இம்மானுவல் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த போன்கால் இரண்டு மணி நேரத்தில் வந்தது. அவனுடைய உளவுத்துறை ஆள் ஒருவன் பரபரப்புடன் சொன்னான். “ம்யூனிக் நகரிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் சொன்னது போல் ஒரு ஓக் மரம் இருக்கிறது...
ஒரு கிளை தீயில் கருகி இருக்கிறது. ஒரு கிளை தரையைத் தொட்டபடி இருக்கிறது. பழைய மரம்....”
இம்மானுவல் கேட்டான். “நீ அங்கே தான் இருக்கிறாயா?”
“ஆமாம். மரத்தின் அடியில் நின்று கொண்டு தான் பேசுகிறேன்”
”உனக்கு அங்கேயிருந்து அருகில் எதாவது வீடு தெரிகிறதா?”
“நூற்றியிருபது அடி தூரத்தில் ஒரு தனி வீடு தெரிகிறது”
“வேறெதாவது வீடுகள், கட்டிடங்கள்?”
“கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை”
இம்மானுவல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இரவு எட்டு... அவன் தன் ஆளிடம் கேட்டான். “அந்த வீட்டுக்குள் விளக்கு வெளிச்சம் எதாவது தெரிகிறதா?”
“இல்லை.”
“நீ இருக்கும் இட வரைபடத்தை எனக்கு வாட்சப்பில் அனுப்பி வை”
ஐந்து வினாடிகளில் அவன் சொன்னான். “அனுப்பி விட்டேன்...”
“சரி நீ அங்கேயே இரு. நம் ஆட்கள் சிலரை அங்கே அனுப்புகிறேன். அது வரை அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியேறி விடாமல் பார்த்துக் கொள்...”
அந்த ஆள் சரியென்றான். அவன் பார்வை அந்த வீட்டிலேயே தங்கி இருந்தது. உள்ளே ஆட்கள் இருப்பது போல் தெரியவில்லை. மறைவாக இருக்க விரும்பி யாராவது விளக்கை அணைத்துவிட்டு ஒளிந்து கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி மறைவாக ஒளிந்திருக்க மிகவும் கச்சிதமான வீடு தான் அது...
அடுத்த ஒரு மணி நேரத்தில் இம்மானுவல் அனுப்பிய ஆட்கள் ஏழு பேர் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொருவர் கையில் அதுநவீன துப்பாக்கிகள் இருந்தன. அவர்களில் தலைவர் போல் இருந்தவன், தகவல் தெரிவித்துக் காத்திருந்தவனிடம் வந்து கேட்டான். “ஆட்கள் யாராவது உள்ளே இருக்கிற மாதிரி தெரிகிறதா?”
“இல்லை.”
தலையசைத்து விட்டு அவன் தன் ஆட்கள் மூவரையும், தகவல் தெரிவித்தவனையும் சில அடிகள் இடைவெளிகளில் அங்கேயே நிற்க வைத்து விட்டுச் சொன்னான். “நாங்கள் நாலு பேர் சென்று உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறோம். ஒருவேளை அங்கு ஆட்கள் இருந்து எங்களை மீறி அங்கிருந்து ஓடி வந்தால் தயங்காமல் சுட்டு விடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்கள் இங்கிருந்து தப்பித்து விடக்கூடாது...”
சொல்லி விட்டு அவனும் அவன் ஆட்கள் மூன்று பேரும் வீட்டை நோக்கிச் சத்தமில்லாமல் முன்னேறினார்கள். வீட்டை வெளியிலிருந்தே சுற்றிப் பார்த்தார்கள். எல்லா ஜன்னல்களும் சாத்தியிருந்தன. உள்ளே இருட்டாகவே இருந்தது. பின் வாசலில் இருவரை நிற்க வைத்து விட்டு அவன் தன் சகா ஒருவனுடன் முன் வாசற்கதவுக்கு வந்து கதவருகே இருந்த பாதுகாப்பு அலாரத்தை ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “இதை ஆஃப் செய்து வைத்திருக்கிறார்கள். நீ கதவைத் திற”
அவன் சகா தன்னிடமிருந்த
மெல்லிய இரும்புக் கம்பியை வளைத்து அந்தக் கதவின் சாவித் துளையில் விட்டான். ஒன்றரை நிமிடத்தில் அவன் கதவைத் திறந்து
விட்டான். மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டார்கள். துப்பாக்கியை நீட்டிக் கொண்டே உள்ளே
போய் ஒவ்வொரு அறையாகப் பார்த்தார்கள். யாருமே இல்லை. ஆனால் சில மணி நேரங்கள் முன்பு வரை சமையலறை பயன்படுத்தப்பட்டிருந்த
சின்னச் சின்னத் தடயங்கள் நுணுக்கமாக ஆராய்ந்ததில் தெரிந்தன.
