Thursday, June 13, 2019

இருவேறு உலகம் – 140


க்ரிஷ் தன் பேச்சை முடித்த போது தான் அந்த இல்லுமினாட்டி சின்னம் ஒளிர்வதை நிறுத்தியது. மீண்டும் அரங்கில் இருள் பரவியது. கடைசியில் மின் விளக்குகளைப் போட்ட போது அத்தனை விளக்குகளும் சேர்ந்தும் அந்தச் சின்னம் ஏற்படுத்தியிருந்த ஒளி வெள்ளத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனதை அங்கிருந்தவர்கள் அனைவருமே கவனித்தார்கள். ஒரு நிமிடம் நீண்ட மௌனத்திற்குப் பின் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. க்ரிஷ் கண் முன்னால் இருந்த குகைக்காட்சியும் மாஸ்டருடன் சேர்ந்து மறைந்தது. மறைவதற்கு முன் மாஸ்டர் தன் பிரிய சீடனைப் பார்த்து பேரன்போடு புன்னகைத்தார். க்ரிஷ் அவருக்கு மீண்டும் தலைவணங்கினான்.

எர்னெஸ்டோ தன் முன்னால் இருந்த மைக்கை எடுத்தார். “இளைஞனே, நீ இல்லுமினாட்டியில் இணைகிறாயா?”

இந்தக் கேள்வியில் க்ரிஷ் மட்டுமல்லாமல் மற்ற உறுப்பினர்களும் ஆச்சரியப்பட்டார்கள். க்ரிஷுக்குச் சிரிக்கத் தோன்றியது. “நானா, இல்லுமினாட்டியிலா?” மாட்டேன் என்பது போல அவன் தலையசைத்தான்.

எர்னெஸ்டோ சொன்னார். “இளைஞனே நீ இன்று சொன்ன வார்த்தைகளை இல்லுமினாட்டி என்றும் நினைவு வைத்திருக்கும். இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.”

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது  என்று உன் ஏலியன் நண்பன் சொன்னதாய்ச் சொன்னாய். இல்லுமினாட்டி என்ற இந்த இயக்கம் உலக நிகழ்வுகளின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக இருக்கிறது. அதில் சேர வாய்ப்பு கிடைத்த போதும் நீ சேரத் தயங்கினால் அறிவுரை சொல்ல மட்டுமே நீ, அதைக் களத்தில் இறங்கி செய்து காட்டக் கிடைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாய் என்றாகி விடாதா? உன் ஏலியன் நண்பனுக்கும், உன் மனசாட்சிக்கும் நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

க்ரிஷ் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அவன் சாதாரண அரசியலில் இறங்கக்கூடத் தயங்கியவன். உதய் ஒரு முறை கேட்டது நினைவுக்கு வந்தது. “வாய்கிழிய அரசியல்வாதிகளைப் பத்திப் பேசறியே. அரசியல்ல இறங்கி தான் பாரேன். அப்ப தெரியும் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை கட்டாயங்கள் இருக்குன்னு…” மாநில அரசியலுக்கு வரக்கூடக் கூசிய அவனை உலக அரசியலுக்கு இவர் கூப்பிடுகிறார்…..  என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று எண்ணியபடி அவன் கை பிரமிடு-கண் சின்னத்தில் பட்ட போது. அது அவனைப் பேச வைத்தது போலத் தோன்றியது. அவன் சொன்னான். “இணைகிறேன்”. கடைசியாய் ஒரு முறை அந்தச் சின்னம் மிகப்பிரகாசமாய் ஒளிர்ந்து மங்கியது.

க்ரிஷுக்குத் தன் குரலையே நம்ப முடியவில்லை. கரகோஷம் மறுபடி இரட்டிப்பாகக் கேட்க ஒருவர் வேகமாக வந்து க்ரிஷின் கண்கட்டை அவிழ்த்தார். “இல்லுமினாட்டிக்கு வரவேற்கிறேன் இளைஞனே” என்று முதல் ஆளாக வந்து எர்னெஸ்டோ கைகுலுக்கினார். அவர் பின்னால் மற்றவர்களும் வாழ்த்திக் கைகுலுக்கிக் கொண்டிருக்கையில் ஒருவர் பரபரப்புடன் வந்து விஸ்வம் இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்.



விஸ்வத்தின் பிணம் ம்யூனிக் நகரின் மின்மயானத்தில் எரிக்கப்பட்ட போது அவனது ஒரே நண்பனாக க்ரிஷ் தான் முன்னால் நின்று கொண்டிருந்தான். நவீன்சந்திர ஷா உட்பட யாருமே இறந்து போயிருந்த மனிதன் குறித்த நல்ல நினைவுகளுடன் இருக்கவில்லை. அந்தச் சின்னம் க்ரிஷைத் தான் அடையாளம் காட்டுகிறது என்று புரிந்த பிறகு, அகஸ்டின் அவர் கையால் அந்தச் சின்னத்தை அவனிடம் கொடுத்தார் என்பதும், அவன் கனவுகளில் வந்த காட்சிகள் பற்றிச் சொன்னதும் எல்லாமே பொய் என்பது தெளிவாக அவர்களுக்குப் புரிந்து விட்டது. நவீன்சந்திர ஷா விஸ்வத்தை அறிமுகப்படுத்தியதற்காக எர்னெஸ்டோவிடம் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “அவன் இப்படி ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பான் என்று நான் நினைத்தே இருக்கவில்லை தலைவரே”


எர்னெஸ்டோ நவீன்சந்திர ஷாவின் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னார். “அவன் நம்மோடு சேர்ந்திருக்கா விட்டால் க்ரிஷ் நமக்குக் கிடைத்திருக்க மாட்டான்….. நடந்ததெல்லாம் நன்மைக்கே”

மின்மயானத்தில் நின்றிருக்கையில் உண்மையாகவே க்ரிஷ் விஸ்வத்திற்காக வருத்தப்பட்டான். அவன் விஸ்வத்தை முதல் முதலில் நேரில் பார்ப்பதே பிணமாகத் தான். ஆனால் எத்தனையோ உயரங்களுக்குப் போய் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படி முடிந்ததில் அவனுக்குப் பெரும் வருத்தமே! “நண்பனே, நல்ல விளைவை விரும்புபவன் நல்ல வினைகளையே செய்ய வேண்டும். எத்தனை சாமர்த்தியம் சக்தி இருந்தாலும் வினையை விதைத்து தினையை அறுவடை செய்து விட முடியாது. அது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி! அடுத்த பிறவியாலாவது எல்லாம் வல்ல இறைவன் உனக்கு இந்தப் பிறவியில் இருந்த அக்னி, உழைப்போடு நல்ல மனதையும் சேர்ந்து கொடுத்து புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச் செய்யட்டும்” என்று மனமாரப் பிரார்த்தித்து நின்றான்.

எர்னெஸ்டோ அவனுக்குச் சற்றுப் பின்னால் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கத்தில் பேசும் போது நம் நண்பர் என்று சொல்லி நார் நாராகக் கிழித்தாலும் அந்த மனிதன் இறந்து விட்ட பிறகு மனமுருக அந்த ஆத்மாவுக்காகப் பிரார்த்தித்து நிற்கும் இந்த இளைஞனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.  அவனிடம் இல்லுமினாட்டியில் இணையக் கேட்ட போதும் அவன் இணைய ஒத்துக் கொள்வான் என்று அவர் பெரிய நம்பிக்கை வைத்திருக்கவில்லை. ஆனால் அவன் ஒத்துக் கொண்டது அவருக்கு மகிழ்ச்சியையும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும் கொடுத்தது….. ஈரமான விழிகளுடன் திரும்பியவனைத் தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்தார்.

’ஒரு இல்லுமினாட்டி தான் இல்லுமினாட்டி என்பதைத் தன் குடும்பத்திற்குக் கூடத் தெரியப்படுத்துவதில்லை. இல்லுமினாட்டியின் நடவடிக்கைகள் குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை…’ என்ற மிக முக்கிய ரகசியப் பிரமாணம் உட்பட பல உறுதிமொழிகள் எடுத்து இல்லுமினாட்டியின் உறுப்பினராகக் கையெழுத்துப் போட்டு விட்டு வந்த போது க்ரிஷுக்கு கூட எல்லாமே அவனை மீறி நடப்பது போல மலைப்பாகவே இருந்தது.  அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினான். வழியனுப்ப விமானநிலையத்திற்கு விஸ்வேஸ்வரய்யா வந்திருந்தார். அவருக்கு அவன் அங்கு வந்து அருமையாக பேசியதிலும், மற்றவர்கள் மனம் வென்றதிலும் இல்லுமினாட்டியில் இணைந்ததிலும் அளவுகடந்த மகிழ்ச்சி. அதை அவனிடம் மனமாரத் தெரிவித்தார்.

