சிவாஜிக்கும்
சாய்பாய்க்கும் இடையே நிலவிய அன்பு ஆழமானது. அந்த ஆழத்தை சிவாஜி தன் இன்னொரு மனைவி
சொய்ராபாயிடம் என்றும் உணர்ந்ததில்லை. சாய்பாய் மிக மென்மையானவள். புத்திசாலி. எல்லோரையும்
நேசிக்க முடிந்தவள். யாரிடமும் அவளுக்கு மனத்தாங்கல் எதுவும் இருந்ததில்லை. பல பிரச்னைகளை
நாள் தோறும் சந்தித்து வரும் சிவாஜி அவளிடம் வருகையில் அவள் இன்னொரு பிரச்னையை அவனுக்குக்
கூட்டியதில்லை. அவள் முகத்தில் கடுமையோ, துக்கமோ, கோபமோ என்றுமே தெரிந்ததில்லை. அப்படிப்பட்ட
மனைவியை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை சிவாஜியை ஆழமாகவே வாட்டி வதைத்தது.
ராஜ
வைத்தியரிடம் அவளைக் காப்பாற்ற வழியே இல்லையா என்று தாங்க முடியாத வேதனையுடன் அவன்
கேட்ட போது அவர் அந்தளவே வேதனையுடன் அவர் அறிந்த வரை இல்லை என்று சொல்லி விட்டுப் போயிருந்தார்.
சிவாஜி தாயிடம் சென்று அவள் மடியில் முகம் புதைத்து மனம் விட்டு அழுதான்.
கண்கலங்கிய
ஜீஜாபாய் மகன் முழுவதாக அழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டுக் கடைசியில் சொன்னாள்.
“மனதைத் தைரியப்படுத்திக் கொள் மகனே. எல்லோரும் ஒரு நாள் இந்த உலகிலிருந்து விடைபெற
வேண்டியவர்களே. சிலருக்கு விடைபெறும் முன் நெருங்கியவர்களிடம் சொல்லிச் செல்லக்கூட
அவகாசம் கிடைப்பதில்லை. சாய்பாய்க்கு அந்த அவகாசத்தை இறைவன் தந்திருக்கிறான் என்று
ஆசுவாசம் கொள். எப்போதும் யுத்தத்திலும், வேறு பணிகளிலும் தூரத்தில் இருக்கும் நீ இந்தச்
சமயத்தில் அவளுடன் இருக்க முடிந்த சூழலை விதி உன் மீது சுமத்தி இருக்கிறது. அதற்கு
நீ நன்றி சொல். அவளருகே அதிக நேரம் செலவிடு மகனே. குழந்தைகளும் நீயும் அவளுக்குக் கடைசி
கால நிம்மதியைக் கொடுங்கள்….”
ஜீஜாபாய்
சொன்னபடியே சிவாஜியும், மகள்களும், குழந்தை சாம்பாஜியும் அதிக நேரம் அவளருகே இருந்தார்கள்.
தாயருகில் கண்கலங்கி இருக்கக் கூடாது, கூடுமான வரை தைரியப்படுத்தும்படியாக இருக்க வேண்டும்
என்று பேத்திகளிடம் ஜீஜாபாய் முன்பே கட்டளையிட்டிருந்தாள். சிவாஜியின் மகள்கள் அப்படியே
நடந்து கொண்டார்கள். குழந்தை சாம்பாஜிக்கு என்ன நடக்கிறது என்று அறியும் வயதில்லை என்பதால்
சில சமயங்களில் தாயருகே இருந்து விளையாடினான். சில சமயங்களில் விளையாட வெளியே அழைத்துச்
செல்லும்படி சகோதரிகளிடம் அடம் பிடித்தான்.
அப்படி
ஒரு சமயம் மகள்கள் மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே போய் கணவனும் அவளுமாக மட்டுமாக இருக்கையில்
சாய்பாய் சிவாஜியையே பேரன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிவாஜி
கேட்டான். “ஏனப்படிப் பார்க்கிறாய் சாய்?”
”எப்போதும்
யுத்தம், திட்டம், என்று இருக்கும் நீங்கள் இப்போது என்னருகிலேயே ஓயாமல் அமர்ந்திருக்கும்
போது என்ன தோன்றுகிறது தெரியுமா?” பலவீனமான குரலில் சாய்பாய் கேட்டாள்.
”என்ன
தோன்றுகிறது?”
