Monday, December 30, 2019

சத்ரபதி 105


“என்ன செய்தி?” என்று சிவாஜி தன் ஒற்றர் தலைவனிடம் கேட்டான்.

“முகலாயச் சக்கரவர்த்தி இளவரசர் முவாசிம்மையும், ராஜா ஜஸ்வந்த்சிங்கையும் திரும்ப வரவழைத்துக் கொண்டு தக்காணத்திற்கு ராஜா ஜெய்சிங்கையும், தில்லர்கானையும் பெரும்படையுடன் அனுப்பி இருக்கிறார் மன்னா!” ஒற்றர் தலைவன் குரலில் கவலை தொனித்ததாக சிவாஜி உணர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆபத்தின் அறிகுறி தெரியாமல் ஒற்றர் தலைவன் கவலைப்பட மாட்டான்.

சிவாஜி ராஜா ஜெய்சிங் பெயரை ராஜபுதன மாவீரர் என்ற அளவில்  கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் தில்லர்கான் அவன் கேட்டறியாத பெயர். சிவாஜி ஒற்றர் தலைவனிடம் சொன்னான். “இருவர் பற்றியும் நான் விரிவாக அறிய விரும்புகிறேன்”

“ராஜா ஜெய்சிங் ஷாஜஹான் சக்கரவர்த்தியாக இருந்த போதே அவருடன் சேர்ந்து பல போர்கள் கண்டவர். வடக்கில் கந்தஹார் கோட்டையை, போராடி முகலாயர்களுக்குப் பெற்றுத் தந்ததால் ஷாஜஹான் அவருக்கு மிர்சா ராஜா என்ற பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறார். பின் அரியாசனப் போட்டி நடந்த போது ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷுகோவுடன் சேர்ந்திருந்தவர் அவர். தாரா ஷுகோவ் ராஜா ஜெய்சிங்கை சரியாக நடத்தியிருந்து, அவருடைய அறிவுரையையும் கேட்டிருந்தால் இன்று தாரா ஷுகோவ் தான் சக்கரவர்த்தியாக இருந்திருப்பார் என்று அரசியல் கூர்நோக்காளர்கள் கருதுகிறார்கள் மன்னா. ஆனால் விதியும், மதியும் சதி செய்ய தாரா ஷுகோவ் அரியணையையும், தலையையும் சேர்த்தே இழந்தது வரலாறு. தனக்கு எதிராக இருந்தவர்களையெல்லாம் மன்னிக்காத சக்கரவர்த்தி ஔரங்கசீப், தனக்கு லாபம் தரக்கூடிய விஷயங்களில் சில விதிவிலக்குகளை அனுமதிப்பதுண்டு. அந்த வகையில் ராஜா ஜெய்சிங்குக்கு பதவியும், அந்தஸ்தும் தந்து தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்.  ராஜபுதன மாவீரனான ஜெய்சிங் மிகுந்த அறிவாளியும் கூட. பண்பாளர், வாக்கு மாறாதவர், எந்தப் பாதகமான சூழ்நிலைகளிலும் தளராதவர் என்றெல்லாம் அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்…”

“தில்லர்கான்?”

“தில்லர்கானும் ஷாஜஹான் சக்கரவர்த்தியாக இருந்த போதே முகலாயர்களுடன் இருந்த மாவீரர். பலவான். போர்க்களத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர். இந்த இருவருக்கும் முகலாயச் சக்கரவர்த்தி இட்டிருக்கிற ஒரே கட்டளை உங்களை வீழ்த்த வேண்டும் என்பது தான். ’எத்தனை கூடுதல் படை தேவைப்பட்டாலும் அனுப்பி வைக்கிறேன். எத்தனை செல்வம் தேவைப்பட்டாலும் தருகிறேன். சிவாஜியை வீழ்த்தி சிறைப்பிடித்து வாருங்கள் அல்லது நட்புக்கரம் ஏற்க வைத்து டெல்லிக்கு அழைத்து வாருங்கள்’ என்று சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியதாகக் கேள்வி”

இப்போது வரும் எதிரிகள் திறமையானவர்கள், வலிமையானவர்கள் என்று அறிந்த பின்னரும் சிவாஜி கலக்கம் அடையவில்லை. பார்த்துக் கொள்வோம் என்று ஆரம்பத்தில் சற்று அலட்சியமாகவே இருந்தான். சமீப காலங்களில் தக்காணத்தில் அவன் கையே ஓங்கியிருந்தது. பல துறைமுக நகரங்கள் அவன் வசமாகியிருந்தன. கப்பற்படையையும் அவன் வலிமைப் படுத்தி இருக்கிறான். நிதி நிலைமையும் மிக நன்றாகவே இருந்தது.

