இல்லுமினாட்டியின் தலைவரிடமிருந்து செயற்குழு உறுப்பினர்களுக்கு விஸ்வம் பற்றி இன்னமும் எந்தச் சுற்றறிக்கையும் வரவில்லை. வாங் வேக்கு இது கூடுதல் விசித்திரமாகப் பட்டது. கிழவர் ரகசியமாய் ஆட்களைச் சந்திக்கிறார். தூக்கத்தைத் தியாகம் செய்து வேலை செய்கிறார். ஆனால் என்ன செய்கிறார், விஸ்வம் சம்பந்தமாக என்ன முடிவெடுத்திருக்கிறார் என்று செயற்குழு உறுப்பினர்களுக்குக் கூட இன்னமும் எந்தத் தகவலும் சொல்லாமல் இருக்கிறார். உபதலைவரைக் கூடக் கூப்பிட்டுப் பேசியதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாமல் இனியும் பொறுமை காப்பது கஷ்டம் என்று வாங் வேக்கு தோன்றியது. அவர் அலமாரியிலிருந்து ஒரு ரகசிய அலைபேசியை எடுத்தார். அதிலிருந்து இது வரை ஒரே ஒரு நபருக்குத் தான் அழைப்புகள் சென்றிருக்கின்றன. அந்த நபரிடமிருந்து மட்டும் தான் அந்த அலைபேசியில் அழைப்புகளும் வந்திருக்கின்றன.
அவர் அழைத்த மனிதர் தாமதமாகத் தான் அழைப்பை ஏற்றார். மிக மெலிந்த குரலில் “ஹலோ” என்றார். உண்மையில் அந்த மனிதர் கனத்த குரலுக்குச் சொந்தக்காரர். இந்த அலைபேசி அழைப்பில் பேசுவதற்கென்றே பிரத்தியேகமாய் இந்த மெலிந்த குரலை அவர் பயன்படுத்துகிறார். இந்த அளவு எச்சரிக்கை உடைய ஆளை வாங் வே இது வரையில் பார்த்ததில்லை.
வாங் வே அவரிடம் சொன்னார். “நாம் உடனே சந்திக்க வேண்டும்.”
அந்த மெலிதான குரல் சொன்னது. ”காலை பதினோரு மணி. வழக்கமான இடம்”
வாங் வே சொன்னார். “சரி”.
விஸ்வம் அந்த ஓவியத்திலிருந்த இல்லுமினாட்டி சின்னத்தை நீண்ட நேரம் பார்த்தான். முன்பு ஆனது போல் அந்தச் சின்னம் இப்போது அவனிடம் எந்த வித்தையையும் காட்டவில்லை. ஒளிரவில்லை. எந்த மாறுதலையும் காண்பிக்கவில்லை. அப்படி ஏதாவது ஆகும் என்று ஏன் எதிர்பார்த்தோம் என்று அவனுக்கே விளங்கவில்லை. ஆனால் அந்த ஓவியத்தில் இல்லுமினாட்டி சின்னம் இருப்பது அவனை என்னவோ செய்தது.
அவன் மெல்ல அருகில் இருந்த அடுத்த ஓவியத்தைப் பார்த்தான். அது ஜூடாஸின் முத்தம் என்ற ஓவியமாக இருந்தது. ஏசு கிறிஸ்துவை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுக்கும் விதமாக ஜூடாஸ் அவருக்கு முத்தம் தரும் காட்சி ஒரு பிரபல ஓவியத்தின் தழுவலாக இந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது. இதிலும் அந்த இல்லுமினாட்டிச் சின்னம் இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தில் விஸ்வம் அந்த ஓவியத்தை ஆராய்ந்தான். முடிவில் ஜூடாஸின் ஆடையில் மங்கலாக அந்தப் பிரமிடுக்குள் இருக்கும் கண் வரையப்பட்டிருந்ததை விஸ்வம் கண்டுபிடித்தான். கூர்ந்து கவனித்தால் ஒழிய அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது... அதிலும் அந்தச் சின்னம் கிட்டத்தட்ட ஓவியத்தின் மையத்தில் தான் இருந்தது.
