Monday, April 27, 2020

சத்ரபதி 122


சிவாஜி காலந்தாழ்த்தாமல், அந்த அந்தணரை மேற்கொண்டு எந்த சிந்தனைக்கும் போக விடாமல் கேட்டான். ”ஐயா, தங்களைப் பார்த்தால் பல விஷயங்கள் அறிந்தவர் போலத் தெரிகிறது. எனக்கு ஒரே ஒரு தகவலைச் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். இந்தப் பகுதியில் ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே? அது எங்கே இருக்கிறது? அங்கு எப்படிச் செல்ல வேண்டும்?”

அந்த அந்தணர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தபடியே கேட்டார். “சுயம்பு லிங்கமா? இந்தப் பகுதியிலா? நான் அறிந்து இல்லையே”

சிவாஜி சொன்னான். “அதன் அருகே ஒரு நீரோடையும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சிலர் மட்டுமே அறிவார்கள் என்று என்னிடம் ஒருவர் சொன்னார்…..”

சிலர் மட்டுமே அறிந்த அந்த விஷயத்தை அவர் அறியாதது அந்த அந்தணரைப் பாதித்து விட்டது. அவர் நீரோடை இருக்கின்ற இடங்களையும் சிவலிங்கங்கள் இருக்கின்ற இடங்களையும் பற்றி மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பிக்க, மற்ற பக்தர்கள் பல இடங்களில் உள்ள, தங்களுக்குத் தெரிந்த சுயம்பு லிங்கங்கள் பற்றி எல்லாம் சுவாரசியமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். பேச்சு திசை மாறியது. அந்த அந்தணர் அவ்வப்போது அந்தப் பேச்சில் கவனம் செலுத்தினாலும்  சிவாஜி கேட்ட சுயம்பு லிங்கம் குறித்த சிந்தனைகளிலேயே அதிகம் தங்கினார்.

மெல்ல சிவாஜியும், கிருஷ்ணாஜி விஸ்வநாத்தும் விடைபெற்றார்கள்.

சிறிது தூரம் சென்ற பிறகு கிருஷ்ணாஜி விஸ்வநாத் சிவாஜியிடம் கேட்டார். “அந்த சுயம்பு லிங்கம் பற்றி உங்களிடம் சொன்னது யார்?”

சிவாஜி சொன்னான். “யாரும் சொல்லவில்லை. இருக்கின்ற ஒன்றின் இடத்தைக் கேட்டால் அந்த அந்தணர் பதில் சொல்லி விட்டு நம்மைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடும் ஆபத்து இருக்கிறது. இல்லாததைக் கேட்டால் தான் அவருக்கு யோசித்துத் தீராது. அதனால் தான் அவரிடம் ஒரு கற்பனை சுயம்பு லிங்கம் பற்றிக் கேட்டேன்….”

கிருஷ்ணாஜி விஸ்வநாத் வாய் விட்டுச் சிரித்தார். மனிதனுடைய மனம் போகின்ற போக்கை சிவாஜி மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தது போல அவருக்குத் தோன்றியது. அவர்கள் பயணம் தொடர்ந்தது.


ரு நாள் தொடர்ந்து சிறு மழை பெய்து கொண்டிருந்தது. இரவு நேரத்தில் ஒரு கிராமத்தை இருவரும் அடைந்தார்கள். வெளியில் எங்கும் தங்க முடியாதபடி எல்லா இடங்களிலும் தரை அதிக ஈரத்தில் இருந்தது. அதனால் இருவரும் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார்கள்.

அந்த வீட்டுக்காரன் சிறிது யோசித்து விட்டுத் தான் பிறகு அவர்களைத் தங்க அனுமதித்தான். தயக்கத்துடன் அனுமதிக்கின்ற வீட்டில் தங்கித்தானாக வேண்டுமா என்கிற எண்ணம் இருவர் மனதிலும் எழுந்தாலும் வெளி நிலவரம் சிறிதும் சாதகமாக இல்லாததால் வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்தார்கள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஏழ்மையின் அடிமட்டத்தில் வீட்டவர்கள் இருந்தது தெரிந்தது. மிக மங்கலாக ஒரு விளக்கு மட்டும் வீட்டில் எரிந்து கொண்டிருந்தது.