விமானம் ஏறுவதற்கு முன் க்ரிஷ் போன் செய்து உதயிடமும், ஹரிணியிடம் பேசினான். இருவரிடமும் எதிரி முடிந்தான், ஆபத்தும் முடிந்தது என்று தெரிவித்த போது இருவரின் வார்த்தைகள் வராத கண்ணீரையும் அவனால் உணர முடிந்தது. இருவரும் சந்தோஷம் தாங்காமல் திக்குமுக்காடியதையும் உணர்ந்தான். அவன் விழிகளும் ஈரமாயின.


க்ரிஷ் இல்லுமினாட்டி அரங்கத்தில் பேசிய பேச்சின் ஒளிநாடா, ஒலிநாடா, எழுத்துவடிவம், மூன்றும் அந்த பிரமிடு-கண் சின்னத்தோடு வாஷிங்டன் நகரத்தின் இரகசியக் காப்பறையில் சிகாகோ பழஞ்சுவடியோடு சேர்ந்து எர்னெஸ்டோ, வழுக்கைத் தலையர் இருவராலும் சேர்ந்து வைக்கப்பட்டன. அந்தப் பிரமிடு கண் சின்னம் தன் வேலை முடிந்து விட்டதாலோ ஏனோ அதன் பிறகு ஒளிரவில்லை. வெறும் நினைவுச் சின்னமாகத் தங்கி விட்டது.

திரும்பி வருகையில் வழுக்கைத் தலையர் கேட்டார். “க்ரிஷ் இல்லுமினாட்டியில் சோபிப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் மிகவும் மென்மையானவனாகத் தோன்றுவதால் கேட்கிறேன்…”

எர்னெஸ்டோ புன்னகைத்தார். “இல்லுமினாட்டி போன்ற ஒரு பயமுறுத்தும் இயக்கம் பேச  அழைத்தவுடன் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தனியாக, தைரியமாக, கண்களைக் கட்டிக் கூட்டிப் போனாலும் பரவாயில்லை என்று வருபவன் பலவீனமாகவா உங்களுக்குத் தோன்றுகிறான்?”

வழுக்கைத் தலையர் யோசித்துப் பார்த்துப் புன்னகைத்தார். இந்த அளவு தைரியம் சாதாரணமாக யாருக்கும் வராது என்று அவருக்கும் தோன்றியது.

எர்னெஸ்டோ சொன்னார். “அந்த மென்மைக்குப் பின்னால் அவன் மிகவும் அழுத்தமானவனும் கூட. நீங்கள் என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியில் சரித்திரம் படைப்பான்……” சொல்லும் போது கையில் புனிதச் சின்னத்தோடு பூரண தேஜஸுடன் அரங்க மேடையில் க்ரிஷ் நின்ற காட்சி அவருக்கு நினைவு வந்தது. அந்தக் காட்சி அவர் மனதில் மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அனைவர் மனதிலும் மறக்க முடியாத காட்சியாய் என்றென்றும் தங்கியிருக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டார்.


விமானத்தில் செல்கையில் ஜன்னல்வழியே தெரிந்த மேகங்களைப் பார்க்கும் போது க்ரிஷுக்கு வேற்றுக்கிரகவாசி நினைவு வந்தது. வேற்றுக்கிரகவாசி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு என்ன சொல்வான் என்று புன்னகையோடு யோசித்தான். சில மாதங்களில் அவன் வரும் போது சொல்ல வேண்டியது மட்டுமல்ல கேட்க வேண்டியதும் க்ரிஷுக்கு நிறைய இருந்தது. நினைவு வர வர கேள்விகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மெல்ல அவன் மனம் ஆக வேண்டியதை யோசிக்க ஆரம்பித்தது. விஸ்வத்தின் மரணம் உடனடி பேரபாயத்தைத் தீர்த்திருக்கிறதே ஒழிய மற்றபடி எல்லாம் இருக்கிறபடி தான் இருக்கிறது என்பதை அவன் நினைவுபடுத்திக் கொண்டான். இல்லுமினாட்டியில் கூட அனைவரிடமும் உடனடியாய் பெரிய மாற்றம் வந்து விடாது என்று அவன் அறிவான். ஆனால் சின்னச் சின்ன மாற்றங்கள் கண்டிப்பாக உண்டாகும். உண்டாகும் படி அவனும், அவனைப் போன்ற மனிதர்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் சின்ன மாற்றங்கள் பெரிய மாற்றங்களில் முடியும்…. இப்போதைய விதைகள் நாளைய தளிர்கள் எதிர்கால விருட்சங்கள்…..

ஜன்னலில் இருந்து பார்வையைத் திருப்பிய போது பக்கத்தில் அமர்ந்திருந்த இந்தியப்பயணி ஒருவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த கட்டுரைத் தலைப்பு  க்ரிஷ் பார்வையில் பட்டது. “இல்லுமினாட்டி இருப்பது உண்மையா?”