யோசனையுடன் விஸ்வம் மற்ற ஓவியங்களைப் பார்த்தான். எல்லா ஓவியங்களிலும் ஏதாவது ஓரிடத்தில் இல்லுமினாட்டியின் அந்தச் சின்னம் இருந்தது. மேடைப் பகுதியில் இருந்த மூன்று ஓவியங்களில் மையப்பகுதியில் இருந்த அந்தச் சின்னம் மற்ற சுவர் ஓவியங்களில் ஏதாவது ஓரிடத்தில் இருந்தது. எதிலுமே மிக உன்னிப்பாகப் பார்த்தால் ஒழிய அந்தச் சின்னம் வரையப்பட்டிருப்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.
எல்லாம் பார்க்கும் விழி எல்லா ஓவியங்களிலும் இருந்தது அவன் யோசனையை அதிகப்படுத்தியதே ஒழிய பயமுறுத்தவில்லை. பயம் அவன் வாழ்க்கையில் இன்று வரை அறியாதது. குழப்பத்தையும் அவன் அதிக நேரம் இது நாள் வரை வைத்துக் கொண்டதில்லை. குழப்பத்தைத் தன் அறிவுக்கூர்மையின் மூலம் அவ்வப்போதே விலக்கி தெளிந்து கொள்ளும் அவனுக்கு இந்த ஓவியங்களால் ஏற்பட்ட குழப்பம் சீக்கிரம் தீர்வதாய் இல்லை. அவன் களைப்புடன் தரையில் அமர்ந்தான்...
அப்போது தான் ஜிப்ஸி சர்ச்சுக்குள் நுழைந்தான். விஸ்வம் அவனிடம் கேட்டான். “எங்கே போயிருந்தாய்?”
“நம் காரை மறைவாக வைக்கப் போயிருந்தேன். அது இந்த சர்ச் அருகில் இருந்தால் நம்மைக் காட்டிக் கொடுத்து விடலாம்...”
விஸ்வம் தலையசைத்து விட்டு அந்த ஓவியங்களைக் காட்டிக் கேட்டான். “என்ன இதெல்லாம்? நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம்?”
வாங் வே ஷாங்காய் நகரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தள்ளியிருந்த
அவரது சகோதரரின் வீட்டுக்குள் நுழைந்த போது சரியாகப் பதினோரு மணி ஆகியிருந்தது. அவருடைய
பாதுகாவலர்கள் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டார்கள். அவருடைய சகோதரரின் வீட்டார் வாசலில்
அவரை வரவேற்றதோடு சரி தங்கள் வழக்கமான வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டார்கள். வாங்
வே பரபரப்புடன் ஒரு மூலையிலிருந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு அவருக்காக இல்லுமினாட்டி
உளவுத் துறையின் உபதலைவர் சாலமன் காத்திருந்தார்.
வெளியுலகிற்கு சாலமன்
ஒரு தொழிலதிபர். இல்லுமினாட்டியின் உளவுத்
துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கிறார். இருபது ஆண்டுகளாக அதிகாரியாகவும், கடைசி
பத்தாண்டுகள் உபதலைவராகவும் இருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன் இல்லுமினாட்டி உளவுப்படையின்
தலைவர் மாரடைப்பால் காலமான போது சாலமன் தலைவராகப் பதவி ஏற்பார் என்று பலரும் நினைத்திருந்தார்கள்.
ஆனால் எர்னென்ஸ்டோ தலைவராக இம்மானுவலைத் தேர்ந்தெடுத்தார். வயதிலும், அனுபவத்திலும்
குறைந்த ஒருவன் தனக்கு வர வேண்டிய பதவியில் அமர்ந்ததும், அவனுக்குக் கீழே தான் வேலை
செய்ய வேண்டி வந்ததும் சாலமனைப் பெரிதும் பாதித்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
அவர் தன் வேலைகளைத் தொடர்ந்தார். வெளியுலக வேலைகளில் இது போன்ற சந்தர்ப்பங்களில் ராஜினாமா
செய்து விட்டுப் போவது கௌரவமாக இருந்திருக்கும். ஆனால் இல்லுமினாட்டியில் சில முக்கியப்
பொறுப்புகளில் இருந்து விடுதலை தருவது மரணமாக மட்டுமே இருந்தது. அந்த முக்கியப் பொறுப்புகளில்
உளவுத் துறையின் உபதலைவர் பொறுப்பும் அடங்கி இருந்தது.