ஆனால் இது வரை அவனுக்குச் சாதகமாக இருந்த விதி இப்போது இடம் மாறி அவனுக்கு எதிராகச் சம்பவங்களைப் பின்ன ஆரம்பித்தது. ராஜா ஜெய்சிங் சிவாஜியைப் பற்றிய முழு விவரங்களையும் பெற்றிருந்ததால் மிக புத்திசாலித்தனமாகக் காய்களை நடத்தினார். சிவாஜிக்கு எதிராக அவன் மீது வருத்தமுள்ளவர்கள் எல்லோரையும் ஒன்று கூட்ட ஆரம்பித்தார்.

பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷா ஷாஹாஜி உள்ள வரை சிவாஜியுடன் சமாதானமாகவே இருந்தான். ஷாஹாஜியின் மறைவுக்குப் பின் அவருடைய சேவைகளை எல்லாம் பாராட்டி இரங்கல் கடிதத்தை வெங்கோஜிக்குத் தான் அனுப்பி வைத்தான். ஷாஹாஜி கட்டுப்பாட்டில் இருந்த கர்நாடக, தஞ்சாவூர் பகுதிகளை வெங்கோஜியிடம் ஒப்படைத்தான். ஆனால் எல்லா விதங்களிலும் வளர்ந்து வரும் சிவாஜி ஷாஹாஜிக்குப் பிறகு அவனிடம் பழையபடி நட்பு பாராட்டி அமைதியாக இருப்பான் என்று அவனால் நம்பியிருக்க முடியவில்லை. அதனால் சிவாஜியுடன் மட்டும் தொடந்து சமாதானமாக இருக்க அவன் மனமும், சூழ்நிலைகளும் அனுமதிக்கவில்லை. ஜெய்சிங் மூலம் சிவாஜியை எதிர்க்க முகலாயர்கள் நட்புக்கரம் நீட்டிய போது அவன் அவர்கள் பக்கமே சாய்ந்தான்.

அப்சல்கானின் மகன் ஃபசல்கான், சிவாஜியுடன் பகைமை பாராட்டிய சிற்றரசர்கள், கோட்டைத்தலைவர்கள் ஆகியோரையும் ராஜா ஜெய்சிங் தன் பக்கம் இழுத்தார். சிவாஜி மேல் அதிருப்தி அல்லது பொறாமை கொண்ட மற்ற சிலர் தாமாகவே ராஜா ஜெய்சிங்குடன் சேர்ந்தனர். பம்பாய் மற்றும் கோவா பகுதிகளில் இருந்த ஐரோப்பியக் கப்பல் படையினருக்கு தங்களுடன் இணைய அழைப்பு விடுத்து அவர்களையும் ராஜா ஜெய்சிங் சேர்த்துக் கொண்டார்.

சிவாஜிக்கு எதிராக மற்ற எல்லோரையும் சேர்த்துக் கொண்டு விட்ட பின் ராஜா ஜெய்சிங் சிவாஜியின் சிங்கக்கோட்டை நோக்கி படையுடன் புறப்பட்டார். வழியில் இருந்த சிவாஜியின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகள் எல்லாம் தன்வசப்படுத்திக் கொண்டு அவர் முன்னேறினார். தில்லர்கான் ஒரு தனிப்படையுடன் சிவாஜியின் முக்கியக் கோட்டையான புரந்தர் கோட்டையைக் கைப்பற்றப் புறப்பட்டான்.

புரந்தர் கோட்டையின் தலைவன் முரார் பாஜி மாவீரன். கொரில்லாப் போர்முறையில் தலைசிறந்தவன். அவன் கொரில்லா தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி முகலாயப்படையையும், தில்லர்கானையும் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கும் செய்தி சிவாஜியை வந்து சேர்ந்தாலும் தில்லர்கானும் பின் வாங்காமல் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்ற செய்தியும் பின் தொடர்ந்தது.

