சிவாஜி சொன்னதை எல்லாம் போலத்கான் ஔரங்கசீப்பிடம் தெரிவித்த
போது ஔரங்கசீப் மனநிம்மதி பெற்றான். சில காலமாவது பிரச்னைகள் செய்யாமல் இப்படியே சிவாஜி
இருந்தானானால் பின் நிதானமாக அவனை அப்புறப்படுத்தும் வழிகளைப் பற்றி ஆலோசிக்கலாம் என்று
நினைத்த ஔரங்கசீப் போலத்கானிடம் சொன்னான். “அவனுக்குச் சௌகரியங்கள் செய்து தருவதிலும்,
செலவுகள் செய்வதிலும் எந்தக் குறையும் வைக்க வேண்டாம். அவன் விருப்பத்திற்கேற்ப நடந்து
கொள்ளுங்கள். ஆனால் அவன் மற்றவர்களுடன் சேர்ந்து சதி செய்வதற்கோ, அங்கிருந்து தப்பித்துச்
செல்வதற்கோ இடம் தந்து விடக்கூடாது. அதனால் காவலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைத்து
விடக்கூடாது. அதே போல் நமது பிரமுகர்கள் அவனைச் சந்தித்துப் பேசுகையில் என்ன பேசுகிறார்கள்
என்பதைக் கவனிக்காமல் இருந்து விடக்கூடாது.”
“தங்கள்
உத்தரவின் படியே எச்சரிக்கையாக இருக்கிறோம் சக்கரவர்த்தி” என்று கூறி போலத்கான் விடைபெற்றான்.
சிவாஜியைச்
சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. வருபவர்களை
உபசரிக்க சிவாஜியின் ஊழியர்களுக்கு உதவுவதற்கென போலத்கான் தன் வீர்ர்களையும் அனுப்பி
வைத்தான். உண்மையில் அவர்கள் வேலை அங்கே என்ன பேசப்படுகிறது என்று கவனித்து போலத்கானிடம்
தெரிவிப்பது தான். அங்கே என்ன பேசப்படுகிறது என்று அறிந்து கொண்ட பின் போலத்கான் அதைச்
சக்கர்வர்த்தியின் காதுகளை எட்ட வைத்தான். இந்த வகையில் போலத்கானும், ஔரங்கசீப்பும் நிறைய வம்புதும்புப்
பேச்சுகளைக் கேட்டுக் கொண்டதுடன், ஓரளவு பொது அறிவினையும் வளர்த்துக் கொண்டார்கள்.
சில சம்பாஷணைகள் கலைகளைக் குறித்ததாகவும் இருந்தது. கலைகள் எதிலும் அதிக ஈடுபாடு இல்லாத
ஔரங்கசீப்புக்கு அந்தப் பேச்சுகள் வேம்பாகக் கசந்தன. ஒரு கட்டத்தில் சந்தேகத்திற்கு
இடம் தரக்கூடிய பேச்சுக்களை மட்டும் என்னிடம் தெரியப்படுத்தினால் போதும், மற்ற பயனற்ற
பேச்சுகளை என்னிடம் தெரிவித்து என் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று போலத்கானிடம் கட்டளையிட்டான்.
காலம்
மெல்ல நகர்ந்தது. சிவாஜி இனிப்புகள், பழங்கள் பெருமளவில் வாங்கி தன் நட்பில் இருந்தவர்களுக்கு
அனுப்ப ஆரம்பித்தான். இனிப்புகளும், பழங்களும் மாளிகைக்குள் கூடை கூடையாய் உள்ளே அனுப்பப்படும்
முன் வீரர்களால் மிக நுட்பமாகப் பரிசோதிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டன. அவை கூடைகளில்
நிரப்பப்பட்டு வெளியே அனுப்பப்படும் முன்னும் பரிசோதிக்கப்பட்ட பின்பே அனுப்பப்பட்டன.
சில சமயங்களில் கூடைகளில் இருந்தவை முழுவதும் கீழே எடுத்து வைக்கப்பட்டு மறுபடியும்
கூடைகளுக்குள் நிரப்பப்பட்டன. அப்படி மறுபடி சோதிக்கப்படுகையில் வெளியே எடுத்து வைக்கவும்,
நிரப்பப்படுவதற்கும், பணியாட்களுக்கு காவல் வீரர்களே உதவ வேண்டியும் வந்தது. தங்களுக்குக்
கூடுதல் வேலையைத் தரும் அந்தச் சோதனையில் காவல் வீரர்களே சலிப்படைய ஆரம்பித்தார்கள்.
திடீரென்று
சிவாஜி ஒரு நாள் கடும் வயிற்று வலியில் உழல்வதாக போலத்கானிடம் தெரிவித்தான். அரச வைத்தியர்
அழைத்து வரப்பட்டார். அவர் சிவாஜியைப் பரிசோதித்து மருந்துகள் கொடுத்து விட்டுச் சென்றார்.
ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை என்று சிவாஜி குறைப்பட்டுக் கொண்டான். அவனைச் சந்திக்க
வந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொன்னார்கள். அதன்படியே செய்தும் சிவாஜி
தனக்கு வயிற்று வலி குறையாமல் இருப்பதாகச் சொன்னான்.
