Monday, May 4, 2020

சத்ரபதி 123


ஜீஜாபாய் பிரார்த்தனையில் இருந்த போது காவல் வீரன் வந்து சொன்னான். ”ராஜமாதா, தங்களைக் காண பைராகி ஒருவர் வந்திருக்கிறார். உடனே சந்திக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்”

களைப்புடன் ஜீஜாபாய் எழுந்தாள். பெருந்துக்கம் அவளை ஆட்கொண்டு சில காலம் ஆகி விட்டது. எந்தப் பிறவியில் செய்த பாவங்களோ இந்தப் பிறவியில் படாதபாடு படுத்துகின்றன. இந்தப் பைராகியை உதாசீனப்படுத்திய பாவமும் சேர்ந்து கொள்ள வேண்டாம், காக்க வைக்காமல் உடனே சந்திப்போம் என்ற எண்ணத்தோடு வெளியே வந்தாள். வெளியே நின்றிருந்த மகனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

பைராகியாகவே நினைத்து அவன் காலில் அவள் விழுந்து வணங்க முற்பட்ட போது தடுத்து நிறுத்தி சிவாஜி அவள் காலில் விழுந்து வணங்கினான். ஜீஜாபாய் பதறிப் போனாள். ”என்ன காரியம் செய்கிறீர்கள் துறவியே”

நிமர்ந்து அவளைப் பார்த்து சிவாஜி புன்னகைத்தான். மகனின் தீட்சண்யமான கண்களையும், கம்பீரமான புன்னகையையும் பார்த்தவுடன் அடையாளம் உணர்ந்த ஜீஜாபாயின் கண்கள் ஆனந்தத்தில் குளமாகின. “மகனே… மகனே… இந்த ஒரு நாள் வந்து விடாமலேயே போய் விடுமோ என்று நான் பயந்து கொண்டே இருந்தேன்” என்று சொல்லி சிவாஜியை ஜீஜாபாய் ஆரத்தழுவிக் கொண்டாள்.

சிவாஜி புன்னகை மாறாமல் கேட்டான். “என்னுடன் அன்னை பவானியும் இருக்கின்ற போது நீங்கள் ஏன் தாயே பயப்பட்டீர்கள்?”


சிவாஜியின் ராஜ்ஜியம் எங்கும் ஆனந்தம் பொங்கி வழிந்தது. எல்லாக் கோட்டைகளிலும் வெடிகள் முழங்கின. இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாடினார்கள். அவனை ஒரு முறை பார்க்க ராஜ்கட் கோட்டைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். மாளிகையின் உப்பரிகையிலிருந்து கையசைத்த அவனைக் கண்டு வெற்றி முழக்கமிட்டார்கள். அவன் தன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும், படைத்தலைவர்களிடமும், முக்கியப் பிரமுகர்களிடம் எப்படித் தப்பித்து வந்தேன் என்று தெரிவித்த கதைகள் மக்களிடமும் பரவ ஆரம்பித்தன. தோல்வியே இல்லாதவன் எங்கள் அரசன் என்று அனைவரும் அகம் மகிழ்ந்தார்கள்.

எங்கும் உற்சாகம், எங்கும் விழாக்கோலம் என்று ராஜ்ஜியம் கொண்டாடிக் கொண்டு இருந்த போது சிவாஜி அதிக காலம் அந்த மனநிலையில் தங்காமல் விரைவாக அதிலிருந்து மீண்டான். மந்திரிகளையும், படைத்தலைவர்களையும் உடனடியாகக் கூட்டி தற்போதைய நிலவரம் விசாரித்தான்.  முதலில் நிர்வாக விஷயங்கள் கேட்டறிந்த அவன் அடுத்ததாக அக்கம் பக்கத்து நிலவரங்கள் கேட்டான்.

மூத்த மந்திரி சொன்னார். “ராஜா ஜெய்சிங் இப்போது பீஜாப்பூர் சுல்தானிடம் போர் புரிந்து கொண்டிருக்கிறார் அரசே. சுல்தான் அலி ஆதில்ஷா சமீபத்திய காலம் வரை தோல்வி முகம் கண்டு வந்து அனைத்தையும் இழக்கும் நிலைக்கு வந்திருந்தாலும் கோல்கொண்டா சுல்தான் அவருக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். முகலாயர்களை எதிர்க்க அவரும் தன் படைகளை பீஜாப்பூர் சுல்தானுக்கு உதவியாக அனுப்பி இருக்கிறார். ராஜா ஜெய்சிங்குக்கு நம்முடன் போர் புரிந்த போது இருந்த படைபலம் இப்போது இல்லை. தில்லர்கானையும், பல படைப்பிரிவுகளையும் முகலாயச் சக்கரவர்த்தி வேறு இடங்களுக்குத் திருப்பி விட்டிருப்பதால் ராஜா ஜெய்சிங் இந்தப் போரில் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்….. கூடுதல் படைகளை அனுப்பும்படி ராஜா ஜெய்சிங் சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது…”