இப்படி சிவாஜி முதல் முறையாக அதிபுத்திசாலித்தனமும், பெரும்படை வலிமையும் கொண்ட ஒரு கூட்டு எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு பக்கம் இப்படி அவனை நெருக்கடிக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த ராஜா ஜெய்சிங் மறுபக்கம் தூதர்கள் மூலமாக சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள வரும்படி அழைப்பையும் விடுக்க ஆரம்பித்தார்.

சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்த சிவாஜி இந்த நிலை நீடித்தால் தோல்வி நிச்சயம் என்று உணர ஆரம்பித்தான். வாழ்க்கையின் இக்கட்டான சமயங்களில், அவன் அறிவுக்குத் தீர்வுகள் எட்டாத நேரங்களில், அன்னை பவானியின் உதவியை நாடும் சிவாஜி ஒரு நாள் நீண்ட பிரார்த்தனையைச் செய்தான்.

அது போன்ற தீவிரப் பிரார்த்தனைகளில் அன்னை பவானியின் பதில் கிடைக்காமல் அவன் பிரார்த்தனையிலிருந்து எழுந்தது இல்லை. வரம் கிடைக்காமல் தவம் கலையாத மகா தவசிகளைப் போல் சிவாஜியும் அன்னை பவானி முன் அமர்ந்திருப்பான். அன்றைய பிரார்த்தனை வழக்கத்தை விட நீண்டது. கடைசியில் அன்னை பவானி அவன் உணர்வில் பதில் அளித்தாள்.

“மகனே. உனக்கு காலம் இப்போது சாதகமாக இல்லை. அப்சல்கானையும், செயிஷ்டகானையும் சமாளித்து வென்றது போல் நீ ஜெய்சிங்கை வெல்ல முடியாது. உடைவதை விடப் பணிவது புத்திசாலித்தனம் மகனே. அதனால் சமாதானத்தை ஏற்றுக் கொள். ஆபத்துக்கள் உனக்கு இனியும் காத்திருக்கின்றன. ஆனால் நான் உன் உடனிருந்து காப்பேன் என்பது மட்டும் நிச்சயம்”

ஒரு விதச் சிலிர்ப்பிலிருந்து மீண்ட சிவாஜி அன்னை பவானியின் அறிவுரையை ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில் அவனுடைய மிகச் சக்தி வாய்ந்த புரந்தர் கோட்டையின் கீழ் பகுதிகளைக் கண்ணி வெடி வைத்துத் தகர்த்து ருத்ர மால் பகுதியை தில்லர் கான் கைப்பற்றி விட்டதாகவும், பலத்த காயங்களுடன் கடைசி வரை போராடி முகலாயச் சேனைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு முரார் பாஜி வீரமரணம் அடைந்ததாகவும் சிவாஜிக்குத் தகவல் வந்து சேர்ந்தது.

முரார் பாஜியின் வீரமரணம் சிவாஜியை மிகவும் பாதித்தது. காலம் எதிராக இருக்கும் போது போராட்டத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என்பது புரிந்தது. இனி எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாலும் வெல்வது சாத்தியமில்லை என்று விதி உறுதியாக இருக்கும் போது வீரம் என்ற பெயரில் உயிர்ப்பலிகளை அனுமதிப்பதில் அர்த்தமில்லை என்று சிவாஜி உணர்ந்தான்.


பகைவனிடம் பணிவது அவனுக்கு மிகவும் கஷ்டமான விஷயம். உயிரை விடுவது கூட அதை விட மேல் என்று நினைப்பவன் அவன். ஆனால் சுயராஜ்ஜியம் என்ற பெருங்கனவைக் கண்டு வரும் அவன் வீரம் என்ற பெயரில் மடிவது முட்டாள்தனம் என்பதை உணர்ந்தான். உடைவதை விடப் பணிவது புத்திசாலித்தனம் மகனே என்ற அன்னையின் வார்த்தைகள் கசந்த போதிலும் அதில் உண்மையும் இருப்பதை உணர்ந்த அவன் இப்போதைக்குப் பணிந்து தன்னையும், தன் கனவையும் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Saturday, December 28, 2019

என் இரண்டு புதிய நாவல்கள் வெளியீடு!




அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இல்லுமினாட்டி நாவலும், விதி எழுதும் விரல்கள் நாவலும் இன்று வெளியாகியுள்ளன.


கடைசி வரை பரபரப்பும், சுவாரசியமாகவும் நகரும் இல்லுமினாட்டி நாவல் 150 அத்தியாயங்கள்,  600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது. வழக்கம் போல இந்த வலைப்பூவில் வியாழன் தோறும் ஏப்ரல் 2022 வரை தொடரும். நாவலின் விலை ரூ.650/-


விதி எழுதும் விரல்கள் நாவல் அமேசான் கிண்டிலில் வந்த போதிலிருந்தே அச்சில் எப்போது வரும் என்று பல வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் விலை ரூ 130./-


இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

தங்கள்
என்.கணேசன்

Thursday, December 26, 2019

இல்லுமினாட்டி 29



தில் கிடைக்காத கேள்விகளில் அதிக நேரம் தங்குவதில் அர்த்தமில்லை என்று நினைத்தவராக எர்னெஸ்டோ இம்மானுவலிடம் சொன்னார். “நீ முக்கியமான எதையோ பேச வேண்டும் என்று நேரில் சந்திக்க அனுமதி கேட்டாய். அதைச் சொல்

இம்மானுவல் தான் சொல்ல வந்ததை மனதில் கோர்வைப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் எடுத்துக் கொண்டு, பிறகு மெல்ல ஆரம்பித்தான். “விஸ்வம் இல்லுமினாட்டியின் உறுப்பினராகச் சேர்ந்த போது நம் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவனை இல்லுமினாட்டிக்குக் கிடைத்த அதிசய மனிதனாகவே நினைத்தார்கள். அவனுடைய அமானுஷ்ய சக்திகள், அவன் காட்டிய தீவிரம், மனஉறுதி, அவன் பிறகு கொண்டு வந்த நம் சின்னம், அது அவன் கையில் ஒளிர்ந்தது எல்லாமே அவன் மேல் பிரமிப்பை ஏற்படுத்தியது. க்ரிஷ் வந்து பேசிய பிறகு தான் அந்தப் பிரமிப்பு கரைந்தது. மதிப்பு சரிந்தது. ஆனால் இறந்த பின் அவனால் இன்னொரு உடலுக்குப் போக முடிந்தது என்றும், அந்த இன்னொரு உடலில் அவன் வாழ்கிறான் என்றும் கேள்விப்பட்ட பிறகு நம் இல்லுமினாட்டியில் அவன் மறுபடி பிரபலமடைந்து வருகிறான் தலைவரே.  மறுபடியும் அவனைப் பற்றிப் பலரும் பிரமிப்புடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்... க்ரிஷ் சரித்து விட்ட அவன் மதிப்பு மறுபடியும் உயர ஆரம்பித்திருக்கிறது. ஒருவேளை அவன் திரும்பி வந்தால் உற்சாகமாக அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலை பாதிக்கும் மேலான உறுப்பினர்களிடம் தெரிகிறது. முடிவெடுப்பதைப் பொது வாக்கெடுப்புக்கு நீங்கள் அனுமதித்தால் அவன் இல்லுமினாட்டியில் கண்டிப்பாக நுழைந்து விடும் நிலைமை தான் இருக்கிறது...”

சொல்லி விட்டு இம்மானுவல் அவரிடமிருந்து கருத்து ஏதாவது வருகிறதா என்று பார்த்தான். அவர் அமைதியாகவே இருக்கவே அவன் தொடர்ந்தான். “எங்கள் கணிப்பின் படி அவன் உண்மையான நோக்கமே இல்லுமினாட்டியைக் கைப்பற்றுவது தான். அவனுக்கு எதிராகவும், தடையாகவும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். அவன் உங்களை அப்புறப்படுத்தினால் இல்லுமினாட்டியில் மறுபடியும் நுழையலாம். எதிர்காலத்தில் இதற்குத் தலைவனாகலாம் என்று நினைக்கக் காரணம் வலுவாக இருப்பதால் தான் உங்கள் உயிருக்கு அவன் குறி வைப்பான் என்று எதிர்பார்க்கிறோம்....”

