பதில் கிடைக்காத கேள்விகளில் அதிக நேரம் தங்குவதில் அர்த்தமில்லை என்று நினைத்தவராக எர்னெஸ்டோ இம்மானுவலிடம் சொன்னார். “நீ முக்கியமான எதையோ பேச வேண்டும் என்று நேரில் சந்திக்க அனுமதி கேட்டாய். அதைச் சொல்”
இம்மானுவல் தான் சொல்ல வந்ததை மனதில் கோர்வைப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் எடுத்துக் கொண்டு, பிறகு மெல்ல ஆரம்பித்தான். “விஸ்வம் இல்லுமினாட்டியின் உறுப்பினராகச் சேர்ந்த போது நம் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவனை இல்லுமினாட்டிக்குக் கிடைத்த அதிசய மனிதனாகவே நினைத்தார்கள். அவனுடைய அமானுஷ்ய சக்திகள், அவன் காட்டிய தீவிரம், மனஉறுதி, அவன் பிறகு கொண்டு வந்த நம் சின்னம், அது அவன் கையில் ஒளிர்ந்தது எல்லாமே அவன் மேல் பிரமிப்பை ஏற்படுத்தியது. க்ரிஷ் வந்து பேசிய பிறகு தான் அந்தப் பிரமிப்பு கரைந்தது. மதிப்பு சரிந்தது. ஆனால் இறந்த பின் அவனால் இன்னொரு உடலுக்குப் போக முடிந்தது என்றும், அந்த இன்னொரு உடலில் அவன் வாழ்கிறான் என்றும் கேள்விப்பட்ட பிறகு நம் இல்லுமினாட்டியில் அவன் மறுபடி பிரபலமடைந்து வருகிறான் தலைவரே. மறுபடியும் அவனைப் பற்றிப் பலரும் பிரமிப்புடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்... க்ரிஷ் சரித்து விட்ட அவன் மதிப்பு மறுபடியும் உயர ஆரம்பித்திருக்கிறது. ஒருவேளை அவன் திரும்பி வந்தால் உற்சாகமாக அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலை பாதிக்கும் மேலான உறுப்பினர்களிடம் தெரிகிறது. முடிவெடுப்பதைப் பொது வாக்கெடுப்புக்கு நீங்கள் அனுமதித்தால் அவன் இல்லுமினாட்டியில் கண்டிப்பாக நுழைந்து விடும் நிலைமை தான் இருக்கிறது...”
சொல்லி விட்டு இம்மானுவல் அவரிடமிருந்து கருத்து ஏதாவது வருகிறதா என்று பார்த்தான். அவர் அமைதியாகவே இருக்கவே அவன் தொடர்ந்தான். “எங்கள் கணிப்பின் படி அவன் உண்மையான நோக்கமே இல்லுமினாட்டியைக் கைப்பற்றுவது தான். அவனுக்கு எதிராகவும், தடையாகவும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். அவன் உங்களை அப்புறப்படுத்தினால் இல்லுமினாட்டியில் மறுபடியும் நுழையலாம். எதிர்காலத்தில் இதற்குத் தலைவனாகலாம் என்று நினைக்கக் காரணம் வலுவாக இருப்பதால் தான் உங்கள் உயிருக்கு அவன் குறி வைப்பான் என்று எதிர்பார்க்கிறோம்....”
எர்னெஸ்டோ புன்னகையுடன் சொன்னார். “எனக்கு சாகப் பயமில்லை இம்மானுவல். இந்தத் தலைமைப் பதவியும் எனக்கு அலுத்து விட்டது. இல்லுமினாட்டியை அடுத்த உயர்வுக்குக் கொண்டு போகும் ஒரு தகுதிவாய்ந்த மனிதன் வந்தால் அவனிடம் ஒப்படைத்து விட்டுப் போகவே நானும் ஆசைப்படுகிறேன். ஆனால் விஸ்வம் அந்தத் தகுதி வாய்ந்த மனிதன் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன். க்ரிஷ் சுட்டிக் காட்டியது போல அவன் தன்னை மட்டுமே மையமாக வைத்துக் கொண்டு இயங்குபவன். அவன் இல்லுமினாட்டியில் நுழைந்தால் இந்த இயக்கத்தையும், உலகத்தையும் அழித்து விட்டே ஓய்வான். அதில் சந்தேகமேயில்லை...”
