Monday, August 19, 2019

சத்ரபதி – 86

சிவாஜிக்கு மூன்று தனிப்படைகள் மூன்று திசைகளிலிருந்து வரும் செய்தி வந்து சேர்ந்தது. அவனுடைய நண்பன் யேசாஜி கங்க் கவலையுடன் கேட்டான். “என்ன திட்டம் வைத்திருக்கிறாய் சிவாஜி?”
சிவாஜியிடம் எந்தத் திட்டமும் கைவசம் இருக்கவில்லை. அதை அவன் தெரிவித்த போது யேசாஜி கங்க் திகைப்புடன் சொன்னான். “இந்த முறை அவர்கள் வலிமை அதிகம் சிவாஜி. மூன்று படைகளில் லாக்கம் சாவந்தின் படையிலும் சரி, பாஜி கோர்ப்படே படையிலும் சரி சகாயாத்ரி மலைத்தொடருக்கு நன்றாகவே பழக்கப்பட்ட நம்மவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பாஜி கோர்ப்படே இறந்ததால் படைத்தலைமையில் தான் பீஜாப்பூர் படைத்தலைவன் இருக்கிறானே ஓழிய படையில் பெரும்பாலான வீரர்கள் நம்மவர்களே. பீஜாப்பூர் படை மட்டுமே சகாயாத்ரிக்கு அதிகம் பழக்கப்படாதது என்றாலும் இந்த முறை அவர்களும் தீவிரமாகவே இருக்கிறார்கள் என்பதால் இந்த மும்முனைத் தாக்குதல்  வென்று விடத்தான் வாய்ப்புகள் அதிகம். விஷால்கட்டின் பின்புறப் பள்ளத்தாக்கின் முடிவிலும் லாக்கம் சாவந்த் கணிசமான படையைக் குவித்திருக்கிறான்…. நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”

சிவாஜி அமைதியாகச் சொன்னான். “நான் பல விதமாகவும் யோசித்துப் பார்த்து விட்டேன். இந்த முறை என் மூளைக்கு வேறெந்த வழியும் எட்டவில்லை. அதனால் அன்னை பவானியிடம் எல்லாப் பொறுப்பையும் தந்து விட்டிருக்கிறேன். அவள் எதாவது ஒரு வழிகாட்டுவாள்….”

யேசாஜி கங்க் திகைப்புடன் சிவாஜியைப் பார்த்தான். சிவாஜியின் இந்த நம்பிக்கை அவனை எப்போதுமே ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. எல்லா நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் ஏதாவது ஒரு வழியை சிவாஜி கண்டுபிடிப்பதும், அப்படி அவனால் முடியாமல் போகையில் இறைவனிடம் எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொள் என்று ஒப்படைத்து விட்டு, ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையில் காத்திருப்பதும் சிவாஜியால் மட்டுமே முடிந்த ஒரு வித்தையாக அவனுக்குத் தோன்றியது.

கடவுளை ஒரு மனிதன் இந்த அளவு நம்ப முடியுமா என்று யேசாஜி கங்க் வியந்தான். அவனும் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான் என்றாலும் நெருக்கடியான சமயங்களில் பல கோடி மக்களைப் பரிபாலிக்க வேண்டியிருக்கும் கடவுள் நம் வேலையைச் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுவாரோ என்ற சந்தேகமும், அதனால் பதற்றமும் அவனுக்கு வராமல் இருந்தது இல்லை.

முப்படைகள் கிளம்பி விட்டன. நாலைந்து நாட்களில் இங்கே நெருங்கி விடுவார்கள் என்ற நிலையில், வெற்றி பெற எந்தத் திட்டமும், சூழலும் இல்லாத போதிலும் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருக்கும் சிவாஜிக்கு கடவுள் எப்படி உதவக்கூடும் என்று அவன் பல விதங்களில் யோசித்துப் பார்த்தான். ஒரு வழியும் தெரியவில்லை. அவன் அமைதியிழந்தே அங்கிருந்து நகர்ந்தான்.


ரண்டு நாட்கள் கழித்து அலி ஆதில்ஷாவுக்கு கர்நாடகத்தில் அவர்கள் நிலைமை மிக மோசமாகி வரும் தகவல் வந்து சேர்ந்தது. ஓரிரு இடங்களில் மட்டுமல்லாமல் பல இடங்களில் கலவரங்களும், எதிர்ப்புகளும் பெருகி வருவதாகத் தெரிய வந்தது. அதை அப்படியே விட்டு விட்டால் கர்நாடகமே கையை விட்டுப் போகும் அபாயம் இருக்கிறது என்பதை உணர்ந்த அலி ஆதில்ஷா கர்நாடகத்திற்குப் பெரும்படையுடன் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

