Thursday, August 8, 2019

இல்லுமினாட்டி 8


ஜான் ஸ்மித் சென்ற பிறகும் எர்னெஸ்டோ ஓய்வெடுக்கவில்லை. நடந்திருக்கும் சம்பவங்கள் அவரை ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை. அவர் கம்ப்யூட்டரில் விஸ்வம் என்ற பெயரில் அவர் சேகரித்து வைத்திருந்த எல்லாத் தகவல்களையும் ஆழ்ந்து இன்னொரு முறை படித்துப் பார்த்தார். அந்தத் தகவல்களுடன் இப்போது கிடைத்திருக்கும் தகவல்களையும் சேர்த்துப் பார்த்தால் இப்போதைய தகவல்கள் அதிக ஆச்சரியமாகத் தெரியவில்லை. என்ன மனிதனிவன் என்ற பிரமிப்பு தான் அவருக்கு இறுதியாக மிஞ்சியது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் யாராவது இப்படி ஒரு மனிதன் இருக்கிறான் என்று சொல்லியிருந்தால் அவர் அதைக் கட்டுக்கதை என்று சொல்லியிருப்பார். அவன் இல்லுமினாட்டி உறுப்பினர் ஆவான் என்று சொல்லியிருந்தால் அதன் தலைவரான அவர் அதைப் பரிகசித்திருப்பார். ஆனால் அப்படி ஒரு மனிதன் இருப்பது தெரிய வந்தது. அவன் இல்லுமினாட்டியின் உறுப்பினர் ஆனது நிஜமாகியது. அதன் பின் எத்தனையோ எதிர்பாராதத் திருப்பங்கள், திகைப்பான நிகழ்வுகள் நடந்தன. மூன்று நாட்களுக்கு முன் எல்லாம் ஒரு வழியாக முடிந்து இயல்பு நிலைக்கு எல்லோரும் திரும்பியது போல் இருந்தது. ஆனால் அவன் சம்பந்தப்பட்ட பிறகு எதுவுமே இயல்பு நிலை இல்லை என்பது போல மீண்டும் என்னென்னவோ நடந்து விட்டது.

அவர் அறைச் சுவரில் ஒரு பிரமிடுக்குள் விழி இருக்கும் அந்தச் சின்னத்தைத் தவிர வேறு படங்களோ ஓவியங்களோ இருக்கவில்லை. எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் விழி! அந்த விழி இல்லுமினாட்டியின் சின்னம். அந்த விழி எப்போதுமே இமைப்பதில்லை. அதனால் அந்த இமைக்கும் நேரத்தில் கூட அதன் பார்வைக்கு எதுவும் தப்பி விடும் வாய்ப்பில்லை. அதையே அவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் அந்த விழியிடம் கேட்டது. “எல்லாம் பார்க்கும் விழியே. நீ இப்போது நடப்பதனைத்துமே கூட பார்த்துக் கொண்டிருப்பாயே. என்ன நடக்கிறது? நடப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

அந்த விழியிடம் இருந்து பதில் இல்லை.