எதிரிகள் ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதால் உடனடி அபாயம் ராஜ்ஜியத்துக்கு இல்லை என்று நிம்மதியடைந்த சிவாஜி தான் தப்பி வர உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தகுந்த பதவிகள், சன்மானங்கள் தந்து கௌரவிக்கும் வேலையை முதலில் செய்தான். ஹீராஜிக்கு படைத்தலைவர் பதவியும், பரிசுகளும் தந்தான். அவனுக்கு உதவி செய்த வீரர்கள் அனைவருக்கும் பரிசுகளும், சன்மானங்களும் தாராளமாகத் தரப்பட்டன.  அடுத்ததாக சிவாஜி சாம்பாஜியைப் பத்திரமாக அழைத்து வர ஏற்பாடுகள் செய்தான்.


சிவாஜி ராஜ்ஜியத்தின் விழாக்கோலச் செய்தி ஔரங்கசீப்பின் காதுகளில் காய்ச்சிய ஈயமாய் விழுந்தது. செய்தியைக் கேட்டுக் கைகளைத் தட்டி குதூகலித்த அவன் மகள் ஜெப் உன்னிசா அவன் கடுங்கோபத்தைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ரோஷனாரா ஔரங்கசீப் காதுகளில் விழும்படி மருமகளைக் கடிந்து கொண்டாள். “எதிரி வென்று விட்டான் என்பதில் என்ன குதூகலம் வேண்டிக் கிடக்கிறது?..”

ஜஹானாரா சொன்னாள். “எதிரி வென்று விட்டான் என்று குதூகலம் அல்ல அது. தனி ஒரு மனிதன் இத்தனை சவால்களையும், பெரும் சக்திகளையும் மீறி எதிர்த்து நின்று சாதித்துக் காட்டி விட்டானே என்று பொதுவாய்ப் பாராட்டுகிற மனோபாவம் தான் அவளிடம் இருக்கிறது. கவிதை எழுதுகிறவர்களின் சுபாவம் இது. இது போன்ற வீரபிரதாபங்களை அவர்களால் சிலாகிக்காமல் இருக்க முடிவதில்லை…”

ஜெப் உன்னிசா பெரியத்தையின் புரிந்து கொள்ளலுக்காகவும், தனக்கு ஆதரவாகப் பேசியதற்காகவும் மகிழ்ந்து அன்பாகப் புன்னகைத்தாள். ரோஷனாராவுக்கு மூத்த சகோதரியின் மீது கோபம் பொங்கியது. ஜெப் உன்னிசாவை முறைத்ததைப் போல ஔரங்கசீப் மூத்த சகோதரியை முறைக்கவில்லை என்பதைக் கண்டதால் வந்த கோபம் அது. பல நேரங்களில் எதிர்நிலையில் இருந்தாலும் கூட அவள் தன் மீது சக்கரவர்த்திக்குக் கோபம் வராமலும், மரியாதை குறையாமலும் பார்த்துக் கொள்கிறாள் என்பது ரோஷனாராவுக்குப் பொறாமையாகவே இருந்தது.

ஔரங்கசீப் மகளிடம் ஏளனமாகச் சொன்னான். “சிவாஜி எதிர்த்து நின்று சாதிக்கவில்லை. ஓடிப் போய்த் தப்பித்திருக்கிறான்….”

ஜெப் உன்னிசா சொன்னாள். “இருக்கலாம். ஆனால் நம் சர்வ வல்லமையுள்ள படையும், அதிகாரிகளும், ஒற்றர்களும் பிடிக்க முடியாதபடி சாமர்த்தியமாக அல்லவா தப்பித்திருக்கிறான். அது எத்தனை பேருக்கு முடிகிற காரணம் தந்தையே”

மகளைக் கடுமையாகக் கண்டிக்க ஔரங்கசீப் வாயைத் திறந்த போது ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து தூதன் வந்தான்.  தற்போது பீஜாப்பூர் சுல்தானுக்கு கோல்கொண்டா சுல்தானும் உதவிக்கரம் நீட்டி இருப்பதால் இருபடைகளையும் சேர்ந்து தோற்கடிக்க கூடுதல் படை அனுப்ப ராஜா ஜெய்சிங் கோரிக்கை விடுத்திருந்ததை தூதன் தெரிவித்தான்.

