இரண்டு நூல்களை வெட்டவெளியிலிருந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வரவழைத்த அந்தச் சம்பவத்திற்குப் பின்னும் சில சுவாரசியமான அற்புத நிகழ்வுகளை கர்னல் ஓல்காட் காண நேர்ந்தது. ஒரு நாள் இருவரும் ’திரை விலக்கிய ஐசிஸ் தேவதை’ நூல் எழுதும் பணியில் நள்ளிரவு இரண்டு மணி வரை ஈடுபட்டுக் களைத்து விட்டார்கள். பின் கர்னல் ஓல்காட் உறங்கத் தனதறைக்குக் கிளம்பினார். அவர் கிளம்புகையில் உட்கார்ந்த நிலையிலேயே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் உறங்க ஆரம்பிப்பதையும் கண்டார். மறுநாள் காலை அவர் வந்த போது அந்த நூலிற்குக் கூடுதலாக சுமார் முப்பது நாற்பது பக்கங்கள் மிக நேர்த்தியான அழகான தெளிவான எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. அவை அவர் உறங்கிக் கொண்டிருந்த போது அவருக்காக அவருடைய மாஸ்டர் எழுதி வைத்திருந்ததாக ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் கூறினார்.
கர்னல் ஓல்காட் வியப்புடன் அந்தப் பக்கங்களை வாங்கிப் படித்துப் பார்த்தார். அது பழங்கால எகிப்திய நாகரிகம் குறித்த அத்தியாயமாக இருந்தது. அச்சில் வந்த போது ’திரை விலக்கிய ஐசிஸ் தேவதை’ யின் முதல் பாகத்தில் பதினான்காம் அத்தியாயமாக வந்த அந்தப் பக்கங்களைப் படித்த பின் உயர்சக்தி மனிதர்களின் மேலான ஞானம் எப்படி மிக நேர்த்தியாக எழுத்துக்களில் வெளிப்படுகின்றது என்பது கர்னல் ஓல்காட்டுக்குப் புரிந்தது.
அதன் பிறகு அந்த நூல் எழுதும் பணியில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்ட நாட்களில் பல புரியாத விஷயங்கள் கர்னல் ஓல்காட்டுக்குப் புரிய ஆரம்பித்தன. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் போது கையெழுத்து எப்போதெல்லாம் மாறுகின்றது என்பதை கர்னல் ஓல்காட் கவனிக்க ஆரம்பித்தார். எழுதிக் கொண்டிருக்கையில் சில நேரங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அங்கிருந்து எழுந்து போய் சிறிது நேரம் கழித்து வந்த பிறகு எழுதும் போதும், அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி எழுதும் போதும் அவர் எழுதும் கையெழுத்து மிகத் தெளிவாகவும், அழகாகவும் மாறுபட்டு விடுகின்றது என்பதையும் கர்னல் ஓல்காட் கவனித்தார். கையெழுத்து மட்டுமல்லாமல் எழுதும் விஷயங்களின் நேர்த்தியும் அதே போல் உயர்வாக மாறி விடுவதையும் அவர் கவனித்தார். அதே போல் சில மகத்தான ஞானம் குறித்து எழுதும் போது ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் தோற்றமும், பேச்சும், அவர் அசைவுகளும் கூட மிகவும் கம்பீரமாகவும், நளினமாகவும் மாறி விடுவதையும் கர்னல் ஓல்காட் கவனித்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குள் வேறு யாரோ அல்லது வேறு மேலான சக்தி புகுந்து விட்டது போலவும் கூட அவருக்குத் தோன்றியதுண்டு.
இப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தில் நிறைய அற்புதங்களுடன் மிகவும் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்ட நூலான ‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை : புராதன இறையியல் மற்றும் நவீன விஞ்ஞான மர்மங்களுக்கான பிரதான சாவி’ (Isis Unveiled:
A Master-Key to the Mysteries of Ancient and Modern Science and Theology) நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. அந்த நூலின் பின் அவ்வளவு கடுமையான உழைப்பு இருந்த போதும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதைப் பேருழைப்பாக நினைக்கவில்லை. பிற்காலத்தில் தனக்கு மிக நெருங்கியவர்களுக்கு எழுதிய கடிதத்தில் “நான் அந்த நூலை எழுதியதை உழைப்பாகவே நினைக்கவில்லை. அதை ஒரு இனிமையான அனுபவமாகவே நான் நினைக்கிறேன். அந்த நூலிற்கான பாராட்டும் எனக்குத் தேவையில்லை. ஏனென்றால் எதை எழுத எனக்கு உத்தரவு வந்ததோ அதை எழுதினேன். அமானுஷ்ய சக்திகள், உளவியல், உயிரியல், புராதன மதங்கள், மற்ற விஞ்ஞானங்கள் பற்றியெல்லாம் எழுதும் போது இதையெல்லாம் எழுத எனக்கு ஞானம் போதுமா, உண்மையாகவே அதற்கான தகுதி இருக்கிறதா என்று ஒரு கணமும் நான் தயங்கவில்லை. ஏனென்றால் இதையெல்லாம் அறிந்த ஒரு மகாசக்தி (மாஸ்டர்) நான் எழுத வேண்டியதை எடுத்துக் கொடுக்கிறது, சொல்லித் தருகிறது. அதன்படியே நான் எழுதுகிறேன்....”
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவருடைய சகோதரிக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில் கூறுகிறார். “நான் அந்த நூலை எழுதிய போது என் கவனம் என்ன எழுதுகிறேன் என்பதில் இருக்கவில்லை. என் கவனமெல்லாம் ஐசிஸ் தேவதையாலேயே நிறைந்திருந்தது. ஐசிஸ் தேவதையால் வசீகரிக்கப்பட்டு நான் என்னை மறந்த நிலையில் இருக்கையில் அந்தத் தேவதை ஒவ்வொரு ரகசியமாய் எனக்கு வெளிப்படுத்தினாள். ஒவ்வொரு திரையாக விலக்கிப் பல பேருண்மைகளை எனக்கு உணர்த்தினாள்... அதனால் எழுதிய எதற்கும் நான் உரிமையோ, பெருமையோ கோரவில்லை. ஏனென்றால் எதுவும் என் அனுபவ ஞானமோ, பேரறிவோ அல்ல. எல்லாம் அவள் தந்த ஞானம். அதுவும் என் குருவின் ஆசியாலும் உதவியாலுமே சாத்தியமானது....”
கர்னல் ஓல்காட் அது வரை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் செய்து காட்டிய எத்தனையோ அற்புதச் செயல்களில் பிரமித்திருந்தாலும் ஆன்மிக அன்பர்களுக்கும், உலக மக்களுக்கும் உண்மையான பயனைத் தரும்படியாக அமைந்தது திரை விலக்கிய ஐசிஸ் தேவதை போன்ற நூலே, அந்த அற்புத நிகழ்வுகள் அல்ல என்பதை உறுதியாக நம்பினார். அது உண்மையே.
‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூலின் முதல் பாகம் இயற்கை சக்திகளையும், மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆத்மசக்திகளையும் அலசி அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞான அம்சங்களையும் விவரிப்பதாக இருந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அப்படிப் பல அபூர்வ சக்திகளை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தியவர் என்பது மட்டுமல்லாமல் அந்த நூலை அவர் எழுதிய விதத்தில் கூட பல அற்புதங்கள் நடந்ததைக் கண்கூடாக அருகிலிருந்து கர்னல் ஓல்காட் கண்டிருப்பதையும் வைத்துப் பார்க்கும் போது அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த விஞ்ஞான விஷயங்களையும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மேற்கோள் காட்டி இருந்தார். அந்த நூல் எழுதப்பட்டதற்கு பிறகு சுமார் 140 ஆண்டுகள் கழிந்து விட்டன. இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்கின்றன. நவீன விஞ்ஞானம் எத்தனையோ மைல்கல்களைத் தாண்டி விட்டிருக்கிறது. ஆனால் இன்றும் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களின் உண்மைத் தன்மை மேலும் ஜொலிக்கிறதே ஒழிய மங்கவில்லை என்று பல அறிஞர்கள் ஆணித்தரமாக நினைக்கிறார்கள்.
‘திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை’ நூலின் இரண்டாம் பாகம் மேற்கத்திய மதங்கள் மற்றும் கிழக்கத்திய மதங்களின் சாராம்சங்களையும்,
ஆழத்தில் அவை எப்படியெல்லாம் ஒன்றுபடுகின்றன என்பதையும் விளக்குவதாக இருந்தது. எல்லா மதங்களுக்கும் பின்னால் அடிப்படையாக இருக்கும் அப்பழுக்கற்ற ஞானமே மனிதகுலத்தை உய்விக்கும் என்ற உண்மையை நூலின் இரண்டாம் பாகம் உரத்துச் சொல்கிறது. மதங்களுக்கிடையே இருக்கும் வேற்றுமைகளை பூதாகாரப்படுத்தி, மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து அதன் பெயரால் சண்டை சச்சரவுகள் மற்றும் பேரழிவுகளைச் சந்தித்து வரும் இக்காலத்திற்கு, ஒருமைத்தன்மையைச் சொல்லும் விதத்திலும், ஒற்றுமைப்படுத்துவதிலும் இது போன்ற நூல் அவசியமானது என்று நமக்குத் தோன்றுகிறது.
மொத்தத்தில் இந்த நூல் ஒரு தனி மனித சிந்தனையாகவோ, முயற்சியாகவோ இருக்கவில்லை. ஆரம்பத்தில் “இதை எழுத எனக்கு உத்தரவு கிடைத்து எழுதினேன். இது எங்காவது அனுப்ப வேண்டிய கட்டுரைக்கா, புத்தகத்திற்கா, இதற்கு வேறேதும் காரணம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. உத்தரவை நிறைவேற்றி விட்டேன். அவ்வளவு தான்” என்று சில பக்கங்களை மட்டும் எழுதி வைத்திருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் அந்தச்
சில பக்கங்கள் இரண்டு பாகப் பெரிய நூலாகப் பின்னால் உருவாகியதிலும் குறிப்புகளும், கருத்துக்களும் அவருடையதாக மட்டும்
இருக்கவில்லை. அந்த நூலை எழுத உந்துதலாக இருந்த உயர்சக்திகளே மிச்சத்தையும் அவரை எழுத வைத்தன. சில சமயங்களில் கர்னல் ஓல்காட் நேரடியாகப்
பார்த்தபடி அந்தச் சக்திகளே பல பக்கங்களையும் எழுதின. சில நேரங்களில் விவாதித்து, படித்து, குறிப்புகள் எடுத்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதினாலும். சில சமயங்களில் என்ன எழுதுகிறோம் என்ற
பிரக்ஞையே அவருக்கு இல்லாத போதும் சில மேலான விஷயங்கள் எழுதப்பட்டன. இதையெல்லாம் பார்க்கும் போது அந்த நூலும், அதன் உருவாக்கமும் ஒருவித அமானுஷ்யத்
தன்மையை அது குறித்து நம் மனதில் ஏற்படுத்தி விடுகின்றது அல்லவா?
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 21.05.2019
அற்புதம்...இந்த தொடரைப் படிக்கும் போதே அந்த நூலில் என்ன உள்ளது? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது...
ReplyDelete