Thursday, April 30, 2020

இல்லுமினாட்டி 47



விஸ்வம் வஜ்ராசனத்தில் அமர்ந்தபடி பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தபடி ஜிப்ஸி அமர்ந்திருந்தான். அந்த பிராணாயாமப் பயிற்சிகளுக்கு டேனியலின் உடல் சுலபமாக ஒத்துழைக்கவில்லை என்பதை அவன் கவனித்தான். போதையிலேயே திளைத்து வலுவிழந்து போயிருந்த அந்த உடலுக்கு வஜ்ராசனமும் பிடிக்கவில்லை, அந்தப் பயிற்சிகளும் பிடிக்கவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. ஆனால் அந்த உடலின் அதிருப்தியான முணுமுணுப்புகளை விஸ்வம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. உயிர் டேனியலுடையதாக இருந்த போது தன் சுகங்களையும், சௌகரியங்களையும் தங்குதடை இல்லாமல் அனுபவித்து வந்திருந்த அந்த உடலுக்கு விஸ்வத்தின் இந்தக் கெடுபிடிகள் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதற்குப் பல அறிகுறிகள் தெரிந்து கொண்டே இருந்தன. ஆனால் பள்ளிக்குப் போகப் பிடிக்காத பிள்ளையைத் தரதரவென்று தாய் இழுத்துக் கொண்டு போவதைப் போல், விஸ்வம் அந்த உடலைத் தன் வழிக்கு இழுத்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் அந்த உடல் அவன் வழிக்கு வேண்டா வெறுப்பாக வந்து கொண்டிருந்தது...

சிந்துவுக்கு மெயிலில் தகவல்களை அனுப்பி விட்டு வேறிரண்டு பேருக்கு சுருக்கமான மெயில்களை அனுப்பி விட்டுஅமைதியாக வஜ்ராசனத்தில் அமர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்த விஸ்வத்தைப் பார்த்து ஜிப்ஸிக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை. உடம்பின் சௌகரியங்களே முழுமுதல் பிரதானம் என்று வாழ்கிற மனிதர்களின் நடுவில் இந்த அளவுக்கு ஒரு ஆளுமை படைத்த மனிதனைப் பார்க்க நேர்வது அபூர்வம் என்று நினைத்துக் கொண்டான். டேனியலுடையதாக இருந்த போது பொலிவிழந்து,  சக்திகளையும் இழந்து போயிருந்த உடல் இப்போது ஓரளவு தேறி வருவது இவனுடைய கடுமையான பயிற்சிகளால் தான் என்று எண்ணினான்.

இனி முடியவே முடியாதுஎன்ற நிலைக்கு வந்து முடிவில் அந்த உடல் பரிதாபமாக அலற ஆரம்பித்த பின் தான் விஸ்வம் வஜ்ராசனத்தைக் கலைத்து மெல்ல எழுந்தான்.

ஜிப்ஸி விஸ்வத்தைக் கேட்டான். “உடம்பு என்ன சொல்கிறது?”

“அது சொல்வதை நான் சட்டை செய்வதில்லை” என்று சொல்லிக் கொண்டே இரு கைகளையும் உயர்த்திச் சோம்பல் முறித்துக் கொண்டே முன்னங்கால் நுனியில் சில வினாடிகள் நின்ற விஸ்வத்திடம் ஜிப்ஸி கேட்டான். “அந்தப் பெண்ணால் உன் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்று நீ எப்படி நம்புகிறாய்?”

விஸ்வம் சொன்னான். “இந்தத் திட்டத்திற்கு அவளை விடப் பொருத்தமான ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் கூச்சமோ, தயக்கமோ கூட இல்லாமல் அவளால் எத்தனையோ வேலைகளைச் செய்ய முடியும்... அவள் அப்படிப்பட்டவள் என்று தோற்றத்தை வைத்து யாரும் ஊகிக்கவே முடியாது. மிகவும் கண்ணியமான பெண்ணாகவே வெளியே தெரிபவள் அவள். அழகும் அறிவும் அவளிடம் அதிகமாகவே இருக்கிறது. அவள் இது வரை எத்தனையோ குற்றங்களைச் செய்திருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூடப்பிடிபட்டதில்லை. எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலும் அவளைப் பற்றிய சந்தேகத் தகவல்கள் கூட இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அவளிடம் கொடுத்த வேலைகளை அவள் இது வரை சிறிது கூடச் சொதப்பியதில்லை.”