அவனே பெரும்படையுடன் அங்கு செல்ல உத்தேசித்த போது அவன் தாய் தலைநகரை விட்டுத் தொலைவில் ஒரு அரசன் நீண்ட காலம் இருப்பது நல்லதல்ல என்றும் ஆபத்தானது என்றும் எச்சரித்து அவனுக்கு நீண்ட மடல் அனுப்பியிருந்தது கிடைத்தது. அவன் ஆலோசகர்களும் அது சரியான எச்சரிக்கையே என்று தெரிவித்தார்கள். ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின் அலி ஆதில்ஷா சிவாஜியைத் தாக்க அனுப்பியிருந்த தன் படையையும், பாஜி கோர்ப்படேயின் படையையும் கர்நாடகத்தை நோக்கிச் செல்ல கட்டளையிட்டு விட்டு அவன் மீதமுள்ள படையுடன் பீஜாப்பூருக்குக் கிளம்பினான். சிவாஜியைப் பின்னர் கவனித்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்தான்.

ந்தச் செய்தி லாக்கம் சாவந்தின் தலையில் பேரிடியாக விழுந்தது. இந்த பீஜாப்பூர் சுல்தான் இப்படி திடீர் திடீர் என்று முடிவுகளை மாற்றிக் கொண்டே போவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மும்முனைத் தாக்குதலுக்குக் கிளம்பிய முப்படைகளில் இரு படைகள் கர்நாடகம் நோக்கிச் சென்று விட்டால் மீதமிருக்கும் தன் ஒரு படையால் என்ன செய்து விட முடியும் என்று மனம் வெந்தான்.

ஏற்கெனவே அவன் மீது சிவாஜி கோபத்தில் இருக்கிறான். சிவாஜியின் நண்பன் பாஜி பசல்கரின் மரணத்திற்குப் பின் கோபம் இருமடங்காகி கடுங்கோபமாக மாறி விட்டிருக்கிறது. இது போதாதென்று சிவாஜியைத் தாக்க பீஜாப்பூர் சுல்தான் படைகளுடன் சேர்ந்து கொண்டு அவன் தனிப்படையுடன் வேறு கிளம்பி விட்டிருக்கிறான். இத்தனை ஆன பின் அந்த இரு படைகளையும் கர்னாடகத்துக்குத் திருப்பி விட்டு அவனை தனித்து விட்டது பீஜாப்பூர் சுல்தானின் பெரிய துரோகமாக அவனுக்குத் தோன்றியது. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக அல்லவா ஆகி விட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே அவன் ஒதுங்கியிருந்திருப்பானே!

இனி சிவாஜி சும்மா இருந்து விட மாட்டான். என்னேரமும் அவன் லாக்கம் சாவந்தைத் தாக்கப் படையுடன் வந்து விடக்கூடும். கோபமான சிவாஜி மிக மிக ஆபத்தானவன்….. அவனாகத் தாக்க வந்து விட்டால் தயவு தாட்சணியம் பார்க்க மாட்டான். அப்சல்கானும், பாஜி கோர்ப்படேயும் லாக்கம் சாவந்தின் நினைவில் நிழலாடி விட்டுப் போனார்கள். உடனடியாக எதாவது செய்யா விட்டால் மரணம் நிச்சயம் என்ற உண்மை அவனுக்குப் புலப்பட ஆரம்பித்தது.

லாக்கம் சாவந்துக்கு சீக்கிரம் மரணத்தைச் சந்திக்க விருப்பமில்லை. உயிரிழக்காமல் இருக்க ஒரே வழி தான் இப்போது அவன் மனக்கண் முன் தோன்றியது.  உடனே கிளம்பினான்.


சிவாஜியிடம் வந்து அவன் காவல் வீரன் சொன்னான். “தங்களைச் சந்திக்க வாடி மன்னர் லாக்கம் சாவந்த் வந்திருக்கிறார் அரசே”

சிவாஜியின் முகத்தில் உடனடியாகக் கடுமை குடியேறியது. லாக்கம் சாவந்தைத் தாக்க அவன் ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கையில் லாக்கம் சாவந்தே நேரடியாக வருவான் என்று சிவாஜி எதிர்பார்த்திருக்கவில்லை. தலைமறைவாக இருந்த லாக்கம் சாவந்த், வெளியே தென்பட்ட போது தனியாக இல்லை, தனிப்படை திரட்டி விட்டே வெளிப்பட்டான். அவனைத் தாக்கப் படையோடு கிளம்பிய லாக்கம் சாவந்த் இப்போது படையை விட்டு விட்டுத் தனியாகவே அவனைச் சந்திக்க வந்திருக்கிறான். இப்படித் திடீர் திடீர் என்று மாறும் லாக்கம் சாவந்த் என்னும் புதிர், தேடிய போதெல்லாம் மறைவாக இருந்து விட்டு, இப்போது ஏன் நேரடியாக வந்த காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிய சிவாஜி அவனை உள்ளே அனுப்ப உத்தரவிட்டான்.

அடுத்த கணம் வில்லில் இருந்து கிளம்பிய அம்பின் வேகத்தில் வந்து சிவாஜியின் காலில் விழுந்தான் லாக்கம் சாவந்த்.

