மூன்று நாட்களில் தானாஜி மலுசரே தன் சகோதரன் சூர்யா மலுசரேயுடனும்,
தாய்மாமன் ஷெலருடனும், 12000 வீரர்களுடனும் ராஜ்கட் வந்து சேர்ந்தான். தனது இளமைக்கால
நண்பனை சிவாஜி ஓடிச் சென்று அன்புடன் கட்டியணைத்துக் கொண்டான். “எப்படி இருக்கிறாய் நண்பா?”
தானாஜி
மலுசரே “நலமே நண்பா. உன் அழைப்பு வந்த போது என் மகனின் திருமண ஏற்பாடுகளில் இருந்தேன்.
அத்தனையும் விட்டு விட்டு நீ கேட்டபடி 12000 வீரர்களுடன் வந்து நிற்கிறேன். ஏன் அவசரமாய்
அழைத்தாய். என்ன ஆயிற்று?”
சிவாஜி
நடந்தவற்றைச் சொன்னான். தானாஜி மலுசரே வாய்விட்டுச் சிரித்தான். சிவாஜி கேட்டான்.
“ஏன் சிரிக்கிறாய் தானாஜி?”
“ஒரு
காலத்தில் பேரறிவு மிக்கவராய் நாம் கணக்கிட்ட முகலாயச் சக்கரவர்த்தி இப்படியொரு பரிதாப
நிலைக்கு வந்து சேர்வார் என்று நினைக்கவில்லை. விதியின் விளையாட்டை எண்ணிச் சிரிக்கிறேன்.
ஒரு காலத்தில் அவர் அரியணை ஏறுவதற்காகச் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் அவர் பிள்ளைகளும்
அரங்கேற்றி விடுவார்களோ என்று நடுநடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பரிதாப மனிதனைப் பார்க்கிறேன்.
நம் ஆசிரியர் ‘கர்மா’ ‘கர்மா’ என்று அடிக்கடி சொல்வாரே. அந்தக் கர்மா இப்போது ஔரங்கசீப்
நிலைமையில் நன்றாகப் புரிகிறது”
சிவாஜி
சொன்னான். “அந்த மனிதரின் கர்மா நம்மையும் சேர்த்து அல்லவா இழுக்கிறது”
தானாஜி
மலுசரே சொன்னான். “உன்னுடன் உன் பவானியும் இருக்கிறாளே. அவள் கருணையால் நீ எல்லா எதிர்ப்புகளையும்
வென்றல்லவா வந்து கொண்டிருக்கிறாய்”
சிவாஜி
ஒன்றும் சொல்லாமல் அடக்கத்துடன் புன்னகைத்தான். தானாஜிக்குத் தன் நண்பனை நினைக்கவே
பெருமையாக இருந்தது. இத்தனை கால நட்பில் தன்மானத்தை சிவாஜி தொடர்ந்து வெளிப்படுத்தி
இருக்கிறானே ஒழிய என்றுமே கர்வத்தை வெளிப்படுத்தியதில்லை. அவன் அடைந்திருக்கும் உயரங்களுக்கு
யாரானாலும் கர்வத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்று தானாஜி நம்பினான். அவன் சலசலக்காமல்
நிறைகுடமாகவே இருப்பதற்குக் காரணம் அவனுடைய ஆன்மீக, தத்துவார்த்த ஈடுபாடுகள் என்று
தோன்றியது. ஒரு காலத்தில் தாதாஜி கொண்டதேவ் தத்துவார்த்த விஷயங்களுக்கு வரும் போது
தானாஜி உட்பட அத்தனை பேரும் மெல்ல அங்கிருந்து நகர்ந்து விட்டாலும் சிவாஜியும் அவரும்
நள்ளிரவு வரை அதைப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி தானாஜிக்கு நினைவு வந்தது.
தானாஜி
நெகிழ்ந்த குரலில் சொன்னான். “சிவாஜி உன் ஆசிரியர் இப்போது இருந்திருந்தால் மிக மகிழ்ந்திருப்பார்….”
