனிடம் மனோகர் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன சொல்கிறார்கள்?”

ராஜேஷ் அவனிடம் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான். “புதிய திட்டம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதில் நானும் உன்னுடன் சேர்ந்து வெளியே போக வழியில்லை

மனோகருக்கு ராஜேஷ் தப்பிப்பதிலோ அங்கேயே இருந்து விடுவதிலோ எந்த விதமான சங்கடமும் இருக்கவில்லை. ஆனால் அதை அப்படியே வெளிப்படுத்தி விட முடியுமா என்ன? அதனால் முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டினான்.

ராஜேஷ் சொன்னான். “அது பரவாயில்லை. எனக்குத் தேவைப்படும் போது நான் போய்க் கொள்வேன். நீ தப்பித்தால் அதுவே எனக்குப் போதும்...”

மனோகர் மனதில் இருந்த பெரிய பாரம் விலகியது. ஆனால் அதை அவன் உடனடியாகக் காட்டி விடாமல் முகத்தில் சிறிது சோகத்தைத் தக்க வைத்துக் கொண்டு தலையாட்டினான். பின் மெல்லக் கேட்டான். “அவர்கள் திட்டம் என்ன?”

நீ நாளை மதியம் மூன்றரை மணிக்குக் கடுமையான வயிற்று வலி இருப்பது போல் நடி. உன்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள். அது நிஜமான வயிற்று வலி தான் என்பறு சொல்வதற்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து பணமும் கொடுத்து விட்டார்கள். ஆஸ்பத்திரியில் உனக்குப் பலத்த காவல் ஆரம்பத்தில் இருக்கும். ஆனால் உனக்கு லேசாக மயக்க மருந்து தந்து சிகிச்சை தருவது போல் அந்த டாக்டர் ஏற்பாடு செய்வார், அப்போது நீ மயக்கத்தில் இருப்பாய் என்பதால் உனக்குக் காவலைக் குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார்கள். உனக்கு மயக்கம் இரவு இரண்டு மணிக்கு மேல் தான் தெளியும் என்று டாக்டர் சொல்வார். ஆனால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலேயே உனக்கு மயக்கம் தெளிந்து விடும். பன்னிரண்டு மணியில் இருந்து ஒன்றரை மணிக்குள் நீ தப்பித்து விட வேண்டும். ஒன்றரை மணிக்குத் திரும்பவும் காவல் பலப்படும். நீ மயக்கம் தெளிவது இரவு இரண்டு மணிக்கு என்று டாக்டர் சொல்வார் என்பதால் அதற்கு அரை மணி நேரம் முன்பே காவல் பலப்பட்டு விடும். ஆக நீ தப்பித்துப் போக உன்னிடம் இரவு பன்னிரண்டு முதல் ஒன்றரை மணி வரை சமயம் இருக்கிறது. காசு வாங்கியவர்கள் நீ வெளியே தப்பித்துப் போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.. ஆனால் நீ திரும்பவும் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.... மாட்டிக் கொண்டால் எந்தக் காரணம் வைத்தும் உன்னைத் தப்பிக்க வைத்தார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்து விடக் கூடாது... அதனால் அங்கிருந்து நீ எங்கே போவாய், எப்படி ஒளிந்து கொள்வாய் என்பதெல்லாம் உன்னைச் சேர்ந்தது....”

மனோகர் தலையாட்டினான். ராஜேஷ் அக்கறையுடன் கேட்டான். “உனக்கு ஒளிந்து கொள்ள ஏதாவது பாதுகாப்பான இடத்தை நான் ஏற்பாடு செய்து தர முடியும். வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேள்

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. Super sir. Very interesting.

    ReplyDelete
  2. மனோகர் எப்போது தான் தப்பிப்பான்? கணிக்க முடியவில்லையே!

    ReplyDelete
  3. மனோகர் நல்லா வகையாக மாட்டிகிட்டான்.

    ReplyDelete