“மரணம்
என்னருகில் வந்தால் தடுத்து நிறுத்த முயற்சி செய்யலாம் என்று நீங்கள் திட்டம் போட்டு
இருப்பது போலத் தோன்றுகிறது”
சிவாஜி
கண்கலங்கிச் சொன்னான். “என்னால் முடிந்தால் கண்டிப்பாக முயற்சி செய்வேன் சாய். ஆனால்
இறைவன் எந்த மனிதனுக்கும் அந்தச் சக்தியைத் தரவில்லையே. நான் எனக்கு மட்டும் அந்தச்
சக்தி வேண்டும் என்று எப்படிக் கேட்பேன்”
சாய்பாய்
கணவனின் கரங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டாள். அவனுக்கு இறைவன் எவ்வளவு நெருக்கமானவனாக
இருந்த போதும் இறைவனிடம் கூட அவனால் நியாயம் தவறி வேண்டிக் கொள்ள முடிந்ததில்லை என்பதைக்
கவனித்த அவள் மனம் நெகிழ்ந்தது. அவன் இரண்டு நாட்களாக அவளருகே இப்படி நீண்ட நேரம் இருப்பது
அவளுக்குப் பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. குழந்தைகளைப் பற்றியும், அவர்களுக்கு ஆக வேண்டிய
சுப காரியங்களைப் பற்றியும் அவனிடம் இரண்டு நாட்களுக்கு முன்பே பேசி விட்டிருந்தாள்.
எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும், எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்வேன் என்றும்
சிவாஜி அவளுக்கு வாக்களித்திருந்தான்….
தன்
கரங்களை இறுக்கமாகப் பிடித்திருந்த சாய்பாயிடம் சிவாஜி குற்ற உணர்வுடன் சொன்னான்.
“நீ என்னைத் திருமணம் செய்யாமல் ஒரு சாதாரணனைத்
திருமணம் செய்திருந்தால் கூட நிம்மதியாய், நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருப்பாய் என்று
தோன்றுகிறது சாய். உன்னுடன் அதிகப் பொழுதைக் கழிக்கவே நேரமில்லாத கணவனுடன் வாழ்ந்ததில்
நீ நிறைய இழந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது சாய். உனக்கு அப்படித் தோன்றியிருக்கிறதா?”
சாய்பாய்
யோசிக்காமல் சொன்னாள். “ஒரு போதும் இல்லை…. உங்கள் தாயார் வாழ்க்கையைப் பார்க்கையில்
நான் இழந்தது எதுவுமேயில்லை நாதா! அவர் ஒரு நாள் கூட குறைப்பட்டுக் கொண்டு நான் பார்த்தில்லை.
…… ஒரு சாதாரண மனிதனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் நான் இந்த அளவு பெருமைப்பட்டிருக்க
முடியுமா? வாழ்க்கையயும், மரணத்தையும் சிவாஜியின் மனைவியாகச் சந்திக்க முடிவது பாக்கியம்
அல்லவா?”
சிவாஜியின்
கண்கள் நிறைந்தன. வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவன் கனவிலும் பங்கு கொண்ட அந்த மனைவியை
அவன் எப்படி இழப்பான்? பேச வார்த்தைகள் வராமல் அவன் தவித்த போது அவளுக்கு மூச்சிறைக்க
ஆரம்பித்தது. கடைசியாக மகன் பெயரைச் சொன்னாள்.
“சாம்பாஜி….”.
மகள்களும்,
சாம்பாஜியும் வேகமாக அழைத்து வரப்பட்டார்கள். ஜீஜாபாயும், சொர்யாபாயும் விரைந்து வந்தனர்.
குடும்பத்தினர் சுற்றியிருக்க அனைவரையும் ஒரு முறை அன்புடன் பார்த்து விட்டுக் கடைசியாக,
குழந்தை சாம்பாஜியையும், கணவன் சிவாஜியையும் பார்த்தபடியே சாய்பாயின் உயிர் பிரிந்தது.
செயிஷ்டகான் சாகன் கோட்டையைக் கைப்பற்றுவது இவ்வளவு கடினமாக
இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றோடு சாகன் கோட்டையைச் சுற்றி வளைத்து ஐம்பது
நாட்களாகி விட்டன. ஃபிரங்கோஜி நர்சாலா சரணடைவதாக இல்லை. வெளியிலிருந்து உள்ளே வரும்
உணவுப்பொருட்கள், மற்ற முக்கியப் பொருட்கள் எல்லாம் உள்ளே செல்வது நின்று போன பின்னும்
சிவாஜியின் மற்ற கோட்டைகள் போலவே சாகன் கோட்டையும் ஓரிரண்டு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்
என்பதை செயிஷ்டகான் யூகித்திருந்த போதிலும் அப்படித் தாக்குப் பிடிக்கும் காலத்திலும்
கோட்டைக்குள் இருந்தபடியே இவ்வளவு தீவிரமாகப் போராடுவார்கள் என்பதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
பூனாவில்
இருந்த அவனுக்குத் தினமும் அன்றைய நிலவரம் குறித்த தகவல் வந்து சேர்ந்து கொண்டிருந்தது.
அந்தத் தகவல் எல்லாமே அன்றைய இறந்து போன முகலாய
வீரர்களின் எண்ணிக்கையாக இருந்தது. செயிஷ்டகான் அங்கு அனுப்பியிருந்த படைத்தலைவனை அழைத்து
விசாரித்தான்.
படைத்தலைவன்
நிலைமையை விவரித்தான். “பிரபு. ஃபிரங்கோஜி நர்சாலா மிகத் திறமையாக நம் படையைத் தாக்குகிறான்.
அவர்களுடைய ஆட்கள் யாருமே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அங்கிருந்து வீசப்படும்
குண்டுகளும், எறியப்படும் அம்புகளும், நம் ஆட்களைக் குறி வைத்துத் தாக்குகின்றன. நம்
ஆட்களின் உயிரைக்குடிப்பனவாக இருக்கின்றன. நாமும் குண்டுகள் வீசுகிறோம். கோட்டையின்
வலிமையான சுவர்களில் சிறிய சேதாரத்தையே அவை ஏற்படுத்துகின்றன. நமக்குச் சேதம் விளைவிக்கும்
அவர்கள் ஆட்களோ உள்ளிருந்தபடியே நம் பார்வைக்குத் தெரியாமல் இயங்குகிறார்கள்…”
தாக்குப்பிடிப்பது
கஷ்டம், இன்றில்லா விட்டாலும் நாளை சரண் அடையத் தான் வேண்டும் என்ற நிலைமையில் கூட
சோர்வில்லாமல் சாகன் கோட்டைத்தலைவன் போரிடுவதை செயிஷ்டகான் மனதில் மெச்சினாலும் இந்த
வீரத்தை அனுமதிப்பது அபாயம் என்று எண்ணினான்.
கூடுதல்
பீரங்கிகளுடன், கூடுதல் படையையும் திரட்டிக் கொண்டு செயிஷ்டகானே சாகன் கோட்டையை நோக்கிப்
புறப்பட்டான்.
செயிஷ்டகான் கூடுதல் படைகள், பீரங்கிகளுடன் சாகன் கோட்டை வந்து
சேர்ந்த விவரம் ஃபிரங்கோஜி நர்சாலாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இனியும் சரணடையா விட்டால்
தொடர் பீரங்கிக் குண்டுகளால் சாகன் கோட்டை தகர்க்கப்படும். அதை அவன் விரும்பவில்லை.
அதில் அர்த்தமுமில்லை. சிவாஜியும் அதை ஆதரிக்க மாட்டான்.
தாதாஜி
கொண்டதேவின் மறைவுக்குப் பிறகு சிவாஜியைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட பிறகு ஃபிரங்கோஜி
நர்சாலா அவனிடமிருந்து எத்தனையோ கற்றுக் கொண்டிருக்கிறான். பாய்வதும், பதுங்குவதும்,
தாக்குவதும், தாக்குப்பிடிப்பதும், வெகுண்டு எழுவதும், வெறுமை காட்டி அமைதியாக இருப்பதும்,
காலத்திற்கேற்றாற் போல் சிவாஜி இயங்கிய விதங்கள். அப்படி இயங்கி அவன் வென்று வளர்ந்ததைப்
பார்த்திருக்கிறான். அதில் வீரம் என்ற பெயரில் முட்டாள்தனம் இருந்ததில்லை…..
சிவாஜி
பற்ற வைத்த சுயராஜ்ஜிய நெருப்பு இன்னமும் ஃபிரங்கோஜி நர்சாலா நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் கோட்டையையும், உள்ளிருக்கும்
மக்களையும் வீரர்களையும் காக்க வேறு வழி இல்லாததால் அவன் சரணடைய மிகுந்த மன வருத்தத்துடன்
முடிவெடுத்தான்.
சாகன்
கோட்டை சரணடைந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Deeply emotional update. Very nice.
ReplyDeleteSivaji lost two things, his loving wife and his friend surrendered
ReplyDeleteசாய்பாயின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது....அதுமட்டுமில்லாமல் மற்றொரு புறம் அவன் கோட்டைகள் முகலாயப்படையினரால் கைப்பற்றப்படுகிறது... எவ்வாறு இந்த பிரச்சனையை சிவாஜி கையாள்வான்...?
ReplyDelete