Monday, March 2, 2020

சத்ரபதி 114


சிவாஜியின் மாளிகைக் காவலுக்குத் தலைவனாக இருந்த போலத்கானிடம் முகலாயச் சக்கரவர்த்தி சிவாஜியிடம் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார். அப்படி எச்சரித்ததுமல்லாமல் சக்கரவர்த்தி ஔரங்கசீப் தொழுகைக்குச் செல்லும் போது அவருக்கு இருந்த காவல் இருமடங்காகி இருப்பதையும் போலத்கான் கவனித்தான். கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிவாஜி எப்படியோ தப்பி வந்து தன்னைத் தாக்கும் சாத்தியமிருக்கிறது என்று பயப்பட்டது போல் இருந்தது சக்கரவர்த்தியின் இந்த முன்னெச்சரிக்கை. முகலாயத் தலைநகரில் சிவாஜி கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கும் போதே, முகலாயச் சக்கரவர்த்தி தன் பாதுகாப்பில் இத்தனை பயத்தை உணர்கிறார் என்பதே சிவாஜி எப்படிப்பட்டவன் என்பதை வலியுறுத்திக் காட்டியதால் போலத்கான் தன் பல அடுக்குக் காவலில் சிறிய பலவீனமும் வந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான்.

ஆனால் அவன் பயப்பட்டபடி எதுவும் நடப்பதற்குப் பதிலாக சிவாஜியிடம் சில நாட்களாகவே போலத்கான் பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறான். போலத்கானிடம் சிவாஜி மிகுந்த அன்பு பாராட்டியும் நட்புணர்வோடும் பழக ஆரம்பித்திருந்தான். தனக்கு வேண்டிய சௌகரியங்களை போலத்கானிடம் அடிக்கடிக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். ஔரங்கசீப் சிவாஜிக்கு எந்தச் சௌகரியத்திற்கும் குறைவிருக்கக்கூடாது என்று முன்பே போலத்கானுக்குக் கட்டளையிட்டிருந்தான். எதிர்காலத்தில் சிவாஜி மீது ஏதாவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் பட்சத்தில் அவனுக்கு எப்படி ராஜமரியாதை வழங்கப்பட்டது என்பதை எதிர்ப்பாளர்கள் அறிய வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட முடிவு தனி வெறுப்பின் காரணமல்ல நீதியின் படியே எடுக்கப்பட்டது என்று அவர்கள் நினைக்க வேண்டும் என்றும் ஔரங்கசீப் நினைத்தான். அதற்கு இந்தச் சலுகைகள் உதவும் என்று அவன் கணக்குப் போட்டான்.

அப்படிச் சௌகரியங்களுடன் வாழ்ந்த சிவாஜி, அவன் அமைச்சர், அதிகாரிகள், ராம்சிங் மட்டுமல்லாமல் மற்ற முகலாயப் பிரமுகர்கள் தன்னை வந்து பார்ப்பதையும் தவிர்க்கவில்லை. அப்படி வந்து போகிறவர்களிடம் தான் ஆனந்தமாக இருப்பதாக சிவாஜி காட்டிக் கொண்டான். 

சிவாஜி ஒரு நாள் போலத்கானை அழைத்துப் பேசினான்.

“வணக்கம் காவலர் தலைவரே”

“வணக்கம் அரசே. ஏதேனும் சௌகரியக்குறைவு உள்ளதா?”

“சக்கரவர்த்தியின் விருந்தாளிக்கு, அதுவும் தங்களைப் போன்ற சிறப்பான ஒருவரின் சேவை பெற்று வரும் ஒருவருக்கு, என்ன அசௌகரியம் இருக்க முடியும் காவலர் தலைவரே. நான் என் அதீத எதிர்பார்ப்புகளையும் தங்களிடம் தெரிவித்து அந்த எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொண்ட நிலையில் இனி ஏதாவது இங்கு அசௌகரியம் என்று சொன்னால் என் நாக்கு அழுகி விடும்”

போலத்கான் அந்தப் பாராட்டில் உள்ளம் மகிழ்ந்து கேட்டான். “வேறு என்ன அரசே”

“என்னுடன் வந்த மராட்டியப் படைக்கு இங்குள்ள சீதோஷ்ண நிலை ஒத்துக் கொள்வதில்லை என்றும், அவர்களில் பலர் அடிக்கடி நோய்வாய்ப் படுகிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன். ஒரு தலைவனான நான் அவர்கள் வாழ்க்கையைச் சுலபமாக்க வேண்டுமே ஒழிய அவர்கள் வாழ்வைக் கடினமாக்கி விடக்கூடாதல்லவா. அது தான் என் மனதை வாட்டுகிறது”

போலத்கான் சொன்னான். “கவலையை விடுங்கள் அரசே. அவர்களுக்கு உகந்த மருத்துவம் அளிக்க நான் உடனே ஏற்பாடு செய்கிறேன்.”

“காவலர் தலைவரே. தொடர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமே ஒழிய தற்காலிகத் தீர்வுகள் கண்டு என்ன பயன்? திரும்பத் திரும்ப அதே பிரச்னைகள் வந்து கொண்டே அல்லவா இருக்கும். நான் அழைத்தது அவர்களுக்கு மருத்துவ உதவி கேட்பதற்கு அல்ல. அவர்களை தக்காணத்திற்கே திருப்பி அனுப்ப சக்கரவர்த்தியிடம் கோரிக்கை விடுக்கத் தான். என் சேவைக்குச் சில ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்கள் திரும்பிச் செல்ல தயவு செய்து அனுமதிக்க நான் சக்கரவர்த்தியிடம் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவியுங்கள்”

போலத்கான் இந்தக் கோரிக்கையை எதிர்பார்க்கவில்லை. “உடனடியாகத் தங்கள் கோரிக்கையைச் சக்கரவர்த்தியிடம் தெரிவிக்கிறேன் அரசே” என்று சொல்லி விடைபெற்றான்.

ஔரங்கசீப்பும் இந்தக் கோரிக்கையை எதிர்பார்த்திருக்கவில்லை. “மறுபடி சொல்” என்று போலத்கானைச் சொல்ல வைத்துக் கேட்ட அவனுக்கு அந்தக் கோரிக்கை இனித்தது. ஒரு மனிதனைக் காவலில் வைப்பதும் பாதுகாப்பதும் சுலபம். ஆனால் ஒரு படையைக் கண்காணிப்பில் இருத்துவதும், காவல் காப்பதும் மிகவும் கடினம். சிவாஜியின் படையைக் கண்காணிக்கவும், அவர்கள் எந்த விதத்திலும் சிவாஜி காவலுக்கு வைக்கப்பட்டிருந்த மாளிகையை நெருங்கி விடாதபடி பார்த்துக் கொள்ளவும் ஏராளமான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்த ஔரங்கசீப் பெரிய தொல்லை விட்டது என்று நிம்மதியுடன் உடனே அனுமதி கொடுத்தான்.

ஆனால் மராட்டியப் படைவீரர்கள் சிவாஜியை விட்டுப் பிரிய மனமில்லாமல் கலங்கினார்கள். சிவாஜியின் படைத்தலைவன் இது உண்மையில் சிவாஜியின் விருப்பமா, இல்லை சிவாஜியின் விருப்பம் என்ற பெயரில் முகலாயர்கள் செய்யும் சூழ்ச்சியா என்று அறிய விரும்பினான்.

அவன் போலத்கானிடம் சிறப்பு அனுமதி பெற்று சிவாஜியைச் சந்தித்த போது சிவாஜி சொன்னான். “நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே உங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாக நம் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள்”

படைத்தலைவன் கண்கலங்க தழுதழுத்த குரலில் சொன்னான். “தங்களை விட்டு விட்டு நாங்கள் மட்டும் எப்படி அரசே திரும்பிச் செல்வோம். அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் அங்கே உங்கள் தாயாரும், அரசியாரும், நம் மக்களும் கேட்டால் நாங்கள் என்ன சொல்வோம்.?”

சிவாஜி அமைதியாகச் சொன்னான். “என் கட்டளை என்று சொல்லுங்கள் படைத்தலைவரே. நான் தனியாக இல்லை, என்னுடன் இறைவன் இருக்கிறான் என்று நான் தைரியமாக இருப்பதாகச் சொல்லுங்கள்.”

படைத்தலைவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். “இன்று தாங்கள் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் எனக்கு இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்றே சந்தேகமாய் இருக்கிறது அரசே. இருந்தால் இவ்வளவு நம்பும் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருப்பானா என்று தோன்றுகிறது அரசே”

“எல்லா நிலைமைகளும், எத்தனை மோசமானதாக இருந்தாலும், ஏதோ ஒன்றை உணர்த்த, ஏதோ ஒரு படிப்பினையைத் தரத் தான் ஒருவனது வாழ்க்கையில் வருகின்றன படைத்தலைவரே. அவற்றை மறுப்பது வாழ்க்கையின் படிப்பினைகளையும், சாராம்சத்தையுமே மறுத்து விலக்குவது போலத் தான். அதனால் இறைவனைக் குற்றம் சொல்லாதீர்கள். தைரியமாகச் செல்லுங்கள். படைவீரர்களிடம் ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் என்று சொல்லுங்கள்”

படைத்தலைவன் சிவாஜி உறுதியாகச் சொன்ன அந்தக் கடைசி வாக்கியத்தில் உற்சாகம் பெற்றான். அவன் நீண்ட காலமாகச் சிவாஜியை அறிவான். சிவாஜி தன் ஆட்களிடம் என்றுமே வெட்டிப் பேச்சோ, வீண் வார்த்தைகளோ பேசியதில்லை. படைத்தலைவன் சிவாஜியைக் கூர்ந்து பார்த்தான். சிவாஜி புன்னகைத்தான். படைத்தலைவன் ஓரளவு நிம்மதி பெற்றுக் கிளம்பினான்.

சிவாஜியின் படை ஆக்ராவிலிருந்து அன்றே கிளம்பியது. அப்படையுடன் பெரும்பாலான அதிகாரிகளும் சேர்ந்து கிளம்பினார்கள்.

அவர்கள் சென்ற பிறகு சிவாஜி மேலும் உற்சாகமாக இருந்தான். அவனைச் சந்திக்க வந்த முகலாயப் பிரமுகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியது. அவனிடம் பேசும் போது நிறைய புதிய புதிய விஷயங்களை அவர்கள் அறிந்து கொண்டார்கள். சிவாஜி ஒவ்வொருவருக்கும் எதில் எல்லாம் ஆர்வம் உண்டோ அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதுபற்றி மிக சுவாரசியமாகப் பேசினான். ஆரம்பத்தில் போலத்கான் அவர்கள் பேச்சைக் கேட்க ஒற்றர்களை நியமித்தான். சில நேரங்களில் தானும் அந்தப் பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்டான். காரணம் ஔரங்கசீப் எங்கேயெல்லாம் ஆட்கள் கூடுகிறார்களோ அங்கேயெல்லாம் தனக்கெதிராக சதி செய்யப்படும் சாத்தியமிருக்கிறது என்று நம்பியது தான். முகலாயப் பிரமுகர்களே ஆனாலும் அவர்கள் சிவாஜியை அடிக்கடிச் சென்று சந்திப்பதை அவன் சந்தேககத்துடன் தான் பார்த்தான். சிவாஜி என்ன பேசுகிறான், பிரமுகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கண்காணித்துச் சொல்ல போலத்கானைப் பணித்திருந்தான்.

போலத்கான் சிவாஜியின் பேச்சிலும், பிரமுகர்களின் பேச்சிலும் சதியின் சாயல் கூட இல்லை என்பதைக் கண்டுபிடித்து ஔரங்கசீப்பிடம் தெரிவித்தான்.

யாரும் வராத சில சமயங்களில் சிவாஜி போலத்கானிடமும் பேசிப் பொழுது போக்குவதுண்டு. அப்படிப் பேசும் போது சிவாஜியிடம் போலத்கான் சொன்னான். “சில நாட்களாக நீங்கள் கூடுதல் மகிழ்ச்சியாகத் தென்படுகிறீர்கள் அரசே”

சிவாஜி சொன்னான். “உண்மை காவலர் தலைவரே. ஆரம்பத்தில் இந்த மாளிகையை நான் சிறையாக நினைத்து மனம் நொந்தேன். ஆனால் இப்போது இந்த மாளிகை என் சொந்த மாளிகையைப் போல் ஆகி விட்டது. சொல்லப் போனால் என் சொந்த மாளிகையிலும் இந்தச் சௌகரியங்கள் இல்லை என்பதை நான் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். என் தாயாரும், மனைவியும் இங்கே வந்தார்களேயானால் இது முழுமையாக என் வீடு போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டு விடும். அவர்களை இங்கு வர அனுமதிக்க நான் சக்கரவர்த்தியிடம் கோரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை”

சொல்லி விட்டு சிவாஜி சிரிக்க போலத்கான் புன்னகைத்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. மோசமானதாக இருந்தாலும், ஏதோ ஒன்றை உணர்த்த, ஏதோ ஒரு படிப்பினையைத் தரத் தான் ஒருவனது வாழ்க்கையில் வருகின்றன..............
    ........... படைவீரர்களிடம் ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் என்று சொல்லுங்கள்”
    உயர்ந்த கருத்து

    ReplyDelete
  2. Sivaji is creatins a Masterplan?!

    ReplyDelete
  3. Sivaji is really great. He never loses hope and faith in God, whatever the situation is.

    ReplyDelete
  4. கஷ்டம் வந்தாலும்... அது நம் வாழ்க்கையில்... ஏதோ ஒன்றை உணர்த்த,ஒரு படிப்பினையை தரவே வருகிறது...அதை ஏற்றுக்கொள்ள கொள்ள வேண்டுமே தவிர இறைவனை குறை கூறக் கூடாது....

    👏👏👏👌அற்புதமான தத்துவம் ஐயா....

    ReplyDelete
  5. Sir hw to read from 1st chapter. Plz help with this. Thk u

    ReplyDelete
    Replies
    1. Click chatrapathi in vagaigal on right side. All chapters will appear from latest to first. Go to the first chapter and begin to read from thereon.

      Delete