எர்னெஸ்டோ புன்னகையுடன் சொன்னார். “எனக்கு சாகப் பயமில்லை இம்மானுவல். இந்தத் தலைமைப் பதவியும் எனக்கு அலுத்து விட்டது. இல்லுமினாட்டியை அடுத்த உயர்வுக்குக் கொண்டு போகும் ஒரு தகுதிவாய்ந்த மனிதன் வந்தால் அவனிடம் ஒப்படைத்து விட்டுப் போகவே நானும் ஆசைப்படுகிறேன். ஆனால் விஸ்வம் அந்தத் தகுதி வாய்ந்த மனிதன் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன். க்ரிஷ் சுட்டிக் காட்டியது போல அவன் தன்னை மட்டுமே மையமாக வைத்துக் கொண்டு இயங்குபவன்.  அவன் இல்லுமினாட்டியில் நுழைந்தால் இந்த இயக்கத்தையும், உலகத்தையும் அழித்து விட்டே ஓய்வான். அதில் சந்தேகமேயில்லை...”

இம்மானுவல் சொன்னான். “ஆனால் நம் உறுப்பினர்களில் பலரும் அந்த அளவு அவர்களுடைய சிந்தனைகளை நீட்டவில்லை. அவர்களைப் பொருத்த வரை அவன் சக்திகள் வாய்ந்தவன், அவன் பேசிய தொனியும், விஷயமும் இல்லுமினாட்டியின் தன்மைக்கு ஒத்து வருகிறது. க்ரிஷின் தொனி தான் இல்லுமினாட்டிக்குப் பொருத்தமில்லாததாக இருப்பதாக சிலர் இப்போது நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மென்மையான தத்துவார்த்தமான அணுகுமுறை இல்லுமினாட்டியைப் பலவீனப்படுத்தி விடும் என்று பயப்படுகிறார்கள்... நம் சின்னம் தொடர்ந்து அவன் கையில் ஜொலித்து அடையாளம் காட்டிய போது உணர்ந்த தாக்கம் இப்போது உறுப்பினர்கள் மத்தியில் குறைந்து வருகிறது...”

க்ரிஷ் விஷயத்தில் இம்மானுவல் சொன்னது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. இது அவர் முன்பே எதிர்பார்த்தது தான். அதனால் தான் அவர் க்ரிஷ் பேசிய போது அன்றே சொல்லியிருக்கிறார். ‘இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்…’

இம்மானுவல் சொன்னான். “உங்களுக்கு இப்போது இருக்கும் பாதுகாப்பு மிக வலிமையானது. சாதாரணமாக யாராலும் பாதுகாப்பு வளையத்தை மீறி உங்களை நெருங்கி விட முடியாது. ஆனால் விஸ்வத்தைக் குறைத்து எடை போட்டு விட முடியாது. இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சரை அவன் கொன்றிருக்கிறான். பலத்த பாதுகாப்பில் இருந்த அவரை அவன் நெருங்கியது எப்படி, வேலையை முடித்து விட்டு அவன் அங்கிருந்து தப்பித்துப் போனதெப்படி என்பதை இது வரைக்கும் யாராலும் யூகிக்க முடியவில்லை. ரகசியமாக விசாரித்ததில் காவலில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி ஏதோ நிழல் போல ஒன்று வேகமாக நகர்ந்தது போல்  உணர்ந்ததாகவும், பின் கூர்ந்து பார்த்த போது யாரும் தெரியவில்லை என்று மட்டும் சொல்லி இருக்கிறார். அந்த அளவு வேகமாகவும், நுணுக்கமாகவும் இருந்திருக்கிறது விஸ்வத்தின் செயல்முறை. அந்தக் கொலை நோக்கு வர்மத்தால் அவன் நிகழ்த்தியது என்றும் ஒரு குறிப்பிட்ட அளவு நெருக்கத்தில் அவன் இருந்தானென்றால் அதை நிகழ்த்தி விட முடியும் என்றும் சொல்கிறார்கள். டாக்டர்கள் அந்த முதலமைச்சரின் மரணத்திற்கான காரணமாக மாரடைப்பைத் தான் சொல்ல முடிந்தது. வேறெந்த தடயமோ, காயமோ இருக்கவில்லை….”

