ஜான் ஸ்மித் சந்திக்க விரும்பிய நரம்பியல் நிபுணர் பாரிஸில்
இருந்தார். நரம்பியல் நுணுக்கங்களில் அவருக்கிருந்த ஞானம் அபாரமானது. அந்தத் துறையில்
அவர் தெரிவிக்கும் கருத்துகளே முடிவானவை என்கிற அளவுக்கு அவர் சொல்வதே வேதவாக்காக அந்தத்
துறையின் அறிஞர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர் ஜான் ஸ்மித் முதலில் காட்டிய ரிப்போர்ட்களைப்
பார்த்து விட்டுக் கேட்ட முதல் கேள்வி “இந்த ஆள் இன்னும் சாகவில்லையா?” என்பது தான்.
“அதிசயமாய்ப்
பிழைத்து விட்டான்” என்று ஜான் ஸ்மித் சொன்னார்.
“நம்ப
முடியவில்லையே”
டேனியல்
உடல் புத்துயிர் பெற்ற பின் எடுக்கப்பட்ட சில ரிப்போர்ட்களை ஜான் ஸ்மித் அவரிடம் காட்டினார்.
ஆச்சரியத்துடன் அவற்றைப் படித்துப் பார்த்த அந்த நரம்பியல் நிபுணர் சொன்னார். “நீங்கள்
சொன்னது போலவே அதிசயம் தான்… விஞ்ஞானம் வழியாக எத்தனை தான் நாம் தெரிந்து வைத்திருந்தாலும்
சில சமயங்களில் இயற்கை நம்மைத் திகைக்க வைத்து விடுகிறது. இதையும் அப்படித்தான் எடுத்துக்
கொள்ள வேண்டும்.”
சொல்லி
விட்டு அந்த நரம்பியல் நிபுணர் மூளையின் ஸ்கேன் ரிப்போர்ட்களை ஆராய்ந்தார். ஜான் ஸ்மித்
தன் கருத்துகள் எதையும் சொல்லப் போகாமல் மௌனமாக இருந்தார். அந்த நரம்பியல் நிபுணர் கடைசியில் சொன்னார். “பேராச்சரியம்
தான்… இந்த ரிப்போர்ட்கள் ஆள் மாறி எடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இது இரு வேறு
மனிதர்களின் ரிப்போர்ட்களாகவும் இருக்கலாமல்லவா?”
ஜான்
ஸ்மித் மெல்லச் சொன்னார். “ஒரே மனித உடலுடைய ரிப்போர்ட்கள் தான் என்பது நிச்சயமாக எனக்குத்
தெரியும்.”
நரம்பியல்
நிபுணர் ஆச்சரியத்துடன் கேட்டார். “இப்போது இந்த ஆள் எங்கிருக்கிறான்?”
ஜான்
ஸ்மித் சொன்னார். “ஜெர்மனியில் தான். உயிர் பிழைத்ததில் என்ன ஆச்சரியமென்றால் அவனுக்கு
போதையின் மேல் இருந்த ஈடுபாடெல்லாம் போய் விட்டது. அவனுக்கு யோகா, உடம்பைப் பலப்படுத்திக்
கொள்வது, இதிலெல்லாம் திடீரென்று ஆர்வம் வந்து விட்டது. நான் கேட்க வந்தது இந்த அதிசயம்
நரம்பு மண்டலத்திலும் ஏற்பட முடியுமா? அவன் அதில் ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை முழுவதுமாகச்
சரி செய்து கொள்ள முடியுமா?”
“நரம்புகள்
பாதிக்கப்பட்டு சேதாரமாவது நிதானமாகத் தான். ஆனால் சேதாரமான பிறகு முழுவதுமாகச் சரியாகிற
வாய்ப்பே இல்லை. போதையால் நைந்து போன நரம்புகள் பழைய நிலைமைக்கு வரும் வாய்ப்பே இல்லை.”
“அதிலும்
அதிசயம் நடக்க முடிந்தால்….?” ஜான் ஸ்மித் கேட்டார்.
”அதிசயம்
நடக்க முடிந்தாலும் அது ஓரளவு தான் சரியாகும்.
அப்படிச் சரியாவதும் மிக நிதானமாகவே இருக்கும். அப்படி ஓரளவு சரியாவதும் சுலபமாக
இருக்காது. போதையின் தாக்கத்தை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
உடம்பு திரும்பவும் போதையின் சுகம் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும். நரம்புகள்
அந்த உணர்ச்சிப் பெருக்கத்துக்குத் தான் ஆசைப்படும். கண்டிப்பாக மீண்டும் போதைப் பழக்கத்திற்கே
அவனை அழைத்துப் போகும்… அவன் அதற்குச் சம்மதிக்கா விட்டால் மரண வேதனையைத் தரும். உடம்பு
பல விதமாக எதிர்ப்பு தெரிவிக்கும். அதைத் தாக்குப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. சாதாரண
மனிதனுக்கு முடிகிற விஷயமும் அல்ல.”
அவனும்
சாதாரண மனிதனல்ல என்று மனதுக்குள் தெரிவித்த ஜான் ஸ்மித் கேட்டார். “அதைத் தாக்குப்
பிடித்து அவன் உறுதியாகத் தன்னைச் சரி செய்து கொள்ள முயற்சி செய்கிறான் என்று வைத்துக்
கொள்வோம். அவன் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் தன் பழைய சக்தியை நரம்புகளில் மீட்க முடியும்?
அதற்கு எவ்வளவு குறைந்த பட்ச காலம் தேவைப்படும்?”
அந்த
அதிசயம் நரம்புகள் விஷயத்தில் நடப்பது சாத்தியமேயில்லை என்று சொல்ல வாயெடுத்த அந்த
நரம்பியல் நிபுணர் தன் முன்னால் இருந்த இரண்டு முற்றிலும் வித்தியாசமான ரிப்போர்ட்களை
ஒரு கணம் பார்த்து சொல்ல வந்ததைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டார். இது இரண்டும் ஒரே
மனிதனுடையது, சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டவை என்பது சத்தியமானால் ஜான் ஸ்மித்
கேட்பதும் சாத்தியமே என்று நினைத்துக் கொண்டார். பின் சிந்தித்து விட்டு ஜான் ஸ்மித்திடம்
சொன்னார். “அதிக பட்சமாய் அறுபது சதவீதம் மீட்டெடுக்க முடியும். அதுவும் சின்ன இடைவெளி
கூட இல்லாமல், சின்னப் பின்னடைவு கூட இல்லாமல் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெற முடிந்தால்
மட்டுமே அந்த அறுபது சதவீதமும் சாத்தியமாகும். அதற்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு மாதமாவது
தேவைப்படும்….. ஆனால் உடம்பு தரும் ஆரம்பச் சித்ரவதையைத் தாங்கிக் கொண்டும் அவன் மறுபடி
போதையின் பக்கம் போகாமல் இருப்பது மிக முக்கியம்…“
சொல்லும்
போதே அப்படியெல்லாம் ஒருவன் தாக்குப்பிடிப்பது சாத்தியமல்ல என்ற பாவனையுடனேயே அவர்
சொன்னதைக் கவனித்த ஜான் ஸ்மித் உள்ளுக்குள் புன்னகைத்தார். ‘இவர் விஸ்வத்தைச் சந்தித்ததில்லை.
அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை…’ பின் அவரிடம் கேட்டார். “அவன் தீவிர மன உறுதியுடன்
தாக்குப் பிடிக்க ஆசைப்படுகிறான். அவனுக்கு மருத்துவரீதியாக நாம் உதவ முடியுமானால்
எந்தெந்த மருந்துகள் என்ன அளவில் தரலாம்?’
மரணத்தையே
வரவழைத்துக் கொள்ளும் அளவுக்குத் தீவிரமாக போதையில் மூழ்கியிருந்த மனிதன் எவ்வளவு தீவிர
மன உறுதியுடன் முயல்வான் என்று யோசித்தாலும் அந்த நரம்பியல் நிபுணர் பதில் சொன்னார்.
அவர் சொன்ன மருந்துகளை எல்லாம் ஜான் ஸ்மித் மனதில் குறித்துக் கொண்டார்.
எர்னெஸ்டோ ஜான் ஸ்மித், நரம்பியல் நிபுணர் இருவருக்கும் இடையே
நடந்த பேச்சின் ஒலிநாடாவைக் கண்களை மூடிக் கொண்டு கேட்டார். முழுவதும் கேட்டு முடிந்த
பின் ஜான் ஸ்மித்திடம் சொன்னார். “அவர் சொன்னது முழு மூச்சில் அவன் முயற்சி செய்தால்
ஏழெட்டு மாத காலத்திற்குள் அறுபது சதவீத நரம்பு சக்திகளை அவன் மீட்டு விடுவான் என்று.
டேனியல் என்ற போதை மனிதனின் உடலின் இயல்பான பலத்தில் அறுபது சதவீதம் மீட்கப்படலாம் என்று தான் அதற்கு
அர்த்தம். அது விஸ்வத்தின் பழைய கட்டுப்பாடான உடல் சக்தியின் சிறு துளியாக அல்லவா இருக்கும்?
…”
எர்னெஸ்டோவின்
வாதம் ஜான் ஸ்மித்தைப் புன்னகைக்க வைத்தது. “இருக்கலாம். ஆனால் உடனடியாக இல்லா விட்டாலும் சிறிது
சிறிதாக அந்த உடலைப் பயிற்சியாலும், கட்டுப்பாட்டாலும் அவனால் தனக்கு வேண்டியபடி ஓரளவு
மாற்றிக் கொள்ள முடியும் என்று திபெத்தில் அந்த யோகி என்னிடம் சொன்னது ஞாபகம் வருகிறது.
தன்னால் முடிந்ததை விஸ்வம் செய்யாமலிருந்ததாய் சரித்திரம் இல்லை…”
எர்னெஸ்டோவும்
புன்னகைத்தார். “அப்படியானால் அந்த நரம்பியல் நிபுணர் சொன்ன அறுபது சதவீதம், ஏழெட்டு
மாதம், திபெத் யோகி சொன்ன ‘ஓரளவு’ என்ற வார்த்தைகளில் தான் நாம் நம்மை இப்போதைக்கு
ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாய். சரி தானே?”
ஜான்
ஸ்மித் சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்றார்.
”அப்படியானால்
உடனடிப் பிரச்சினை எதுவும் இல்லை. நல்லது. நீ தொடர்ந்த பயணத்தினால் மிகவும் களைப்பாய்த்
தெரிகிறாய். போய் ஓய்வு எடுத்துக் கொள்” என்று சொல்லி ஜான் ஸ்மித்தை வீட்டுக்கு அனுப்பி
வைத்த எர்னெஸ்டோ சிந்தனையில் ஆழ்ந்தார். ’விஸ்வம் தன் வாழ்க்கை முழுவதும் எல்லைகளை
நீட்டி முன்னேறியவன். அப்படியே இப்போதும் செய்கிறான் என்று வைத்துக் கொண்டால் டேனியலின்
உடலைத் தன் மனோ பலத்தால் தன் உடல் போலவே ’ஓரளவு’ மாற்றிக் கொண்டு அதில் ஆதிக்கம் செலுத்த
முடியும்… அந்த நரம்பியல் நிபுணர் சொல்லியிருந்த
அறுபது சதவீதத்தை எழுபதாகவே உயர்த்தினாலும் முப்பது சதவீதம் குறைகிறது. குறைந்த பட்சக்
காலமாக அவர் சொன்ன ஏழெட்டு மாதங்களை ஆறாகவே குறைத்தாலும் இன்னும் ஆறு மாத அவகாசம் இருப்பதாக
எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் எத்தனை சீக்கிரம் முடிகிறதோ அத்தனை சீக்கிரம் அவனைக்
கண்டுபிடித்து அவன் கதையை நிரந்தரமாய் முடித்து விடுவது மிக முக்கியம்… அவன் பிரச்சினையாகக்
கூடியவன். பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே முடித்து வைப்பது நல்லது….’
சிந்தனையிலிருந்து
மீண்டவர் அந்த ஒலிநாடாவை இல்லுமினாட்டியின் உளவுத்துறைக்கு அனுப்பி வைத்தார். எல்லாக்
கோணங்களிலும் தகவல்களை அலசி அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நினைத்தார். ஆனால்
அவர்களாலும் ஒரு விஷயத்தில் தெளிவான முடிவை எட்டி விட முடியாது என்பதில் அவருக்குச்
சந்தேகமில்லை. எழுபது, அறுபது சதவீதம் என்கிற கணக்கு மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும்
அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் சக்திகளில் எழுபது சதவீதத்தையும், அறுபது சதவீதத்தையும்
எப்படி அளப்பது? அதுவும் புதிய அவதாரம் எடுத்துள்ள விஸ்வம் எந்த அளவு அளப்பதற்கு அகப்படுவான்?...
அவனால் எதெல்லாம் முடியும்? எதெல்லாம் முடியாது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் ஒரே
ஒருவனிடம் கிடைக்கும் என்று அவர் உள்மனம் சொன்னது… அமானுஷ்யன்!
(தொடரும்)
என்.கணேசன்
அடுத்த வாரம் அமானுஷ்யனை வந்துவிடுவாரா? ஆவலோடு இருக்கிறேன்.
ReplyDelete-சரவணகுமார்
இந்த வாரமும் அமானுஷ்யம் வரவில்லையே.. ஆவலுடன் அடுத்த வாரம்...
ReplyDeletebook eapo anna release
ReplyDeleteJanuary 2020
Deleteஆச்சர்யம் தான்......
ReplyDeleteஎல்லா கோணங்களிலும் ஆராய்ந்து பார்த்தாலும் விஸ்வத்தை அசைக்க முடியாது தான்..... ஆனால் விஸ்வத்திற்கும் மீறிய சக்தி அமானுஷ்யன் தான்.
(Site க்கு என்ன ஆச்சு? இப்போ வரைக்கும் வேற வேற name கொடுத்து தான் site க்கு உள்ளே வர முடிகிறது)
Amanushyan has some talent. We accept it.but he is a common man.does he know about any magical powers.. But krish know about viswam very well.so why we don't use krish that handle viswam.Its just my point of view..But this is also super sir....I am counting the days that for publishing the great illumanti book...
ReplyDeleteYou have mixed well science with psychic powers. Feels different and interesting.
ReplyDeleteபோதை ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும்,அது ஆழ்மன சக்திகளை எந்த அளவு பாதிக்கும்? என்பதை இதன் மூலம் கூறியது அருமை....
ReplyDeleteஒரு வேளை அமானுஷ்யன் உடலுக்குள் விஷ்வம் புகுந்துவிட்டால் ??? அல்லது அமானுஷ்யனை தன் வசப்படுத்தி கிருஷ்/இல்லுமினாட்டிக்கு எதிரியாக மாற்றி விட்டால் ???
ReplyDelete