அவன் பார்வை அந்தக் கட்டுரையில் சற்றுத் தங்கியதைக் கவனித்த அந்தப் பயணி அவனிடம் கேட்டார். “நீங்கள் இல்லுமினாட்டி இருப்பது உண்மை என்று நினைக்கிறீர்களா?”

கண்ணிமைக்காமல் க்ரிஷ் புன்னகையோடு சொன்னான். “நானே ஒரு இல்லுமினாட்டி தான்”

அவன் நகைச்சுவை உணர்வு அந்தப் பயணிக்கு மிகவும் பிடித்திருந்தது. வாய்விட்டுச் சிரித்தவர் “சரியாகப் பதில் சொல்லி விட்டீர்கள். தெரிந்தும் இந்த மாதிரிக் கட்டுரைகளைப் படிக்காமல் இருக்க முடிவதில்லை….. சுவாரசியமாய் இருப்பது தான் காரணம்” என்று சொல்லி பத்திரிக்கையை மூடி வைத்தார்.

க்ரிஷ் முகத்தில் புன்னகை விரிந்தது…..

முற்றும்

என்.கணேசன் 



இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

18 comments:

  1. Superb novel. Great treat from the beginning. Thank you very much sir. And a ton of additional thanks for the sequel of this novel.

    ReplyDelete
  2. சுஜாதாJune 13, 2019 at 5:14 PM

    கணேசன் சார். போன வருஷமே இருவேறு உலகம் வாங்கிப் படிச்சுட்டேன். இந்த வருஷம் சத்ரபதியும் படிச்சுட்டேன். அதனால வழக்கமா திங்கள் கிழமையும், வியாழக்கிழமையும் உங்க நாவல்கள் படிக்கற சுவாரசியம் இல்லாமல் தவிச்ச என்னை மாதிரி வாசகிகளுக்கு உங்கள் புது நாவல் அறிவிப்பு செம சந்தோஷம் தருது. ஹைய்யா இனி வியாழன் தோறும் பரபரப்பா இருக்கும். நன்றி சார்.

    ReplyDelete
  3. I expected the last episode to be elaborate and lengthy and you finished it a bit simpler. Little disappointment for not bringing the family in this part.
    Thanks a lot anyhow and wishing you all the best for your new beginning :)

    ReplyDelete
  4. அருமையான கதை....
    அடுத்த பாகத்திற்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. Feeling of kish for his enemy's death, ensures the choice alian. Superb novel sir.

    ReplyDelete
  6. Thanks for such a wonderful novel.
    Waiting for next.....

    ReplyDelete
  7. இந்த நாவல் ஒரு நல்ல அனுபவத்தையும், படிப்பினையும் தந்தது...
    நாவலுக்கு நன்றி ஐயா....
    கிரிஷ் இல்லுமினாட்டியில் இணைவான் என்பது சில பாகங்களுக்கு முன்னால் தான் கணிக்க முடிந்தது...

    மிகவும் விருவிருப்பாகவும்,சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றீர்கள்.... சூப்பர் சார்.....

    இரண்டாம் பாகம் இல்லுமினாட்டி க்காக காத்துக் கொண்டிருக்கிறேன்....
    கூடவே அக்ஷய் வருகைக்காகவும்.

    ReplyDelete
  8. Wow 140 weeks, I enjoyed your way of story telling and fabrication of this novel.

    ReplyDelete
  9. க்ரிஷின் தாய், உதய்யுடனான சம்பாஷணையை ஓரளவு கேட்டு, வெள்ளந்தியாக ஏதாவது சொல்வதாக உங்கள் நடையில் சேர்த்திருக்கலாம்.. உடன் விமானப்பயணியின் சம்பாஷணை போல...

    ReplyDelete
  10. Excellent story...good news for 2nd part..Thanks sir..

    ReplyDelete
  11. Really missed the alien comeback! In the end. Was hoping for krsh to meet him again!

    Fantastic story !!! Thank you for publishing for us.

    ReplyDelete
  12. Superb Sir..! Awesome Ending..! Waiting for the 2nd part.!

    ReplyDelete
  13. Fantastic Story. Waiting for next novel.....

    ReplyDelete
  14. I havent missed a single thursday in this 2.5 years of journey with iruveru ulagam... Thanks anna...chandru

    ReplyDelete
  15. அருமையான நாவல் சார்...

    ReplyDelete
  16. You are awesome
    I commenting on 20-01-2020
    I just find a time machine through your writing

    140 weeks how do you do it
    I first finished reading Illuminati and I was back to iru veru ulagam
    Amazing

    ReplyDelete