Thursday, March 26, 2020

இல்லுமினாட்டி 42


விஸ்வம் நேரடியாகத் தேர்ந்தெடுத்து வேலை வாங்கிய ஆட்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. ஏனென்றால் அவனிடம் பாஸ் மார்க் வாங்குவது யாருக்கும் சுலபமில்லை. அசாதாரணத் திறமையும், உறுதியான நிலைப்பாடும் இல்லாத ஆட்களை அவன் மனிதர்களாக மதித்தது கூடக் கிடையாது. அவன் தேர்ந்தெடுத்த ஆட்கள் கூட ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருப்பதையும், பரிச்சயமாவதையும் அவன் அனுமதித்தது கிடையாது. அவனுடைய ஆள் ஒருவன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் அந்த ஆள் மூலம் விஸ்வத்தின் மற்ற ஆட்களையும் எதிரி அறிந்து கொள்வது அவனுக்கு உடன்பாடானதல்ல. அவன் எல்லா ரகசியங்களையும் கச்சிதமாகக் கட்டிக் காப்பாற்ற இந்த எச்சரிக்கை உணர்வு இன்று வரையும் உதவி இருக்கிறது. இப்போது மனோகர் மாட்டிக் கொண்ட போதும் அவன் மூலம் பெரிய ரகசியங்கள் கசிய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. மனோகர் மாட்டிக் கொண்டது அவனுக்கு அவமானமே தவிர ஆபத்தல்ல.

டேனியலின் உடலுக்குள் வந்த பிறகு, ஓரளவு பாதுகாப்பான இடத்திற்கும் வந்து சேர்ந்த பிறகு, புதிய உடலின் பலவீனங்களைப் பொருட்படுத்தாத அளவு ஆன பிறகு விஸ்வம் தெளிவாகச் சிந்திக்கும் மனநிலையை எட்டி இருக்கிறான்.  க்ரிஷின் பலவீனமானமாக அவன் குடும்பத்தை நினைத்து அதன் மூலம் அவனைத் தாக்க முடிவு செய்த பிறகு திட்டங்கள் பல யோசித்து முடிவில் அதில் ஒரு  அருமையான திட்டத்தை விஸ்வம் தேர்ந்தெடுத்தான். அதை நிறைவேற்றக் கச்சிதமான நபராக அவனால் ஒரே ஒருத்தியைத் தான் நினைக்க முடிந்தது. அவள் தான் சிந்து!

அவன் அவளைத் தேர்ந்தெடுத்தது கூட வழக்கமான முறையில் அல்ல. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே ஒரு சுவாரசியமான நிகழ்வு தான். அந்த நிகழ்வை விஸ்வம் நினைவுபடுத்திக் கொள்ளும் போதே அவன் முகத்தில் சிறிய புன்னகை அரும்பியது...

விஸ்வம் சிந்துவை முதல் முதலில் சந்தித்தது இரண்டு வருடங்களுக்கு முன், மும்பை விமான நிலையத்தில். அப்போது அவளுக்கு வயது 21 தான் முடிந்திருந்தது. மிக அழகான கல்லூரிப் பெண்ணாக இருந்தாள். அவளுக்கு நுனி நாக்கு ஆங்கிலப் புலமை இருப்பது அவள் அருகில் இருந்த ஒரு வயதான பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்ததில் தெரிந்தது.  அன்று விஸ்வம் ஒரு பணக்கார மார்வாடி வியாபாரியின் வேடத்தில் இருந்தான். அவன் கழுத்தில் கனமான தங்கச் சங்கிலியும், விரல்களில் ஏழு மோதிரங்களும் அணிந்திருந்தான். அவனுடைய கனமான பர்ஸ் ஜிப்பா பாக்கெட்டில் புடைத்துக் கொண்டிருந்தது.

அவள் எண்ணங்களைப் படிக்காமல் இருந்திருந்தால். அவன் அன்று அவளை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டான் அருகிலுள்ள வயதான பெண்மணியிடம் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்த போதும் அவள் மனதில் அவன் பர்ஸைப் பற்றித் தான் தீவிரமாக நினைத்துக் கொண்டிருந்தாள்.   ’இந்த சேட்டின் பர்ஸை இன்று அடித்து விட வேண்டும்’ என்று அவள் தமிழில் எண்ணியதை அவனால் படிக்க முடிந்த போது அவன் திகைப்படைந்தான். யாரையும் தோற்றத்தை வைத்து எடை போட முடியாது என்றாலும், அவனே ஒரு வேடத்தில் தான் இருக்கிறான் என்றாலும் ஒரு திருட்டுப் பெண் என்று இம்மியும் யூகிக்க முடியாதபடி அவள் தோற்றத்திலும், பேச்சிலும் இருந்த கண்ணியம் அவனை அசர வைத்தது.

அவன் மெல்ல சூட்கேசுடன் எழுந்து பாத்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவளும் அந்தப் பெண்மணியிடம் ஏதோ காரணம் சொல்லி விட்டு எழுந்து பின்னால் வந்தாள். எதிரில் வேறிரண்டு முதியவர்கள் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விஸ்வம் கடக்கையில் அவளும் விஸ்வத்தைக் கடந்தாள். அடுத்த வினாடி விஸ்வத்தின் பர்ஸ் அவள் கையில் இருந்தது. அதற்கடுத்த வினாடி விஸ்வத்தின் இரும்புக்கரம் அவள் கையை பர்ஸோடு இறுக்கிப் பிடித்தது. அந்தக் கணத்தில் அவள் முகத்தில் பேரதிர்ச்சி விரிந்தது.  ’பாவி எப்படிக் கண்டுபிடித்தான்’ என்று மனதில் அவள் தமிழில் கூவியது தெரிந்தது.

ஆனால் அடுத்த கணம் அவள் சுதாரித்துக் கொண்டாள். “சார். உங்கள் பர்ஸை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டீர்கள். இந்தாருங்கள்” என்று தூய ஹிந்தியில் அவள் அலட்டாமல் அன்பாகச் சொன்னாள்.  

அவர்கள் அருகே வந்திருந்த முதியவர்கள் நடந்தது எதையும் கவனித்திருக்கவில்லை. அவள் பேச்சையும், இருவர் பிடியிலும் இருந்த பர்ஸையும் பார்த்து இருவரில் ஒரு முதியவர் விஸ்வத்திடம் சொன்னார். “இந்தக் காலத்திலும் இப்படி நல்ல பெண்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது”

விஸ்வத்தால் அந்தப் பெண்ணைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. இப்படியொரு அசாத்தியத் திறமையையும், துணிச்சலையும், சமயோசிதத்தையும் அவன் இது வரை எந்தப் பெண்ணிடமும் பார்த்ததில்லை.  அவனைத் தவிர யார் இருந்திருந்தாலும் அந்தப் பர்ஸை அவளிடம் கண்டிப்பாகப் பறி கொடுத்திருப்பார்கள். அவளைத் தவிர வேறு யாராக இருந்தாலும் பிடிபட்டவுடன் தப்பிக்க வழி தெரியாமல் திணறிப் போயிருப்பார்கள்.

விஸ்வம் நாடகத்தைத் தொடர்ந்தான். “நன்றி மகளே” என்று ஹிந்தியில் சொன்னபடி தன் பர்ஸை மீண்டும் பைஜாமா பாக்கெட்டில் நுழைத்து விட்டுச் சொன்னான். “வா மகளே. காபி வாங்கித் தருகிறேன்...”

அவள் மனதினுள் ’ஆளை விடுடா சாமி’ என்று முணுமுணுத்தது விஸ்வத்துக்குத் தெரிந்தது. ஆனால் ”பரவாயில்லை அங்கிள் வேண்டாம்” என்று சொல்லி விட்டு அவள் நகரப் பார்த்தாள்.   

விஸ்வம் அவள் கையை இறுக்கிப் பிடித்தபடி சொன்னான். “நன்றி தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு மகளே.”

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர்களில் மற்றொருவர் அவளிடம் அன்பாகச் சொன்னார். “நல்ல பெண்ணாக இருக்கிறாய். அவர் மனதைப் புண்படுத்தாமல் போய் காபி குடியம்மா.”

‘சனியன் விடமாட்டான் போலிருக்கிறதே’ என்று விஸ்வத்தைப் பார்த்து மனதில் சொல்லிக் கொண்டவள் அந்தப் பெரியவரைப் பார்த்து அன்பான புன்னகையை உதிர விட்டு ”சரி” என்றாள்.

