Monday, September 9, 2019

சத்ரபதி 89


ஷாஹாஜிக்கு நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஒரு கனவு போலவே தோன்றியது. சில நாட்கள் முன்பு வரை விதி அவர் வாழ்க்கையில் சதியை மட்டுமே செய்து கொண்டிருந்ததேயொழிய, அது என்றும் அவர் வாழ்வில் எதிர்பாராத நன்மைகளைத் திணித்ததில்லை. அதனால் அவர் விதி என்றாலே சதி தான் என்ற முடிவுக்கு என்றோ வந்திருந்தார். ஆனால் பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷா சிவாஜியிடம் சமாதானத் தூதுவனாக அவரை அனுப்பத் தீர்மானித்த கணம் முதல் விதி அவருக்கு உற்ற நண்பனாக மாறி விட்டது. இப்போது அவர் இளைய மனைவி துகாபாயுடனும், இளைய மகன் வெங்கோஜியுடனும் சிவாஜியைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறார். ஒரு அரசனுக்குரிய படை பரிவாரமும் அவருடன் இருந்தது.

சிவாஜியின் இரண்டாம் திருமணம் பீஜாப்பூரில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் அவனைச் சந்திக்கவில்லை. சில வருடங்களில் சிவாஜி பீஜாப்பூர் சுல்தானின் எதிரியாகி விட்டதால் அவர் வெளிப்படையாக அவனிடம் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார். மகனுடன் இருந்த ஓலைத் தொடர்பும் கூட ரகசியமாகவே தான் நடைபெற்றது. பீஜாப்பூர் சுல்தானின் ஆணைக்கேற்ப மகனைக் கண்டித்து எழுதும் ஓலைகள் மட்டுமே வெளிப்படையாக சிவாஜிக்கு அனுப்பப்பட்டன. இப்படிப்பட்டதொரு நிலையில் இருந்தவர் இப்போது ராஜ மரியாதையுடன் படை பரிவாரத்துடன் மகனை நேரடியாகச் சந்திக்கச் சென்று கொண்டிருப்பது அவருக்குக் கனவு போலவே இருந்தது.

சிவாஜிக்குத் தூதனுப்ப எத்தனையோ ஆட்களை பீஜாப்பூர் சுல்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும் கூட அவரை சுல்தான் தேர்ந்தெடுத்தது அவர் பேச்சுக்கு சிவாஜி மறுப்பு தெரிவிக்க மாட்டான் என்ற நம்பிக்கை தான் என்பதை அவர் அறிவார். சுல்தானின் பிரதிநிதியாகச் செல்வதால் பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் எல்லையைக் கடக்கும் வரை சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டது.

வழியில் இருந்த புனிதத்தலங்களில் எல்லாம் அவர் வழிபாடுகள் செய்து வணங்கினார்.  துல்ஜாப்பூரில் அன்னை பவானியை வணங்கிய போது அவர் மிகுந்த மன நெகிழ்ச்சியில் இருந்தார். அவர் மகன் ஒவ்வொரு போருக்குச் செல்லும் போதும் அன்னை பவானியை வணங்கி விட்டுப் போவான் என்பதைக் கேள்விப்பட்டிருந்தார். அப்சல்கான் இந்தக் கோயிலில் அட்டகாசம் செய்து விட்டுப் போனதும், சிவாஜி அவனைக் கொன்று வென்றதும் வரலாறு. எல்லாம் இந்த அன்னையின் கருணையே என்று அவர் மானசீகமாக தேவிக்கு நன்றி தெரிவித்து வணங்கினார். அவருடைய தொடர் பயணத்தில் வழிபாடுகள் பண்டரிபுரம், ஷிக்னாப்பூர் ஆலயங்களிலும் தொடர்ந்தன.

பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் எல்லையைக் கடந்து சிவாஜியின் எல்லையில் நுழைந்த போதும் ராஜ மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவாஜியின் படைத்தலைவன் ஒருவன் அவரை வரவேற்று “மன்னர் தங்களுக்காக ஜெஜூரி சிவாலயத்தில் காத்திருக்கிறார்” என்று தெரிவித்தான்.

மகனை மன்னனாக மற்றவர் வாயால் கேட்கையில் அந்தத் தந்தையின் நெஞ்சம் பெருமையால் நிறைந்தது. ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும்,  ஒருசிலர் அரசனாகவே அவரைச் சில வேளைகளில் அழைத்தாலும், அது பெயரளவில் இருந்ததே ஒழிய அந்த வார்த்தையில் அர்த்தம் இருக்கவில்லை. ஆனால் அவர் மகன் பெயரளவில் மட்டும் அரசனாக இருந்து விடாமல் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி விஸ்தரித்துக் கொண்டிருக்கும் நிஜ அரசனாக இருக்கிறான் என்பதே அந்தத் தந்தைக்கு நிறைவாக இருந்தது.

சிவாஜி ஜெஜூரி சிவாலயத்தின் முன் தந்தைக்காகக் காத்திருந்தான். அவன் தாயும், இரு மனைவிகளும், மகள்களும், மகனும் அவரை வரவேற்க அவனுடன் நின்றிருந்தார்கள்.   அவர் மகன் ராஜ்ஜியத்தின் மண்ணில் கால் வைத்த அந்தக் கணமே புழுதி என்றும் பாராமல் சிவாஜி சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினான். ஷாஹாஜி அவனை வாரி அணைத்தபடி எழுப்பினார்.

சிவாலயத்தில் சிவாஜி அவருக்காகச் சிறப்பு வழிபாடுகள், வேள்விகள் ஏற்பாடு செய்திருந்தான். ஒரு குறிப்பிட்ட வேளைக்குள் முடிய வேண்டியவை அவை என்பதால் அதிகம் பேசாமல் அவரை ஆலயத்திற்குள் சிவாஜி அழைத்துச் சென்றான். எல்லாம் முடிந்து அவரைப்  பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்ற சிவாஜி அவருடைய காலணிகளைக் கையில் பிடித்துக் கொண்டபடி உடன் சென்றான்.

பின்னால் வந்த ரதத்தில் துகாபாய் மகன் வெங்கோஜியுடன் இருந்தாள். சிவாஜியின் பணிவையும் அடக்கத்தையும் கண்ட அவள் ஜீஜாபாய்க்கு இப்படி ஒரு மகனா என்று பிரமித்தாள். ஜீஜாபாய் கணவனிடம் கூட அடக்கத்தை அதிகம் காண்பித்ததாய் அவளுக்கு நினைவில்லை. அவமரியாதை செய்ததில்லை என்ற போதும் பணிவையும் அவள் காண்பித்தது கிடையாது. துகாபாய் மகனும் சிவாஜியின் பணிவையும் அடக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். 

“வெங்கோஜி உன் சின்ன அண்ணாவைப் பார்த்தாயா? பீஜாப்பூர் சுல்தானையே எதிர்த்து வெற்றி கொள்ள முடிந்த அளவு உயரத்திற்குச் சென்று விட்ட போதும் தந்தைக்கு அவன் தரும் மரியாதையைக் கவனித்தாயா?” என்று துகாபாய் மகனிடம் சொன்னாள்.

“தந்தையுடைய உயிருக்கே ஆபத்தை விளைவித்தவரும் சின்ன அண்ணா தான் என்ற நினைவும் எனக்கு வந்து தொலைகிறது தாயே” என்று வெங்கோஜி இறுகிய முகத்துடன் சொன்னான்.

உண்மையில் பல்லக்கின் அருகே நடந்து கொண்டிருக்கும் வேளையில் சிவாஜிக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி தான் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது. முகாமில் நுழைந்து தந்தை இருக்கையில் அமர்ந்தவுடன் தந்தையின் காலில் விழுந்து அவன் மன்னிப்புக் கேட்டான்.

“தந்தையே நான் எனக்கென்றொரு கனவு, எனக்கென்றொரு கொள்கை, எனக்கென்றொரு பாதை என்று வாழ்ந்து வருகிறேன். இது என்னைச் சார்ந்தவர்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று பல சமயங்களில் கணக்கில் கொள்ள மறந்து விடுகிறேன். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் தாங்களே! உங்கள் உயிருக்கே ஆபத்தைப் பல முறை வரவழைத்திருக்கிறேன். பல முறை அவமானங்களைச் சந்திக்க வைத்திருக்கிறேன். எந்த மகனும் தந்தையை நிறுத்தக்கூடாத சூழ்நிலைகளில் எல்லாம் தங்களை நான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அதற்குத் தாங்கள் என்னைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்…..”

ஷாஹாஜியின் மனம் மகன் அவரது காலணிகளைத் தூக்கிக் கொண்டு அவர் பல்லக்கின் அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் போதே கனக்க ஆரம்பித்திருந்தது. எந்த மகனைப் பிறப்பிலிருந்தே அவரால் சரியாக அன்பு காட்டி வளர்க்க முடியவில்லையோ, எந்த மகனின் வளர்ச்சிக்கு அவரால் தந்தையாகப் பிரத்தியேகமாக எதுவும் செய்ய முடிந்ததில்லையோ,  அந்த மகன் அவரிடம் காட்டும் இந்த மரியாதையும், கௌரவமும்  அவருடைய மனசாட்சியை உலுக்கின.  அவர் தன் மற்ற இரண்டு பிள்ளைகளுக்குச் செய்ததை எல்லாம் இந்த மகனுக்குச் செய்ததில்லை. அவனும் அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. நியாயத்தில் அவர் தான் அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நிலைமை அப்படி இருக்கையில் இந்த உயர்ந்த மகன் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறான்.

ஷாஹாஜி கண்கலங்க, சிவாஜியைப் பேரன்புடன் எழுப்பி அணைத்துக் கொண்டார்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மகனிடம் ஆத்மார்த்தமாகச் சொன்னார். “மகனே, ஒரு வீர பரம்பரையின் வாரிசான நீ நம் முன்னோர்களே பெருமைப்படும் அளவுக்கு நம் இனத்தின் பெயரை நிலைநிறுத்தி இருக்கிறாய். நம் குலத்தையே பெருமைப்படுத்திய நீ மன்னிப்பு கேட்கிற அளவு எந்தக் குற்றத்தையும் செய்து விடவில்லை. அவமானத்தையும் ஆபத்தையும் எனக்கு வரவழைத்ததாய் நீ நொந்து கொண்டாய். உன் தந்தைக்கு அவமானங்கள் புதிதல்ல. இளமையில் இருந்து என்றுமே அவற்றைக் கண்டு வந்திருக்கிறேன். நான் தலைநிமிர முயற்சி செய்த போதெல்லாம் விதி என்னைத் தலைகுனிய வைத்துப் பார்த்திருக்கிறது. அப்படி அடிக்கடி தாழ்ந்த என் தலை ஒரேயடியாக நிமிர்ந்தது உன்னால் தான் மகனே. ஷாஹாஜி என்ற தனிமனிதாக நான் அடைய முடியாத பெருமைகளை எல்லாம் சிவாஜியின் தந்தையாக நான் அடைந்திருக்கிறேன். ஆபத்தும் உன்னால் மட்டுமே வந்ததல்ல. வீரனாக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்ட பின் ஒருவனுக்கு ஆபத்து எக்கணமும் தவிர்க்க முடியாதது. அப்படி நேர்ந்த ஆபத்திலிருந்தும் சமயோசிதமாக நீ என்னைக் காப்பாற்றியும் இருக்கிறாய். எல்லாவற்றிற்கும் மேலாக உன் அண்ணன் மரணத்திற்குக் காரணமானவனையும், என்னை வஞ்சகத்தால் கைது செய்தவனையும் நீ பழிவாங்கி, எரிந்து கொண்டிருந்த என் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறாய். நீ எனக்குத் தந்த மனநிறைவை உலகில் எந்த மகனும் ஒரு தந்தைக்குத் தந்திருக்க முடியாது மகனே…. ”

சிவாஜியும் அவர் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனான்.


(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. My eyes are wet with tears. Touching chapter.

    ReplyDelete
  2. இந்த பகுதி மிகவும் நெகிழ்ச்சியானதாக உள்ளது....அருமை...

    ReplyDelete
  3. You have brought out the feelings of father and son very well.

    ReplyDelete
  4. Sivaji and Shahaji conversation is very impressive for me. In this time, I realized my father's feeling. Thank you sir.

    ReplyDelete
  5. Wow! What a beautiful presentation. Conversation between Sivaji and his father seems to be like watching a real movie. Hats off to you Sir!

    ReplyDelete