அந்த வீட்டுக்காரன் அதிகம் பேசாதவனாக இருந்தான். அவன் மனைவியும், அவனுடைய இளைய சகோதரனும் கூட வந்தவர்களை வணங்கி விட்டு மௌனமாகவே இருந்தார்கள். ஆனால் அவன் வயதான தாய் அதிகம் பேசுபவளாக இருந்தாள். அவள் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்று கேட்டாள்.

கிருஷ்ணாஜி விஸ்வநாத் சொன்னார். “நாங்கள் காசியிலிருந்து வருகிறோம் தாயே. தெற்கே ராமேஸ்வரம் வரை போக உத்தேசித்துள்ளோம்”

அவள் தலையசைத்தாள். சிவாஜி சொன்னான். “நாங்கள் தங்களுக்குத் தொந்தரவு தருகிறோம் என்பது புரிகிறது. ஆனால் வெளியில் தங்க முடியாதபடி மழை பெய்வதால் தான் உள்ளே தங்க அனுமதி கேட்டோம்.”

அந்த மூதாட்டி சொன்னாள். ”ஒரு தொந்தரவும் இல்லை பைராகியே. உங்களைப் போல் புனித யாத்திரை போகிற அளவு நாங்கள் புண்ணியம் செய்யவில்லை. அப்படி யாத்திரை செல்கின்ற புண்ணியாத்மாக்களான உங்களுக்கு ஒரு இரவு தங்க இடம் தருவதற்கு இறைவன் எங்களுக்கு வாய்ப்புத் தந்து இருக்கிறானே. அதற்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்”

அவள் சொன்னதற்கு வீட்டின் மற்றவர்களும் தலையாட்டியது ஓரளவு அங்கு தங்க வேண்டியிருப்பதன் தர்மசங்கடத்தைக் குறைத்தது. அந்தக் கிழவி பேசிக் கொண்டே போனதில் அந்த வீட்டுக்காரன் அவர்கள் தங்கத் தயக்கம் காட்டியதன் காரணம் வறுமையே என்பது புரிந்தது. அவனுக்குப் பிரச்னை அவர்கள் தங்குவதில் இருக்கவில்லை. தங்குபவர்களுக்கு உணவு அளித்து உபசரிக்க அவனுக்கு வசதியில்லை.  அது புரிந்தவுடன் சிவாஜியின் மனம் அவர்களுக்காக நெகிழ்ந்தது.

இரவு அவர்கள் சாப்பிட வீட்டுக்காரனின் மனைவி இரண்டிரண்டு ரொட்டிகள் கொண்டு வந்தாள். சிவாஜியும் கிருஷ்ணாஜி விஸ்வநாத்தும் மறுத்தார்கள். இங்கு வருவதற்கு சற்று முன் தான் பழங்கள் சாப்பிட்டதாகவும், இனி சாப்பிட வயிற்றில் இடமில்லை என்றும் பொய் சொன்னார்கள். ஆனாலும் வீட்டுக்காரன் அவர்கள் சாப்பிட வற்புறுத்தினான். மறுபடி அவர்கள் மறுக்கவே பின்பு தான் அந்த ரொட்டிகளை அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்டு போனாள். அந்த நான்கு ரொட்டிகளை ஒரு ஓரமாக அமர்ந்து வீட்டார்கள் நால்வரும் ஆளுக்கொரு ரொட்டியாகச் சாப்பிட்டார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் சாப்பிட்டிருந்தால் அவர்கள் நால்வரும் பட்டினியாகவே படுத்திருப்பார்கள் என்பது புரிந்தவுடன் சிவாஜியும், கிருஷ்ணாஜியும் மனம் நெகிழ்ந்தார்கள்.

சாப்பிட்ட பின் பேசும் போது அந்த மூதாட்டி சில காலம் முன்பு வரை ஓரளவு வசதியாக அவர்கள் இருந்ததையும், பின்பு தான் நிலைமை மோசமானது என்றும் சொன்னாள். சிவாஜி ஆர்வத்துடன் அதற்குக் காரணம் கேட்டான்.

மூதாட்டி கோபத்துடன் சொன்னாள். “பக்கத்து ராஜ்ஜியத்து சிவாஜியால் தான் எங்கள் நிலைமை இப்படி ஆகி விட்டது”

சிவாஜிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள். சிவாஜி என்ன செய்தான்?”

மூதாட்டி சொன்னாள். “சிவாஜியை சக்கரவர்த்தி சிறைப்படுத்தி விட்டாராம். அதனால் அவனுடைய வீரர்கள் எல்லாம் வந்து எங்கள் பயிர்களை எல்லாம் அழித்து எங்கள் பசுக்கள், பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்….”

சிவாஜியின் மனம் வேதனைப்பட்டது. அவனைச் சிறைப்படுத்தியதற்குப் பதிலடி தரும் விதமாக அவன் படையினர் முகலாயர்களின் பகுதிகளில் புகுந்து சேதம் விளைவித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆட்சியாளர்களின் எல்லாப் பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தளத்து குடிமக்களே என்று தாதாஜி கொண்டதேவ் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் இப்போது நேரடியாகவே அவனுக்கு விளங்கியது.

மூதாட்டி தொடர்ந்து சொன்னாள். “அந்த சிவாஜியை சக்கரவர்த்தி சரியாக தண்டித்திருக்க வேண்டும். அவர் அதைச் செய்வதற்கு முன் அவன் அங்கிருந்து தப்பித்து விட்டானாம்…”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “கவலைப்படாதீர்கள் தாயே. இழந்ததை எல்லாம் ஒருநாள் திரும்பப் பெறுவீர்கள்”

மூதாட்டி முகம் மென்மையாகியது. “உங்களைப் போன்ற பைராகிகளின் வாக்கு பலிக்கும் என்பார்கள். அப்படி ஒருவேளை ஆனால் ஓரளவாவது எங்கள் வாழ்க்கை சுலபமாகும்”

சிவாஜிக்கு அன்று உறக்கம் சரியாக வரவில்லை. இது போல் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும், எந்தந்த விதமான துன்பங்களில் அவர்கள் உழன்று கொண்டிருப்பார்கள் என்ற சிந்தனைகளில் தங்கி வருந்தினான்.

மறுநாள் காலை மூதாட்டியும் அவளது மருமகளும் அவர்கள் கிளம்பும் முன் பரிமாற ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார்கள். ரொட்டிகளை ஆறு இலைகளில் சரிசமமாக அவர்கள் பிரித்து வைப்பதைப் பார்த்து சிவாஜி மனம் நெகிழ்ந்தான். அடுத்த வேளைக்கு சாப்பிட எதுவும் இருக்கிறதோ இல்லையோ? அவனும், கிருஷ்ணாஜியும் ”உணவு வேண்டாம், கிளம்புகிறோம்” என்று சொன்னதை மூதாட்டி ஏற்றுக் கொள்ளவில்லை.

“நேற்றிரவும் சாப்பிடவில்லை. நீண்ட தூரம் போகிறவர்கள் காலையிலும் சாப்பிடாமல் கிளம்பினால் எப்படி?” என்று கட்டாயப்படுத்தி அவர்களைச் சாப்பிட வைத்தாள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கையில் உள்ளே தன்னுடைய இலையில் வைத்திருந்த ரொட்டிகளில் இரண்டு எடுத்துக் கொண்டு வந்து இருவருக்கும் ஒவ்வொன்றும் போட்டாள்.

உள்ளே அவள் இலையில் ஒரே ஒரு ரொட்டி இருப்பதைக் கவனித்த சிவாஜி நிஜமாகவே பதறினான். அந்த மூதாட்டி அன்புடன் சொன்னாள். “போகின்ற வழியில் அடுத்த உணவு எப்போது எங்கு கிடைக்குமோ? நன்றாகவே சாப்பிட்டு விட்டுப் போங்கள்”

சிவாஜியின் கண்கள் ஈரமாயின. இந்த தேசத்தின் உயிரும், உயர்வும் இங்கே அல்லவா இருக்கிறது என்று மனமுருகினான்.

அவர்கள் விடைபெற்றுக் கிளம்பிய போது மழை நின்றிருந்தது. சிவாஜியின் மனம் கனத்திருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Sivaji's intelligence and the old woman's magnanimity are explained very well in this episode. Touching.

    ReplyDelete
  2. ஏழ்மையிலும் அவர்களின் செயல்கள் எவ்வளவு உயர்வாக உள்ளது?
    சிவாஜியும் கிருஷ்ணாஜியும் எவ்வளவு தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருப்பார்கள்...?

    ஆட்சியாளர்களின் எல்லாப் பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தளத்து குடிமக்களே என்று தாதாஜி கொண்டதேவ் அவர்கள் சொன்னது இந்த காலத்துக்கு கூட நூறு சதவீதம் பொருந்துகிறது...

    ReplyDelete