இம்மானுவல் சொன்னான். “ஆனால் நம் உறுப்பினர்களில் பலரும் அந்த அளவு அவர்களுடைய சிந்தனைகளை நீட்டவில்லை. அவர்களைப் பொருத்த வரை அவன் சக்திகள் வாய்ந்தவன், அவன் பேசிய தொனியும், விஷயமும் இல்லுமினாட்டியின் தன்மைக்கு ஒத்து வருகிறது. க்ரிஷின் தொனி தான் இல்லுமினாட்டிக்குப் பொருத்தமில்லாததாக இருப்பதாக சிலர் இப்போது நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மென்மையான தத்துவார்த்தமான அணுகுமுறை இல்லுமினாட்டியைப் பலவீனப்படுத்தி விடும் என்று பயப்படுகிறார்கள்... நம் சின்னம் தொடர்ந்து அவன் கையில் ஜொலித்து அடையாளம் காட்டிய போது உணர்ந்த தாக்கம் இப்போது உறுப்பினர்கள் மத்தியில் குறைந்து வருகிறது...”
க்ரிஷ் விஷயத்தில் இம்மானுவல் சொன்னது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. இது அவர் முன்பே எதிர்பார்த்தது தான். அதனால் தான் அவர் க்ரிஷ் பேசிய போது அன்றே சொல்லியிருக்கிறார். ‘இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்…’
இம்மானுவல் சொன்னான்.
“உங்களுக்கு இப்போது இருக்கும் பாதுகாப்பு மிக வலிமையானது. சாதாரணமாக யாராலும் பாதுகாப்பு
வளையத்தை மீறி உங்களை நெருங்கி விட முடியாது. ஆனால் விஸ்வத்தைக் குறைத்து எடை போட்டு
விட முடியாது. இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சரை அவன் கொன்றிருக்கிறான். பலத்த பாதுகாப்பில்
இருந்த அவரை அவன் நெருங்கியது எப்படி, வேலையை முடித்து விட்டு அவன் அங்கிருந்து தப்பித்துப்
போனதெப்படி என்பதை இது வரைக்கும் யாராலும் யூகிக்க முடியவில்லை. ரகசியமாக விசாரித்ததில்
காவலில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி ஏதோ நிழல் போல ஒன்று வேகமாக நகர்ந்தது போல் உணர்ந்ததாகவும், பின் கூர்ந்து பார்த்த போது யாரும்
தெரியவில்லை என்று மட்டும் சொல்லி இருக்கிறார். அந்த அளவு வேகமாகவும், நுணுக்கமாகவும்
இருந்திருக்கிறது விஸ்வத்தின் செயல்முறை. அந்தக் கொலை நோக்கு வர்மத்தால் அவன் நிகழ்த்தியது
என்றும் ஒரு குறிப்பிட்ட அளவு நெருக்கத்தில் அவன் இருந்தானென்றால் அதை நிகழ்த்தி விட
முடியும் என்றும் சொல்கிறார்கள். டாக்டர்கள் அந்த முதலமைச்சரின் மரணத்திற்கான காரணமாக
மாரடைப்பைத் தான் சொல்ல முடிந்தது. வேறெந்த தடயமோ, காயமோ இருக்கவில்லை….”
எர்னெஸ்டோ எந்த
விதமான பாதிப்பும் இல்லாமல் மிகவும் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது இம்மானுவலை
அசத்தியது. இந்த வகையில் தானும் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விடக்கூடும் என்கிற எந்த
அச்சம் அவரிடம் சிறிதும் இருக்கவில்லை. மனதளவில் அவர் இரும்பு மனிதர் என்பதை எத்தனையோ
சந்தர்ப்பங்களில் இம்மானுவல் உணர்ந்திருந்தாலும் மனிதர் ஒவ்வொரு முறையும் சிறிதாவது
அசரத்தான் வைக்கிறார்…
இம்மானுவல் தொடர்ந்தான்.
“விஸ்வம் ஓரளவு பலத்தையாவது திரும்பப் பெற குறைந்த பட்சம் ஆறு மாதமாவது வேண்டும் என்று
தெரிகிறது. அதற்குள் அவனைக் கண்டுபிடித்து அவனைத் தீர்த்துக்கட்டுவது தான் நல்லது.
அதற்கான எல்லா முயற்சிகளையும் நாம் செய்வோம் என்றாலும் அது முடியா விட்டால் என்ன செய்வது
என்பதையும் முன்கூட்டியே யோசித்த போது தான் எங்கள் கவனத்திற்கு ‘அமானுஷ்யன்’ வந்தான்.