ல்லுமினாட்டி என்ற அமைப்பு பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் பவேரியாவில் ஆரம்பிக்கப்பட்டது. அறிவே பிரதானம், அதுவே சக்தி, அதன்படி வாழ்வதே சிறப்பு என்ற சித்தாந்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட இல்லுமினாட்டி மூடநம்பிக்கைகளையும், அப்போதைய அரசாட்சியின் அநீதியையும் உறுதியாக எதிர்த்து நின்றது. அப்போதைய பவேரிய மன்னரும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து இல்லுமினாட்டி அமைப்புக்குத் தடைவிதித்தார்க்ள். ஆனாலும் இல்லுமினாட்டி ரகசியமாக இயங்கி வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அதே சித்தாந்தத்தில் சில வித்தியாசங்களுடன் ஃப்ரீ மேசன், ரோசிக்ரூசியன் என்ற அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்தன. அவையும் அரசாங்கங்களின் தணிக்கைக்குத் தப்பவில்லை. பின்னொரு காலக்கட்டத்தில் அந்த இரண்டு அமைப்புகளின் சிறந்த அறிவு ஜீவிகளும் இல்லுமினாட்டியில் ஒன்று சேர்ந்தார்கள். அப்படிச் சேராமல் தனித்தனியாகவே மீதமுள்ள உறுப்பினர்களால் ஃப்ரீ மேசன், ரோசிக்ரூசியன் அமைப்புகள் அதே பெயர்களில் தொடர்ந்தாலும் இல்லுமினாட்டி கூடுதல் பலத்துடன் ரகசியமாக இயங்க ஆரம்பித்தது. பேரறிவு, அதிகார பலம் இந்த இரண்டுமே இல்லுமினாட்டியின் நோக்கமும், வழியுமானது. எத்தனையோ சறுக்கல்கள், தாழ்நிலைகள் வந்த போதும் இல்லுமினாட்டி அழியாமல் தன்னைப் பலப்படுத்திக் கொண்டே வந்தது. வெளிப்பார்வைக்கு வராமலேயே அது ஒரு சக்தி மையமாக உருவாக ஆரம்பித்தது. இல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் தங்கள் இல்லுமினாட்டி இணைப்பை வெளிக்காட்டாமலேயே பல அரசுகளின் நிர்வாகத்திலும், அதிகாரத்திலும் பங்கு பெற ஆரம்பித்தார்கள். பல்வேறு துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள்.  அவர்கள் ஆதிக்கம் உலகத்தின் பல பகுதிகளிலும் வேரூன்ற ஆரம்பித்தது.

இல்லுமினாட்டியின் அறிஞர்கள் பலரும் ரகசியக்கலைகளிலும் ஆர்வமும், பாண்டித்தியமும் கொண்டிருந்தார்கள். அவர்களது கோயில்கள் மேசன் கோயில்களாகப் பல பகுதிகளில் கட்டப்பட்டன. அந்தக் கோயில்களில் எத்தனையோ ரகசியத் தகவல்கள் பல விதங்களில் வைக்கப்பட்டன. சிற்பங்களாக, வரைபடங்களாக, பெட்டகங்களாக, ரகசியக்குறியீடுகளாக அவை வைக்கப்பட்டன.

ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கழித்து கெடுபிடிகளும் அதிகமாகி, தகுதி வாய்ந்த உறுப்பினர்களும் குறைய ஆரம்பித்த போது அப்போதிருந்த அறிஞர்கள் கவலை அடைந்து ஆரகிள் என்று சொல்லப்படும்  தெய்வீகசக்தி வாய்ந்த, எதிர்காலத்தை முன்கூட்டியே கண்டு சொல்லக்கூடிய ஒரு  பெண்மணியிடம் குறி கேட்ட போது அவள் “எத்தனை அடக்குமுறை இருந்தாலும் இப்போதைக்கு இதற்கு அழிவில்லை. இது ரகசியமாய் சக்தி பெற்றுக் கொண்டே வளர்ந்து வந்து உலகத்தையே மறைமுகமாய் ஆளும். இதற்கும் உலகிற்குமே அழிவை ஏற்படுத்தக்கூடிய சூழல், ஒன்றே கால் நூற்றாண்டு கழித்து உருவாகும். அப்போது காப்பாற்றி வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஒருவன் வருவான்” என்கிற வகையில் சொல்லி அவனைப் பற்றிய குறிப்பையும் இப்படிச் சொன்னது.