சிவாஜிக்கும்
ஆசிரியர் நினைவு மனம் நெகிழ வைத்தது. “அவர் இருந்திருந்தால் என்னை நிறைய விஷயங்களுக்கு
அதிகம் திட்டியும், வருந்தியும் இருப்பார் தானாஜி. தவறுகளே இல்லாத மனிதனாய், எல்லா
விஷயங்களிலும் நியாயமான மனிதனாய், சரியான வழியிலேயே இயங்கும் ஒரு இலட்சிய மனிதனாய்
நான் இருக்க வேண்டும் என்பதே அவர் எதிர்பார்ப்பாய் இருந்தது. அவர் அப்படித்தான் இருந்தார்.
ஆனால் சாதாரண நிலையில் இருக்கும் போது சரியாக இருக்க முடிவது போல் ஆளும் நிலைக்கு வரும்
போதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்க முடிவதில்லை…. எத்தனையோ தவறுகள் தெரிந்தும்
தெரியாமலும் செய்ய நேர்கிறது…..”
தானாஜி
மலுசரே சொன்னான். “இதைப் பற்றி எல்லாம் நினைவு வைத்திருக்கிற அளவிலாவது இருக்கிறாயே
அதுவே பெரிது தான் சிவாஜி. முழுவதுமாக நேர் பாதையிலேயே நம் சுயராஜ்ஜியக் கனவை நாம்
அடைந்து விட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது…..
ரோஹிதீஸ்வரர் கோயிலில் சபதம் செய்த நாளிலிருந்து எத்தனை தூரம் வந்திருக்கிறோம் என்று
யோசித்துப் பார். இந்த நீண்ட பயணத்தில் நான் அறிந்த வரை, நீ முடிந்த வரை உன் மக்களுக்கும்,
உன்னை உண்மையிலேயே சார்ந்திருக்கும் மனிதர்களுக்கும் நியாயமாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறாய்….”
சிவாஜிக்கு
ரோஹிதீஸ்வரர் கோயிலில் சபதம் செய்த நாள் நினைவுக்கு வந்தது. சிவாஜி உணர்ச்சிவசப்பட்ட
குரலில் சொன்னான். “அங்கு ஆரம்பித்து வந்திருப்பது மிக நீண்ட தூரம் தான். அன்றிருந்தவர்களில்
சிலர் இப்போது நம்முடன் இல்லையே தானாஜி. குறிப்பாய் நம் நண்பன் பாஜி பசல்கர்…. சாவந்தர்களுடன்
நடந்த போரில் வீரமரணம் அடைந்து விட்டானே”
தானாஜி
மலுசரேயும் இறந்து போன நண்பனின் நினைவில் சிறிது மனம் கனத்து அமர்ந்திருந்தான். இப்போதும்
சிவாஜி பாஜி பசல்கரின் குடும்பத்திற்குத் தேவையானதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறான்.
அவர்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டு வருகிறான். அவ்வப்போது நேரில் சென்றும் விசாரித்து
வருகிறான். சிவாஜியுடன் இணைந்தவர்கள் இறந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர்கள் குடும்பத்தை
அவன் கடவுளைப் போல கவனித்துக் கொள்வான் என்ற பேச்சு பலரும் மனதாரச் சொல்கிறார்கள்….
தானாஜி
மலுசரே சொன்னான். “நம் நண்பன் பாஜி பசல்கர் எந்த உலகில் இருந்தாலும் உணர்வு நிலையில்
நம் முன்னேற்றங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பான் சிவாஜி. இறந்தாலும் மனிதர்கள்
தாங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்களிடமிருக்கும் தொடர்பை முழுவதுமாக இழந்து விடுவதில்லை
என்று ஒரு சாது சொல்லக் கேட்டிருக்கிறேன். நுண் உணர்வு நிலையில் தொடர்பு இருந்து கொண்டே
இருக்கும் என்று அவர் சொல்வார். எந்த அளவு அது உண்மை என்று தெரியவில்லை….”
மனம்
லேசாகி, சிறிது நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பின்பு தானாஜி மலுசரே
கேட்டான். “நீ அழைத்த காரணம் என்ன? அதைச் சொல். ஔரங்கசீப்புக்கு நாம் எப்படி பதிலடி
தரப்போகிறோம்….?”
சிவாஜி
சொன்னான். “நாம் முகலாயர்களிடம் சிக்கியிருக்கும் நம் கோட்டைகளைத் திரும்ப எடுத்துக்
கொள்ளப் போகிறோம். முதலில் நாம் வெல்லப் போவது மிகக் கஷ்டமானதும், வலிமையானதுமான சிங்கக்
கோட்டை. அதை நீ எனக்குப் பெற்றுத் தரப் போகிறாய்”
தானாஜி
மலுசரே உற்சாகமானான். அவனை நம்பி இந்தக் கடினமான வேலையை சிவாஜி ஒப்படைப்பது அவனுக்கு
மிகப் பெருமையாக இருந்தது.
சிவாஜி
சொன்னான். “அந்தக் கோட்டையில் ஒரு வலிமையான படை இருந்து இது வரை வெளியிலிருந்து யாரும்
வென்றதில்லை. நாம் அங்கிருக்கையில் தான் செயிஷ்டகான் தலைமையிலும், ராஜா ஜஸ்வந்த்சிங்
தலைமையிலும் வந்த வலிமையான பெரும்படைகளைத் தோற்கடித்துத் துரத்தியிருக்கிறோம். இப்போது
அவர்கள் நிலைமையில் நாம். நம் நிலைமையில் அவர்கள்…. ஆனாலும் நாம் சாதித்துக் காட்ட
வேண்டும்.. முடியுமா உன்னால் தானாஜி?”
“முடியும்
என்ற நம்பிக்கை இல்லாமல் நீ என்னை அழைத்திருக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும் சிவாஜி.
நீ கண்டிப்பாக ஒரு திட்டத்தையும் யோசித்து வைத்திருப்பாய் என்பதும் தெரியும். உன் திட்டத்தைச்
சொல்….” என்று அதே உற்சாகத்தோடு தானாஜி சொன்னான்.
முதலில்
சிவாஜி தன்னிடம் ஒற்றர் தலைவன் சொன்னதை எல்லாம் தெரிவித்தான். பின் சொன்னான். “அவன்
சொன்னபடி உதய்பான் மிகச் சிறந்த போராளி, வலிமையானவன் என்பதையும் அவன் பிள்ளைகளும் அப்படியே
இருக்கிறார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை. அதே போல் பீரங்கிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன,
வெடிகுண்டுகள் வேண்டுமளவு வைத்திருக்கலாம் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் கோட்டையின்
உள்ளே ராஜா ஜெய்சிங் நிறைய செலவு செய்து மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வழியில்லை. ஏனென்றால்
கஞ்சனான ஔரங்கசீப் அந்த அளவு பணம் அனுப்பியிருக்கவில்லை என்பது தான் நிலவரம். அதனால்
உள்ளே இருக்கும் நிலைமை நம் காலத்தைப் போலவே தான் இருக்க வேண்டும்…. என்ன சொல்கிறாய்?”
தானாஜி
ஒத்துக் கொண்டு தலையசைத்தான்.
சிவாஜி
தொடர்ந்தான். “ஒற்றர் தலைவன் சொன்னதில் நமக்குச் சாதகமாக இருக்கும் விஷயங்கள் இரண்டு.
ஒன்று அங்கிருக்கும் ராஜபுதன வீரர், முகலாய வீரர் சேர்ந்த கூட்டம் மது மாமிசப் பிரியர்
கூட்டம். இன்னொன்று இரவு கேளிக்கைகள் வழக்கமாக நடக்கும் என்பது….. அதனால் அவர்களைத்
தாக்க நமக்கு மிகவும் உகந்த நேரம் இரவு தான்…… ஆனால் நம்முடைய மிகப்பெரிய பிரச்னை கோட்டைக்குள்ளே
நுழைவது. அது சாதாரணமாக யாராலும் முடியாத விஷயம் தான். ஆனால் நாம் சாதாரண மனிதர்கள்
இல்லையே…..”
சொல்லி
விட்டு சிவாஜி புன்னகைக்க தானாஜி தணியாத உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியோடும் நண்பனைப்
பார்த்தான்.
நிலத்தில்
கரிக்கட்டையில் சிங்கக்கோட்டையின் படம் வரைந்து சிவாஜி விவரிக்க ஆரம்பித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
நண்பர்களின் சந்திப்பு.... அவர்களின் இளைமைக் கால நினைவுகள் அற்புதம்.... தொடர்ந்து படித்து வரும் எங்களுக்கும் 'சிவாஜி எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டான்?' என்று தோன்றுகிறது...
ReplyDeleteVery interesting sir.
ReplyDeleteசிவாஜி வாழ்க்கை சூப்பர் பயணம்
ReplyDelete