உளவுத்துறையில்
இருக்கும் ஒருசில ஆட்களை மட்டுமே இல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் அறிவார்கள். செயற்குழு
உறுப்பினர்கள் மட்டுமே கூடுதலாகச் சிலரையும் அறிவார்கள். கணிசமான பகுதி உளவுத்துறை
ஆட்கள் உளவுத்துறை தலைவர், உபதலைவருக்கு அடுத்தபடியாக இல்லுமினாட்டியின் தலைவர், உபதலைவர்
மட்டுமே அறிவார்கள். அந்த அளவு இல்லுமினாட்டியிலும் உளவுத்துறை ரகசியமாகவே பெருமளவு
இயங்கி வந்தது.
ஒரே ஊர்க்காரரும்,
முக்கிய செயற்குழு உறுப்பினருமாகிய வாங் வே சாலமனுக்கு உளவுத்துறைத் தலைமைப் பதவி கிடைக்க
வேண்டும் என்று எதிர்பார்த்தவர். அவர் சாலமனிடம் முன்பிருந்தே நெருக்கமாக இருந்தவரும்
கூட. எர்னெஸ்டோ இம்மானுவலை உளவுத்துறைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததில்
அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. அவர்களைக் கலந்தாலோசிக்காததோடு, எர்னெஸ்டோ அப்படி முடிவு எடுத்ததற்குக் காரணத்தை
செயற்குழுவிலும் தெரிவிக்கவும் இல்லை. அதில் வாங் வேக்கு அதிருப்தி இருந்தது. அதைத்
தனியாக சாலமனிடமே சொல்லி அவர் மனதில் பெருமதிப்பைப் பெற்றிருந்தார். எர்னெஸ்டோ சீக்கிரத்தில்
ராஜினாமா செய்து விட்டுப் போகும் உத்தேசத்தை முன்பே முக்கியமானவர்களிடம் தெரிவித்து
இருந்ததால், அப்படிப் புதிய தலைமை வருமானால் சாலமனை தலைமைப் பதவிக்கு உயர்த்துவதாக
அவரிடம் வாங் வே சொல்லியுமிருந்தார்.
வாங் வே இல்லுமினாட்டியின்
சக்தி வாய்ந்த உறுப்பினர்களில் ஒருவர். செயற்குழு உறுப்பினரும் கூட. புதிய தலைமைக்குப்
போட்டி என்று வருமானால் போட்டியிடவும் வெற்றி பெறவும் முடிந்த மனிதர் என்பதால் அவர்
கொடுத்த வாக்கு சாலமனை முழுவதும் அவர் பக்கம் சாய்த்திருந்தது. எத்தனையோ ரகசியங்களை
அதிரகசியமாக அவர் வாங் வேக்குத் தெரிவிப்பதை அன்றிலிருந்து வழக்கமாக வைத்திருந்தார்.
எந்த விதத்திலும் தனக்குக் கிடைக்கும் ரகசியங்களை வாங் வே வெளியே தெரிவிப்பவர் அல்ல
என்பதை மிகவும் எச்சரிக்கை உணர்வுடைய சாலமன் எடை போட்டு வைத்து இருந்ததால் அதில் எந்த
விதத் தயக்கமும் அவருக்கு இருக்கவில்லை.
இவர்களுக்கு இடையே
நடந்த சந்திப்புகள் எப்போதும் வாங் வேயின் சகோதரரின் வீட்டில் தான் நடைபெறும். வாங்
வே வருவதற்கு அரை மணி நேரம் முன்பே வந்து சாலமன் அங்கே காத்திருப்பார். வாங் வேயிடம்
பேசுவதைப் பேசி விட்டு வாங் வே போய் அரை மணி நேரம் கழித்தே அவர் வெளியே செல்வார். இந்தச்
சந்திப்புகள் வாங் வேயின் பாதுகாவலர்கள் கூட அறியாதபடியே நடந்தன.