“உயர் சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தேஜஸுடன் இமயமலைக்குத் தெற்கில் இருந்து வருவான். எல்லாம் பார்க்கும் விழி அவனை அடையாளம் காட்டி உணர்த்தும். எது சரியென்றும் எது வழியென்றும் உணர்த்தி அவன் வழி காட்டுவான். உய்யும் வழி அது ஒன்றே. அன்றேல் அழிவது உறுதி”

உடனே அதை அப்போதைய இல்லுமினாட்டியின் தலைவர் ஒரு சுவடியில் எழுதி வைத்துக் கொண்டார். எதிர்காலத் தலையெழுத்தை நிர்ணயிக்கும் குறிப்புகள் என்பதால் அவற்றை 1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோ நகரில் 21 மாடிகள் கொண்ட மிகப்பெரிய மேசன் கோயிலைக் கட்டுகையில் அதன் அஸ்திவாரத்தில் ஒரு இரகசியப் பெட்டகத்தில் வைத்துப் புதைத்து அதன் மீது கோயிலைக் கட்டினார்கள். அது தான் அக்காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய மேசன் கோயிலாக இருந்தது. காலச்சூழ்நிலையாலும், சில ரகசியக் காரணங்களாலும் 1939 ஆம் ஆண்டு அந்தக் கோயில் இடிக்கப்பட்டது. அப்போது அந்த ரகசியப் பெட்டகம் அஸ்திவாரத்திலிருந்து எடுக்கப்பட்டு வாஷிங்டனில் இருந்த இல்லுமினாட்டியின் ரகசியக் கருவூலத்தில் பத்திரமாக வைத்தார்கள்.

ஆரகிள் சொன்னபடி இல்லுமினாட்டியின் பலம் கூடிக் கொண்டே வந்தது. உலகத்தையே கிட்டத்தட்ட மறைமுகமாக ஆளும் நிலை உருவாகியது. அதிகார பலமும், வல்லமையும் கூடிவிட்ட பிற்காலத்து இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு பழங்கால ஆரகிளின் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டாலும் அது பழங்காலக் கற்பனைக் கதை என்றே தோன்ற ஆரம்பித்தது. அவர்களை மீறி உலகத்தின் வலிமையான அரசாங்கங்கள் இயங்காமல் பார்த்துக் கொள்ளும் அளவு வலிமை பெற்றிருந்த அவர்கள் தங்களை அனுசரிக்காதவர்களையும், எதிர்ப்பவர்களையும் களத்திலிருந்தே அப்புறப்படுத்தினார்கள். அவர்களை எதிர்ப்பவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்க் கொண்டிருந்ததால் தங்களுக்கு அழிவு வரும் என்பதை நம்பாத ஒரு புதிய தலைமுறை இல்லுமினாட்டியில் தலையெடுக்க ஆரம்பித்தது. இல்லுமினாட்டியில் இருந்த பழைய தலைமுறையினரும் அந்த எச்சரிக்கையில் மெல்ல நம்பிக்கை இழக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இல்லுமினாட்டியின் உண்மை பலம் உலகத்தின் பார்வைக்குத் தெரியாதபடி பல கட்டுக்கதைகளும், போலி அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. உண்மையின் சாயல் கொண்ட கட்டுக்கதைகள் என்ன பெரிதாக நடந்தாலும் அது இல்லுமினாட்டியின் சதி, ஆதிக்கம் என்று சொல்லியபடி வலம் வந்தன. நாங்கள் தான் இல்லுமினாட்டி என்று பல போலி அமைப்புகள் வேடிக்கை காட்டின. இதெல்லாம் அதிகமானது இல்லுமினாட்டிக்கு அனுகூலமாகவே அமைந்தது. போலிகளுக்கு மத்தியில் உண்மையான இல்லுமினாட்டி சத்தமில்லாமல் அதிகார வல்லமையோடு விளங்கியது. 

கூர்மையான பேரறிவும், ஏராளமான சொத்துக்களும், செல்வங்களும் கொண்ட ஜெர்மானியரான எர்னெஸ்டோ தன் 61 வது வயதில் இல்லுமினாட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக இல்லுமினாட்டியின் தலைவராக இருந்தவர் ஒரு அமெரிக்கர். பதினைந்து ஆண்டுகள் இல்லுமினாட்டியின் தலைவராக இருந்து உடல்நலக்குறைவால் கடைசியில் ஓய்வு பெற்றவர். அவரும் சிறந்த நிர்வாகி. இல்லுமினாட்டியின் பல ரகசிய ஆவணங்களை எர்னெஸ்டோவிடம்  அதிகாரபூர்வமாக ஒப்படைத்த போது அவர் சொன்னார்.