அந்த வீட்டுக்காரன்
நியூயார்க்கில் இருக்கிறான் என்றும், வருடம் ஒரு முறை கிறிஸ்துமஸ் சமயத்தில் வந்து போவான் என்றும்
வரும் முன்பே தகவல் சேகரித்திருந்தார்கள். தற்போது இரண்டு மாதங்களாக வீடு காலியாகத் தான் இருந்திருக்கிறது. அக்கம் பக்கம் வீடுகளும் இல்லை. அதனால் ஒளிந்து கொள்ள மிக வசதியான வீடு
தான் இது. பாதுகாப்பு அலாரத்தை ‘ஆஃப்’ செய்து வைத்திருப்பதும், சமையலறையைப் பயன்படுத்தி இருப்பதும் சமீபத்தில் ஆட்கள் இங்கே இருந்திருப்பதற்கு
அத்தாட்சி...
இந்த விவரங்கள்
உடனடியாக இம்மானுவலுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில்
விஸ்வமும் ஜிப்ஸியும் ஒரு வெள்ளை நிறக் காரில் முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் பயணம்
செய்து கொண்டிருந்தார்கள். ஜிப்ஸி காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான். விஸ்வம் பின்சீட்டில் படுத்துக் கொண்டிருந்தான்.
முன் சீட்டில் அவன் உட்கார்ந்திருந்து அவனை யாராவது பார்த்து, ஞாபகம் வைத்துப் பின்
அவன் எதிரிகளிடம் தெரிவிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கிருந்தது.
சில மணி நேரங்களுக்கு
முன் தான் ஜிப்ஸி அவசரமாக வந்து அவனிடம் தெரிவித்தான். ”அவர்கள் நம்மைக் கண்டுபிடித்து விட்டார்கள்”
சற்று ஆச்சரியத்துடன்
விஸ்வம் கேட்டான். “எப்படி?
ஜிப்ஸி வேக வேகமாக
அவர்களது துணிமணிகளை ஒரு சூட்கேஸில் திணித்துக் கொண்டே சொன்னான். “அலெக்சாண்டிரியாவில் உனக்குக் குறி
சொன்னவள் தான் உன் இருப்பிடத்தை அவர்களுக்கும் சொல்லி இருக்கிறாள்...”
விஸ்வம் முகத்தில்
களைப்பின் ரேகை ஒரு கணம் படர்ந்து மறைந்தது. அவர்கள் அடுத்த எட்டாவது நிமிடம் அங்கிருந்து கிளம்பி
இருந்தார்கள். ஜிப்ஸி அந்த வீட்டுக்கு வந்த மறுநாளே காரை மாற்றி இருந்தான். விஸ்வம் சவரம் செய்யாமலேயே இருந்ததால்
டேனியல் முகவாய்க்கட்டையில் இருந்த ஆழமான கீறல் தாடியால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த இரவு நேரத்தில் எந்த விதமானத்
தயக்கமோ, கலக்கமோ இல்லாமல் இருவரும் அமைதியாகப் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.
விஸ்வம் அவனிடம் “எங்கே போகிறோம்?” என்று கேட்கவில்லை. விஸ்வம் இந்தச் சில நாட்களில் வாய்
விட்டுப் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நாட்களில் அவன் மூச்சுப் பயிற்சியிலும் யோகா பயிற்சிகளிலும்
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். அதற்கெல்லாம் பழக்கப்பட்டிருக்காத டேனியலின் உடல் கடுமையாக
முரண்டு பிடித்தது. அசௌகரியங்களால் அவஸ்தைப்பட்டது. போதும், ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கதறியது. ஆனால் விஸ்வம் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. உடல் எல்லாம் ரணமாக வலித்தாலும் அவன் கருமமே கண்ணாய் இருந்தான். அவனுக்கு எல்லைகள் இல்லை. எல்லைகளை விஸ்தீரப்படுத்திக் கொண்டே முந்தைய உடலில் வாழ்ந்தவன்
அவன். இந்த உடலிலும் அவன் அப்படியே முன்னேறுவான். பரிதாபமான நிலையில் இருந்தாலும் இந்த
உடல் அவனுக்குக் கிடைத்திருக்கிற கருவி. எவ்வளவு பலவீனமான கருவியாக இருந்தாலும் அவனால் இந்தக் கருவியை
முடிந்த வரை சரி செய்ய முடியும். வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது கருவிகள் அல்ல. பயன்படுத்துபவனது திறமையும், மன உறுதியுமே முடிவில் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அவன் கர்த்தா... இந்த உடல் ஒரு கருவி...