“என்னை மன்னித்து விடுங்கள் அரசே!”

அவனைப் பார்க்கையில் சிவாஜிக்கு பாஜி பசல்கரின் நினைவு தான் வந்தது. காலில் விழுந்தவனைக் கொல்வது தர்மம் அல்ல என்ற ஒரே காரணத்தினால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட சிவாஜி இரண்டடி விலகி நின்று “எழுந்து ஆசனத்தில் அமர்வாய் லாக்கம் சாவந்த்” என்றான்.

லாக்கம் சாவந்த் பணிவுடன் எழுந்து ஆசனத்தில் அமர்ந்தான்.

சிவாஜி கேட்டான். “எதற்காக மன்னிப்பு கேட்கிறாய் லாக்கம் சாவந்த்?”

லாக்கம் சாவந்த் தலையையும் தோளையும் சற்று முன்னால் சாய்த்தபடி சொன்னான். “ஒரே இனத்தவர் என்று நீங்கள் உறவு கொண்டாடி உங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கையில் நான் பீஜாப்பூர் சுல்தான் பக்கம் சேர்ந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். கெட்ட காலங்களில் மனமும், மதியும் சரியான பாதையில் செல்வதில்லை என்பதற்கு நானே ஒரு உதாரணம் அரசே. ஆனால் தவறை உணர்கையில் மன்னிப்புக் கேட்பதில் ஒருவன் சிறிதும் தயக்கம் காண்பிக்கக் கூடாது என்பதால் உடனடியாக உங்களிடம் மன்னிப்புக் கோரி வந்திருக்கிறேன்…..”

“பலம் பெருகும் போது தாக்குவதும், பலம் குறுகும் போது மண்டியிடுவதும் நீச்ச மனிதர்களின் இயல்பு.” என்று சிவாஜி கடுமையாகச் சொன்னான்.

“உண்மை தான். ஆனால் சரணடைந்த ஒருவனை மன்னிப்பது உயர்ந்த மனிதர்களின் இயல்பல்லவா?” என்று லாக்கம் சாவந்த் பணிவாகக் கேட்டான்.

சிவாஜி சொன்னான். “என் உயிர் நண்பனின் மரணத்திற்கு உன்னை மன்னிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை”

லாக்கம் சாவந்த் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான். “பாஜி பசல்கரின் மரணத்திற்கு நான் மன்னிப்பு கேட்கவில்லை அரசே. அவனை வஞ்சனையாக யாரும் கொல்லவில்லை. வீர மரணம் அடைந்திருக்கிறான் அவன். அவனுடன் போரிட்ட எங்கள் படைத்தலைவனும் வீர மரணம் அடைந்திருக்கிறான். எப்படி என் படைத்தலைவன் மரணத்திற்கு நான் உங்களைக் குற்றம் சொல்ல முடியாதோ, அப்படியே நீங்களும் உங்கள் நண்பன் மரணத்திற்கு என்னைக் குற்றம் சாட்ட முடியாது. வீர மரணம் வெற்றிக்கு இணையானது. ஒவ்வொரு வீரனும் தேடும் பெருமை அது. அதனால் அதற்கு மன்னிப்பு நான் கேட்கவில்லை. உறவு பாராட்டிய உங்களிடம் பகை காட்டும் பக்கம் இணைந்ததற்கு மட்டுமே மன்னிப்பு கோரி வந்தேன்….”

சிவாஜி இருந்த கடுங்கோப மனநிலையிலும் லாக்கம் சாவந்தின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அங்கீகரிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. சாம்பாஜியின் மரணம் போல் பாஜி பசல்கரின் மரணம் வஞ்சகத்தில் நடந்ததல்ல….. அவனுடைய நண்பன் என்ற காரணத்தில் அவன் மனம் கொதித்தால் அந்தப் பக்கம் நேர்ந்த மரணத்திற்கும் அவன் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா?

சிவாஜி பெருமூச்சு விட்டான். பின் கேட்டான். “உனக்கு இப்போது மன்னிப்பு தந்தால் நீ மறுபடி பீஜாப்பூர் சுல்தானுடன் சேர்ந்து கொண்டு என்னை எதிர்க்க மாட்டாய் என்று என்ன நிச்சயம்?”


லாக்கம் சாவந்த் சொன்னான். “என் தாய் மீதும், பிள்ளைகள் மீதும் சத்தியம் செய்து தருகிறேன் அரசே! இனி என்றும் உங்களுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன். இந்த ஒரு முறை மட்டும் மன்னித்து விடுங்கள் போதும்……”

(தொடரும்)
என்.கணேசன்

1 comment:

  1. வெற்றி பெற வேண்டிய நேரத்தில் அலிஆதில்ஷா இப்படி கோட்டை விட்டுவிட்டான்.... உண்மையில் சிவாஜியின் தெய்வ நம்பிக்கை அற்புதம்...

    ReplyDelete