எர்னெஸ்டோ எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் மிகவும் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது இம்மானுவலை அசத்தியது. இந்த வகையில் தானும் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விடக்கூடும் என்கிற எந்த அச்சம் அவரிடம் சிறிதும் இருக்கவில்லை. மனதளவில் அவர் இரும்பு மனிதர் என்பதை எத்தனையோ சந்தர்ப்பங்களில் இம்மானுவல் உணர்ந்திருந்தாலும் மனிதர் ஒவ்வொரு முறையும் சிறிதாவது அசரத்தான் வைக்கிறார்…

இம்மானுவல் தொடர்ந்தான். “விஸ்வம் ஓரளவு பலத்தையாவது திரும்பப் பெற குறைந்த பட்சம் ஆறு மாதமாவது வேண்டும் என்று தெரிகிறது. அதற்குள் அவனைக் கண்டுபிடித்து அவனைத் தீர்த்துக்கட்டுவது தான் நல்லது. அதற்கான எல்லா முயற்சிகளையும் நாம் செய்வோம் என்றாலும் அது முடியா விட்டால் என்ன செய்வது என்பதையும் முன்கூட்டியே யோசித்த போது தான் எங்கள் கவனத்திற்கு ‘அமானுஷ்யன்’ வந்தான். நான் அனுப்பியிருந்த அவனுடைய ஃபைலை முழுவதுமாகப் படித்தீர்களா?”

எர்னெஸ்டோ புன்னகையோடு சொன்னார். “தூக்கத்தைத் தியாகம் செய்து படித்தேன். விஸ்வத்தைச் சந்திக்கும் முன்னால் இப்படி ஒரு மனிதன் இருக்க முடியும் என்று நான் கற்பனையாகக் கூட நினைத்ததில்லை. அதே உணர்வு தான் அந்த அமானுஷயனைப் பற்றிப் படிக்கும் போதும் எனக்கு ஏற்பட்டது. ஆனால் கூடுதலாக அமானுஷ்யன் மேல் அன்பும், மரியாதையும் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்….”

இம்மானுவல் சொன்னான். “அவனைச் சந்தித்துச் சிறிது காலமாவது பழகியவர்கள் அவனை மிகவும் நேசிக்காமல் இருந்ததில்லை. அவன் எதிரிகளுக்கு அவன் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறான். தற்காப்புக் கலைகளில் அவனுக்கு நிகர் யாருமில்லை. அவனும் நிறைய அமானுஷ்யமான தாக்குதல் முறைகளைக் கற்று எல்லாவற்றிலும் முதலிடம் வகிப்பவன். ஒருவேளை விஸ்வம் ஆறு மாதம் வரை நமக்குச் சிக்காமல் போனால் அமானுஷ்யன் நமக்குப் பயன்படுவான்.”

எர்னெஸ்டோ சொன்னார். “அது வரைக்கும் காத்திருக்கும் பொறுமை எனக்கில்லை. அமானுஷ்யனைச் சீக்கிரமே சந்திக்க நான் ஆசைப்படுகிறேன்…”

இம்மானுவல் சிறு தயக்கத்துடன் சொன்னான். “பணம் தந்தோ, அதிகாரத்தைக் காட்டியோ, பயமுறுத்தியோ அவனை நாம் வரவழைக்க முடியாது. அவன் உயிருக்கு இப்போதும் அச்சுறுத்தல் இருக்கின்றது. தலிபான் தீவிரவாதிகள் அவனைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்  இப்போது அவன் இந்தியாவில் சாதாரண மனிதனைப் போல் ஒதுங்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்….”

எர்னெஸ்டோ சொன்னார். “இல்லுமினாட்டி பணம், பயம், அதிகாரம் வைத்தே இது வரை எல்லாவற்றையும் சாதித்து விடவில்லை இம்மானுவல். அவனை நான் வரவழைத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு விஸ்வத்தைக் கண்டுபிடிக்க நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய் அதைச் சொல்….”

இம்மானுவல் சொன்னான். “விஸ்வம் தன் சக்திகளால் ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாமல் போன போதெல்லாம் ஒரு மூதாட்டியின் உதவியை நாடிப் போனதுண்டு என்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் தலைவரே. அந்த மூதாட்டி அலெக்ஸாண்டிரியாவில் இருக்கிறாள். அவளைச் சந்திக்கலாம் என்றிருக்கிறோம்…”

(தொடரும்)
என்.கணேசன்