ஜிப்ஸி அவன் சிந்தனைகளைக்
கலைத்தான். “மறுபடியும் அந்தக் கிழவியால் உன்னைக் கண்டுபிடிக்க முடியுமா?”
ஜிப்ஸி பதிலைத்
தெரிந்து வைத்துக் கொண்டே தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்பதில் விஸ்வத்திற்குச்
சந்தேகமில்லை. ஆனாலும் பொறுமையாகச் சொன்னான். “முடியாது. ஒரு முறை பயன்படுத்திய பிறகு அந்தப் பொருளில் இருக்கும் நமது தடயம் மங்கலாகிப்
பலவீனமடைந்து விடும்.”
ஜிப்ஸி அதற்கு
மேல் எதுவும் கேட்கவில்லை. கார் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து போன ஒரு தனிப்பாதையில் காரிருளில் வேகமாகப்
போக ஆரம்பித்தது. இப்போது எந்த வாகனமும் அவர்களுக்கு எதிரே வரவுமில்லை, அவர்களைக் கடந்து செல்லவுமில்லை. தூர தூரங்களில் ஓரிரு கட்டிடங்கள் அபூர்வமாகத்
தெரிந்தன. அதையெல்லாம் கடந்து ஜிப்ஸி காரோட்டிச் சென்று கடைசியில் ஒரு பழங்கால சர்ச்சின்
முன் காரை நிறுத்தினான். சர்ச்சைச் சுற்றிப் புதர்கள் படர்ந்திருந்தன. இப்போது வழிபாட்டில் இல்லாத சர்ச் என்பது அதைப் பார்க்கையிலேயே
தெரிந்தது. இருவரும் காரிலிருந்து இறங்கினார்கள்.
ஜிப்ஸி டார்ச் விளக்கை ஒளிர விட்டு சர்ச்சின் பக்கவாட்டில் விஸ்வத்தை அழைத்துச் சென்றான். விஸ்வம் அப்போதும் எதுவும் கேட்கவில்லை. பக்கவாட்டில் இருந்த ஒரு ஜன்னல் கதவை ஜிப்ஸி மெல்லத் தள்ளினான். அந்த ஜன்னல் கதவு திறந்து கொண்டது. ஜன்னலில் கம்பிகள் இல்லை. ஜிப்ஸி அதன் வழியாக உள்ளே குதித்தான். விஸ்வமும் தொடர்ந்து குதித்தான். உள்ளே ஏதோ ஒரு பறவை அமானுஷ்யமாகக் கிறீச்சிட்டது.
விஸ்வம் பறவைகளின் பாஷையை ஓரளவு அறிவான். அது “அபாயம்” என்று கூக்குரல் இடுவதாக உணர்ந்தான்.
(தொடரும்)
விஸ்வத்தை கண்டுபிடிக்க இம்மானுவேல் ஆட்கள் நுழைந்த காட்சியும் சரி...விஸ்வம் ஜிப்சியுடன் காரில் பயணித்த காட்சியும் சரி.... த்ரிலிங்காக இருந்தது...
ReplyDeleteஒரு சந்தேகம் ஐயா...
விஸ்வம் டேனியல் உடம்பில் புகுந்தாலும்... டேனியலின் மூளை.. டேனியல் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் நபர்களை தானே சேமித்து வைத்திருக்கும்... விஸ்வம் கூடுவிட்டு கூடு பாயும் போது சக்திகள் சம்பந்தப்பட்ட அறிவை டேனியல் மூளையில் பதிய வைத்தான்...
இருந்தாலும்,டேனியலின் உடலில் இருந்து ஆன்மா வெளியேறும் போது....மூளையின் பதிவும் ஆன்மாவோடு சென்று விடுமா???
Very very interesting.
ReplyDeleteசென்னை புக் ஃபேரில் நாவலை வாங்கி விட வேண்டியது தான். இனி சஸ்பென்ஸ் தாங்க முடியாது.
ReplyDeleteVery interesting.
ReplyDeleteபறவை கூக்குரலிட்ட'அபாயம்' விஸ்வதுக்கா இல்லை அவன் எதிரிகளாக நினைப்பவர்களுக்கா?
ReplyDeleteஅருமை..
ReplyDeleteAwesome sir
ReplyDeleteம்யூனிக்கில் துப்பாக்கி சண்டையை இல்லாமல் செய்து விட்டீர்களே !
ReplyDelete