சாலமனைப் பார்த்தவுடன்
வாங் வே மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்க சாலமன் எழுந்து நின்று இரட்டிப்பு மரியாதையுடன்
வணக்கம் தெரிவித்தார். இருவரும் அமர்ந்தவுடன் வாங் வே கேட்டார். “என்ன நடக்கிறது?”
சாலமன் மெல்லக்
கேட்டார். “எதைக் கேட்கிறீர்கள்?”
“விஸ்வம் விஷயத்தில்
கேட்கிறேன்” என்றார் வாங் வே.
“அவன் ம்யூனிக்கில்
ஒரு வீட்டில் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். நாங்கள் அங்கே போவதற்குள் அவன் அங்கேயிருந்து
தப்பி ஓடி விட்டான்...” என்று சொன்ன சாலமன் அந்த விவரங்களை முழுமையாகத் தெரிவித்தார்.
“அவன் கூட்டாளிகள்
பற்றி எதாவது தகவல் தெரிந்ததா?”
“நம் உளவுத்துறை
விஸ்வத்தை மிகத் துல்லியமாக எடை போட்டு வைத்திருக்கிறது. அவன் எப்படி சிந்திப்பான்,
என்ன செய்வான் என்றெல்லாம் கூட எங்களுக்கு இப்போது அத்துபடியாகி இருக்கிறது. ஆனால்
அவன் கூட்டாளி பற்றி எங்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை”
“கூட்டாளி என்கிறீர்கள்.
அப்படியானால் ஒருவன் தான் கூட்டாளியா?”
“இம்மானுவல் அப்படித்
தான் இப்போது யூகிக்கிறான். அவன் யூகம் பொய் ஆவது அபூர்வம்”
இம்மானுவலின் தலைமையைச்
சகிக்க முடியாதவராக இருந்த போதும் அவன் திறமையை அங்கீகரிப்பதில் சாலமனுக்கு எந்தத்
தயக்கமும் இல்லாததைக் கவனித்த வாங் வேக்கு சாலமன் மீது மதிப்பு கூடியது. அவர் கேட்டார்.
“உங்கள் தலைவன் வேறென்ன யூகித்து வைத்திருக்கிறான்?”
“விஸ்வத்தால் எர்னெஸ்டோவின்
உயிருக்கு ஆபத்திருக்கிறது என்று யூகம் இல்லாமல் நம்பவே செய்கிறான்”
வாங் வேயின் உள்ளத்தில்
எழுந்த உற்சாகத்தை அவரால் உடனடியாக முகத்தில் மறைக்க முடியவில்லை. ஒரு கணம் கழித்தே
அவர் மறைத்துக் கொண்டாலும் சாலமன் மனது அதைப் பதிவு செய்து கொண்டது.
வாங் வே கேட்டார்.
“அந்த ஆபத்திலிருந்து அவரை அவன் எப்படிக் காப்பாற்றுவானாம்?”
சாலமன் சொன்னார்.
“அவன் அதை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவன் அவரைக் காப்பாற்றக்கூடிய ஒருவனைக் கண்டுபிடித்து
வைத்திருப்பது தெரிகிறது”
வாங் வே பரபரப்புடன்
கேட்டார். “யாரவன்?”
சாலமன் சொன்னார்.
“அமானுஷ்யன்”
(தொடரும்)
This comment has been removed by the author.
ReplyDeleteEagerly waiting for Amaanushyan. Visibility of illuminati symbols in the church paintings is very interesting.
ReplyDeleteநான்கூட ஜிப்சி... விஸ்வத்தை தனியாக விட்டுவிட்டு பழையபடி எங்கோ சென்று விட்டான்...என்று நினைத்தேன்...
ReplyDeleteநல்ல வேலையாக திரும்ப வந்து விட்டான்😂😂😂....
வாங் வே மற்றும் சாலமன் கூட்டணி ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா...?
S
ReplyDeleteபுத்தகம் முழுவதும் படித்து முடித்துவிட்டேன். முடிவில் மிஞ்சியது பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு.
ReplyDelete