ஔரங்கசீப் யோசித்தான். ரோஷனாராவுக்கு இதற்கு முன் சிவாஜியைக் கொன்று ராஜா ஜெய்சிங்கைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஜஹானாரா ஔரங்கசீப்பை அறிவுறுத்தி அவனும் அதன்படியே நடந்து கொண்டது நினைவுக்கு வந்தது. ஜஹானாரா ஆதரித்ததாலேயே அவளுக்கு ராஜா ஜெய்சிங் எதிரியாகி விட்டார். ஜஹானாரா வாயைத் திறந்து எதாவது சொல்லும் முன், ஔரங்கசீப் முழுதாகச் சிந்தித்து முடிவெடுக்கும் முன் தன் கருத்தைச் சொன்னாள்.

”ராஜா ஜெய்சிங்குக்கு இப்போது கூடுதல் படையை அனுப்பினால் அவர் அதை பீஜாப்பூர் கோல்கொண்டா படைகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்துவார் என்பது என்ன நிச்சயம்? அவருக்கு சிவாஜியிடம் முன்பே நட்பு உண்டு. சிவாஜியும் இப்போது அங்கே போய்ச் சேர்ந்து விட்டான். அவரும் சிவாஜியும் கூட்டாகச் செயல்படும் அபாயம் இருக்கிறது. கூடுதல் படை அனுப்பி அவர்கள் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டுமா?”

ஜஹானாராவுக்குச் சகோதரியின் கருத்து பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. அவள் அறிந்து ராஜபுதன ராஜாக்கள் நம்பிக்கைத் துரோகம் செய்வதில்லை. ஆனால் எதையும் யாரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் ஔரங்கசீப்புக்கு ரோஷனாராவின் சந்தேகம் சரியாகவே பட்டது. அவன் மனதில் சிவாஜியும் ஜெய்சிங்கும் கூட்டு சேர்ந்து விட்டதாகவே தோன்றியது. ஜஹானாரா எதுவும் சொல்வதற்கு முன்பு அவன் ரோஷனாராவிடம் சொன்னான். “நீ சொல்வதும் சரியாகத்தான் தெரிகிறது”

ரோஷனாராவுக்கு ஜஹானாரா மனதில் ஓடிய சிந்தனைகளை அவள் முகத்திலேயே படிக்க முடிந்தது. ஔரங்கசீப்பிடம் எதுவும் சொல்லாமல் ஜஹானாரா மௌனமாக அங்கிருந்து நகர்ந்தது தனக்குக் கிடைத்த பெரிய வெற்றியாக ரோஷனாரா உணர்ந்தாள்.

ரோஷனாரா ஔரங்கசீப்பிடம் கேட்டாள். “சிவாஜியின் மகன் என்னவானாம்?”

ஔரங்கசீப் சொன்னான். “ஒற்றர்களின் தகவலின்படி சிவாஜி தனியாகத்தான் ராஜ்கட் போய்ச் சேர்ந்திருக்கிறான். அவன் மகன் சாம்பாஜி இன்னும் நம் ராஜ்ஜியத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறான் என்றே தோன்றுகிறது”

ஔரங்கசீப் கவனம் சாம்பாஜியின் பக்கம் திரும்பியது. சிவாஜியைத் தவற விட்டதற்காக மனம் புழுங்குவதை விட சிவாஜியின் மகன் சாம்பாஜியைப் பிடிக்க அதிக முனைப்பு காட்டுவது முக்கியம் என்பதை உணர்ந்தான். இன்னும் சிவாஜி முழுமையாக வென்று விடவில்லை என்றும் அவன் மகன் சாம்பாஜி சிக்கினால் சிவாஜியை வளைப்பது மிக எளிதாகி விடும் என்று கணக்குப் போட்ட ஔரங்கசீப் அதற்கான கடுமையான முயற்சிகளை எடுக்கக் கட்டளையிட்டான்.


சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பித்து மதுரா வந்த போது அவனுக்கு உதவக் காத்திருந்த மூன்று அந்தணச் சகோதரர்களில் ஒருவனான காசிஜி தான் மதுராவிலிருந்து சாம்பாஜியை அழைத்துக் கொண்டு ராஜ்கட் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ஔரங்கசீப்பின் கட்டளைக்கிணங்க சாம்பாஜியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நாடெங்கும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் அவர்கள் ஜாக்கிரதையாகவே பயணம் செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் உஜ்ஜயினிக்கு வந்த போது சாம்பாஜியைப் பார்த்து ஒரு முகலாய அதிகாரி சந்தேகப்பட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. மிகவும் பரபரப்பான கட்டத்தில் தொடரும் என நிறுத்தி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள். அருமை

    ReplyDelete
  2. How many things are decided in politics is beautifully explained in this Aurangazeb's family episode

    ReplyDelete
  3. சிவாஜி தப்பித்து வெற்றிகரமாக வந்தது.... மகிழ்ச்சியாக உள்ளது... ராஜா ஜெய்சிங் நிலைமை என்னவாகும்?
    சாம்பாஜி தப்பிப்பது எப்படி??

    ReplyDelete