”எர்னெஸ்டோ இரண்டு விஷயங்களை உன்னிடம் இந்தக் கட்டத்தில் தனிப்பட்ட முறையில் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒன்று அறிவுரை, இன்னொன்று வேண்டுகோள். அறிவுரை என்னவென்றால் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளாதே. கர்வம் அழிவுக்கான விதை என்பதை மறந்து விடாதே. வேண்டுகோள் என்னவென்றால் சுமார் இருபத்தைந்து வருடங்கள் கழித்து இந்த இயக்கமும், உலகமும் அழியும் நிலைமை வரும் என்று ஆரகிள் சொல்லி இருக்கிறது. அது சொல்லி இது வரை எதுவும் பலிக்காமல் போனதில்லை என்பது நம் முன்னவர்களின் அனுபவம். அப்படி நம் இயக்கமும், உலகமும் அழிவது போல் எதுவும் நடக்க அனுமதித்து விடாதே….”

எர்னெஸ்டோ அந்த இரண்டையும் மறக்கவில்லை. தன்னம்பிக்கையை கர்வமாக மாற அவர் என்றுமே அனுமதித்ததில்லை. அதே போல் அழிவு வரும்படியான செயல்களில் இயக்கம் நிதானம் இழந்து ஈடுபட அனுமதித்ததுமில்லை. சரியாக இருபத்தைந்து வருடங்கள் தலைவராக இருந்த அவர் தன் எண்பத்தியாறாம் வயதில் ஓய்வு பெற விரும்பிய போது ஆரகிள் சொன்னபடி இமயத்தின் தெற்கில் இருந்து வருகை இருந்தது. ஆனால் வந்தது ஒருவரல்ல. இருவர்.

இல்லுமினாட்டியைத் தடுமாற வைக்கும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.

(தொடரும்)
என்.கணேசன்   

10 comments:

  1. As Ernesto feel, Viswam is undoubtedly a wonder man. One of your most interesting characters in your novels.

    ReplyDelete
  2. இருவேறு உலகத்தில் இல்லுமினாட்டி பற்றி தகவல்களை கூறியிருந்தாலும், இந்த பகுதியில் மேலும் பல கூடுதல் தகவல்களை கூறியுள்ளீர்கள்.... அருமை....

    விஸ்வத்தைப் பற்றிய புது தகவல்...பழையத் தகவலுடன் ஒப்பிடுகையில்...ஆச்சரியத்தை தரவில்லை... அருமை...

    ReplyDelete
  3. Very interesting.
    Viswam character innum ennavellam seyya kaathukittu irukko.....

    ReplyDelete
  4. This week really disappointed. You already explained about Illuminate last book. I don't know why you filled the page with same details. At- least you could have add some more content related to the story. We are waiting 1 week to read your story. Please don't disappoint us. Thanks.

    ReplyDelete
    Replies
    1. As I have already explained in the beginning of this novel, many of old events in iruveru ulagam will be explained in this novel in the interest of new readers who have not read iruveru ulagam. As this is also a separate novel I have to do this for new readers. So old readers can refresh their memories or skip the parts.

      Delete
  5. yes. you are right. I understand your point of view. Please understand our point of view as well. Giving the details for new readers is really appreciated, but please consider add some more contents for old readers if you are repeating something from past novels. You easily said to skip the parts, but we are waiting for one week to read some interesting things from you. I hope you understand our point of view.

    ReplyDelete
    Replies
    1. I understand. Two more chapters will be the repetition for the benefit of new readers. After that (from 11th episode of Illuminatti) new events will come.

      Delete
  6. sir when will you release as book?

    ReplyDelete