நான் அனுப்பியிருந்த அவனுடைய ஃபைலை முழுவதுமாகப் படித்தீர்களா?”
எர்னெஸ்டோ புன்னகையோடு
சொன்னார். “தூக்கத்தைத் தியாகம் செய்து படித்தேன். விஸ்வத்தைச் சந்திக்கும் முன்னால்
இப்படி ஒரு மனிதன் இருக்க முடியும் என்று நான் கற்பனையாகக் கூட நினைத்ததில்லை. அதே
உணர்வு தான் அந்த அமானுஷயனைப் பற்றிப் படிக்கும் போதும் எனக்கு ஏற்பட்டது. ஆனால் கூடுதலாக
அமானுஷ்யன் மேல் அன்பும், மரியாதையும் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்….”
இம்மானுவல் சொன்னான்.
“அவனைச் சந்தித்துச் சிறிது காலமாவது பழகியவர்கள் அவனை மிகவும் நேசிக்காமல் இருந்ததில்லை.
அவன் எதிரிகளுக்கு அவன் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறான். தற்காப்புக் கலைகளில் அவனுக்கு
நிகர் யாருமில்லை. அவனும் நிறைய அமானுஷ்யமான தாக்குதல் முறைகளைக் கற்று எல்லாவற்றிலும்
முதலிடம் வகிப்பவன். ஒருவேளை விஸ்வம் ஆறு மாதம் வரை நமக்குச் சிக்காமல் போனால் அமானுஷ்யன்
நமக்குப் பயன்படுவான்.”
எர்னெஸ்டோ சொன்னார்.
“அது வரைக்கும் காத்திருக்கும் பொறுமை எனக்கில்லை. அமானுஷ்யனைச் சீக்கிரமே சந்திக்க
நான் ஆசைப்படுகிறேன்…”
இம்மானுவல் சிறு
தயக்கத்துடன் சொன்னான். “பணம் தந்தோ, அதிகாரத்தைக் காட்டியோ, பயமுறுத்தியோ அவனை நாம்
வரவழைக்க முடியாது. அவன் உயிருக்கு இப்போதும் அச்சுறுத்தல் இருக்கின்றது. தலிபான் தீவிரவாதிகள்
அவனைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்போது அவன் இந்தியாவில் சாதாரண மனிதனைப் போல் ஒதுங்கி
வாழ்ந்து கொண்டு இருக்கிறான்….”
எர்னெஸ்டோ சொன்னார்.
“இல்லுமினாட்டி பணம், பயம், அதிகாரம் வைத்தே இது வரை எல்லாவற்றையும் சாதித்து விடவில்லை
இம்மானுவல். அவனை நான் வரவழைத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு விஸ்வத்தைக் கண்டுபிடிக்க
நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய் அதைச் சொல்….”
இம்மானுவல் சொன்னான்.
“விஸ்வம் தன் சக்திகளால் ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாமல் போன போதெல்லாம் ஒரு மூதாட்டியின்
உதவியை நாடிப் போனதுண்டு என்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் தலைவரே. அந்த மூதாட்டி
அலெக்ஸாண்டிரியாவில் இருக்கிறாள். அவளைச் சந்திக்கலாம் என்றிருக்கிறோம்…”
(தொடரும்)
அமானுஷ்யனை பார்க்க எர்னெஸ்டோவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஆர்வம் தான். சார் ஜனவரி புக் ஃபேர் வரைக்கும் காக்க வைத்துவிட மாட்டீர்களே. சீக்கிரம் நாவல் வெளியிட்டால் ஒரேயடியாய் படித்து முடிக்க வேண்டும்.
ReplyDeleteSuperb.
ReplyDeleteVery interesting.....
ReplyDeleteAkshay enter ஆகும் episode க்கு இப்போதிலிருந்தே ஆவல் அதிகரிக்கிறது.
எப்படி அமானுஷ்யனை... எர்னெஸ்டோ சம்மதிக்க வைப்பார் என தெரியவில்லையே....?
ReplyDeleteஇல்லுமினாட்டி என்றவுடன் அமானுஷ்யன் உதவ முன் வர மாட்டானே
ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போய்ட்டுருக்கு...அமானுஷ்யன் சீக்கிரம் வரட்டும்...கிரிஷ் என்ன ஆச்சு...
ReplyDelete