இரண்டு
நாட்களாகியும் சிவாஜியின் வயிற்று வலி குறையவில்லை என்பது ஔரங்கசீப்புக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஔரங்கசீப் சந்தேகம் அடைந்தான். அரச வைத்தியரால் குணப்படுத்த முடியவில்லை என்று சிவாஜி
சொல்வது ஏதேனும் சூழ்ச்சியின் அரங்கேற்றமாக இருக்கலாம் என்று அவன் சந்தேகப்பட்டான்.
அதற்கேற்றாற் போல் சிவாஜி இறை அருளால் தான் இது குணமாக வேண்டும் என்று நம்புவதாகச்
சொல்லி மதுராவில் கிருஷ்ணரை வழிபட போலத்கான் மூலமாகச் சக்கரவர்த்தியிடம் அனுமதி கேட்டான்.
சிவாஜியை
எத்தகையக் காவலுடனும் கூட வெளியே விடுவது ஆபத்து என்பதை உணர்ந்திருந்த ஔரங்கசீப் சிவாஜியின்
வேண்டுகோளில் எச்சரிக்கை அடைந்தான். இப்போதிருக்கும் உடல்நிலையில் சிவாஜி மதுரா வரை
பயணம் செய்வது ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும் என்பதால் இருக்கும் இடத்திலேயே மதுராதிபதியை
வணங்கச் சொல்லி சிவாஜிக்கு அறிவுரை சொல்லி அனுப்பினான். ஆக்ராவின் மசூதிகளிலும் சிவாஜிக்காகப்
பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும் சிவாஜிக்குத் தெரிவிக்கச் சொன்னான்.
சிவாஜி சக்கரவர்த்திக்கு நன்றிகள் தெரிவித்து விட்டு மேலும் இரண்டு நாட்கள் படுக்கையிலேயே
இருந்தான்.
மூன்றாவது
நாள் போலத்கான் சிவாஜியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்ற போது சிவாஜி புத்துணர்ச்சியோடும்,
பழைய உற்சாகத்துடனும், கட்டிலில் அமர்ந்திருந்தான். போலத்கான் கேட்டான். “எப்படி இருக்கிறீர்கள்.
அரசே?”
சிவாஜி
பரவசத்துடன் சொன்னான். “இறைவனின் கருணையே கருணை காவலர் தலைவரே. மருந்தால் குணமாகாத
என் நோய் இறைவனின் மகிமையால் குணமாகி விட்டது. என் பிரார்த்தனையும், சக்கரவர்த்தியின்
பிரார்த்தனையும், என் மீது அன்பு வைத்திருப்போர் பிரார்த்தனையும் சேர்ந்து இறைவன் மனதை
இளக வைத்து விட்டது போல் இருக்கிறது. நேற்றிரவு மிக நல்ல உறக்கம் கிடைத்தது. உறக்கத்திலிருந்து
கண்விழித்த போது என் வயிற்று வலி காணாமல் போய் விட்டிருந்தது.”
போலத்கான்
சொன்னான். “மிக்க மகிழ்ச்சி அரசே”
சிவாஜி
நெகிழ்ச்சியோடு சொன்னான். “காவலர் தலைவரே. காரியம் முடிந்து விட்டால் கடவுளை மறப்பது
முறையாகாது. கடவுளுக்கு எந்தக் கடனையும் மனிதன் நேரடியாகத் திருப்பிச் செலுத்தவும்
முடியாது. கடவுள் அருளுக்குப் பாத்திரமாக ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் செய்வதே
சிறந்த வழி என்று எல்லா மதங்களும் தெரிவிக்கின்றன. எனவே உடனே அப்படிச் செய்து இறையருளுக்குப்
பாத்திரமாக விரும்புகிறேன்…. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
“உங்கள்
விருப்பப்படியே செய்யுங்கள் அரசே”
சிவாஜி
உற்சாகத்துடன் மதுரா கோயிலுக்கும், ஆக்ரா மசூதிகளுக்கும் பெரிய பெரிய கூடைகளில் இனிப்புகள்,
பழங்கள் அனுப்பி ஏழைகளுக்குப் பட்டுவாடா செய்ய வேண்டுகோள் விடுத்தான். அத்துடன் தனக்காகப்
பிரார்த்தித்த நண்பர்களுக்கும், அரச வைத்தியருக்கும், மருத்துவ வழிகளைப் பரிந்துரை
செய்த மற்ற மனிதர்களுக்கும், சக்கரவர்த்திக்குமே
நான்கைந்து அடிகள் உயரமும், இரண்டு மூன்று அடிகள் அகலமுமுள்ள கூடைகளில் இனிப்புகள்,
பழங்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான்.
அத்தனையும்
அனுப்ப முதலில் அவற்றை மொத்தமாக சிவாஜியின் மாளிகைக்குத் தருவிக்க வேண்டியிருந்தது.
அவை அத்தனையும் உள்ளே செல்லும் முன் பரிசோதித்துப் பார்த்த காவல் வீரர்கள் உள்ளே சென்ற
பொருட்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு மறுபடியும் வெளியே செல்லும் போது பரிசோதித்துக்
களைத்துப் போயினர், முன்பெல்லாம் கூடைகள் சிறிய அளவில் இருந்தன. இப்போதெல்லாம் கூடைகள்
மிகப் பெரியதாக மாற ஆரம்பித்திருந்த நிலையில் பரிசோதனைகளில் கூடுதல் சிரமத்தை அவர்கள்
உணர்ந்தனர்.
சிவாஜி
பொழுது போகாத சமயங்களில் காவலர்கள் சோதனை செய்யும் மாளிகை முகப்பில் வந்து அமர்ந்து
கொள்வதுண்டு. போலத்கான் எப்போது சிவாஜி மாளிகை முகப்பில் வந்து விட்டாலும் ஐந்த அடுக்கு
காவலில் இருந்த அந்த மாளிகையின் கடைசி மூன்று அடுக்குக் காவல்களை சிவாஜி அறியாதபடியே
இரட்டிப்பாக்கி விடுவது வழக்கம். இப்போதெல்லாம் சிவாஜி தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடும்
அறிகுறியே காட்டாத போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் அவசியத்தை போலத்கான் மறந்து விடவில்லை.
சிவாஜி
மாளிகையின் முகப்பிற்கு வந்தவுடனேயே அவன் முகப்புக்கு வந்திருக்கிறான் என்ற தகவல் முதல்
அடுக்குக் காவலர்கள் மூலம் மற்ற அடுக்குக் காவலர்களுக்கு இரகசிய சமிக்ஞை மூலம் தெரிவிக்கப்படும்.
உடனடியாக மற்ற அடுக்குக் காவலர்கள் உஷாராகி விடுவார்கள். காவல் உடனடியாக மேலும் பலப்படுத்தப்பட்டு
விடும்.
உடல்நிலை
முன்னேறியதில் மிக உற்சாகம் அடைந்திருந்த சிவாஜி மறுநாள் மாளிகை முகப்பில் வந்தமர்ந்தான்.
உடனடியாக சமிக்ஞை கிடைக்கப்பெற்ற மற்ற அடுக்குக் காவலர்கள் உஷாரானார்கள். அதைக் கண்டும்
காணாதது போல சிவாஜி இருந்தான். காவலர்கள் கூடைகளைப் பரிசோதிக்கும் விதத்தை அவர்கள்
அறியாமலேயே மிகக் கூர்ந்து கவனித்தபடி அமர்ந்திருந்த சிவாஜியிடம் போலத்கான் மிக சுவாரசியத்துடன்
தன் இளமைக்காலச் சம்பவங்களை விவரித்துக் கொண்டிருந்தான்.
சிவாஜி
பேச்சில் கவனம் வைத்து காவலர்கள் பரிசோதனையை பேச்சினிடையே மேலோட்டமாகப் பார்ப்பது போல்
தெரிந்தாலும் அவன் கவனம் கூர்மையாகவும், முழுமையாகவும் காவலர் பரிசோதனையில் தான் தங்கியிருந்தது.
காவலர்கள் கூடைகளைப் பரிசோதிக்கும் விதத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. ஒவ்வொரு பரிசோதனையின்
போதும் முதல் கூடையும், கடைசிக் கூடையும் கண்டிப்பாக அவர்களால் பரிசோதிக்கப்பட்டன.
குறைவான எண்ணிக்கையில் கூடைகள் கொண்டு செல்லப்படும் போது இரண்டாம் கூடையும் கூட மேலோட்டமாகப்
பரிசோதிக்கப்பட்டது. மற்ற கூடைகளை சில சமயங்களில் தட்டிப் பார்த்தார்கள். சிலசமயங்களில்
அதுவும் இல்லை. அதிகமாகக் கூடைகள் இருந்தால் முதல் கூடையும் கடைசிக் கூடையும் மட்டும்
பரிசோதிக்கப்பட்டன.
மனிதர்கள்
பழக்கங்களின் அடிமைகள். பெரிய காரணங்கள் எதிர்மாறாக அவர்களை நடக்கத் தூண்டாதவரை அவர்கள்
தங்கள் பழக்கப்படியே செய்து கொண்டிருப்பார்கள்….. என்று எண்ணிய சிவாஜியின் மூளை விரைவாகத்
திட்டமிட ஆரம்பித்தது.
(தொடரும்)
Eagerly waiting for Sivaji's escape scene
ReplyDeleteஅப்ப கூடையில் ஏறி சிவாஜி தப்பித்துவிடுவான் போலிருக்கிறதே...!!!
ReplyDeleteதப்பிக்கும் போது கூடையை தூக்குபவர்களை எப்படி தன் வழிக்கு கொண்டுவருவான்?
எதிராளியின் பலவீனத்தை கணிப்பதில் சத்ரபதி சிவாஜி மகராஜ் திறமையானவர்
ReplyDeleteசிவாஜி பழக்கூடையில் மறைந்து தப்பிவிடுவதை சிறிய வயதில் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்
ReplyDelete