சிறையில் விஸ்வத்தின் சக்தியை மிக மெலிதாக உணர்ந்து அது விலகிய பிறகு மனோகரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதன் பின் தினமும் அடிக்கடி மிக அமைதியாக இருந்து அந்தச் சக்தியை மறுபடியும் உணர முடிகிறதா என்று அவன் முயற்சி செய்து பார்த்தான். மறுபடி அந்தத் தொடர்பு  கிடைக்கவில்லை. முன்பு கிடைத்ததே நிஜமா பிரமையா என்று சந்தேகம் அவனை மெல்ல அரிக்க ஆரம்பித்தது.

அவனுடைய தவிப்பைக் கவனித்த சக கைதி ராஜேஷ் கரிசனத்துடன் கேட்டான். “என்ன ஆச்சு?”

மனோகர் எச்சரிக்கையுடன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு சற்று சோகமாகச் சொன்னான். “இங்கே இருக்க முடியவில்லை. இருக்கப் பிடிக்கவில்லை.”

ராஜேஷ் முகத்தில் அவனைப் புரிந்து கொண்ட மென்மை படர்ந்தது. ”உனக்கு இது முதல் அனுபவம் அல்லவா? அது தான் பிரச்னை. எனக்கு இது இரண்டாம் வீடு மாதிரி ஆகி விட்டது. அதனால் இங்கே கவலை இல்லாமல் என்னால் இருக்க முடிகிறது. போரடித்தால் கிளம்பி விடுவேன்...”

அவன் அலட்டாமல் ’ போரடித்தால் கிளம்பி விடுவேன்’ என்று சொன்னதைக் கேட்க மனோகருக்கு ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருந்தது. “அதெப்படி நினைக்கும் போது கிளம்ப முடியும்” என்று அவன் கேட்டு வைத்தான்.

ராஜேஷ் ரகசியமாக அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “சிறைச்சாலை சிலருக்குத் தான் நரகம். பிரச்சினை. ஆனால் கை நிறைய பணமும், முக்கியமான ஆட்களின் தொடர்பும் இருந்தால் இங்கே நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. எல்லாருக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுக்க நாம் தயாராக இருக்கிற வரை இங்கிருந்து தப்பித்துப் போவது உட்பட எல்லாமே நம்மால் முடியும்”

இந்த விதி சிறைச்சாலைக்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான இடங்களுக்கும் பொருந்தும் என்பதை மனோகர் அறிவான். விஸ்வத்தின் பிரதிநிதியாக எத்தனையோ இடங்களில் அவன் அந்த விதியைச் செயல்படுத்தி வெற்றி கண்டவன். இப்போது விஸ்வம் இருக்கிறானா இல்லையா என்றே தெரியவில்லை. பணம் பல கோடிகளில் மனோகர் வசமே இருக்கிறது என்றாலும் அவன் பல வங்கிகளில் பிரித்து வைத்திருக்கிற பணத்தைப் பயன்படுத்த முடியாதபடி இந்தச் சிறையில் அவன் சிக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய போதாத காலம் கமலக்கண்ணன் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு மருமகளாக வரப்போகிற பெண்ணையே அவன் கடத்திச் சென்ற குற்றத்தில் சிறைப்பட்டிருக்கிறான்...

அவன் முகத்தில் படர்ந்த சோகத்தைக் கவனித்து விட்டு ராஜேஷ் இரக்கத்துடன் கேட்டான். “உனக்கு இங்கிருந்து தப்பித்துப் போக வேண்டுமா?”


வாங் வேயின் ரகசிய அலைபேசி இரு முறை அடித்து விட்டு அமைதியாகியது. அந்த அலைபேசியில் அழைக்கக்கூடிய நபர் இல்லுமினாட்டி உளவுத்துறையின் உபதலைவர் சாலமன் ஒருவர் தான் என்பதால் சாலமனுக்குத் தெரிவிக்க ஏதோ ஒரு முக்கிய தகவல் இருக்கிறது என்பது புரிந்தது.

