Monday, May 11, 2020

சத்ரபதி 124


ந்த முகலாய அதிகாரிக்குச் சந்தேகம் வரக் காரணம் சாம்பாஜி முகத்தில் தெரிந்த ராஜ களை தான். ஆனால் அந்தச் சிறுவனுடன் வந்து கொண்டிருந்த அந்தணர் கருத்து மெலிந்து இருந்தார். அந்த அதிகாரி அவர்கள் இருவரையும் வழியில் நிறுத்தினான்.

“யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று அந்த முகலாய அதிகாரி கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

உடனே மனதில் எழ ஆரம்பித்த பீதியை சாம்பாஜி தந்தையை நினைத்துக் கொண்டு நிறுத்தினான். அவனுக்கு தந்தை எப்போதும் சொல்லும் இறைவனை நினைப்பதை விட அவரையே நினைப்பது அதிக மனோபலத்தைத் தந்தது. தந்தை இங்கு இருந்திருந்தால் எப்படி அசராமல் இருந்திருப்பார் என்று யோசித்த போதே அந்த அசராத அமைதி அவனைத் தொற்றிக் கொண்டது. அவன் அமைதியாக காசிஜியைப் பார்த்தான். பெரியவர்கள் இருக்கையில் சிறுவர்கள் பேசக்கூடாது என்ற மரியாதை காட்டுவது போல் இருந்தது அவன் பாவனை.

காசிஜி இது வரை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டதில்லை. இது போன்ற நிலைமைகளைச் சந்தித்துப் பழக்கம் இல்லா விட்டாலும் சிறுவனே ஆனாலும் சாம்பாஜியின் பதறாத அமைதி அவனுக்கு உடனடிப் பாடமாக இருந்தது. அவன் அமைதியாக அந்த முகலாய அதிகாரியிடம் சொன்னான். “ஐயா நாங்கள் பீஜாப்பூரைச் சேர்ந்தவர்கள். காசி யாத்திரை சென்று வருகிறோம்.”

அதிகாரி கேட்டான். “இந்தச் சிறுவன் உன் உறவா?....”

காசிஜி சொன்னான். “ஐயா இது என் மகன்”

அதிகாரி சந்தேகத்துடன் கேட்டான். “பார்த்தால் உன் மகனைப் போல் தெரியவில்லையே”

காசிஜி சொன்னான். “இவன் தாயின் சாயல் இவனுக்கு வந்திருக்கிறது. நாங்கள் மூவருமாகத்தான் யாத்திரை கிளம்பினோம். வழியில் இவன் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். என்ன செய்வது விதி”

சாம்பாஜியை அந்த அதிகாரி கூர்ந்து பார்க்க அவன் இறந்து போன தன் தாய் சாய்பாயை நினைத்தபடி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான். அவனுக்குத் தாயின் முகம் சரியாக நினைவில்லை…. அவன் கண்களில் உண்மையாகவே நீர் திரையிட்டது.

சிறுவனின் முகத்தில் படிந்த சோகம், இருவரும் பதறாமல் அமைதி காத்த விதம் எல்லாம் அவர்கள் சொல்வது உண்மையாகவே இருக்கும் என்று நம்பத் தூண்டினாலும் அந்த அதிகாரிக்கு இன்னும் சிறிது சந்தேகம் இருக்கத்தான் செய்தது. அந்தச் சிறுவன் அவனுக்கு அந்தணனாகத் தெரியவில்லை…..

அந்த அதிகாரி சொன்னான். “அப்படியானால் இருவரும் ஒரே தட்டில் உணவருந்துங்கள் பார்ப்போம்”

அந்தணர்கள் அந்தணர்களல்லாதவர்களுடன் ஒரே தட்டில் உண்ணாத காலம் அது. இத்தனை நாட்கள் சேர்ந்தே பயணித்து வந்தாலும் காசிஜியும், சாம்பாஜியும் தனித்தனித் தட்டுகளில் தான் உணவருந்தி வந்தார்கள். காசிஜி அமைதியாகத் தன் தட்டை எடுத்தான். சற்று முன் ஒரு வீட்டில் கட்டிக் கொடுத்த சோற்றையும், கறியையும் போட்டுக் கலந்தான். சாம்பாஜியைப் பார்த்து சாப்பிடச் சைகை செய்து விட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான். சாம்பாஜியும் சாப்பிட ஆரம்பித்தான். இருவரும் ஒரே தட்டில் எந்தத் தயக்கமும் இல்லாமல் சாப்பிட ஆரம்பித்ததும் அந்த அதிகாரி சந்தேகம் தெளிந்து அவர்களைப் போக அனுமதித்தான்.

அவர்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். கோதாவரி நதிக்கரையில் இருக்கும் ஒரு கிராமத்தை அடையும் வரை நடந்த அவர்கள் பின் அங்கு சிவாஜியின் ஆட்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த ஒரு குதிரையில் வேகமாக ராஜ்கட் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

சாம்பாஜியும் பாதுகாப்பாக வந்து சேர்ந்த பிறகு சிவாஜி நிம்மதி அடைந்தான். காசிஜி சகோதரர்கள் மூவருக்கும், கிருஷ்ணாஜி விஸ்வநாத்துக்கும், அவரது தாயாருக்கும் தாராளமாகச் செல்வங்களை வழங்கிய சிவாஜி அவன் படையினரால் பாதிக்கப்பட்டிருந்தும், அவனுக்கும், கிருஷ்ணாஜி விஸ்வநாத்துக்கும் ஒரு மழைநாள் இரவில் தங்க இடம் தந்து வறுமையிலும் உணவைப் பகிர்ந்தளித்த குடும்பத்தை மறந்து விடவில்லை….


குதிரைகள் நெருங்கி வரும் ஓசை கேட்டவுடன் இரண்டு மகன்களின் முகத்திலும் தெரிந்த பயத்தை மூதாட்டி கவனித்தாள். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் மராட்டிய வீரர்கள் குதிரைகளில் வந்தார்கள். அவர்களது பயிர்களை அழித்தார்கள். பொருட்களையும், பசுக்களையும் கவர்ந்து கொண்டு போனார்கள்…..

மூதாட்டி மகன்களைத் தைரியப்படுத்தினாள். “எதற்குப் பயப்படுகிறீர்கள்? இனி நம்மிடம் எடுத்துக் கொண்டு போக நம்மிடம் என்ன இருக்கிறது? அப்படியும் எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்றால் காய்ந்த ரொட்டிகள் தான் நம்மிடம் இருக்கின்றன…..” இன்று அவர்கள் அடுப்பு மூட்டியிருக்கவில்லை.

அவர்கள் தலையசைத்தார்கள். ஆனாலும் குதிரைகளில் இருந்து மராட்டிய வீரர்கள் இறங்கிய போது மனம் பதறத்தான் செய்தது. இப்போதெல்லாம் ஆள்பவர்கள் இந்த எல்லைப்புற கிராமங்களை தகுந்தபடி பாதுகாப்பதில்லை. அங்கிருந்து எடுத்துப் போக நாட்டின் செல்வங்கள் எதுவுமில்லை என்பது ஒரு காரணம். தனிமனிதர்களின் பொருட்கள் பறிபோவதில் ஆள்பவர்களுக்கு அக்கறையில்லை என்பது இன்னொரு காரணம்.

மூதாட்டியின் மூத்த மகன் விரக்தியுடன் பணிவுடன் கைகட்டி முன் வந்து நின்றான். சென்ற முறை மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது போல இந்த முறை மராட்டிய வீரர்கள் நடந்து கொள்ளவில்லை. பழங்களையும் பட்டாடைகளையும் பெரிய தாம்பாளங்களில் இறக்கி வைத்து பணிவுடன் வணங்கினார்கள்.

வீட்டவர்களுக்கு அவர்கள் இடம் மாறி வந்து விட்டார்களோ என்ற சந்தேகம் வந்தது. மராட்டிய வீரன் சொன்னான். “மன்னர் தங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொன்னார்…..”

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பட்டாடைகளைப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, பழங்களைச் சாப்பிட்டு நிறைந்த வயிற்றுடன் குதிரைகளில் ராஜ்கட் நோக்கிப் பயணமான போது மூதாட்டி மூத்த மகனிடம் சொன்னாள். “நம் வீட்டுக்கு அன்றிரவு வந்த பைராகி ராமேசுவரம் செல்லும் வழியில் சிவாஜிக்கு அறிவுரை வணங்கி விட்டுப் போயிருக்க வேண்டும். அதனால் தான் நம்மை கூப்பிட்டனுப்பி இருக்கிறான் போல் தெரிகிறது….”

“உன் கற்பனைக்கு அளவேயில்லையா அம்மா. அப்படி எல்லாம் இருக்க வழியில்லை…. மராட்டிய மன்னன் சிவாஜி தர்மவான். நியாயஸ்தர் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இல்லாத போது நடந்த அநியாயங்களை யாராவது அவருக்குத் தெரிவித்திருக்கலாம். அதை ஈடுகட்ட அவர் எதாவது இனாம் தர எண்ணி இருக்கலாம்….” என்று அவள் மகன் சொன்னான்.

மூதாட்டிக்கு அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் சொன்னாள். ”இருக்கலாம். ஆனால் அதுவும் அந்தப் பைராகியின் ஆசியே என்று தோன்றுகிறது. என்னவொரு தேஜஸ் அவருக்கு. அவர் வாயால் இழந்ததை எல்லாம் திரும்பப் பெறுவீர்கள் என்று சொன்னது தான் பலிக்கிறது என்று நினைக்கிறேன். அப்படி எதாவது இனாம் தந்தால் அதை மறுத்து விட்டு மன்னரிடம் ஏதாவது வேலை வாங்கிக் கொள். தன் பணியாளர்களுக்கும், வீரர்களுக்கும் தாராளமாகக் கூலி தருபவர், அவர்கள் அனைவரும் வசதியாக வாழ்கிறார்கள் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்…..”

அவனுக்கும் தாய் சொல்வது சரியே என்று தோன்றியது. இனாம் எத்தனை நாட்கள் வரும்? நிரந்தரமாய் நல்ல வருமானம் வந்தால் தேவலை. ஆனால் கிடைக்க வேண்டுமே!

ராஜ்கட் சென்று சேர்ந்த போது அவர்களை வரவேற்க சிவாஜியே தன் அரண்மனை வாசலில் நின்றிருந்தான். மூதாட்டிக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அந்த அரண்மனையும், மன்னன் வரவேற்க நின்றதும் அவளுக்குத் திகைப்பாக இருந்தது. மகன்களும், மருமகளும், அவளும் பயபக்தியுடன் கைகூப்பி நின்றார்கள்.

அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போய் அமரச் சொன்ன போது நால்வரும் அமரவில்லை. பணிவுடன் கைகூப்பியபடியே இருந்தார்கள். அவர்கள் யாரும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பது சிவாஜிக்கு வேடிக்கையாக இருந்தது.

சிவாஜி கட்டாயப்படுத்தி ஆசனங்களில் அவர்களை அமர வைத்து தன் வீரர்கள் அவர்கள் பயிர்களை அழித்து, பொருள்களையும், கால்நடைகளையும் எடுத்துக் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சொல்லி அவர்களுக்கு அதை ஈடுகட்ட என்ன தர வேண்டும் என்று கேட்டான்.

மூதாட்டியின் மகன் தயக்கத்துடன் சொன்னான். “தங்களிடம் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்”

சிவாஜி “அப்படியே ஆகட்டும்” என்றான். அது மட்டுமல்லாமல் அவனே ஒரு கணக்குப் போட்டு நஷ்டத்திற்கான பணத்தையும் தந்தான். நால்வர் முகத்திலும் பெருமகிழ்ச்சி தெரிந்தது. தரித்திரம் தீர்ந்தது என்று அவர்கள் நிம்மதியடைந்தார்கள்.

அவர்கள் கிளம்பத் தயாரான போது சிவாஜி அவர்கள் சாப்பிட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். தயக்கத்துடனும், பிரமிப்புடனும் அவர்கள் ராஜ போஜனம் சாப்பிட்டார்கள். சிவாஜி மூதாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான். தானே அந்த மூதாட்டிக்குப் பரிமாறினான். அந்த மூதாட்டி நிறைய கூச்சப்பட்டாள். இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி இத்தனை நாள் தவறாகப் பேசியிருக்கிறேனே என்று உண்மையிலேயே சங்கடப்பட்டாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்துக் கிளம்புகையில் சிவாஜி அந்த மூதாட்டி கையில்  தங்க நாணய முடிச்சு ஒன்றை சிவாஜி தந்தான். “தாயே இது தங்களுக்கு” என்றான்.

மூதாட்டி உடனடியாக மறுத்தாள். “மன்னரே. நீங்கள் பட்டாடைகள், பழங்கள் அனுப்பி வரவழைத்ததும், நஷ்ட ஈடு தந்ததுமல்லாமல் என் மகனை வேலைக்கு அமர்த்திக் கொண்டதும், இப்படி அன்னமளித்து தாங்களே உடன் அமர்ந்து உபசரிப்பதுமே எங்கள் நஷ்டங்களுக்குப் பலமடங்கு திருப்பித் தந்தது போல ஆகி விட்டது. எந்த ஜென்மத்துப் புண்ணியமோ என்று தான் நினைத்துக் கொள்கிறேன். இனி கூடுதலாக எதையும் நான் பெற்றுக் கொள்வதற்கில்லை”

சிவாஜி அவளுடைய கைகளில் கட்டாயப்படுத்தி அந்தப் பொன்முடிச்சைத் திணித்து கைகளை அன்பாகப் பிடித்துக் கொண்டே சொன்னான். ”தாயே இந்தப் பொன் முடிச்சு உட்பட நான் செய்தது எதுவுமே தாங்கள் தங்கள் இலையிலிருந்து எடுத்துப் போட்ட ஒரு ரொட்டிக்கு ஈடாகாது. இதைப் பெற்றுக் கொண்டு என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.”

மூதாட்டி திடுக்கிட்டு மன்னனை உற்றுப் பார்த்தாள். மெல்ல அந்தப் பைராகி தெரிந்தார். பின் எதுவும் தெரியாமல் அவள் கண்களில் நீர் நிறைந்தது. கண்ணீர் வழிய அவள் சிவாஜியின் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்…. அவள் குடும்பத்தினர் முகங்களிலும் திகைப்பும், நெகிழ்வும் தெரிந்தன….

(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

  1. Touching Episode. This novel is possible only by you sir. No one has tried so far to write a novel about the great Maratha warrior king.

    ReplyDelete
  2. சிவாஜி மூதாட்டியை கௌரவித்த விதம் மன நெகிழ்ச்சியான பதிவு. அனைத்து விதமான உணர்வுகளையும் அற்புதமாக வார்த்தைகளில் எழுத்துருவில் தந்து படிப்பவர்கள் மனதில் நிறைந்து விடுகிறீர்கள்.

    ReplyDelete
  3. காசிஜியும்... சாம்பாஜியும் பயணம் செய்யும் போது அக்கால முறைகள் சிலவற்றை கூறியது அருமை...

    சிவாஜி மற்ற மன்னர்களை போல காரியம் ஆனதும் கழட்டி விடாமல்.... அவர்களை தன் அரண்மனைக்கு அழைத்து கௌரவித்த விதம் உண்மையிலேயே அற்புதம்....இவற்றை படிக்கும் போது சிவாஜியின் மேல் உயர்ந்த மரியாதை ஏற்படுகிறது...

    அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து.... அரண்மனை உபசரிப்புகள்....உரையாடல்கள்... விடைபெறுதல்.... அனைத்து காட்சிகளும் மயிர் கூசச் செய்யும் அளவு அற்புதமாக வடிமைத்துள்ளீர்கள்...👌👏🙏🏽

    ReplyDelete
  4. Padikum pozhudhu manadhai negizha seidhu kannil neer vara vaikireergal migavum arumaiyana nadai

    ReplyDelete
  5. சத்ரபதி சிவாஜி இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .... !!
    உங்கள் எழுத்துக்களின் வாயிலாக அவருக்கு நீங்கள் ராஜமரியாதை செலுத்துகின்றீர்கள் ... உங்களோடு சேர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியைத்தருகிறது ...
    ஜெய்பவானீ ...

    ReplyDelete