Monday, November 25, 2019

சத்ரபதி 100


ல சமயங்களில் போரின் முடிவைத் தலைவனின் செயல்களே நிர்ணயிக்கின்றன. தைரியத்தையும், பயத்தையும் அவனிடமிருந்தே அவன் வீரர்கள் கற்றுக் கொண்டு பிரதிபலிக்கிறார்கள். செயிஷ்டகான் தப்பி ஓடியதால் மனோ தைரியத்தை இழந்திருந்த முகலாய வீரர்கள், எதிர்பாராத வகையில் நேதாஜி பால்கர் வந்து தாக்கியதில் மிஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனவலிமையையும் இழந்து அந்த மலையிலிருந்து கீழே ஓட ஆரம்பித்தார்கள். முகலாயப் படையை நேதாஜி பால்கரின் தலைமையில் சிவாஜியின் படை ஓட ஓட விரட்டியது. முகலாயப் படைத்தலைவர்கள் படையோடு சேர்ந்து ஓடி உயிர் பிழைக்க வேண்டியதாயிற்று.

செயிஷ்டகான் தனக்குப் பின்னாலேயே தங்கள் படையும் தப்பியோடி வந்து சேரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. பூனாவில் லால்மஹால் அரண்மனைக்கு வந்து சேர்ந்த அவன் முள்ளில் இருப்பது போல் தவித்தான். ஷாஜஹான் காலத்திலிருந்து பல போர்களில் பங்கு பெற்று மிக வீரமாகப் போராடிப் பல வெற்றிகளை அடைந்திருந்த அவனுக்கு இந்தத் தோல்வி பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது.

சில மனிதர்கள் தவறான நேரங்களிலேயே சிலரைச் சந்திப்பார்கள். அப்படி சந்தித்துப் பேசும் போதும் அவர்கள் தவறானபடியே பேசி சந்தித்தவர்களின் கோபத்திற்கு ஆளாவார்கள். ராஜா ஜஸ்வந்த்சிங் அந்த வகையிலேயே செயிஷ்டகானைச் சந்திக்க வந்தான். தோல்விக்குத் துக்கம் விசாரித்து விட்டு செயிஷ்டகானின் விரல்வலி எப்படி இருக்கின்றது என்று அக்கறையுடன் விசாரித்தான்.

செயிஷ்டகானுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. விரல்வலி குறித்து எதையும் பேசாத அவன்,  தோல்விக்கு ஜஸ்வந்த்சிங்கையே குற்றம் சாட்டினான்.  “நம் ஆட்களே சிவாஜியுடன் ரகசியமாய் கைகோர்த்துக் கொண்டிருப்பதால் தான் இது வரை தோல்வியே காணாத முகலாயப் படை இப்போது தோல்வியைக் கண்டிருக்கிறது. சதியால் விளைந்தது தான் கடந்த சில நாட்களாக இங்கு நிகழ்வது எல்லாம்….” என்று காட்டமாகச் சொன்னான்.

ராஜா ஜஸ்வந்த்சிங் “யாரந்த சதிகாரர்கள் பிரபு?” என்று கேட்டான்.

“நீர் கண்ணாடி முன் நின்றால் சதிகாரனை அடையாளம் காண்பீர்கள்” என்று செயிஷ்டகான் வெளிப்படையாகவே சொன்னான்.

ராஜா ஜஸ்வந்த்சிங் செயிஷ்டகானின் குற்றச்சாட்டில் கோபம் கொண்டு சொன்னான். “வீண் பழி சுமத்தாதீர்கள் பிரபு. உங்கள் வயதிற்கும், தகுதிக்கும் அது அழகல்ல”

செயிஷ்டகான் மேலும் கொதித்தான். “என் வயதிற்கும், தகுதிக்கும் பொருத்தமில்லாத இடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது தான் என் வருத்தமும் கூட.”

ராஜா ஜஸ்வந்த்சிங் சிவாஜியின் தாக்குதலில் செயிஷ்டகானின் சித்தம் பிசகி விட்டதோ என்று சந்தேகப்பட்டான். ”பொருத்தமில்லாத இடத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக நினைத்தால் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து விட்டுப் பொருத்தமுள்ள இடத்திற்குப் போய்க் கொள்ளுங்கள் பிரபு. அதை விடுத்து அடுத்தவர் மேல் பழி சுமத்திக் கொண்டு இருக்காதீர்கள்….”

”நல்ல அறிவுரை இது. உடனே ஏற்றுக் கொள்கிறேன். இனி இந்த இடத்தில் நீங்களே இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இப்போதே விடைபெறுகிறேன்… சக்கரவர்த்தியிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்….”

ராஜா ஜஸ்வந்த்சிங் இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தவனாய். “விரல் தானே போயிற்று. அதற்கு ஏன் இப்படி தலையே போனது போல் பதற்றத்துடன் முடிவெடுக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“விரல் போனது பரவாயில்லை. இனியும் இங்கு இருந்தால் இங்கு நடக்கும் சதியில் என் தலையும் போய் விடுமோ என்று அச்சப்படுகிறேன்” என்று கூறிய செயிஷ்டகான் அங்கிருந்து கிளம்ப உண்மையாகவே தயாரானான்.


ரங்கசீபுக்கு செயிஷ்டகானிடமிருந்தும், ராஜா ஜஸ்வந்த்சிங்கிடம் இருந்தும் சேர்ந்தாற்போல கடிதங்கள் வந்து சேர்ந்தன.

செயிஷ்டகான் புலம்பியிருந்தான். “….. பலத்த காவலும், கடுமையான கட்டுப்பாடுகளும் இருக்கின்ற பூனாவின் உள்ளே சிவாஜியும் அவன் ஆட்களும் நுழைந்து லால்மஹால் அரண்மனையில் காவலர்களையும் மீறிப் புகுந்து என்னையே தாக்குகிறான் என்றால் அது இங்கிருப்போரின் உதவி இல்லாமல் நடந்திருக்காது.  இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது மருமகனே. ராஜா ஜஸ்வந்த்சிங்கின் நடவடிக்கைகள் எனக்கு அந்தச் சந்தேகத்தையே உருவாக்கி உள்ளது. சிவாஜி மாந்திரீகங்களில் வல்லவன் என்றும் தந்திரத்தால் வெல்ல முடியாத போது மாந்திரீகம், சூனியம் போன்றவற்றை உபயோகிக்கிறான் என்றும் இங்கு பலரும் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்திருப்பது உண்மை என்றே தோன்றுகிறது. இனியும் இங்கு இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இங்கிருந்து கிளம்பி விட்டேன். அதை அனுமதிக்கும்படி உன்னை வேண்டிக்கொள்கிறேன். டில்லிக்கு வந்து நேரில் சந்திக்கையில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன்.”

ராஜா ஜஸ்வந்த்சிங் முறையிட்டிருந்தான். “…. நீண்ட காலம் உங்கள் சேவகத்தில் நான் இருந்திருக்கிறேன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னுடைய விசுவாசத்தை நிரூபித்தும் இருக்கிறேன். இதை சக்கரவர்த்தி அறிவீர்கள். ஆனால் பிரபு செயிஷ்டகான் அவர் விரலை இழந்ததற்கும், சிங்கக்கோட்டை போரில் தோற்றதற்கும் என் சதியே காரணம் என்று அபாண்டமாகப் புகார் செய்திருப்பதும் அல்லாமல் பொறுப்பில்லாமல் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்து விட்டு பூனாவை விட்டுச் சென்றும் விட்டார். இனி இங்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற தங்களது மேலான உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்”

ஔரங்கசீப் இருவர் மீதும் கடுங்கோபம் அடைந்தான். அதிகக் கோபம் அவனுக்கு மாமன் மீது தான் இருந்தது. சிறுபிள்ளைத்தனமாக மாமன் நடந்து கொண்டிருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. மாமன் செய்ததை வேறொருவர் செய்திருந்தால் அவன் இன்னேரம் மரண தண்டனை விதித்து இருப்பான். ஆனால் மாமன் மீது மரண தண்டனை விதிக்காமல் தடுத்தது மாமன் மீதிருந்த பாசம் அல்ல.

மாமனின் திறமையும் வீரமும் ஔரங்கசீப் ஏற்கெனவே அறிந்தவை. பல முறை நேரில் பார்த்துமிருக்கிறான். அரியாசனப் போட்டியிலும் மாமன் ஆரம்பத்திலிருந்தே அவன் பக்கமே இருந்ததையும் மறக்கவில்லை. இந்த ஒரு முட்டாள்தனத்திற்காக மாமனைத் தண்டித்து எதிர்காலத்தில் உபயோகமாக இருக்கக்கூடிய மனிதனை இழந்து விட ஔரங்கசீப் விரும்பவில்லை. செயிஷ்டகானின் இந்த முட்டாள்தனத்திற்கும் மூல காரணத்தை அவனால் அறிய முடிந்தது. செயிஷ்டகான் சிவாஜியை ஆரம்பத்தில் மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டான். அவனைத் தோற்கடிக்க கீழ்நிலை படைத்தலைவர்கள் போதுமே, அவர்களுடன் பெரிய படையை அனுப்பினால் போதுமே என்ற வகையிலேயே செயிஷ்டகானின் பேச்சு இருந்தது. அதனால் அவ்வளவு குறைத்து மதிப்பிட்ட சிவாஜியால் தாக்கப்பட்டு விரலையும் மகனையும் இழந்ததை செயிஷ்டகானால் தாங்க முடிந்திருக்காது. தனக்கு நடந்ததும், சிவாஜியின் சூனியம், தந்திரம், மாந்திரீகம் போன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டதும் பெரும் அச்சத்தை அவன் மனதில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். பேரச்சம் மனிதனைச் சரியாகச் சிந்திக்கவோ செயல்படவோ என்றுமே அனுமதிக்காது. அதன் விளைவே மாமனின் இந்தப் போக்கு என்று கணித்து மாமனை ஔரங்கசீப் தண்டிக்காமல் விட்டான்.

ஆனால் அவனுக்கு மாமன் மீதிருந்த கோபம் குறையவில்லை. என்ன தான் புத்தி கெட்டுப் போயிருந்தாலும் ஒரு போரில் பாதியில் ஒரு தலைவன் தான் மட்டும் தப்பித்துச் செல்வது அவனால் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாமன் நேரில் வந்து இது பற்றி விளக்குவதையும், புலம்புவதையும் எந்த அளவு சகிக்க முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால் முகலாயர்களின் புகழுக்குக் களங்கம் விளைவித்ததைக் கண்டித்தும் இனி இது போன்ற பொறுப்பற்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தும் செயிஷ்டகானுக்குக் கடிதம் அனுப்பினான். கூடவே மாமனை தக்காணத்தின் கவர்னர் பொறுப்பிலிருந்து விடுவித்து வங்காள கவர்னராக நியமித்து, அங்கேயே  நேராகப் போகும் படியும், டில்லி வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டான். அடுத்ததாக தக்காணத்தின் கவர்னராக மகன் முவாசிம்மை ஔரங்கசீப் நியமித்தான்.

ராஜா ஜஸ்வந்த் சிங்கையும் ஔரங்கசீப் கண்டித்துக் கடிதம் அனுப்பினான். மேல்நிலைகளை எட்டி விட்ட மனிதர்கள் சிறுபிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர்  சண்டையிட்டுக் கொள்வது எதிரியின் பலத்தைக் கூட்டி விடும் என்றும் ஒருவர் தவறு செய்தாலும் மற்றவர் அதைப் பெரிதுபடுத்தாமல் அனுசரித்து நடந்து கொள்வது தான் பக்குவமும், புத்திசாலித்தனமும் என்றும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தி இருந்தான். கூடவே தக்காணத்தின் புதிய கவர்னரான முவாசிமுக்கு  முழு ஒத்துழைப்பைத் தரும்படியும் ராஜா ஜஸ்வந்த்சிங்குக்கு உத்தரவிட்டான்.
                                                        
எல்லாம் செய்து முடித்து விட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து கொண்டிருக்கையில் ஔரங்கசீப்பின் மனம் சிவாஜியின் மீது நிலைத்தது. ஒரு துரும்பு ஆயுதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சக்தி வாய்ந்த முகலாயப்படை சூழ்ந்திருக்கையில் ஊடுருவி பூனாவின் உள்ளே நுழைந்திருக்கிறது. முகலாயச் சக்கரவர்த்தியின் மாமன் விரலை வெட்டி, அவன் மகனைக் கொன்று, பயமுறுத்தி பூனாவை விட்டு விரட்டியடித்திருக்கிறது. போருக்கு வந்த முகலாயப்படையைத் தோற்கடித்துத் துரத்தியிருக்கிறது…..


நினைக்க நினைக்க ஔரங்கசீப்புக்கு ஆத்திரமாக வந்தது. வடக்கில் காஷ்மீரத்தில் சில பிரச்னைகள் இருப்பதால் தலைநகரை விட்டு நகரமுடியாத நிலைமையில் அவன் இருக்கிறான். அது மட்டுமில்லாமல் இருந்திருந்தால் அவனே தக்காணத்திற்கு கிளம்பியிருப்பான். சிவாஜியை அழித்து விட்டே ஓய்ந்திருப்பான்….. 

(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

  1. What I loved most in this historical novel is that not only the incidents and characters, you have portrayed beautifully even their thought processes as well. Super

    ReplyDelete
  2. ஔரங்கசீபின் சிந்தனை தெளிவாக உள்ளது.... என்ன நடந்திருக்கும்,இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்...?என்பதனை சரியாக கணக்கிடுகிறான்... இருந்தாலும்,விதி அவனுக்கு சாதகமாக இல்லையே...

    ReplyDelete
  3. ஔரங்கரசீப்பா ? சிவாஜியா ?
    விஸ்வமா ? க்ரிஷா ?

    ReplyDelete