வாங் வே பரபரப்புடன் சாலமனுக்குப் போன் செய்தார். “என்ன விஷயம்?”

சாலமனின் எச்சரிக்கையான மிக மெல்லிய குரல் ஒலித்தது. “தலைவன் நம் ஆளின் கூட்டாளியைப் பற்றி பல தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறான்.”

வாங் வே பரபரப்பு குறையாமல் கேட்டார். “என்ன தகவல்கள்?”

சாலமன் சொன்னார். “தெரியவில்லை. அதைச் சொல்லாமல் தவிர்க்கிறான்.”

“அப்படியானால் நம் ஆள் சீக்கிரம் உங்களிடம் சிக்கி விடுவானா?”

“அது நிச்சயமில்லை. அந்த அளவுக்கு நம்பிக்கையோடும் தலைவன் தென்படவில்லை. எதையும் வாய் விட்டுச் சொல்லவும் மாட்டேன்கிறான்”

“சொல்லா விட்டாலும் கூட அவன் அடுத்ததாக உங்கள் ஆட்களுக்கு என்ன உத்தரவிடுகிறான் என்பதை வைத்து யூகிக்கலாமே.”

”நாடு முழுவதும் எந்தப் பகுதியிலும் புதிய ஆட்களின் நடமாட்டம் தெரிந்தால் அதைத் தெரிவிக்க அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. உணவுப் பொருள்களோ, வேறு பொருள்களோ வாங்கிக் கொண்டு போக பழக்கமில்லாத புதிய ஆட்கள் வந்தால் தெரிவிக்கச் சொல்லி எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் எல்லாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்...”

வாங் வே கேட்டார். “பொது மக்களிடமிருந்தோ, அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்களிடமிருந்தோ எந்தத் தகவலும் வரவில்லையா?”

“தினமும் நாலைந்து அழைப்புகளாவது வருகின்றன. ஆனால் போய்ப் பார்க்கையில் அதெல்லாம் நமக்கு வேண்டிய ஆளாக இல்லை. இந்த வலைவீச்சில் சில கிரிமினல்கள் கூட அகப்பட்டிருக்கிறார்கள். நம் ஆள் சிக்கவில்லை...”

வாங் வேக்குப் பிரமிப்பாக இருந்தது. சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் அந்தக் கூட்டாளி உள்நாட்டு ஆளாகத் தான் இருக்க வேண்டும். அவன் தன் வீட்டில் அல்லது தன் நண்பர்கள் வீட்டில் நம் ஆளோடு இப்போதிருக்க வாய்ப்பு இருக்கிறது.”

சாலமன் சொன்னார். “அப்படி ஒரு இடம் இருந்திருந்தால் அவர்கள் முன்பே அந்தக் காலி வீட்டில் ஒளிந்து கொண்டிருக்க மாட்டார்கள். நேராக ஆரம்பத்திலேயே அங்கே போயிருப்பார்கள்...”

அதுவும் சரியென்றே வாங் வேக்குத் தோன்றியது. கூட்டாளி பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தும் அவர்கள் இப்போது ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றால் கிடைத்திருக்கும் தகவல்கள் உபயோகமில்லாத பழைய தகவல்களா?”

“எந்தத் தகவலும் எப்போதும் அலட்சியப்படுத்த முடிந்ததல்ல. எது எப்போது நமக்கு உபயோகப்படும் என்பது நமக்கே தெரியாது. தலைவனிடம் இருக்கும் தகவல்களில் ஏதோ ஒன்று சீக்கிரமே அவர்கள் இருக்குமிடத்தை அடையாளம் காட்ட உதவலாம்.”

வாங் வே அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “அப்படி ஒருவேளை அவர்கள் ஒளிந்திருக்கும் இடம் நமக்குத் தெரிய வந்தால் மற்றவர்களுக்கு முன்னால் நாம் அவர்களைச் சந்தித்துப் பேசுவது முக்கியம்”

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. I think jipsy isn't a main villain

    ReplyDelete
  2. "பயிற்சி எப்படி செய்ய வேண்டும்?" என்பதை விஸ்வத்திடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete