Monday, March 23, 2020

சத்ரபதி 117


மாளிகையை விட்டு வெளியே வந்த பின்னும், கூடைகளைத் தூக்கிச் சென்ற பணியாளர்கள் மற்றவர்கள் சந்தேகத்தைத் தூண்டும்படியான அவசரத்தையோ, பதட்டத்தையோ காட்டவில்லை. வழக்கம் போல் அலுப்பு கலந்த நிதானத்துடன் சென்றார்கள். முதல் கூடை ஆக்ராவின் மசூதிக்கு முன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடையைத் திறந்த பணியாளர்கள் ஏழை எளியவர்களுக்கு பழங்களையும் இனிப்புகளையும் வினியோகம் செய்ய ஆரம்பித்தார்கள். இரண்டாவது கூடை கடைவீதியில் திறக்கப்பட்டு அங்கேயே வினியோகம் ஆனது.

மற்ற கூடைகள் நகர எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டன. நகரவீதிகள் இந்த பழம், இனிப்பு வினியோகங்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. சிவாஜியும் சாம்பாஜியும் இருந்த மூன்றாவது, நான்காவது கூடைகள் எல்லையைத் தாண்டிச் செல்ல ஐந்தாவது கூடை எல்லையிலேயே வைக்கப்பட்டது.  ஐந்தாவது கூடை அங்கேயே திறக்கப்பட்டது.

எல்லைப்பகுதியில் முன்பே மூன்று குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்தக் குதிரைகளை நேற்றே வணிகர் வேடத்தில் இருந்த சிவாஜியின் ஆள் வாங்கியிருந்தான். அவன் தான் அந்தக் குதிரைகளுடன் அங்கு நின்றிருந்தான். அவன் கையில் பெரிய போர்வைகள் இருந்தன. அப்பகுதியில் அதிக ஆள்நடமாட்டமில்லை. மதுராவை நோக்கிச் செல்லும் யாத்ரீகர்கள், வணிகர்கள் தான் அவ்வப்போது எல்லையைக் கடந்தார்கள். ஆட்கள் அதிகமாய் அந்தப் பாதையில் செல்லாத போது அவசர அவசரமாக அந்தக் கூடைகள் திறக்கப்பட்டன. கூடையிலிருந்து வெளிவந்த சிவாஜிக்கும், சாம்பாஜிக்கும் அந்தப் போர்வைகள் தரப்பட்டன. குதிரையேறிய அவர்கள் இருவரும் போர்வையால் தங்கள் தலையையும் முகத்தையும் சற்று மறைத்துக் கொண்டார்கள். அந்தக் குதிரைகளை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருந்த சிவாஜியின் ஆளும் மூன்றாவது குதிரையில் ஏறிக் கொண்டான். மூன்று குதிரைகளும் அங்கிருந்து மதுரா நோக்கி காற்றாய் பறந்தன.

ஒன்றுமே நடக்காதது போல் அந்த இரண்டு கூடைகளையும் எடுத்துக் கொண்டு வந்து ஐந்தாம் கூடை அருகே வைத்த பணியாளர்கள் அதிலிருந்தவற்றையும் வினியோகிக்க ஆரம்பித்தார்கள்.

சிவாஜியைச் சிறைப்படுத்தி இருந்த மாளிகையின் காவலர்கள் வழக்கம் போல் இரவு நேரத்தில் ஒரு முறை சிவாஜி இருந்த அறைக்கு வந்து பார்த்தார்கள். சிவாஜியின் அறையில் சிவாஜியின் படுக்கையில் ஹீராஜி முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு சிவாஜியைப் போலவே படுத்துக் கொண்டிருந்தான். அவன் கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கைவிரலில் சிவாஜியின் முத்திரை மோதிரம் தெளிவாகத் தெரிந்தது. ஹீராஜியின் கால்மாட்டில் ஒரு பணியாள் அமர்ந்து ஹீராஜியின் கால்களை அமுக்கியபடி அமர்ந்திருந்தான்.

அந்தப் பணியாள் காவலர்களைப் பார்த்து ‘சத்தம் செய்யாதீர்கள்’ என்று சைகை காண்பித்தான். சிவாஜியின் உடல்நிலை பழையபடி மோசமாகி விட்டது போலிருக்கிறது என்று நினைத்தவர்களாய் அவர்கள் தலையசைத்து விட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்தார்கள்.

சிவாஜி மதுராவை அடைந்த போது இருட்ட ஆரம்பித்திருந்தது. மதுராவில் யமுனை நதிக்கரையில் சிவாஜியின் அதிகாரி ஒருவனின் உறவினர்கள் மூவர் சிவாஜிக்காகக் காத்திருந்தார்கள். அண்ணாஜி, காசிஜி, விஷால்ஜி என்ற பெயர்களுடைய அந்தணர்களான அந்த மூவரும் தங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நாவிதனையும் அழைத்து வந்திருந்தார்கள்.

அந்த நதிக்கரையில் பக்தர்கள் புனித நீராடும் பகுதிகள் தொலைவில் இருந்தன. சிவாஜிக்காக அவர்கள் காத்திருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. சிவாஜி சென்றிறங்கியதும் அவன் தலைமுடி, மீசை தாடி எல்லாம் வேகவேகமாகச் சவரம் செய்யப்பட்டது. யமுனை நதியில் குளித்தெழுந்த அவன் உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு பைராகியாக அவதாரம் எடுத்தான். அக்காலத்தில் உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு சிவனைத் துதித்துக் கொண்டே நாடு எங்கும் புண்ணியத் தலங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் பைராகிகள் நாடெங்கும் பெருமளவில் இருந்ததால் அவர்களோடு ஒருவனாக உருமாறித் தன் ராஜ்ஜியம் செல்ல சிவாஜி முடிவெடுத்திருந்தான்.

சாம்பாஜியின் தலைமுடியும் சவரம் செய்யப்பட்டது. அவனும் தந்தையுடன் சேர்ந்து குளித்தான். சிவாஜி யமுனைக்கரையில் நின்று கொண்டு இறைவனை மனதார வணங்கினான்.  நதியில் மூழ்கிக் குளிக்கும் வாய்ப்பு கிடைத்த சாம்பாஜி மிக உற்சாகமானான். அவன் இருக்கின்ற நிலவரம் புரியாமல் நதியில் நீந்தி விளையாட ஆரம்பித்தான்.

ஒரு கணம் சிவாஜி சாம்பாஜியிடம் தன்னையே பார்த்தான். அவனுடைய இளமைப்பருவம் உயிர்ப்புடன் அவன் மனக்கண்ணில் வந்தது. ஒரு கணம் அவன் தாதாஜியாகவும், சாம்பாஜி அவனாகவும் தோன்றினார்கள். சிவாஜிக்கு அவன் ஆசிரியர் தாதாஜி கொண்டதேவ் நினைவுக்கு வந்தார். அவன் சிறுவனாக இருந்த நாட்களில் மூதா நதியில் அவர் குளித்து சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க அவன் நதி நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அவர் சொல்லிக் கொடுத்திருந்த மந்திரங்களை உச்சரித்தான். மனம் இது வரை இருந்த படபடப்பு மாறி அமைதியாகியது. அவனது இளமைக்காலமும், ஆசிரியரின் நினைவும் சேர்ந்து அவன் மனதை லேசாக்க ஓடுகின்ற யமுனையையே பார்த்தபடி சிவாஜி நீண்ட நேரம் நின்றான்.  



றுநாள் காலை போலத்கான் மாளிகைக்குள் நுழைந்த போது முந்தின தினத்தில் அவன் காவலர்கள் கண்ட காட்சியையே கண்டான். முத்திரை மோதிரம் வெளியே தெரியும்படி கைநீட்டிப் படுத்திருந்தது சிவாஜி அல்ல என்று அவனுக்கும் புலனாகவில்லை. ஹீராஜியின் காலை அமுக்கியபடி அமர்ந்திருந்த பணியாள் காவலர்களுக்குக் காட்டிய சைகையையே போலத்கானுக்கும் காட்டினான். சத்தமிட வேண்டாம் என்பது போல் பணிவு கலந்து அந்தப் பணியாள் உதட்டில் விரலை வைத்துச் சைகை காட்டியதை போலத்கான் தவறாக நினைக்கவில்லை. சிவாஜி நேற்றே களைப்பில் இருந்ததை அவன் கவனித்திருந்தான். சென்ற வாரம் போல் இப்போதும் சிவாஜி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறானோ? இல்லாவிட்டால் இந்த நேரத்தில் சிவாஜி தூங்கிக் கொண்டிருக்க மாட்டான்.

போலத்கானுக்குப் பொழுது போகவில்லை. அவன் வெளியே வந்தமர்ந்து காவலர்களை விசாரித்தான். நேற்றிரவிலும் சிவாஜி படுத்தபடியே இருந்ததாக அவர்கள் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் ஹீராஜியும், காலை அமுக்கிக் கொண்டிருந்த பணியாளும் வந்தார்கள். ஹீராஜி மிகுந்த மரியாதையுடன் “வணக்கம் காவல் தலைவரே” என்று சொன்னான்.

“வணக்கம் ஹீராஜி. அரசருக்கு என்ன ஆயிற்று?”

“பழையபடி வயிற்றுவலி ஆரம்பித்து விட்டது தலைவரே. நேற்றிரவெல்லாம் துடித்துப் போய் விட்டார். பழைய மருந்தையே கொடுத்தேன். அது மெல்ல வேலை செய்திருக்கிறது போலத் தெரிகிறது. அதிகாலையில் தான் மீண்டும் உறங்க ஆரம்பித்திருக்கிறார். அவர் உறக்கம் முழுமையாக இருந்தால் எழும் போது முற்றிலும் குணமாகி விடுவார் என்று தோன்றுகிறது. அதனால் அவரைத் தயவு செய்து யாரும் எழுப்பாதீர்கள்”

போலத்கான் சொன்னான். “கவலைப்படாதீர்கள். அரசர் உறக்கத்தைக் கலைக்க மாட்டோம். ஆழமான உறக்கம் வந்தாலே போதும் பாதி நோய் குணமாகி விடும்….”

“உண்மை தான் காவலர் தலைவரே. முந்தாநாள் தானதர்மங்கள் போதாமல் போனது அவருக்கு உறுத்தலாக இருக்கிறது. அதனால் தான் வயிற்று வலி திரும்பவும் வந்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறார்….”

போலத்கான் இடி இடிப்பதைப் போலச் சிரித்தான். “தானதர்மங்கள் செய்வது போதாமல் இருந்தால் வயிற்று வலி வருமானால் பாதிக்கும் மேல் நம் ஜனத்தொகை நிரந்தர வயிற்று வலியில் அல்லவா இருந்திருக்கும்”

ஹீராஜியும் சிரித்தான். “தாங்கள் சொல்வதும் சரி தான் காவலர் தலைவரே. எதற்கும் கோயிலில் அரசர் பெயரில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன். நான் வருவதற்கு முன் அவராக விழித்து எழுந்து வந்தால் அவரிடம் தெரிவியுங்கள்….”


போலத்கான் தலையசைத்தான். அவர்களும் வெளியேறினார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. The great escape by all is cool and superb.

    ReplyDelete
  2. சிவாஜி தப்பிக்கும் விதமும் ...அவன் தீட்டிய திட்டமும் அற்புதம் 👏👏👏👏

    கோவிலுக்கு செல்லும் ஹீராஜியும் தப்பியோடிவிட்டால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete