க்ரிஷ் இல்லுமினாட்டி தலைமையிடமிருந்து
வந்திருந்த தகவல்களால் தன் மன அமைதியைத் தொலைத்திருந்தான். விஸ்வம் டேனியலின் உடம்புடன் ஜெர்மனியை விட்டு வெளியேறி
விடாதபடி கடுமையான ஏற்பாடுகளைச் செய்திருப்பதைத் தெரிவித்திருந்தார்கள். அதனால் ஜெர்மனியிலிருந்தே விஸ்வம் செய்ய
முடிந்ததைச் செய்யலாமே ஒழிய அங்கிருந்து வெளியேறி எதையும் செய்ய முடியாத அளவு ஜெர்மனியின்
எல்லைகளில் கடுமையான காவல் இருக்கிறது என்ற தகவல் க்ரிஷுக்கு ஓரளவு திருப்தியைத் தந்தது. டேனியலின் உடல்வாகு, முகவாய்க்கட்டைக் கீறல் என்ற இரண்டையும்
குறி வைத்து சோதனைகளைத் தீவிரப்படுத்தி இருந்தார்கள். ஆனால் விஸ்வத்தின் கூட்டாளி பற்றி இல்லுமினாட்டிக்கு எந்தத்
தகவலும் இது வரை கிடைத்திருக்காததால் அந்தக் கூட்டாளி மூலம் விஸ்வம் எதையும் செய்யக்
கூடும் என்று இல்லுமினாட்டியின் தலைவர் எர்னெஸ்டோ எச்சரித்திருந்தார். இப்போதைக்கு விஸ்வத்தின் முதல் எதிரி
க்ரிஷ், அடுத்ததாக எர்னெஸ்டோ என்ற நிலைமை இருப்பதைத் தெரிவித்திருந்த எர்னென்ஸ்டோ க்ரிஷை
நேரடியாக எதுவும் செய்ய முடியாத பட்சத்தில் அவன் குடும்பத்தை விஸ்வம் குறி வைக்கலாம்
என்று தெரிவித்திருந்தார். அதில் தான் க்ரிஷ் தன் மன அமைதியை இழந்திருந்தான்.
முன்பே அவன் காதலி
ஹரிணியைக் கடத்திச் சென்றவன் விஸ்வம். தெய்வாதீனமாக ஒரு முறை அவளைக் காப்பாற்ற முடிந்தது. அடுத்தபடியாக விஸ்வம் தன் மர்மக்கூட்டாளி
மூலம் யாரைக் குறி வைக்கிறானோ தெரியவில்லை. க்ரிஷின் தந்தை கமலக்கண்ணன் மாநில முதலமைச்சர். சகோதரன் உதய் பாராளுமன்ற உறுப்பினர். இருவரும் எப்போதுமே நல்ல பாதுகாப்புடன்
இருப்பவர்கள். ஆனால் ஹரிணியும், அவன் தாய் பத்மாவதியும் அப்படியல்ல. ஹரிணியாவது சற்று எச்சரிக்கையாக இருக்கக்கூடியவள். ஆனால் பத்மாவதி அதிலும் போதாது. அவள் மூத்த மகன் உதய்க்குப் பெண் பார்க்கும்
முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாள். ஒரே நாளில் இரண்டு மகன்களின் திருமணத்தையும் முடித்து
விட்டால் நல்லது என்று எண்ணியிருக்கும் அவள் மூத்த மகனின் ஜாதகப் பிரதிகளை எங்கே போனாலும்
கொண்டு போகிறாள். யாராவது எங்காவது தகுந்த பெண் இருப்பதாகச் சொன்னால் அவர்களிடம் மகன் ஜாதகத்தைக்
கொடுத்து பெண் ஜாதகத்தை வாங்குவது இப்போது வாடிக்கையாகி விட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு கூட அவள்
பார்ப்பதில்லை. இந்தப் பலவீனத்தை விஸ்வம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கையில்
க்ரிஷுக்கு மனம் பதைத்தது.
குடும்பத்தாரிடம்
முழுத் தகவல்களையும் அவனால் சொல்ல முடியாது. அதே நேரத்தில் எச்சரிக்காமலும் இருக்க முடியாது. நிறைய யோசித்து ஆபத்து ஏற்படலாம் என்கிற
நிலைமையை உதயிடமும், ஹரிணியிடமுமாவது தெரிவிக்க க்ரிஷ் முடிவு செய்து இருவரையும் தனியாக அழைத்துப் பேசினான். இறந்து போனதாய் அவர்கள் நினைத்த விஸ்வம்
கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பதாகவும், அவனுக்குக் கூட்டாளி ஒருவன் இருப்பதாகத் தெரிய வந்திருப்பதாகவும்
அன்பின் காரணமாக இல்லுமினாட்டி தகவல் அனுப்பி முக்கியமாகக் குடும்பத்தினரை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தியதாக அவன் தெரிவித்தான்.
ஹரிணி கவலையுடன்
அவனைப் பார்த்தாள். உதயோ சிரித்து விட்டான். “டேய் கற்பனைக்கும் ஒரு லிமிட் இருக்குடா. இந்தக் காலத்துல இப்படி எல்லாமுமா நடக்கும்.”
க்ரிஷ் அண்ணனை
முறைத்தான். உடனே உதயின் சிரிப்பு குறைந்தது. தம்பியைத் தைரியப்படுத்தும் தோரணையில் அவன் சொன்னான். “சரி உண்மைன்னே வெச்சுக்குவோம். நடக்கறது நம்ம ஆட்சிடா. பாதுகாப்பு விஷயத்துல பயமே தேவையில்லை.”
க்ரிஷ் சொன்னான். “விஸ்வம் கொன்னப்ப ராஜதுரையும் முதலமைச்சர்
தான்”
உதய் மெல்ல நிலைமையின்
தீவிரத்தை உணர்ந்தான். க்ரிஷ் சொன்னான். “முக்கியமாய் ஹரிணியும், நம் அம்மாவும் ஜாக்கிரதையாய் இருக்கிறது நல்லதுன்னு தோணுது...”
ஹரிணி புரிதலுடன்
தலையசைத்தாள். உதய் சொன்னான். “கிழவியைக் கட்டுப்படுத்தறது தான் கஷ்டம். ஜாதகக்கட்டை கைல வெச்சுகிட்டு அது தினமும் பண்ற அலப்பறை
தாங்கலை... யார் யாரோ வந்து பாக்கறாங்க. கிழவியும் எங்கெங்கெயோ போகுது. நானும் பல தடவை சொல்லிப் பார்த்துட்டேன், அம்மா ஒரு முதலமைச்சரோட பொண்டாட்டியா
கௌரவமா நடந்துக்கப் பழகிக்கோன்னு... சொன்னா கேக்கணுமே... பேசாம கிழவி காலை முறிச்சுப் போட்டுடறது தான் நல்லது... அப்ப தான் வீட்டோடயே இருக்கும்”
தாயிற்கும், மகனுக்கும் இடையே இருக்கும் நட்புடன்
கூடிய அதீத பாசத்தை அறிந்திருந்த ஹரிணி புன்னகையுடன் சொன்னாள். “பாவம் அத்தை உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணு
கிடைக்கணும்னு தான் அப்படி அலையறாங்க...”
உதய் சொன்னான். “அலைஞ்சு என்ன பிரயோஜனம். அது போடற கண்டிஷனை எல்லாம் பாத்தா எனக்கு
நல்ல அழகான பொண்ணு அமையறது கஷ்டம் தான்னு ஒரு புரோக்கர் சொல்றான். ஆனா அவன் சொன்னான்கிறத தயவு செஞ்சு
கிழவி காதுல போட வேண்டாம்னு வேற கெஞ்சறான். கிழவி வெளியவும் கொஞ்சம் பேரை இப்படி பயமுறுத்தி வெச்சிருக்குது...”
ஹரிணி வாய்விட்டுச்
சிரித்தாள். “அநியாயத்துக்கு அத்தையை இப்படி எல்லாம் சொல்லாதீங்க...”
க்ரிஷ் இருக்கின்ற நிலைமையின் தீவிரம் புரியாமல் தமாஷ் பேசும் இரண்டு
பேரையும் முறைத்துப் பார்த்தான். உதய் ஹரிணியிடம் கேட்டான். “உனக்குக் காதலிக்க இந்த சிடுமூஞ்சியைத் தவிர வேற ஆளே கிடைக்கலியா....” பின் தம்பி முகம் போன போக்கைப் பார்த்து
அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னான். ”சரி சரிடா... புரியுது... அம்மா பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு பண்றேன். நீ கவலைப்படாதே....”
க்ரிஷ் பாதி நிம்மதியடைந்தான்.
விஸ்வம் அந்த ஓவியங்களைக் காட்டி “என்ன இதெல்லாம்? நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம்?” என்று கேட்டவுடன் புரியாதது போல் ஜிப்ஸி கேட்டான். “நீ எதைக் கேட்கிறாய்?”
விஸ்வம் ஒரு ஓவியத்தில் இருந்த இல்லுமினாட்டி சின்னத்தைக் காண்பித்து விட்டுச் சொன்னான். “இதைத் தான் கேட்கிறேன்”
ஜிப்ஸி முகத்தில் புன்னகை படர்ந்தது. “கண்டிப்பாய் நீ கண்டுபிடிப்பாய் என்று தெரியும். ஆனால் வந்த ஒரு நாளுக்குள்ளாகவே நீ கண்டுபிடிப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் உனக்கு நிகர் நீ தான்”
விஸ்வம் அந்தப் பாராட்டில் புளங்காகிதம் அடைந்து விடாமல் ‘நான் கேட்டதற்கு என்ன பதில்?’ என்பது போல ஜிப்ஸியைப் பார்த்து நின்றான்.
ஜிப்ஸி சொன்னான். “நாம் ஒளிந்திருக்க இப்போதைக்கு இதை விட நல்ல வேறு பாதுகாப்பான இடம் நமக்குக் கிடைக்காது. அதைக் கணக்குப் போட்டுத் தான் இங்கே உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தேன். ஆனால் இங்கே ஒவ்வொரு ஓவியத்திலும் இல்லுமினாட்டி சின்னம் இப்படி மறைந்திருக்கும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை... வந்த பிறகு தான் தெரிந்தது...”
விஸ்வம் அமைதியாகக் கேட்டான். “சரி இதன் அர்த்தம் என்ன?”
ஜிப்ஸி சொன்னான். “அதை நாம் தான் இங்கே கண்டுபிடிக்க வேண்டும். கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும். விதி காரணம் இல்லாமல் நம்மை இங்கே இழுத்து வந்திருக்காது...”
விஸ்வம் முகம் இறுகியது. “விதி இழுக்கிற இடங்களுக்கு எல்லாம் போவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் இழுக்கிற இடத்திற்கு விதி வந்து சேர வேண்டும் என்று நினைக்கிறவன் நான்... என் வாழ்க்கைக்கான பொறுப்பை விதிவசம் ஒப்படைக்க எனக்கு விருப்பம் இல்லை”
ஜிப்ஸி சொன்னான். “நம் விருப்பப்படியே எல்லாம் நடந்து விடுவதில்லை. வாழ்க்கை விதியும், நாமும் சேர்ந்து விளையாடுகிற ஒரு ஆட்டம் தான். பாதி விதி ஆடுகிறது. மீதி நாம் ஆடுகிறோம். இதில் தவிர்க்க முடியாத அம்சம் ஒருவர் விட்ட இடத்தில் தான் இன்னொருவர் தொடர வேண்டி இருக்கிறது என்பது தான். அதனால் வாழ்க்கை முழுவதுமே விதி ஆடி விடுவதில்லை ஒரு காயை நகர்த்தி விட்டு நீ ஆடவும் வாய்ப்பு தருகிறது. நீ தீர்மானித்து ஆடி முடித்த பின் அதுவும் சிலதைத் தீர்மானிக்கும். அதை நீ மறுக்க முடியாது”
விஸ்வம் கசப்புடன்
சொன்னான். “ஆனால் விதி சுதந்திரமாக விளையாடுகிறது. எனக்கு அந்தச் சுதந்திரம் இல்லை. என்னைக் கட்டிப் போட்டிருக்கிறது”
ஜிப்ஸி கேட்டான். “எப்படிச் சொல்கிறாய்?”
“இந்த உடம்பே என்னைக் கட்டிப் போட்டதற்கு அடையாளம் தான். இதில் குடியேறியதில் இருந்து இதன் இம்சை
தாங்கவில்லை. என் திறமைகளை என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை. இது போதை போதை என்று அசுரப்பசியோடு கத்துகிறது. சில நேரங்களில் மனதைக் குவிப்பது கூட
கஷ்டத்தின் உச்சமாக இருக்கிறது. மூளையில் எல்லா ப்ரோகிராம்களையும் வைத்திருக்கிறேன். ஆனால் சிறிய முயற்சிக்குக் கூடப் பிரம்மப் பிரயத்தனம்
செய்ய வேண்டி இருக்கிறது. கஷ்டப்பட்டு நேற்று ஒரு சக்தியை முயன்றேன். சின்ன முயற்சியில் நான் நான்கு நாள் சேர்த்து வைத்த சக்தி
முழுவதும் தீர்ந்து போய் விட்டது. மறுபடி பலமிழந்து நிற்கிறேன்.”
ஜிப்ஸி சொன்னான். “அரை மணி நேரம் கூடப் போதையை விட்டு
இருக்க முடியாத உடம்பு நான்கு நாள் போதை இல்லாமல் தாக்குப்பிடிக்கும்படி செய்திருக்கிறாய். டேனியல் இந்த உடலைச் சாக வைத்திருக்கிறான். நீ இதைப் பிழைக்க வைத்திருக்கிறாய். இதில் எல்லாம் நான் உன் பலத்தைத் தான்
பார்க்கிறேன்...”
சிறிய வெற்றிகளில்
நிறைவடைவதை என்றோ நிறுத்தியிருந்த விஸ்வம் ஜிப்ஸி சொல்வதில் மனச்சமாதானம் அடைய மறுத்து
உறுதியாகச் சொன்னான். ”எனக்கு இந்தச் சர்ச்சின் வரலாறு தெரிய வேண்டும். தயவு செய்து உண்மையைச் சொல்”
(தொடரும்)
என்.கணேசன்
Viswam is really great even though he is a villain. A classic villain
ReplyDeleteஆறுதல் போல இருந்தாலும் ஜிப்சி சொல்வதும் உண்மைதான்....
ReplyDeleteஆனால்,விஸ்வம் தன் லட்சியத்தை விட சிறு வெற்றிகளில் திருப்தி அடையாமல்...இருக்கும் மனநிலையும் அருமை....
என்ன தான் சொன்னாலும்.... விஸ்வம் விஸ்வம் தான்..... ஆனால் இவனுக்கும் மேல ஒரு எம்டன் இருக்கானே......
ReplyDeleteஎன் விமர்சன பதிவுகளை தாங்கள் படிப்பிற்களோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் உங்களிடம் உரையாடுவதாகவே நினைத்து வந்து செல்கின்றேன்...
ReplyDelete