அந்தப் பெரியவர்கள் கடந்து போய் விட்டார்கள். விஸ்வத்துடன் அவள் அலட்டாமல் அமைதியாக வந்தாள். இருவரும் ரெஸ்டாரண்டில் அமர்ந்தார்கள். விஸ்வம் தமிழில் அவளிடம் கேட்டான். “என்ன சாப்பிடுகிறாய்?”

அவள் ஒரு கணம் திகைத்து விட்டுச் சொன்னாள். “காபி

காபி ஆர்டர் செய்து விட்டு விஸ்வம் அவளைக் கேட்டான். “உன் பெயர் என்ன?”

அவள் அமைதியாகத் தன் உண்மையான பெயரையே சொன்னாள். “சிந்து”. பின் கேட்டாள். “உங்கள் பெயர்?”

அவன் அப்போது தரித்திருந்த வேடத்தின் பெயரையே சொன்னான். “விஸ்வாஸ்ஜி”

இப்போது நினைத்தாலும் அவளுடைய அசாத்தியத் துணிச்சலும், சமயோசித புத்தியும் அவனுக்குப் புன்னகை வர வைத்தன. க்ரிஷ் வீட்டில் நுழைந்து அலட்டாமல் எதையும் செய்ய அவளால் நிச்சயமாக முடியும்...

விஸ்வம் ஜிப்ஸியிடம் சொன்னான். “நான் இந்தியாவில் ஒருத்தியிடம் பேச வேண்டும்”

ஜிப்ஸி மெல்லச் சொன்னான். “பேசுவது பெரிதல்ல. அவள் மூலம் எதிரிகள் உன்னை இங்கே கண்டுபிடிக்க முடிந்தால் அது ஆபத்து அல்லவா?”

விஸ்வம் சொன்னான். “என் ஆட்கள் மூலமாக யாரும் என்னைக் கண்டுபிடித்து விட முடியாது. எல்லா விதங்களிலும் சோதித்துப் பார்க்காமல் யாரையும் நான் தேர்ந்தெடுத்ததில்லை... உன் போன் மூலமாக என்னைக் கண்டுபிடிக்கும்படி ஆகிவிடாதல்லவா?”

ஜிப்ஸி தன் போனை எடுத்து அவனிடம் கொடுத்தபடி சொன்னான். “இது பாதுகாப்பானது தான்”

விஸ்வம்  சிந்துவின் அலைபேசி எண்ணை அழுத்தினான். அவள் உடனே எடுத்துப் பேசி விடவில்லை. நாலைந்து முறை அடித்த பிறகு தான் எடுத்தாள். “ஹலோ”

விஸ்வம் சொன்னான். “சிந்து. நான் விஸ்வாஸ்ஜி பேசுகிறேன்”

அவள் மெல்லச் சொன்னாள். “இது ராங் நம்பர் என்று நினைக்கிறேன்”

அவள் அவனுடைய குரலின் மாற்றத்தை வைத்துத் தான் அப்படிப் பேசுகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் சொன்னான். “குரல் தான் மாறி இருக்கிறது. ஆள் மாறவில்லை சிந்து. மும்பையில் நீ பர்ஸ் எடுத்துக் கொடுத்த அதே விஸ்வாஸ்ஜி தான் பேசுகிறேன்.”

அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவள் மௌனம் அவனை மேற்கொண்டு சொல் என்றதாய் அவன் உணர்ந்தான். அவன் சொன்னான். “புதிய வேலை. ஐந்து பேரைப் பற்றிய விவரங்களை நான் மெயிலில் அனுப்புகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் இது தான்....”

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Viswam sends a dangerous person to Krish. What will happen? What will be his plan? Eagerly waiting to know.

    ReplyDelete
  2. இப்போது தான் உங்கள் நாவலில் ஒரு பெண் வில்லியை பார்க்கிறேன்...அற்புதம்👏👏👏...

    விஸ்வம்... சூழல் எப்படிபட்டதாக இருந்தாலும், அந்த பெண் எப்படிபட்டவளாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாது... அவளின் திறமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறான்..

    ReplyDelete
    Replies
    1. Manitharil itthanai nirangala? novel padinga... Arumaiyana villi character irukkum...

      Delete
    2. அப்படியா... கண்டிப்பாக படிக்கிறேன்

      Delete
  3. கடந்த சில வாரங்களாக மிக.. மிக.. மெதுவாக செல்வாதாக உணர்கிறேன்...

    ReplyDelete