தானாஜி மலுசரே சிங்கக்கோட்டைக்குக் கிளம்பிய போது ஜீஜாபாயே
ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து “வெற்றி நிச்சயம் மகனே” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
தானாஜி சிவாஜி தன்னை நம்பி இந்த மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்ததும், அவன் தாய் இப்படி
வாழ்த்தி அனுப்பியதையும் தன் வாழ்வின் மிகச்சிறந்த சௌபாக்கியம் என்று நினைத்தான். சிவாஜி
தானாஜி அழைத்து வந்த 12000 வீரர்களுடன் தன் மாவல் வீரர்கள் ஆயிரம் பேரையும் அனுப்பி
வைத்தான். சிவாஜி பல கோட்டைத் தாக்குதல்களில் பயன்படுத்திய யஷ்வந்த் என்ற பெரிய மலை
உடும்பும் ஒரு பெரிய பெட்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.
13000
வீரர்கள் ஒருங்கே சேர்ந்து சென்றால் கண்டிப்பாக ஒற்றர்கள் மூலம் அவர்கள் செல்லும் இடத்தை
எதிரிகள் அறிந்து விடக்கூடும் என்பதால் அவர்கள் பல சிறு குழுக்களாகப் பிரிந்து பல வழிகளில்
பயணம் செய்தார்கள். ஒரு இரவு அனைவரும் சிங்கக்கோட்டை அருகே சென்று சேர்ந்தார்கள்.
சிங்கக்
கோட்டையின் பின்பகுதி செங்குத்தான நீண்ட மலைக்குன்றின் மீது அமைந்திருந்தது. அந்தச்
செங்குத்தான மலைப்பகுதி வழியாக எந்தப் படையும் வருவதற்குச் சாத்தியமில்லை என்பதால்
பின்பகுதியில் எப்போதும் குறைவான கோட்டைக் காவல்வீரர்களே இருந்தார்கள். சிவாஜியின்
ஒற்றர் தலைவன் சொன்னபடியே இரவுக் கேளிக்கைகளின் சத்தங்கள் கோட்டையிலிருந்து கேட்டுக்
கொண்டிருந்தன.
தாங்கள்
முன்பே திட்டமிட்டிருந்தபடி தானாஜி மலுசரே ஆயிரம் மாவல் வீரர்களுடன் சிங்கக் கோட்டையின்
பின் பகுதிக்குச் சென்றான். மற்ற வீரர்கள் தானாஜியின் சகோதரன் சூர்யாஜி மலுசரேயின்
தலைமையில் ஒரு பிரிவும், மாமன் ஷேலரின் தலைமையில் இன்னொரு பிரிவும் கோட்டையின் இரண்டு
பிரதான வாசல்களை அடையும்படியான தொலைவுகளில் இரு பக்கங்களிலும் மறைவில் நின்றன.
தானாஜி
மலுசரே பெரிய பெட்டியிலிருந்து யஷ்வந்த் என்ற மலை உடும்பை எடுத்தான். அந்தப் பெரிய
மலை உடும்பு இது வரை 27 கோட்டைச் சுவர்களை ஏற சிவாஜி படையினருக்கு உதவி இருக்கிறது.
பல அடிகள் வரை வளரும் வகை மலை உடும்பு அது. தானாஜி மலுசரே அதை வணங்கி விட்டு பின் அதன்
வயிற்றில் உறுதியான கயிறு ஒன்றைக் கட்டி விட்டுப் பின் அதை சிங்கக் கோட்டையின் பின்புற
மலைக்குன்றின் மீது ஏற வைத்தான். இரண்டு முறை பாதி தூரம் சென்ற யஷ்வந்த் மலை உடும்பு
பின் திரும்பக் கீழேயே வந்தது.
தானாஜியுடன்
இருந்த மாவல் வீரன் ஒருவன் “சகுனம் சரியில்லை தலைவரே. இது போல் இது எப்போதும் செய்ததில்லை”
என்றான். அவன் இதற்கு முன் சிவாஜியுடன் பல போர்களில் கலந்து கொண்டவன்.
தானாஜி
சொன்னான். “தோல்வி ஒன்று தான் அபசகுனம் வீரனே. திரும்பிப் போவது ஒன்று தான் கேவலம்.
சிவாஜி என்னை நம்பி இந்த மாபெரும் வேலைக்கு அனுப்பி இருக்கிறான். சிறிய காரணங்கள் சொல்லி
நான் திரும்புவதற்கில்லை….”
அந்த
மலை உடும்பிடமும் தானாஜி சொன்னான். “இது அந்த வீரனுக்குச் சொன்னது மட்டுமல்ல யஷ்வந்த்.
உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இனி உச்சியை எட்டி கெட்டியாகப் பிடித்துக் கொள்வதை
விட்டுச் சோம்பல் காட்டினால் அது உனக்கு சோபை தராது சொல்லி விட்டேன்”
மறுபடி
மலை ஏற வைத்தபின் யஷ்வந்த் ஒழுங்காக மலை ஏறியது. கோட்டையின் உச்சியை எட்டிய அந்த மலை
உடும்பு மிக உறுதியாகக் கோட்டையின் சுவரைக் கவ்விப் பிடித்துக் கொள்ள தானாஜியும், மற்ற
மாவல் வீரர்களும் ஒருவர் பின் ஒருவராகச் சத்தமில்லாமல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு
ஏற ஆரம்பித்தார்கள்.
மேலே சென்று சேர்ந்தவர்கள் சத்தமில்லாமல் அங்கேயே பதுங்கிக் கொண்டார்கள்.
சுமார் முன்னூறு பேர் மேலே சென்ற பிறகு கயிறு அறுந்து போனது.
கயிறு
அறுந்து வீரர்கள் கீழே விழுந்த சத்தம் கேட்டு மேலே இருந்த சிங்கக் கோட்டைக் காவல் ஒருவன்
வீரன் என்ன சத்தம் என்று எட்டிப் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் அவன் எட்டிப் பார்த்தது
தெரிய கீழே இருந்த மாவல் வீரன் குறிபார்த்து அம்பொன்றை விட்டான். அவன் சத்தத்துடன்
கோட்டையின் மேல் இருந்து கீழே விழ, வேறு சில வீரர்கள் என்ன ஆயிற்று என்று பார்க்க விளிம்புக்கு
வந்தார்கள். கீழே இருந்து சரிமாரியாக அம்புகள் பறந்தன. அந்தக் கோட்டை வீரர்களும் அம்புகள்
உடல்களில் தைக்கச் சரிந்தார்கள்.
பின்னால்
மிஞ்சியிருந்த கோட்டை வீரர்கள் தீப்பந்தங்களை எரிய வைத்து கோட்டையின் பின்புறத்தை ஒளி
வெள்ளத்தில் மிதக்க வைத்து நிலவரத்தை ஆராய முற்பட்டார்கள். ஏற்கெனவே சிங்கக் கோட்டையின்
மேல் ஏறி இருந்த தானாஜியும் முன்னூறு மாவல் வீரர்களும் அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
கீழே
காத்திருந்த மற்ற இரண்டு பிரிவுகளுக்கு சமிக்ஞைக் குரல் எழுப்பி விட்டு மாவல் வீரர்களில்
நூறு பேர் கோட்டையின் இரண்டு வாசற்கதவுகளை உள்ளிருந்து திறந்து விட விரைந்தார்கள்.
கேளிக்கை விருந்துகளில் பல வீரர்கள் போதையுடன் விழுந்திருந்த போதும் விழிப்பில் இருந்த
வீரர்கள் அவர்களுடன் போரிட்டார்கள்.
ஒரு
காவல் வீரன் ஓடிப்போய் கோட்டைத் தலைவன் உதய்பானுக்குத் தகவல் தெரிவித்தான். அவனும்
போதையில் மயங்கியே உறங்கி இருந்த போதும் தகவல் தெரிந்தவுடன் போதை கலைந்து வீரத்துடன்
எழுந்தான்.
உதய்பானும்
அவனுடைய வீரர்களும் ஆரம்பத்தில் போதையினால் சரியாகக் கோட்டையைக் காக்கத் தவறி விட்டாலும்
வேகமாய் சிறப்பாய் போர் புரியும் கவன நிலைக்கு வந்தார்கள். உதய்பானும், தானாஜியும்
பெரும் வீரத்துடன் போராடி தங்கள் எதிரிகளைக் கொன்று குவித்து பின் ஒருவருக்கொருவர்
நேரடியாகவே போர் புரிந்தார்கள். மிகத் திறமையாகவும், வீரத்துடனும் போராடிய இருவரும்
ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு வீழ்ந்தார்கள்.
தானாஜி
மலுசரே உயிரற்றுக் கீழே வீழ்ந்ததும் மாவல் வீரர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். சிங்கக்கோட்டையின்
ராஜபுதன முகலாயர்களின் வீரர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. ஆனாலும் கோட்டையின் பீரங்கிகளைக்
கொண்டு வெளியே இருந்த மராட்டிய வீரர்களை சிங்கக் கோட்டை வீரர்கள் கொல்ல உள்ளிருந்த
மாவல் வீரர்கள் அனுமதிக்கவில்லை. பீரங்கிகளை இயக்காமல் பார்த்துக் கொண்டதுடன் மிகவும்
கஷ்டப்பட்டு கோட்டையின் இரு வாசற்கதவுகளையும் எப்படியோ திறந்து விட்டார்கள். சூர்யாஜி
மலுசரேயும் ஷேலரும் தங்கள் படைகளுடன் உள்ளே நுழைந்தார்கள்.
தானாஜி
மலுசரே இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் சூர்யாஜி மலுசரேயும் ஷேலரும் கொதித்துப் போனார்கள்.
அண்ணனின் மரணத்திற்குப் பழிவாங்கவும், அவன் ஆத்மா சாந்தியடையவும் ஒரே வழி இந்தப் போரில்
சிங்கக் கோட்டையை வெல்வது தான் என்று உடனே தீர்மானித்த சூர்யாஜி குதிரையின் மீதமர்ந்து
வாளை ஏந்தியபடி “ஹர ஹர மஹாதேவ்” என்று கர்ஜித்தபடி எதிரிகளை நோக்கி எமனைப் போல் பாய்ந்தான்.
அந்தக்
கர்ஜனையில் மராட்டியப் படையில் ஒவ்வொரு வீரனுடைய இதயத்திலும் வீரத்துடிப்பு ஏற்றப்பட்டது.
“ஹர ஹர மஹாதேவ்” “ஹர ஹர மஹாதேவ்” என்ற வீரமுழக்கம்
மராட்டிய வீரர்களால் தொடர்ந்து முழங்கப்பட்டது. ஒவ்வொரு முழக்கத்தின் முடிவிலும் எதிரிகள்
பலர் கீழே வீழ்ந்தார்கள். சில மணி நேரங்களில் சிங்கக் கோட்டை மராட்டியர் வசமானது. சிங்கக்
கோட்டையில் முகலாயர் கொடி இறக்கப்பட்டு சிவாஜியின் கொடி ஏற்றப்பட்டது.
வென்றதும்
பெரிய வைக்கோற்போர் குவிப்பில் நெருப்பு பற்ற வைத்து தீ ஜுவாலை ஏற்ற சிவாஜி சொல்லியிருந்தான்.
அப்படியே சூர்யாஜி மலுசரே ஏற்றி வைத்தான். அங்கே எரிந்த தீ ஜுவாலையைப் பார்த்தவுடன்
சிவாஜி பெருமகிழ்ச்சியுடன் ராஜ்கட்டிலிருந்து புறப்பட்டான்.
சிங்கக்
கோட்டையை அவன் அடைந்த போது அவன் எதிர்பார்த்த உற்சாகத்தில் அவன் ஆட்கள் யாருமில்லாதது
அவனுக்குத் திகைப்பை அளித்தது. அவன் கோட்டையின் உச்சியைப் பார்த்தான். அவன் கொடி தான்
அங்கே பறந்து கொண்டிருந்தது. பின் ஏன் இந்த இறுக்கம் என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தவன்
தானாஜி மலுசரேயின் வீழ்ந்த உடலைப் பார்த்தான்.
குதிரையிலிருந்து
திகைப்புடனும், பெருந்துக்கத்துடனும் கீழிறங்கிய சிவாஜியிடம் சூர்யாஜி மலுசரே உடைந்த
குரலில் சொன்னான். “அரசே. என் அண்ணன் உங்களுக்குச் சிங்கக் கோட்டையை வென்று கொடுத்து
விட்டான்….”
கண்களில்
நீர் அருவியாய் வழிய நண்பனின் பிணத்தை வாரி எடுத்து தானாஜியின் முகத்தில் நெஞ்சில்
இறுக்கமாய் அணைத்துக் கொண்டு சிவாஜி துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறினான்.
“கோட்டை கிடைத்தது. ஆனால் சிங்கத்தை நான் இழந்து விட்டேனே”
(தொடரும்)
என்.கணேசன்
Very touching episode
ReplyDeleteSemma episode sir
ReplyDeleteWow ....wwhat a dialogue delivery ....!?
ReplyDeleteகோட்டை கிடைத்தது ...
சிங்கத்தை இழந்துவிட்டேன் ....!!
இதனால் தான் உடும்பு மேலே ஏறவில்லை போலும்.... இருந்தாலும் வீரர்கள் பின்வாங்காமல் எதிரியின் பலவீனத்தை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கொண்டனர்....
ReplyDelete